ஞாயிறு, 22 மே, 2011

Raise voice to safeguard Thamizh : தமிழை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும்

 தமிழை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும்

நாகமலைபுதுக்கோட்டை:தமிழ் மொழியை பாதுகாக்க நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் கதிர்மகாதேவன் கூறினார். மதுரை காமராஜ் பல்கலையில் இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் 42ம் ஆண்டு கருத்தரங்கு நடக்கிறது. பல்கலை தமிழியற் புலம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கருத்தரங்கின் துவக்க விழாவில் மன்ற தலைவர் மோகன் வரவேற்றார். கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் பேசுகையில், ""கல்வெட்டுக்களில் காணப்படும் தூய தமிழ் பெயர்களை கோயில்களுக்கு சூட்டாமல் வேறு பெயர்கள் வைத்துள்ளனர். இது மாற வேண்டும்.
தமிழ்பெயர்கள் சூட்டப்படவேண்டும்'' என்றார். தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கதிர்மகாதேவன் பேசுகையில், ""ஆசிரியர்கள் தமிழ் மொழியை பாதுகாக்க முன்வரவேண்டும். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கு பெற வேண்டும். பலவற்றையும் கற்க வேண்டும். சீனா, ஜப்பான் நாடுகளில் கம்ப்யூட்டர்களின் கீ போர்டுகள் அந்தந்த நாட்டு மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நம்நாட்டிலும் கீ போர்டுகளை தமிழில் வடிவமைக்க வேண்டும். தமிழை காக்க நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்'' என்றார். அமெரிக்க உலக தமிழ் பல்கலை நிறுவனர் செல்வின்குமார், டெக்சாஸ் பல்கலை பேராசிரியர் ராதாகிருஷ்ணன், மன்ற செயலாளர் நாச்சிமுத்து, பொருளாளர் சேதுபாண்டியன் உட்பட பலர் பேசினர். பேராசிரியர் மணிவேல் நன்றி கூறினார். தொடர்ந்து இன்றும் கருத்தரங்கு நடக்கிறது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக