இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார்.

நோர்வேயில் திங்கட்கிழமை ஆரம்பமான உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது விசேடமாக தெரிவு செய்யப்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் போது இலங்கை தொடர்பாக நீண்ட நேரம் கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை விடயத்தில் நான் ஒரு விசேட நிபுணர் குழுவை அமைத்திருந்தேன்.அது உங்களுக்கு நினைவிருக்கும்.

அவர்கள் அனைத்தையும் நன்கு கவனத்தில் எடுத்து பல பரிந்துரைகளை தெரிவித்திருந்தார்கள்.

 எனது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் நிச்சயமாக இலங்கை மக்களால் அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நான், இலங்கை அரசாங்கம் எனது நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமான பதிலை தரும் என்று நீண்ட நெடுங்காலம் காத்திருந்தேன். அதுபோல் அவர்கள் எனது நிபுணர் குழு அறிக்கையை அமுல்படுத்துவார்கள் என்வும் காத்திருந்தேன்.

சில வாரங்களுக்கு முதல் நான் எனது நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமை கவுன்சிலுக்கும் ஐ.நாவின் மனித உரிமை செயலாளர் நாயகத்திற்கும் பரிசீலினைக்கு உட்படுத்துமாறு அனுப்பி வைத்திருந்தேன்.

இலங்கை நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 02 வாரங்களுக்கு முதல் ஐ.நா கூட்டத்தொடருக்கு அவர் வந்த போது, நான் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன்.

இவ்விடயங்கள் தொடர்பாகவும் அவருடன் கலந்துரையாடி இருந்தேன். அவர் எனக்கு, இலங்கை தமிழ் மக்களையும் அவர்களின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதாகவும் அதற்கு இலங்கைக்குள் அனைத்து நடவடிக்கையையும் எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார் என ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மிகவும் விரக்தியுடன் தெரிவித்திருந்தார்.
Embed " readonly="readonly" type="text">