வியாழன், 24 பிப்ரவரி, 2011

M.s.krishna concerns about the feelings of ilangai: இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருட்டிணா

நல்ல வேளை. பன்னாட்டு அவையில் அடுத்த நாட்டு உரையைப் படித்த நினைவில் விழிப்பாக இவ் வறிக்கையின் இறுதியில் இப்படிக்கு இராசபக்சே எனக் குறிக்காமல் விட்டுவிட்டார். அதற்குத் தகுந்த வெகுமதிகளைச் சிங்களம்  இவருக்குத் தரும். ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள்கொல்லப்படுவதும் மீனவர்கள் வதைபடுவதும் நம் நாட்டு மக்களுக்கு ஏற்படும் உணர்வுகளை மதித்து நடவடிக்கை எடுக்காமல்  கொடுங்கோல் கொலைகாரக் கொள்ளையனின் உணர்விற்கு மதிப்பளிக்கவேண்டும்  இவரது கட்சி ஆட்சி அறவே நீங்கினால்தான் மனித நேயம் தழைக்கும். தமிழகத் தேர்தலில் மக்கள்  இதற்காகக் கண்டிப்பாகப் பாடம் புகட்டவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  < தமிழே விழி! தமிழா விழி!>






இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருஷ்ணா

First Published : 24 Feb 2011 01:12:02 AM IST


புது தில்லி,பிப்.23: சர்வதேசக் கடல் எல்லையை மீறிச் செல்லும் இந்திய (தமிழக) மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டு செயல்திட்டக் குழுவில் விவாதித்துத் தீர்வு காண்போம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதி அளித்தார். அதே சமயம் இலங்கை அரசுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் ஏற்படும் உணர்வுகளையும் நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டதும் 136 மீனவர்களைப் படகுகளுடன் கடத்திச் சென்று அவர்களுடைய வலைகளை அறுத்துத் தள்ளியதுடன் மீன்களையும் பறிமுதல் செய்துகொண்டதும் தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கூட ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்குச் சென்றன. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மக்களவையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கவலைகள் நியாயமானவையே என்றார்."சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும்போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதே வேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன் பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள் இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?இலங்கை மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் பிழைக்க வேண்டும், வாழ்வாதாரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது நியாயம் ஆனதால் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.2008 அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி கூட்டறிக்கைகூட வெளியிடப்பட்டது. அதன் பிறகு இச் சம்பவங்கள் ஒரேயடியாக நின்றுவிடவில்லை என்றாலும் படிப்படியாகக் குறைந்தே வந்தன. கடலில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையோ மற்றவர்களோ தாக்குவதும் படிப்படியாகக் குறைந்தே வருகிறது. ஆனாலும் ஒரு சில வேளைகளில் கையை மீறும் அளவுக்கு தாக்குதல்கள் நடந்துவிடுகின்றன' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக