ஏன், இவர் முதலவரானது பிடிக்கவில்லையா? கொடும் வன்முறையிலேயே அரசை நடத்தி இனப்படுகொலை செய்து கொண்டே அடுத்தவர் வன்முறையில் ஈடுபடுவதுபோல் வன்முறை மூலமாகத் தீர்வு காண முடியாது எனப் பசப்பும் இத்தகையோர் பேச்சை நம்பக்கூடாது. இனப்படுகொலைகளுக்கான தண்டனையில் இருநது யாரும் தப்ப விடக்கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கைத் தமிழர் விவகாரம்: ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட விருப்பம்- இலங்கை வெளியுறவு அமைச்சர்
First Published : 18 May 2011 03:21:22 AM IST
தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ். நாள்: செவ்வாய்க்கிழமை.
புது தில்லி, மே 17: இலங்கைத் தமிழர் விஷயத்தில் தமிழகத்தின் புதிய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் தெரிவித்தார். மூன்று நாள் பயணமாகத் தில்லி வந்திருக்கும் அவர், பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோரைச் சந்தித்தார். பின்னர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பெரிஸ் பேசினார். அவரது பேட்டி: இந்தியத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கையில் போருக்குப் பிந்தைய அரசியல் நிலைமை, முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள் குடியமர்த்தும் பணிகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. மீள் குடியேற்றம் என்பது மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றும் பணியல்ல. மக்களுக்கு வாழ்வாதாரம், வசிக்கத் தேவையான கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கவேண்டும். இலங்கை போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை சர்வதேச நெறிகளுக்கு எதிரானது. மோசடியாகத் தயாரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், இந்தியாவின் விருப்பப்படி இலங்கை வட கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் அரசியல் உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. ஆட்சிப் பகிர்வுக்கு வகை செய்யும் விதத்தில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களது வசிப்பிடங்களில் குடியமர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மறுவாழ்வுக்கான பணிகள் இந்தியாவின் உதவியுடன் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புப் பயிற்சி, கலாசார மையங்களை நிறுவுதல், ரயில் வழித் தடங்களை உருவாக்குதல், திரிகோணமலை சம்பூர் என்ற இடத்தில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச கடல் எல்லையில் பிடிபடும் இரு நாட்டு மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்துதல், தூத்துக்குடி - கொழும்பு, ராமேஸ்வரம் - தலைமன்னார் ஆகிய வழிகளில் கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்குவது உள்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரையும், நன் மதிப்பையும் சீர் குலைக்கும் வகையில் செயல்படும் சில சக்திகளின் செல்வாக்குக்கு ஐக்கிய நாடுகள் சபை அடிபணியக்கூடாது. இந்த உண்மை இலங்கையில் கள ஆய்வில் ஈடுபட்டு நேரில் உண்மைகளை கண்டறியும்போது தெளிவாகும். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்த விதம், வெளிப்படையாக செயல்பட்ட இலங்கை அரசின் நடவடிக்கைக்கு நேர் எதிரானது. சர்வதேச நீதிக்குப் புறம்பானது. எனவேதான் நிபுணர் குழு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். இலங்கை அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. திட்டமிட்டபடி அனைத்து மக்களையும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்வதுடன், அவர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்கவும் இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையில், இலங்கை அரசைக் குற்றவாளிகளாகவும், அதே சமயம், புலிகளை ஒழுக்க சீலர்களைப் போலவும் போர் வீர்களைப் போலவும் ஐ.நா. குழு சித்திரித்துள்ளது இலங்கை தமிழர் நலன் விவகாரத்தில், தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுபேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன். அவரது அரசின் உதவிகளைப் பெற்று செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார் பெரிஸ். தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து தினமணி நிருபர் கேட்டதற்கு, சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது என இலங்கை கடல் படையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். கடல் ரோந்துக்காக கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படும் தானியங்கி துப்பாக்கிகளில் உள்ள குண்டுகளின் எண்ணிக்கை, அவற்றைப் பயன்படுத்தினால், அது குறித்த விளக்க அறிக்கை தர வேண்டும் என்பன போன்ற கெடுபிடிகளை இலங்கை கடல்படைக்கு விதித்துள்ளோம். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு வன்முறை மூலமாக தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இதன் அடிப்படையில் இரண்டு நாட்டு மீனவர்களின் கூட்டு குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என்றார் ஜி.எல் பெரிஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக