புதன், 23 பிப்ரவரி, 2011

கிருட்டிணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது


பாராட்டுகள- விருதாளருக்கும் விருது வழங்கிய
தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 < தமிழே விழி! தமிழா விழி! >
கிருஷ்ணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது


கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த எழுத்தாளர் மனோன்மணி (எ) சுகவன முருகனுக்கு முதல் சிற்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.1.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கெüரவித்துள்ளது.காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சுகவன முருகன். 30 ஆண்டுகளாக கவிதை, கட்டுரைகளை எழுதி வரும் இவர், வரலாற்று ஆய்வாளரும்கூட."புது எழுத்து' என்னும் சிற்றிதழை, மனோன்மணி என்ற புனைபெயரில் நடத்தி வருகிறார். மறைந்த மலையாள கவிஞர் ஏ.அய்யப்பனின் கதைத் தொகுப்பை முதலில் தமிழில் கொண்டுவந்தது இவரது புது எழுத்து. தகடூர் என்னும் அரிய வரலாற்று நூலை மீள்பதிப்பு செய்ததும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நூனிஸ் என்ற போர்ச்சுகீசிய வியாபாரி தமிழகத்துக்கு வருகை புரிந்ததை பயண நூலக வெளிட்டுள்ளதும் இவரது புது எழுத்து பத்திரிகை. கிருஷ்ணகிரி காசுகள் என்ற வரலாற்று நூல் இவரது முதல் நூலாகும்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடப்பாண்டு முதல் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் சிற்றிதழுக்கான விருதை ஏற்படுத்தியுள்ளது. இது ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் அடங்கியது.நோபல் பரிசு பெற்ற "ஒரு நூற்றாண்டு காலத்தனிமை' என்னும் நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புது எழுத்து சிற்றிதழில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்பணியைப் பாராட்டி சிற்றிதழ்களுக்கான விருதுக்காக புது எழுத்து தேர்வு செய்யப்பட்டது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் துணைவேந்தர் ம.இராசேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அமைச்சர் உபயத்துல்லா ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் மனோன்மணிக்கு விருது வழங்கப்பட்டது.முதல் சிற்றிதழ் விருது பெற்றுள்ள மனோன்மணி, பரிசுத் தொகையுடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கி கெüரவிக்கப்பட்டார். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக