செவ்வாய், 10 மே, 2011

alambara kottai - a historical symbol: சுற்றுலா: வரலாற்றுச் சின்னமான ஆலம்பரைக் கோட்டை

நல்ல வரலாற்றுப்பதிவு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சுற்றுலா: வரலாற்றுச் சின்னமான ஆலம்பரைக் கோட்டை

First Published : 10 May 2011 02:10:00 AM IST


கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஆலம்பரைக் கோட்டை, ஆலம்பரைக் கோட்டை முன்புறம் ஆறும் கடலும் இணையும் முகத்துவாரத்தை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். படகில்
மதுராந்தகம், மே 9: கிழக்குக் கடற்கரை சாலையில் கடப்பாக்கம் ஆலம்பரைக் கோட்டை அதனை ஒட்டியுள்ள கடற்கரையில் கோடை விடுமுறை கொண்டாட தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.  ÷கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை பண்டைய காலத்தில் துறைமுகப்பட்டினமாக திகழ்ந்துள்ளது. சங்ககால இலக்கியமான சிறுபாணாற்றுப் படையின் மூலம் இப்பகுதி இடைக்கழிநாடு என்று அறியப்படுகிறது. கி.பி.18-ம் நூற்றாண்டில் முகம்மதியர்களால் ஆலம்பரைக் கோட்டை கட்டப்பட்டது.  ÷கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து 105 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 40 கி.மீ. உள்ளது கடப்பாக்கம். இங்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கடற்கரை சாலையில் 3 கி.மீ. தூரத்தில் ஆலம்பரைக் கோட்டை அதனை ஒட்டியுள்ள ஆறு, கடல் அமைந்துள்ளது.  ÷வரலாற்று பறைசாற்றி கம்பீரமாக நிற்கும் ஆலம்பரைக் கோட்டையின் பகுதி ஆறும், கடலும் இணையும் முகத்துவராம் ஆகும். ஆறுக்கும், கடலுக்கும் இடையில் இருக்கும் அழகான மணல் திட்டு மற்றும் கடற்கரையில் உள்ள அழகான பசுமையான மரங்கள் ஆகிய பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு விளங்கிறது ஆலம்பரைக் கோட்டை.  ÷இக்கோட்டை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கற்களாலும், சுண்ணாம்பினாலும் சதுர வடிவிலான மாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவாப்புகளின் ஆட்சிக்காலத்தில் துறைமுகப்பட்டினமாக திகழ்ந்ததற்கான கோட்டையின் கீழ்ப்புறம் 100 மீட்டர் நீளம் கொண்ட படகுதுறை இருந்துள்ளது. இந்த படகுதுறை கப்பலில் இருந்து பொருள்களை ஏற்றி, இறக்குவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.  ஆலம்பரை படகு துறையிலிருந்து ஜரிகை துணிகள், உப்பு, நெய் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆலம்பரையில் இருந்த நாணயச்சாலையில் ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் அச்சிடப்பட்டன.  ÷இந்த நாணயச்சாலையில் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தான், கிழக்குக் கடற்கரை சாலை வழியாக காசி, ராமேசுவரம் செல்பவர்களுக்கு சிவன் கோயிலையும், பெரியகுளத்தையும் ஏற்படுத்தினார். தற்போது பெருவழி கோட்டையின் மேற்கில் 2 கி.மீ. தூரத்துக்குச் செல்கிறது.  ÷இக்கோட்டையை கி.பி.1735-ல் நவாப் தோஸ்த் அலிகான் ஆண்டார். கி.பி.1750-ல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்ச் தளபதி டியூப்ளக்ஸ்க்கு சுபேதார் முசார்பர்ஜங் பரிசளித்தார். கி.பி.1760 பிரெஞ்ச் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேய படை கைப்பற்றி கோட்டையை சிதைத்தது. அவ்வாறு சிதைக்கப்பட்ட கோட்டையின் எஞ்சிய பகுதி மட்டுமே தற்போது காண முடிகிறது. இக்கோட்டை தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  ÷இக்கோட்டையை காண வார விடுமுறை நாள்களிலும், பண்டிகை நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து ஆலம்பரைக் கோட்டையை சுற்றிப் பார்த்தும், ஆற்றில் குளித்தும், மீனவர்களின் படகில் குறைந்தக் கட்டணத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.  ÷இக்கோட்டையை பழமை மாறாத நிலையில் புதுப்பித்தும், பூங்கா அமைத்தும், படகு குழாம் அமைத்தும், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தியும் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்து அரசு தொடர்ந்து பராமரித்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பது மட்டுமின்றி வரலாற்றுச் சின்னமாக இருக்கும் ஆலம்பரைக் கோட்டையை பாதுகாக்கவும் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக