அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஜெயலலிதாவால் வெளிவந்த உர ஊழல் விவகாரம்
First Published : 18 May 2011 01:00:45 AM IST
கரூர், மே 17: தமிழக அரசுக்கு சுமார் ரூ. 1.34 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய உர ஊழல் விவகாரம் வெளியுலகுக்கு தெரியவர தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் காரணமாக இருந்துள்ளார். கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் (அக்ரோ சர்வீஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி 31.01.2007 அன்று ஓய்வு பெற்றவரான கரூரைச் சேர்ந்த அ. அர்ச்சுனன், தனது ஓய்வூதியப் பணப் பலன்களைத் தருமாறு கோரினாராம். ஆனால், கூட்டுறவு மையத்தில் போதுமான பணம் இல்லை என்று அதன் தனி அலுவலர் பி. செல்லமுத்து கூறினாராம். இதையடுத்து, தனக்கு ஓய்வூதியப் பலன்களை பெற்றுத் தருமாறு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு செல்லமுத்து மனு அளித்தார். அந்த மனுக்களில், "அரசிடமிருந்து மானிய விலையில் பெறும் உரங்களை, தனியார், அரசு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் தனக்குச் சேர வேண்டிய ஓய்வூதியப் பலன்களை விரைவாக வழங்க வேண்டும்' என்று உர ஊழல் விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தாராம். இதையடுத்து, மானிய விலையில் பெறும் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து வேளாண்மைத் துறை அலுவலர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடந்தாண்டு திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்- பொதுக்கூட்டத்தில் அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா, கரூரில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான அளவுக்கு உர ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். அதன்பிறகே, உர ஊழல் விவகாரம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் தனி அலுவலர் பி. செல்லமுத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், உர ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த, கூட்டுறவு சார் பதிவாளர் (தேர்வு நிலை) ஜி. பால்ராஜ் வில்லியம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக