திங்கள், 10 அக்டோபர், 2011

young champion of roller skatting:அகவை 17 பதக்கங்கள் 97


வயது 17 பதக்கங்கள் 97

First Published : 09 Oct 2011 12:00:00 AM IST


சத்தமில்லாமல் மற்றுமொரு சாதனையை செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி.  9 சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், 15 தேசிய அளவிலான போட்டிகள், ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 17 வயதில் 97 பதக்கங்களைப் பெற்றவர். இதில் 81 பதக்கங்கள் தங்கம் என்றால் ஆரத்தியின் சாதனையை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்தியாவிலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், ஆரத்தியின் சாதனையைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கொரியாவின் யசோவு நகரில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 10-வதாக வந்து சாதனை படைத்துள்ளார் ஆரத்தி. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனை ஆரத்திதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த உலக அளவிலான போட்டியில் இவ்வளவு தூரம் ஓர் இந்திய வீராங்கனை முன்னேறியிருப்பது இதுவே முதல் முறை.  சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் 12-வது படித்து வருகிறார். 12-ம் வகுப்பு என்றபோதிலும் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறார். சென்னையில் பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரத்தியைச் சந்தித்தோம்...  ரோலர் ஸ்கேட்டிங்கில் ஈடுபடும் ஆர்வம் வந்தது எப்படி?  சிறு வயதிலிருந்தே எனக்கு அந்த ஆர்வம் இருந்தது. எனது தந்தை கஸ்தூரிராஜின் ஊக்குவிப்பு காரணமாக தொடர்ந்து அதில் ஈடுபட்டு சாதனை படைக்க முடிந்தது. இப்போதும் சென்னையில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபடுகிறேன்.  அதுமட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடுகிறேன்.  அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் ஆலோசனையை பெற்று பயிற்சியில் ஈடுபடுவேன்.  சமீபத்தில் பங்கேற்ற கொரிய நாட்டு ரோலர் ஸ்கேட்டிங் அனுபவம் குறித்து...  மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து முன்னணி வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். என்னுடன் சேர்த்து மொத்தம் 39 பேர் பங்கேற்றோம்.  முதலில் சிறிது கடினமாக இருந்தது. ஆனாலும் என்னுடைய இடைவிடாத பயிற்சி காரணமாக 10-வது இடத்தைப் பிடித்தேன்.  10 ஆயிரம் மீட்டர் தூரம் கொண்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டியாகும் இது. இதில் சாதிப்பது சாதாரண விஷயம் அல்ல.  சமீபத்தில் பெற்ற வெற்றிகள்...  கடந்த ஜனவரியில் ஆமதாபாதில் நடைபெற்ற 48-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதுமட்டுமல்லாமல் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினேன். தேசிய அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருப்பதால் அடுத்து வரும் உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளேன்.  உங்கள் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள்...  நிச்சயமாக எனது தந்தை கஸ்தூரிராஜ். தாயார் மாலதி. இருவரும் எனது வெற்றியைக் கொண்டாடுபவர்கள். தந்தை கஸ்தூரிராஜ் இல்லாமல் ரோலர் ஸ்கேட்டிங்கில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கவே முடியாது.  உங்களது ரோல் மாடல்...?  என்னுடைய ரோல் மாடல் மெக்ஸிகோ-அமெரிக்க வீரர் டெர்ரிக் பெர்ரா. வின்ட்டர் ஒலிம்பிக்ஸில் ரோலர் ஸ்கேட்டிங்கில் 2 தங்கப் பதக்கம் வென்றவர் பெர்ரா. அவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் நான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அவரைப் போலவே ஒலிம்பிக்கில் தங்கம்  வெல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. அதேபோல படிப்பில் டாக்டராக வேண்டும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் தைவானில் உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இப்போதிருந்தே பயிற்சியைத் துவங்கிவிட்டேன்.  பயிற்சியாளர்கள்...  என்னுடைய முதல் பயிற்சியாளர் கே.பி. உன்னிகிருஷ்ணன். அதன் பின்னர் மைசூரில் ஸ்ரீகாந்தராவ், இப்போது சத்யமூர்த்தியிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.  வா. சங்கர்.  படங்கள்: சிவக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக