சனி, 18 ஜூன், 2011

பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்:இராமதாசு

சரியான கருத்து. அதே நேரம் கல்வி வணிகர்களுக்கு இழப்பீடாக எதையும் தர வேண்டியதில்லை. இதை அறப்பணியாகச் செய்வதாகத்தானே கூறுகின்றனர். மேலும் ஊரார் பணத்தில்தானே நடத்துகின்றனர். அதேபோல், அனைத்துத் தரப்பாருக்கும் அனைத்து நிலையிலும் கட்டணமில்லாக் கல்வி வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்: ராமதாஸ்

First Published : 18 Jun 2011 04:25:05 AM IST


தமிழக மாணவர் சங்கம் சார்பில் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் பாமக நி
சென்னை, ஜூன் 17: கல்வி கட்டண கொள்ளையைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் அதிகப்படியான கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனைத் தொடங்கி வைத்து ராமதாஸ் பேசியது: காமராஜர் ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், வேறு பல உயரிய பொறுப்புகளுக்கும் வந்துள்ளனர்.காமராஜரின் ஆட்சிக்குப் பிறகுதான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உருவாகின. ஏழைக்கு, பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது. கல்விக் கட்டண கொள்ளைக்குத் துணைபோனவர்கள் ஆட்சியாளர்கள் தான். தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர்கூட சொல்ல முடியாத நிலை இருக்கிறது.இப்போது நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் அரசே கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பாமக நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக