தலையங்கம்: கங்கை எங்கே போகிறாள்?
First Published : 18 Jun 2011 12:59:35 AM IST
Last Updated : 18 Jun 2011 04:45:36 AM IST
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும், ஊழல் செய்யும் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று ஜன் லோக்பால் சட்டம் கோரும் அண்ணா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்களும் பேசப்பட்ட அளவுக்கு நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பேசப்படவில்லை. தனது போராட்டத்துக்காக அவர் உயிரைவிட்ட நிலையிலும்கூட அவை வெறும் செய்தியாக மாறியதே தவிர, இந்திய மனங்களில் சிலிர்ப்பை, தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முக்திபெற சாதுக்கள் எல்லோரும் கங்கையில் உயிரைவிட வேண்டும் என்று விரும்பும்போது, அவர் மட்டும் கங்கைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தித் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.கங்கையில், கும்ப் என்ற இடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப்பணிகள் தடை செய்யப்பட வேண்டும். கங்கையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. நிகழாண்டில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கிய அவரது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏப்ரல் 27-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹிமாலயன் மருத்துவஅறநிலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மே 2-ம் தேதி கோமா நிலைக்குச் சென்றவர் ஜூன் 13-ம் தேதி உயிர் துறந்தார்.இதே காலகட்டத்தில் இப்போது பாஜகவில் இணைந்துள்ள உமாபாரதியும் கங்கையின் பொருட்டு உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டம், கங்கையின் குறுக்கே கட்டப்படும் அணையைக் கட்டாமல் நிறுத்த வேண்டும் என்பதுதான். இந்த அணை கட்டப்படுமேயானால், அணையினால் தேங்கும் நீர்பரப்பில் புராதனமான கோயில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது என்பதைக் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அவருடன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தியதும் அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.ஆனால், நிகமானந்தா நடத்திய போராட்டத்துக்கு இந்தக் கவனம் அல்லது அக்கறை காட்டப்படவில்லை. காரணம், அவர் அரசியல்வாதியல்ல. அவருக்குப் பின்துணை என்று எந்த அரசியல் இயக்கமும் இருக்கவில்லை.கங்கை நதி தூய்மையற்றது என்றும், அதில் எரிக்கப்பட்ட, எரிக்கப்படாத நிலையில் பிணங்கள் வீசப்படுவதாலும்தான் நதியின் தூய்மை கெட்டுப்போவதாகவும் பொதுவாகச் சொல்லப்பட்டாலும்கூட, அது உண்மையல்ல. காலம்காலமாக கங்கையில் பிணங்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்த அழுகும் பிணங்களை ஆற்றில் இருந்த நுண்ணியிர்கள் தின்று செரித்தன. மீன்களும் தின்றன. அதனால் கங்கை, புனித கங்கையாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.இன்று கங்கையில் இந்த நுண்ணுயிர்கள் இல்லை. ரசாயனக் கழிவுகளால் கங்கையின் பிரத்யேக நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டன. கங்கையில் மற்ற நதிகளைக் காட்டிலும் மேலதிகமான ஆக்ஸிஜன் இப்போதும் இருந்தாலும்கூட, ரசாயன மாசுகளால் அதன் அளவு மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் கங்கை இப்போது வெறும் சாக்கடையாக மாறிவிட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதில் முன்பு இருந்ததுபோல நுண்ணுயிர்களும், மீன்களும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான இடைப்பட்ட பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக்கழிவுகள் கங்கையில் கலக்கின்றன. ஒரு நாளைக்கு 260 மில்லியன் லிட்டர் ரசாயனக் கழிவுகள் கங்கையில் கலக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.வழியோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களின் சாக்கடை சுமார் 1.3 பில்லியன் லிட்டர் கங்கையில் கலக்கிறது. இத்தனை மாசுகளையும் மீறித்தான் இப்போதைய கங்கை இன்னமும் முற்றிலும், தனது புனிதத்தை இழக்காமல் இருக்கிறது.பக்தர்கள் கங்கை நீரை ஒரு பாத்திரத்தில் நிறைத்து வைத்து, இந்தியா முழுவதும் கொண்டுசெல்கின்றனர். இந்த நீர் ஏன் பல ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கிறது என்று ஆய்வு செய்தவர்கள், இந்த நதியின் மிகையான ஆக்ஸிஜன், கனிமம், நுண்ணுயிர்கள்தான் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டனர். ஆனால், அது பழங்கதை. இப்போது இந்த நீர் சில வாரங்களிலேயே தன்மை கெட்டுப்போய் விடுகிறது.நிகமானந்தாவின் மரணம் என்பது ஏதோ ஒரு துறவியின், வேலையற்ற சோம்பேறி சாமியாரின் மரணமல்ல. ஒரு தியாகியின் மரணம். நாளைய தலைமுறைக்கு, நா வறண்டு விடாமல் நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில், தனது உயிரை மாய்த்து, அரசுக்கு உணர்த்த முயன்ற ஒரு மகாத்மாவின் மரணம்.அண்ணா ஹசாரேவுக்காகவும், பாபா ராம்தேவுக்காகவும் குரல் கொடுக்க முன்வந்த இந்தியா ஓர் உண்மையான தேசபக்தனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூட மறந்துவிட்டதே! இந்தியாவிலுள்ள நிலத்தடி நீரெல்லாம் கங்கைதான் என்பதை நினைவில் கொள்வோமேயானால், கங்கை வற்றினால் நமது நா வறண்டுவிடும் என்கிற உண்மையைப் புரிந்துகொள்வோமேயானால், நிகமானந்தாவின் உண்ணாநோன்பின் உன்னதமும், அவரது மரணத்தின் தியாகமும் எத்தகையது என்பது நமக்குப் புரியும்.அண்மையில் இந்திய அரசு கங்கையைத் தூய்மை செய்ய சில ஆயிரம் கோடி ரூபாயில் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காக பல கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்போது இந்தத் திட்டமும் அதேபோன்று ஒதுக்கீடைக் கபளீகரம் செய்வதற்கான ஒரு திட்டமாக மாறிவிடக்கூடாது, அதுதான் நிகமானந்தாவுக்கு நாம் செய்யக்கூடிய நினைவஞ்சலி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக