palm leaves லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
palm leaves லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூலை, 2012

பனை ஓலை தான் முதலீடு!



சொல்கிறார்கள்

பனை ஓலை மூலம், கைவினைப் பொருட்கள் செய்து வரும் சித்ரா:நான் பிறந்து, வளர்ந்தது நாகப்பட்டினம். 10ம் வகுப்பு வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை. அதனால், ஏதாவது வேலை செய்து, குடும்பத்திற்கு உதவியாக இருக்கலாம் என நினைத்தேன். மகளிர் சுய உதவிக் குழு ஒன்றில் சேர்ந்தேன். பல தொழில் பயிற்சிகளைக் கொடுத்தனர்.ஆர்வத்தை விட, மாதம், 750 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும் என்பதால், பனை ஓலைத் தொழில் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு சேர்ந்த பின், வெறும் ஓலையை இப்படியெல்லாம் மாற்ற முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. ஆறு மாத முடிவில் அவர்கள் கற்றுக் கொடுத்ததை விட, என் கற்பனைத் திறனைக் கொண்டு, நானே பல பொருட்களை செய்ய ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், என் கை வண்ணத்தில் உருவான பொருட்களின் மதிப்பு, எனக்கு தெரியவில்லை. காரைக்காலில் நடந்த, அரசுக் கண்காட்சியில், என் பொருட்களை வைத்து, முதல் முறையாக, "ஸ்டால்' போட்டேன். அங்கு எனக்கு கிடைத்த வரவேற்பும், விற்பனையும் தான், என் தொழில் மீது, எனக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தன. தொடர்ந்து, புதுச்சேரி, நாகப்பட்டினம் என, கண்காட்சிகளுக்கு சென்றேன்.அதுவரை வறுமையுடன் போராடிய என் குடும்பம், மெல்ல அதிலிருந்து எழுந்தது.இந்த தொழில் துவங்குவதற்கு, பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. பனை ஓலையைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. மரம் ஏறும் ஆளுக்கு கூலி கொடுத்தால், கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் பனை ஓலை கிடைக்கும்.அதை, "கட்டிங் மிஷினில்' தேவையான அளவிற்கு, அழகாக நறுக்க வேண்டும். பின், வெந்நீரில் சாயத்தை ஊற்றி, ஓலைகளை அமுக்கி வைத்திருந்தால், சாயம் ஏறிவிடும்.நமக்கு என்ன பொருள் தேவையோ, அதை ஓலையைக் கொண்டு செய்ய வேண்டியது தான். எப்படிப் பின்ன வேண்டும் என்பதற்குத் தான், பயிற்சி வேண்டும். அது தெரிந்து விட்டால், அழகழகான கலைப் பொருட்களை செய்து கொண்டே போகலாம்.


திங்கள், 14 மார்ச், 2011

demant for separate dept, for palm leaves: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை: 
ஆய்வாளர்கள் வலியுறுத்தல்


தமிழ் மரபு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்ட (இடமிருந்து 3-வது) கல்வெட்டு ஆய்வாளரும், சொற்பொழிவாளருமான சீதாலட்சுமி, ஆய்வாளர் ப
சென்னை, மார்ச் 13: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.தமிழ் மரபு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். இவர்களில் பலர் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.பல்வேறு அரிய ஓலைச் சுவடிகள் இப்போது தொல்லியல் துறை மூலம் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆவணம் கூட செய்யப்படவில்லை. பாதிக்கும் மேற்பட்டவை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்றார் தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி எஸ். ராமச்சந்திரன்.அதைத் தொடர்ந்து பேசிய ஆய்வாளர்கள் மே.து. ராசுகுமார், கோ. உத்திராடம் ஆகியோர் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க தனித் துறை அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். ஓலைச் சுவடிகளை யாரிடம் ஒப்படைப்பது என்று குழப்பத்தில் இருந்த அரசு, வேறு வழியின்றி அவற்றைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து விட்டது. ஆனால், இதற்கான முறையான பயிற்சியோ அல்லது உதவியோ ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால்தான் அவை அழிவின் பிடியில் சிக்கியுள்ளன.எனவே, ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து, முறையாக பராமரிக்க தனித் துறையை அரசு உருவாக்கவேண்டும். இல்லையெனில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் தமிழகத்தில் ஓலைச் சுவடிகளே இல்லாத நிலை உருவாகிவிடும் என்றனர். கோயில்களை மத ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது.இவற்றின் மூலம் பல்வேறு வரலாற்று தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.ஆனால், இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிந்து வருகின்றன. ஏனெனில் புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் முறையான கொள்கை இந்தியாவில் கிடையாது.வழிபாடு நடைபெறுவதன் மூலம், வருமானம் கிடைக்கும் கோயில்களை மட்டுமே இந்து அறநிலையத்துறை பாதுகாத்து வருகிறது. வழிபாடு நடைபெறாத தேவாரப் பாடல் பெற்ற பல கோயில்கள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.மேலும், அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கோயில்களில், அவ்வப்போது வண்ணப் பூச்சுகள் மேற்கொள்ளப்படுவதால் அவற்றில் இடம்பெற்றிருக்கும் அரிய கல்வெட்டுகளும், தகவல்களும் சேதமடைந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார் தொல்லியல் ஆய்வாளர் வி. செல்வக்குமார்.இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகள் படி, கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படுவது இல்லை. இதனால், கற்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் அழிந்து வருகின்றன.கோயில் புனரமைப்பு என்ற பெயரில், ஒப்பந்ததாரர்கள் வாட்டர் வாஷ், மணல் பீய்ச்சி அடித்தல் (சாண்ட் பிளாஸ்டிங்) உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் கல்வெட்டுகள் அழிந்துவிடுவதோடு, கோயில்கள் பலமிழந்து உள்ளன என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஜே. சந்திரசேகரன் கூறினார்.தமிழகம் முழுவதும் ஓலைச் சுவடிகளைத் தேடுதல், பழைய நூல்களை மின்னாக்கப் பதிவு செய்தல், வட்டார வழக்குகளைப் பதிவு செய்தல், தமிழ் பாரம்பரியத்தில் உள்ள வாழ்க்கை முறை, பேச்சு முறை ஆகியவற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் இந்தப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.ஏனெனில் இதுபோன்ற ஆவணங்களும், ஓலைச் சுவடிகளும் தமிழகத்தில் மட்டும் அல்ல. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம், கிழக்கு ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம், டென்மார்க்கில் உள்ள நூலகம் எனப் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதுபோன்று வெளி நாடுகளில் இருக்கும் அரிய ஆவணங்களை மின் பதிப்பு செய்து, மீண்டும் இந்தியா கொண்டு வரும் முயற்சியை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முயற்சி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் பணி முழுமை பெற்று, நம்முடைய பொக்கிஷங்களை நாம் அறியமுடியும் என்றார் ஜெர்மனியைச் சேர்ந்த தமிழ் மரபு அறக்கட்டளை துணைத் தலைவர் சுபாஷிணி ட்ரெம்மல்.நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி, ஆய்வாளரும் சொற்பொழிவாளருமான சீதாலட்சுமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தமிழ் மரபு அறக்கட்டளையின் 2011 திட்டங்களை அறக்கட்டளையின் செயலர் மா. ஆண்டோ பீட்டர் வாசித்தார்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஓலைச்சுவடிகளை நூலாக வெளியிட வேண்டும்: வின்சென்ட்



"அலேசு நாடகச் சுவடி' நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் (வலமிருந்து 2-வது) வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் சா
திருநெல்வேலி, அக். 24: ஓலைச் சுவடிகளில் உள்ள தகவல்களைத் திரட்டி நூலாக வெளியிட பதிப்பாசிரியர்கள் முன்வர வேண்டும் என தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் கேட்டுக் கொண்டார். திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் "மேலும்' வெளியீட்டகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வே. கட்டளைகைலாசம் எழுதிய "அலேசு நாடகச் சுவடி' என்ற நூலை பிரிட்டோ வின்சென்ட் வெளியிட்டு பேசியதாவது: சுவடிகளில் மிகவும் பழைமையானது பனை ஓலைச்சுவடி. இன்றும் பல வீடுகளில் ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை நமது பொக்கிஷங்கள். இதுபோன்ற ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து அதில் உள்ள குறிப்புகளை எடுத்து நூல் வடிவில் தருவதில் சிரமங்கள் அதிகம். ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுவடிகள் வைத்திருப்பவர்கள் அவற்றை வழங்கலாம் என்றும் அரசு கூறியுள்ளது. இதுபோன்ற ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றில் உள்ள தகவல்களை நூல் வடிவில் தர பதிப்பாசிரியர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர். நூலின் முதல் பிரதியை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் பெற்றுக் கொண்டார். தூய சவேரியார் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணியன், ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் கட்டளைகைலாசம் ஏற்புரை வழங்கினார். முன்னதாக பேராசிரியர் சுந்தரம் வரவேற்றார்.