புதன், 25 மே, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

தடாலடியாக முடிவெடுத்தாலும் தவறெனில் அதையும் மாற்றுவார் முதல்வர் என்பர்.எனவே, கல்வியாளர்களின் கருத்தைக் கேட்டு  உடனே சமச்சீர்கல்வியை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். குறைகள் இருப்பின் அவற்றை நீக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

First Published : 25 May 2011 03:19:23 AM IST


சென்னை, மே 24: சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுதொடர்பாக, பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜு, த.பச்சையப்பன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ரஜினி உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:  பல்வேறு பாடத்திட்டங்கள் போய் பொதுப்பாடத்திட்டம் என்கிற அளவில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.  குழுக்களின் அறிக்கை அடிப்படையில் பொது விவாதத்துக்குப் பிறகே பாடத்திட்டங்களை இறுதி செய்து பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன.  இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்தை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை அரசு நிறுத்திவைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பு மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.  பொதுக்கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். பொதுக்கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத்திட்டமும், பாடநூலும் அச்சிடப்பட்டன.  அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்று அமைச்சரவை எப்படி முடிவுக்கு வர முடியும்?  இந்தப் பாடத்திட்டத்தைப் பற்றி அரசுக்கு யாராவது எழுத்துப்பூர்வமாக குறை தெரிவித்தார்களா? அல்லது ஏதேனும் வல்லுநர் குழு இந்தப் பாடத்திட்டம் சரியில்லை என்று அறிக்கைச் சமர்ப்பித்ததா?  எந்த அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்ற முடிவுக்கு அரசு வந்தது என்பதை விளக்க வேண்டும்.  முந்தைய அரசுக்குக் கண்டனம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துகள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.  ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடவும், தம்மை முன்னிலைப்படுத்தவும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம்.  நெறிமுறைக்கு எதிரானது: பழைய பாடத்திட்டத்தின் படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடநூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாடநூல்களை மீண்டும் பயன்படுத்துவது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.  கவனம் செலுத்த வேண்டும்: கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களின் பங்கு குறிப்பிட்ட அளவிலானதே. இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, உள்கட்டுமான அமைப்பை உயர்த்துவது போன்ற கல்வித் தரத்தை நிர்ணயம் செய்யும் விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  முடக்கும் செயல்: முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தது என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுநர் குழு அமைக்க உள்ளதும் ஏற்கத்தக்கதே. ஆனால், எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது.  இது உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல்.  நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.  அவசியமானால் தேவையற்றப் பகுதிகளை நீக்குவதே கல்வி நலனுக்கு உகந்தது.  சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

1 கருத்து:

  1. என்ன தவறு அல்லது பண்பாடற்ற சொல் உள்ளது?கருத்துத்தடைக்குக் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு