வியாழன், 16 ஜூன், 2011

Safeguard the journalists: பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு தேவை

உண்மைதான். ஆனால், ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தும் செய்திகள் அரசின் குற்றங்களையும் குற்ற உடந்தைகளையும்  கடமைகளில் இருந்து நழுவும் செயல்பாடின்மைகளையும் உணர்த்துவதாக உள்ளமையால் அரசு அவர்களுக்கு எதிராகவே நடந்து கொள்ளும். நல்லாட்சி நடைபெறும் பொழுதுதான் அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு தேவை

First Published : 16 Jun 2011 01:44:04 AM IST


விடுதலை பெற்று நாட்டின் அரசாங்கத்தை அமைக்கத் தேவைப்படும் அரசமைப்புச் சட்டம், அந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய விதிமுறைகளைத் தெளிவுபட வரையறுப்பதுடன், அவற்றை நேர்மையாக, திறமையாக, நிறைவேற்றுவதற்கான முறையில் அந்த நாட்டின் சட்ட - நீதிமன்ற - நிர்வாக அமைப்புகள் செயல்பட வேண்டும்.அடிப்படை உரிமைகள் என்று கூறும்பொழுது, முதலாவதாக, கருத்து உரிமை, மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு தனது கருத்துகளை வெளியிடும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. மேலும் மற்றவர்களுடைய கருத்துகளை - அறிக்கைகளைச் சேகரித்து எழுத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தருவதற்கான பணியைப் பத்திரிகையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில், அடிப்படை உரிமைகள் பற்றிய தொகுப்புத் தரப்பட்டுள்ளது. அதில் 19-வது பிரிவின் கீழ், "பேச்சு - கருத்து வெளியிடும், உரிமை' என்பதற்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமைகள் பற்றிய பட்டியலில், பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய குறிப்பு வெளிப்படையாகத் தரப்படவில்லை.இதுபற்றிய கேள்வி இந்திய அரசியல் நிர்ணய சபையில் 1948 டிசம்பர் 2-ம் நாள் அன்று எழுந்தபொழுது, டாக்டர் அம்பேத்கர் பதிலளித்தார்: ""ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள "பேச்சு - கருத்து வெளியிடும், உரிமை' செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும், நிச்சயமாக இருக்கிறது. அதனால், தனிப்பட்ட பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை''.இந்த வகையில், மக்களாட்சி முறையில் உள்ள பல்வேறு நாடுகளுடன், இந்தியாவிலும், செய்தி வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது.2011, ஜூன் 11-ம் நாள் அன்று மும்பை நகரின் மத்திய வணிக வளாகம் ஒன்றில், ஜோதிர்மய தேவ் என்னும் பிரபல செய்தியாளர் பட்டப்பகலில் நான்கு தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார். "மிட்-டே' என்ற நாளிதழின் தலைமைச் செய்தியாளராகக் கடந்த 20 ஆண்டுகளாகத் திறம்படப் பணியாற்றிய இவர், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பல்வேறு பாதக வன்முறைச் செயல்களை நடத்திவரும் தீவிரவாதிகள் கூட்டம் பற்றிய விவரங்களை அவர் சேகரித்து வந்தார் என்பதால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று தெரிய வருகிறது.நாட்டின் சுதந்திரத்தையும், சட்டம் - அமைதி நிலைமைகளையும் பாதுகாக்க, தனது உயிரையே பணயம் வைக்கும் போர்வீரனைப்போல செய்தியாளர் ஜோதிர்மய தேவ், தமது உயிரையே நாட்டின் நலனுக்காகப் பணயம் வைத்த மாவீரர் ஆவார். அவருக்கு அஞ்சலி செலுத்த நாட்டு மக்களும், அரசாங்கத்தினரும் கடமைப்பட்டுள்ளனர்.செய்திகளைச் சேகரிக்கவும், வெளியிடுவதற்கும் ஆன சுதந்திரமான உரிமை இருந்தபோதிலும், அவ்வாறு சேகரிக்கும், செய்தியாளர் உயிரோடு வாழ்வதற்குமான பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்ற நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிறது.மும்பை மாநகரில், மும்முரமான வணிக வளாகத்தில், செய்தியாளர் ஜோதிர்மயதேவை நான்கு தீவிரவாதிகள் சூழ்ந்துகொண்டு சுட்டுத் தள்ளியதுடன், உடனடியாகத் தப்பிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.அந்தப் பயங்கரவாதிகள் பற்றிய விவரங்களை மும்பைப் போலீஸôர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.சட்டத்துக்கும், அரசாங்கத்துக்கும் விரோதமாக உள்ள தீவிரவாதிகளின் செயல்பாட்டு முறைகளை ஒரு செய்தியாளர் அறிந்து வைத்திருந்தார் என்பதற்காக ஜோதிர்மய தேவ் சுடப்பட்டார் என்றால், அத்தகைய நிலைமைகளை மத்திய - மாநில அரசுகளின் காவல்துறையினரும், புலனாய்வுக் குழுவினரும் இதுவரை அறியாமல் இருக்கின்றனர் என்பது ஆச்சரியப்படத்தக்க பலவீனமாகும். தனிப்பட்ட ஒரு செய்தியாளருக்கு இருந்த திறமைகூட மத்திய - மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வெளிப்படுகிறது.பொதுவாக, மும்பை நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளின் படையெடுப்புகள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. 2008 நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலால், தாஜ் ஹோட்டல் உள்பட பல மையங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, மும்பை நகரம் ரணகளமாக ஆக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இன்னமும் நீதி முறைப்படி தண்டிக்கப்படவில்லை. அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது.மக்களின் குறைபாடுகளை அறிந்து அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதற்கு, செய்தித்துறை முக்கியத் தொடர்பாக இருக்கிறது.அதேபோன்று, அரசாங்கத்தில் நிகழும் குறைபாடுகளை, ஊழல் - ஊதாரித்தனங்களை மக்களுக்குத் தெரிவிக்கப் பத்திரிகைகள் முன்வருகின்றன. இதனால் ஏற்படும் சங்கடங்களை வைத்து பத்திரிகைகளே தேவையில்லை என்று ஒரு சர்வாதிகார ஆட்சி திட்டமிட்டுவிடும்.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திர அறிவிப்பை 1776-ல் எழுதிய அரசியல் மேதை தாமஸ் ஜெபர்ஸன், ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் செய்தித்தாள்கள் மிகவும் தேவை என்பதை உணர்ந்திருந்தார். அவருடைய அயராத முயற்சிகளின் விளைவாகத்தான், அந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் 10 பிரிவுகளைச் சேர்ப்பதில் வெற்றிபெற்றார். அந்த உரிமைகளின் பட்டியலில் வைக்கப்பட்ட முதலாவது பிரிவு கூறுவதாவது: ""மக்களின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்கோ, தங்கள் உரிமைகளை அவர்கள் நிலைநாட்ட அமைதியாகக் கூடுவதற்கோ, சுதந்திரமான முறையில் பேசவோ - செய்திகளைத் தரவோ, தேவைப்படும் வழிமுறைகள் எதனையும் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் அரசாங்கம் முற்படக் கூடாது''.இதனை வலியுறுத்தும் வகையில் அவர் ஒருமுறை கூறினார்: ""ஒரு நாட்டில் செய்தித்தாள்கள்'' இல்லாமல் அரசாங்கம் இருக்கலாமா? அல்லது அரசாங்கம் இல்லாமல் செய்தித்தாள்கள் இருக்கலாமா? என்ற கேள்வி எழுந்தால், அரசாங்கம் இல்லாவிட்டாலும் செய்தித்தாள்கள்தான் தேவை என்ற முடிவுக்குத் தயக்கம் எதுவும் இல்லாமல் நான் வருவேன்''.இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற அமைப்பில் பிரபுக்கள் சபை, மக்கள் சபை என்ற இரு பிரிவுகள் இருக்கின்றன. பிரபுக்கள் சபையில், பாரம்பரியமாக இருக்கும் பிரபுக்கள், அவர்களுடன் மத குருமார்களாக உள்ளவர்கள் இடம்பெற்றனர்.இந்த இரு பிரிவினரைத் தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் சபையில் இருந்தனர். இந்த மூன்று பிரிவினரைத் தவிர, அந்த நாட்டின் அரசாங்கம் செம்மையாகச் செயல்பட செய்தியாளர்கள் உதவினர்.அனைவராலும் பாராட்டப்படும் அரசியல் மேதையாக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஆற்றல்மிக்க பேச்சாளராக விளங்கிய எட்மண்ட் பர்க், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒருமுறை சொன்னார்: ""அரசாங்கத்தைக் கண்காணிக்கப் பிரபுக்கள் சபையில் இருவகைப் பிரிவினரும், மக்கள் சபையில் மூன்றாவது பிரிவினரும் இருக்கின்றனர். ஆனால், இந்த மூன்று பிரிவினர்களைவிட மிகவும் முக்கியமாக நான்காவது பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள்தான், அதோ மேல் மாடத்தில் அமர்ந்திருக்கும் செய்தியாளர்கள்!'' இவ்வாறு அவர் பேசிய பிறகுதான், அரசாங்கம் செம்மையாக நடைபெற, செய்தித்துறை நான்காவது அடிப்படை என்ற தத்துவம் ஏற்பட்டது.இவ்வாறு மக்களாட்சி முறையில் சிறந்து விளங்கும், நாடுகளில் பத்திரிகையாளர்களுக்குத் தரப்படும், மதிப்பும், முக்கியத்துவமும் இந்தியாவில் ஏற்பட வேண்டும்.குற்றம் கண்டவிடத்து எடுத்துக் கூறுபவர்கள்தாம் ஆட்சியாளர்களுக்கு நல்ல நண்பர்கள். அத்தகைய நண்பர்களை ஏற்றுக்கொள்ளும் பண்புடையவர்களாக இருக்கும் ஆட்சியாளர்களை யாராலும் வென்றுவிட முடியாது! இதைத் திருவள்ளுவர் செம்மைப்பட எழுதி வைத்தார்:""இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர்'' மக்களின் உரிமைகளுக்கும், அரசாங்கத்தின் நல்லாட்சிக்கும், நாட்டின் மேலான வளர்ச்சிக்கும், அடிப்படையாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்குத் தக்க பாதுகாப்பையும், மதிப்பையும் இந்தியா தரவேண்டும்.

1 கருத்து:

  1. இக்கருத்தைத் தினமணி வெளியிடவில்லை.உண்மை என்பதைப் பண்பற்ற சொல்லாகக் கண்டுபிடித்துள்ள தினமணி வாழ்க!

    பதிலளிநீக்கு