திங்கள், 10 அக்டோபர், 2011

பன்னாட்டு அரங்கில் சிங்களத்தின் மீதான உரிமை வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாறும்

சர்வதேச அரங்கில் சிங்களத்தின் மீதான சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாறும் நிலை தொலைவில் இல்லை: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

பதிவு செய்த நாள் : 03/10/2011


நியூ யோர்க் ஐ.நா தலைமைப்பீடத்தின் முன் வட அமெரிக்க தமிழர்கள் அணிதிரண்ட பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் உரையாற்றும் பொழுதே இதனைப்  பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.
ஒரு இனம்,  இன அழிப்புக்கு உள்ளாகின்றபோதும்,  அதன் மக்கள்  இன அழிப்புக்கு உள்ளாகின்ற சூழ்நிலையிலும், கியூபெக் சுதந்திர வாக்கெடுப்பு  தொடர்பாக கனேடிய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போன்றும், கொசவோ வழக்கு தொடர்பாக அனைத்துலக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது போன்று அவ்வாறு  இன அழிப்புக்குள்ளான மக்கள் தங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, தற்பாதுகாப்பு  நடவடிக்கையாக சுதந்திர தனி நாடொன்றினை நிறுவ முடியும்.  அனைத்துலக சட்ட விதிகளின்படி மட்டுமன்றி, தார்மீக அடிப்படையிலும் இத்தகைய  தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும் என தனதுரையில் குறிப்பிட்ட  பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தமிழர்களுக்கு  நீதி வழங்கப்பட்டு, அந்நீதியின் வெளிப்பாடாக இறையாண்மையுள்ள தனித் தமிழீழம் அமைவது எனும் இலட்சியம் நடந்தே தீரும்  என்ற நம்பிக்கை  எமக்குண்டு. தமிழர்கள் தம் இலட்சியக் கனவாம் தனித்தமிழ்  நாட்டை நோக்கி, தன்னாட்சி  உரிமையையும் இறையாண்மையையும் அனுபவிக்கும் காலத்தை நோக்கி  அணிவகுத்துச் சென்று கொண்டிருகின்றார்கள் என உறுதியுரைத்தார்.
அத்துடன், சிங்கள ஆதிக்கத்தின் பிரநிதிகளாக உள்ளவர்களுக்கும்,  நாம் இதனால் ஒரு எச்சரிக்கை விடுகின்றோம். நீங்கள் நீதியின் பிடியிலிருந்து தப்பி ஓட முடியாது. அதுமட்டுமின்றி, ஆயிரம் ஆயிரமாய் எம் தமிழ் மக்களைக்  கொன்றொழித்த  குற்றவாளிகளுக்கும் நாங்கள் ஒன்றைக் கூற விழைகின்றோம், எம் உறவுகளை ஆயிரக் கணக்கில் நீங்கள் அழித்தாலும்  தமிழீழம் பற்றிய எம் பற்றுறுதியினை உங்களால் என்றும் அழித்து விடமுடியாது.
சிங்கள ஆட்சியாளர்களே! நீங்கள் எம் மாவீரர் துயிலும் இல்லங்களையும், அவர் தம் கல்லறைகளையும் அழித்திருக்கிறீர்கள். ஆனால்,  தமிழினம் தொடர்ந்தும் பொங்கி எழுந்து நிற்கின்றது என்பதை இந்தப் பெருநிகழ்வு காட்டுகின்றது.  நாங்கள் எமது  தாயக உறவுகளுக்கும் ஆணித்தரமாக செய்தி ஒன்றினை தெரிவிகின்றோம். எமது உறவுகளின் நிலையினை அனைத்துலக  சமூகத்திற்கு நன்கு எடுத்துக் காட்டி, அவர்கள் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை  அனுபவிக்கும் வகையில் நாங்கள்  தொடர்ந்து எமது  பணிகளை மேற்கொள்வோம் என உறுதி கொண்டுள்ளோம்.
இந்த வேளையில் நான் முக்கியமானதொரு நிகழ்வைப் பற்றியும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன். அது நடந்த காலம் 2006 ஆம்  ஆண்டு செப்ரெம்பர் மாதம் என நினைக்கின்றேன். அப்பொழுது  இதே இடத்தில் நின்று, ஐநா நிறுவனத்திடம் ஒரு வேண்டுகோள்  விடுத்தோம். எமது மக்களை சிங்கள இனவெறி பிடித்த ஓநாய்களிடம் விட்டு விட்டு வெளியேறாதீர்கள் என உருக்கமானதோர் வேண்டுகோள் விடுத்தோம். சிங்கள இனவாதிகள், தாம் நடாத்தவிருந்த இன  அழிப்பினை மூடி மறைப்பதற்காகவே ஐநா. அலுவலர்களைப் பாதுகாக்க முடியாது என்ற ஒரு நாடகத்தை அப்பொழுது நடாத்தி  வைத்தார்கள் என்பதையும் நாங்கள் ஐநா.வுக்கு தெரிவித்திருந்தோம்.  இந்நிலையில், உலகில் சமாதனத்தை   நிலை நாட்டி, உலக  மக்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பினையும் தன்னகத்தே  ஏற்றுக் கொண்ட  ஐ.நா. உலகில் நீதியை நிலை நாட்டுவதற்கானதோர் காப்பரண் என கோடானு கோடி மக்களால் நம்பப்படுகின்ற ஐநா   பல்லாயிரக்கணக்கான, நிராயுதபாணிகளான எமது அப்பாவி மக்களைத் தவிக்க விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அன்றுமுதல், சிங்களவர்களை மட்டும் கொண்டுள்ள சிறீலங்காவின் ஆயுதப் படைகள் செய்த அட்டூழியங்களை நாம் ஒன்றன்பின்  ஒன்றாக ஐநாவுக்கு எடுத்துக் கூறி வந்துள்ளோம். வைத்தியசாலைகள் சிங்களவர்களையே ஏறத்தாழ முழுமையாகக் கொண்ட சிறீலங்கா  இராணுவத் தாக்குதல்களுக்கு உள்ளாகியத்தை தெரிவித்தோம்.
பாதுகாப்பு வலையங்களும் சிங்களவர்களையே   ஏறத்தாழ முழுமையாகக் கொண்ட சிறீலங்கா இராணுவத்தால் தாக்கப்பட்ட சம்பவங்களையும் ஐநா வின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.  சிங்களவர்களையே  ஏறத்தாழ முழுமையாகக் கொண்ட சிறீலங்காப் படையினர் தமிழ் மக்களை ஆயிரம் ஆயிரமாய்,  கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்ததையும் நாம் ஐநா விற்குக் எடுத்துக் கூறி வந்தோம். சிறீலங்கா அரசாங்கம் பாரிய அளவில், மிகவும் பொருத்தமற்ற அளவில் ஆயுத பலத்தை பாவித்தமை, தமிழ்  இனத்தை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே  காரணத்திற்காக  முற்றாகவோ அன்றி ஒரு பகுதியையோ அழித்து விடுவது தான் சிறீ லங்காவின்  நோக்கம் என்பதை எடுத்துக் காட்டுவதாக  நாம் அப்பொழுதே அனைத்துலக  சமூகத்திற்கு  எடுத்துக் கூறினோம். உண்மையில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தவை இன அழிப்பு என்பதைத் தெளிவாக உலகுக்குக் கூறி வந்தோம்.
எனினும் எங்கள் அபயக்குரல், செவிடன் காதில் ஊதிய சங்காக, உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி படைத்த நாடுகளின் செவிகளில், அதிலும் குறிப்பாக நாடுகளின் கூட்டமைப்பாம்  ஐநா வின் செவிகளில் விழவே இல்லை.   .
எது எவ்வாறாயினும், எமது நிலைப்பாட்டின் உண்மைத் தன்மை  இறுதியாக ஐநா.  செயலாளர் நாயகத்தால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையினால்  நிரூபிக்கப்பட்டுள்ளது. மானுடத்துக்கு எதிரான  குற்றங்களும் போர்க் குற்றங்களும் இழைக்கப்பட்டதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள்   உள்ளதாக  அறிக்கை தெளிவாகக்  கூறுகின்றது.
இந்த அறிக்கையானது, முள்ளிவாய்காலில் இடம்பெற்றது  இனஅழிப்பு என வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் இன அழிப்புக்கு  உரிய அம்சங்களை தன்னகத்தே  கொண்டுள்ளது. இந்த நிபுணர் குழுவை   நியமித்தமைக்காக நாம் செயலர் நாயகத்தைப்  பாராட்டுகின்றோம். அத்துடன், இந்த அறிக்கையினை ஐநாவின்  மனித உரிமைப் பேரவைக்கு கையளித்தமைக்காகவும் அவரை  நாம் மீண்டும் ஒருமுறை பாராட்டுகின்றோம்.
அரசியல் நோக்கங்களுக்காக ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையானது கால ஓட்டத்தில் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும்  ஆபத்து உள்ளதனையும் நாம் இங்கு கருத்தில் கொள்ளல் வேண்டும். அதனால் இந்த அறிக்கை பற்றி   நாம் உலக மக்களிடம் தொடர்ந்து  எடுத்துரைப்பது  அவசியம். அதுமட்டுமன்றி, இவ்வறிக்கை பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு உள்ளது.
இப்பணியினை முன்னெடுத்துச் செல்லும் வகையில்,  நா.த. அரசாங்கமானது கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை  ஆரம்பித்து,  கையெழுத்துக்கள் சேகரிக்கப் படுகின்றன.
இந்த மனுவில் சுதந்திரமாக இயங்கக் கூடிய விசாரணைக் குழுவொன்றை நியமிக்கும் படியும் அல்லது  அனைத்துலக  நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுனர் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஐநா செயலாளர்  நாயகத்திற்கு வேண்டுகோள் விடப்படுகின்றது. இதுவரை நாங்கள் 15 இலட்சம் கையெழுத்துக்கள் பெற்றுள்ளோம்  என்ற செய்தியை பெருமையுடன் கூறிக் கொள்ள விழைகின்றேன்.
ஐநா செயலாளர் நாயகத்தின்  அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென புலம் பெயர் தமிழர்கள் தத்தம் அரசாங்கங்களினுடாக வலியுறுத்தல்  வேண்டும் என அனைவரையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்பும் கட்டமைப்பு முறையில் இன அழிப்பு தொடர்கின்றது.  ஐநா நிபுணர் குழு தமது  அறிக்கையில் தமிழர்களை அரசியல் நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கும் போக்கு இன்றும் தொடர்கின்றது எனக்  கூறியுள்ளது.   தமிழர்களின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில், பருத்தித்துறை முதல் திருக்கோவில் ஈறாக துரித கதியில் சிங்களக்  குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன் வட கிழக்குப் பகுதிகளில்  புத்த விகாரைகள் நிர்மாணம். எழுப்பப்படும் புத்தசிலைகள்  இந்து மத வரலாற்றுப்  பெயர்  பெற்ற கிண்ணியாவிலுள்ள ஏழு வெந்நீர் ஊற்றுக் கிணற்றுப்  பகுதியும்  தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரில் திருகோணமலைக்குரிய அரச அதிபரால் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பறிமுதல்; தமிழ்க் கடற் தொழிலாளர்களின் நடமாடும் சுதந்திரம் பறிப்பு; தொடரும்  இடம்விட்டு இடம் செல்லுவதற்கு  அனுமதிப் பத்திரம் பெறும் நடைமுறை;  தொடரும் ஆழ்  கடலில்  மீன் பிடிப்பதற்கு உள்ள  தடை  தொடரும் உயர் பாதுகாப்பு  வலயங்கள் அதனது  வெளிப்பாடுகளாகும்.
சகோதர சகோதரிகளே! உண்மைக்கும் நீதிக்கும் சார்பான  வரவேற்கத்தக்க மாற்றங்கள் சற்று மெதுவாக,  ஆனால்,  உறுதியாக ஏற்பட்டு வருகின்றன. சிங்கள இனத் துவேசத்தின்  பிரதிநிதிகள் பயந்து ஓடத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் கொஞ்சக் காலம்  இவ்வாறு ஓடலாம். ஆனாலும், இராஜ தந்திர வழியிலான சட்டப்  பாதுகாப்பின் மூலம்  நீண்ட காலம் தப்பித்து வாழ முடியாது.  இன்றைய சூழ் நிலையில் உலகின் பல்வேறு பாகங்களில் நீதி கோரி வழக்குகள்  தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்த வழக்குகள் யாவும் தற்பொழுது  சிவில் வழக்குகளே. எனினும் இவை அனைத்துலக மட்டத்திலும், வெவ்வேறு நாடுகளிலும் குற்றவியல் வழக்குகளாக  பதியப்பட்டு,  வழக்குத் தொடரும் நாள் வெகு  தொலைவில் இல்லை என்பது திண்ணம்.  தமிழர்களுக்கு  நீதி வழங்கப்பட்டு,  அந்நீதியின் வெளிப்பாடாக இறையாண்மையுள்ள  தனித் தமிழீழம் அமைவது எனும் இலட்சியம் நடந்தே தீரும்  என்ற நம்பிக்கை  எமக்குண்டு. தமிழர்கள் தம் இலட்சியக் கனவாம் தனித்தமிழ்  நாட்டை நோக்கி,  தன்னாட்சி  உரிமையையும் இறையாண்மையையும் அனுபவிக்கும் காலத்தை நோக்கி  அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக