சனி, 15 அக்டோபர், 2011

கடலோரக் காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

கடலோர காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க 
நீதிமன்றம் உத்தரவு

First Published : 15 Oct 2011 02:56:01 AM IST


மதுரை, அக். 14: தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல்படை மூலம் 10 நாளில் நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.  இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி வந்து தாக்கி வருகின்றனர். இதனால், மீனவர்கள் உயிரிழப்பு, ஊடல் ஊனமடைவது, மீன் வலைகளை அறுப்பது, மீன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவதும் அடிக்கடி நடக்கின்றன.  இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  இந்திய முப்படையினரும் மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இவைதவிர மீனவர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், வி.கண்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, எம். வேணுகோபாலன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த இடைக்கால உத்தரவில், இலங்கை-இந்திய கடல் எல்லை குறுகிய பரப்பளவில் உள்ளது.  இதில், தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் கடற்படைக் கப்பல்களையும், தமிழக கடலோர காவல்படை படகுகளையும் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய 10 நாளில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.  மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களினால், இந்திய கடல் எல்லைக்குள்ளேயே மீனவர்கள் மீன்பிடிக்க இயலவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவுத்துறை செயலர், மத்திய அரசு பாதுகாப்புத் துறை செயலரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக