௧. தங்கபாலுவைக் காரணம் கூறினால் பயனில்லை. ௨. மிகுதியான உட்குழுக்கள் உள்ளமை காங்.கின் பண்பாடு.எனவே,இவற்றைக் காரணம் கூறியும் பயனில்லை. ௩. தமிழர்களால் மிகுதியும் பயனடைந்து கொண்டே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்களத்திற்குத்துணைபோவதும் மொழியாயினும் இனமாயினும் தமிழுக்கு எதிரான நிலை எடுப்பதும்தான் உண்மைக்காரணங்கள் என்பதை அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும். இதனைக் காங். தலைமை அறிந்திருந்தாலும் தனக்கு மிகுதியான செல்வாக்கு இருப்பதாகவும் தங்களால்தான் தமிழ்நாட்டில் பிற கட்சிகள் ஆட்சியில் இருப்பதாகவும் தவறான தலைக்கனம் இருப்பதால் உண்மையைக் கருத்தி்ல் கொள்வதில்லை. எனவே, காங். தன்னைத்திருத்திக் கொள்ள தமிழின மக்களின் பெருந்துயர வாரத்தில் நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு சிங்களத் தலைவர்களுக்குத் தண்டனை வழங்கவும் தமிழ் ஈழம் ஏற்கவும் அணியமாக இருந்தால் வளரலாம்; இல்லையேல் மேலும் தளர்ச்சியும் அழிவும்தான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தோல்விக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்
First Published : 15 May 2011 03:39:48 AM IST
புது தில்லி, மே 14 : தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர்களிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது தலைமைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியின் உயர்நிலைக் குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஐந்து மாநில சட்டப் பேரவையின் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சி காங்கிரஸ் என்ற நிலைமை தற்போது தலைகீழாக மாறி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸின் தற்போதைய நிலை பிகார் மாநிலத்தைப் போல் ஆகிவிட்டது. இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசலே. இது போன்ற பூசலுக்கு இடம் கொடுக்க எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது என்ற முடிவை காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழகத்தைச் சார்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், தேசிய அளவில் பிரபலமானவருமான ஒருவரின் மகன், கட்சியின் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, கட்சியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த ஐந்து ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்க முடியாத நிலைமை கட்சித் தலைமைக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தேர்தலுக்காக கட்சியால் வழங்கப்பட்ட நிதி சரிவர வேட்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமைக்கு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் யார் காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரும் 22 ஆம் தேதி தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதற்குப் பிறகு கட்சியிலும், மத்திய அமைச்சரவையிலும் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய பொறுப்பாளர், மாநிலத் தலைவர் ஆகியோரை நியமிக்க இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக