சனி, 14 மே, 2011

தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: செயலலிதா உறுதி

தி,மு.க. அரசின் மீது மக்களுக்குச் சினம் ஏற்பட்டதற்கான காரணங்களை அறிந்தவர் என்ற வகையில் அவ்வாறான சூழல் வரா வண்ணம் திறம்பட நடந்து ஊழலற்ற ஆட்சியை அளித்து அனைவர்க்கும் தமிழ் வழியிலான கல்வி முதலான தமிழ் நலப்பணிகளிலும் மக்கள் நலப் பணிகளிலும் கருத்து செலுத்தி தமிழ் ஈழம் மலர ஆவன செய்து ஒளியமான தமிழகத்தை உருவாக்கும் செயற்பாட்டிற்கு வாழ்த்துகள்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: ஜெயலலிதா உறுதி
First Published : 14 May 2011 01:00:47 AM IST

சென்னை, மே 13: தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோதே, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தேர்தலில் பண பலம் தோற்றுப் போய்விட்டது.கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மக்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்ததை உணர முடிந்தது. திமுக அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். இறுதியாக அவர்கள் அந்த வாய்ப்பை பெற்றுவிட்டனர்.இப்போது ஆட்சியை அமைத்து, தமிழகத்தை மறு சீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதுமாக சீரழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தின் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதை மீட்டெடுப்பது என்பது எளிதான காரியமல்ல.கடந்த 1989 முதல் 1991 வரை திமுக தலைமையிலான அரசு ஆட்சி செய்தபோது, தமிழகத்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால், 1991-ல் ஆட்சியைப் பிடித்த எங்களுக்கு, பொருளாதார நிலையை உயர்த்த வேண்டிய மிகப் பெரிய சவால் காத்திருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்தினோம்.1996-ல் மீண்டும் ஆட்சி மாறியது. இதனால் மாநிலத்தின் பொருளாதார நிலை மீண்டும் பாதிப்புக்கு உள்ளானது. அந்த இக்கட்டான சூழ்நிலையின்போது, அதிமுக 2001-ல் ஆட்சியை பிடித்தது.உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் மத்திய திட்டக் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தமிழக பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தன. முதல்வராக பொறுப்பேற்ற என் மீதும் அந்த அமைப்புகள் பரிதாபப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் பொருளாதாரத்தை அதிமுக சீர்செய்தது.ஆனால், இந்த முறை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 2001 நிலைமையுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் பிரச்னை இம்முறை 10 ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இதை சீர் செய்வது கடுமையான இலக்கு என்றபோதும், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதையும் சவாலாக எடுத்துக்கொள்வோம்.வாக்குறுதிகள் ஒன்றரை ஆண்டில்... தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கும். மேலும் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அதிமுக மக்களுக்கு அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆட்சிப் பொறுப்பேற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுக்குள் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசுதான். தமிழர்கள் என்ற முறையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால், இது சர்வதேசப் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.ஒன்று, போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு இலங்கை அரசும், இலங்கை அதிபரும் பணிந்தாக வேண்டும்.2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கண்காணிப்பு தொடருமா? இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே தனது நேரடிப் பார்வையில் எடுத்துக்கொண்டு நடத்துகிறது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன். கேபிள் டி.வி. அரசுடைமை எப்போது? எங்கள் தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் செய்வோம் என்று உறுதியளித்திருக்கோமோ அந்த வாக்குறுதிகளை தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க எண்ணியிருக்கிறோம்.தமிழக மக்களுக்கு செய்தி: தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கடந்த 5 ஆண்டுகளாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள், துன்பப்பட்டு விட்டீர்கள். அதையெல்லாம் மறந்துவிடுங்கள். கண்ணீர்விட்டீர்கள். உங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். இனி சிரித்துக்கொண்டேயிருங்கள். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று உறுதி கூறுகிறேன்.சட்டப் பேரவைத் தேர்தலை நேர்மையான, நியாயமான முறையில் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். வாக்காளர்களுக்கும், தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணிக் கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.பதவியேற்றதற்குப் பிறகு தில்லி செல்ல உள்ளதாக மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது கூறினார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக