சொல்கிறார்கள்
காற்று மாசை கட்டுப்படுத்தும் கருவியை கண்டுபிடித்த சிவசக்திவேலன்: சொந்த ஊர் விழுப்புரம். மூன்றாம் ஆண்டு, "மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' படிக்கிறேன். சென்னை போன்ற நகரங்களின் சாலைகளில், கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடி மறைத்து, பெண்களும், ஆண்களும் செல்லும் காட்சியை பார்க்க முடியும். இதற்கு காரணம் கரும்புகை. நம் மூக்குக்கு முக்காடு போட வைக்கும் இந்தக் காற்று மாசைக் குறைக்க வழியே இல்லையா என்ற பலரின் புலம்பலை கேட்டிருக்கிறேன். பிளஸ் 2 படிக்கும்போது, காற்றிலிருக்கும் கரியமில வாயுவை நீக்கி, தூய்மையான ஆக்சிஜனை வெளியிடும் கருவியைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. புவி வெப்பமயமாதலை தடுக்க என்னாலான ஒரு முயற்சி தான், இந்தக் கருவி. இதை, தொழிற்சாலை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் பொருத்தி விட்டால், அவை வெளியிடும் புகையிலிருந்து நச்சுத்தன்மைகளை வடிகட்டி, தூய்மையான காற்றை வெளிவிடும். மேலும், காற்றில் உள்ள நச்சுத் தாதுக்களின் அளவை, 10.44 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைக்கும். வெளிநாடுகளில், இது போல பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை விட இக்கருவி, குறைவான மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்; பராமரிப்பு செலவும், உருவ அளவும் சிறியது. தர சோதனை ஆய்வகத்தில் பரிசோதித்து, அம்முடிவுக்கு பின், தமிழ்நாடு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிய அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். இந்த கருவியை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இக்கருவி பயன்பாட்டுக்கு வரும்போது, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் நோய்களும், ஆஸ்துமா போன்ற தீராத பிரச்னைகளும் குறையும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக