திங்கள், 9 மே, 2011

முடங்கிக் கிடக்கும் ஒரு வரலாற்றுச் சரித்திரம்...

அருமையாய் எழுதி உள்ளீர்கள் . பாராட்டுகள். வரை என்றால் மலை எனப் பொருள். மலையைக் குடைந்து கட்டப்படும் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் எனப்பட்டன. குடை வறை என்பது தவறு. மேலும் நிர்மாணம், தாபிதம் முதலான அயற்சொற்களை நீக்கிவிட்டு நல்ல தமிழில் எழுதலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 

முடங்கிக் கிடக்கும் ஒரு வரலாற்று சரித்திரம்...

First Published : 09 May 2011 02:30:55 AM IST


முதலாம் மகேந்திரவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட முதல் குடைவறைக் கோயிலின் முழுத் தோற்றம்.
விழுப்புரம், மே 8: விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முதல் குடைவறைக் கோயில் கம்பீரமாய் நிற்கிறது. ஆனால் அதுகுறித்த தகவல்கள் முழுமையாக இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ளது மண்டகப்பட்டு. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தூரமும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பிரதான சாலையில் இறங்கி 5 நிமிட நடைப்பயணத்தில் இந்த கோயில் உள்ளது. மிகப்பெரிய பாறைக் குன்றை குடைந்து இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் நிறுவப்பட்ட முதல் குகைக்கோயில் இதுவேயாகும் என்று அங்குள்ள வடமொழி கல்வெட்டிலிருந்த தகவலை தொல்லியல் துறை வைத்துள்ள தனி கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றை பயன்படுத்தாமல் லக்ஷிதாயதன என்னும் இக்கற்றளி, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு நிர்மாணம் செய்யப்பட்டது.மலையைக் குடைந்து கற்றளிகள் செய்யும் புதியமுறையை தமிழகத்தில் புகுத்தியவர் மகேந்திரவர்மனே ஆவார். இதனால்தானோ அவருக்கு லக்ஷிதன், விசித்திரசித்தன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. இக்கற்றளி மிக எளிய மண்டபம் போன்ற அமைப்பு கொண்டது. முன்னே மகாமண்டபம், பின்னர் அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.மிகப் பெரிய 4 தூண்கள் வேலைப்பாடின்றி எளிய பாணியில் அமைந்துள்ளன. பின் சுவற்றில் 3 கருவறைகள் குடையப்பட்டுள்ளன. இதில் சுண்ணாம்பு பூச்சும், அதன் மேல் ஓவியத்தில் மும்மூர்த்திகளையும் வரைந்து வணங்கப்பட்டு வந்தன என்று ஊகிக்க இடமுள்ளது என்று தொல்லியல் துறையின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டிலேயே பல தவறுகள் உள்ளன.கோயிலின் இருபக்கமும் உள்ள சிலைகள் துவார பாலகர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக கோயில்களில் இந்த துவார பாலகர்கள் ஆயுதங்களுடன் நேர் நிலையில் நின்றபடிதான் இருப்பர். ஆனால் இங்குள்ள சிற்பங்களில் வலதுபுறத்தில் அரசர் வாள்மீது கைவைத்து, கம்பீரத்தோடு, மணிமுடி தரித்து ராஜதோரணையில் நின்று கொண்டிருக்கிறார். இடதுபுறத்தில் நளினத்துடன் நிற்கும் பெண் சிற்பம் உள்ளது. அது அரசியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேபோல் 3 கருவறைகளிலும் கீழ்பாகத்தில் சிலை ஸ்தாபிதம் செய்வதற்கான துளைகள் உள்ளன. இதனால் அங்கு சிற்பங்கள்தான் இருந்திருக்க வேண்டும், ஓவியம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் கோயிலின் முகப்பில் அழகான இரண்டு சிற்பங்களை செதுக்கியுள்ளவர்கள், கருவறையில் மட்டும் ஓவியம் வரைவதற்கான வாய்ப்பில்லை என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் தொல்லியல் துறை வைத்துள்ள கல்வெட்டில் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைக்கூட (கி.பி.571 அல்லது 600 முதல் 630) என குறிப்பிடவில்லை. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு கோயிலை கட்டமைத்த வரலாற்றை குறைந்தபட்ச தகவல்களுடன்கூட அங்கே வைக்கப்படவில்லை. வைத்துள்ள கல்வெட்டும் சிதைந்துள்ளது. மகாபலிபுரம் சிற்ப சரித்திரத்துக்கே முன்னோடியாக திகழ்ந்த இதை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ளவர்களின் எண்ணம்.அதிகளவில் கூட்டம் இங்கு வராவிட்டாலும், தினசரி சிலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்வதாக இக்கோயிலின் அருகே வசிக்கும் வீரம்மா என்ற பெண் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடம், அதற்கான எந்த வசதிகளும் இல்லாமல் 1,500 ஆண்டுகளாக ஒரு சரித்திரம் அமைதியாக முடங்கிக் கிடக்கிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக