திங்கள், 21 டிசம்பர், 2009

தமிழ் ஓலைச் ​சுவடிகளைத் திரட்டி,​​ மின் படியாக்கம் செய்ய இங்கிலாந்து அறக்கட்டளையுடன் தமிழ்ப் பல்கலை.​ ஒப்பந்தம்



தஞ்சாவூர், ​​ டிச.​ 19:​ தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டுதல் மற்றும் மின் படியாக்கம் செய்யும் பணிக்காக இங்கிலாந்து தமிழ் மரபு அறக்கட்டளையுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.​ ​ தமிழகத்தில் மட்டும் 548134 தமிழ்,​​ தெலுங்கு,​​ மோடி உள்ளிட்ட எழுத்துச் சுவடிகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.​ இதில் தூத்துக்குடி,​​ கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவில் ஓலைச் சுவடிகள் உள்ளன.​ ​ தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்று அதிலிருந்து தமிழ் ஓலைச் சுவடிகளை மின்படியாக்கம் செய்து பாதுகாப்பதற்கான பணிகளை தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கியது.​ இப்பணிக்காக தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.​ 20 லட்சம் நிதியுதவி அளித்தது.​ நிகழாண்டு தமிழக முதல்வர் மு.​ கருணாநிதியின் பிறந்தநாளில் இருந்து தமிழ் ஓலைச் சுவடிகளைத் திரட்டும் பணி தொடங்கியது.​ ​ ஆனால்,​​ பொதுமக்களின் தயக்கத்தால் திட்டமிட்டபடி ஓலைச் சுவடிகளை திரட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டது.​ பெரம்பலூர் உள்ளிட்ட சில ஊர்களில் மட்டுமே குறிப்பிட்ட ஓலைச் சுவடிகளை மக்களிடமிருந்து பெற முடிந்தது.​ இதையடுத்து ஓலைச்சுவடி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கே மடிக் கணினி,​​ ஸ்கேனருடன் சென்று,​​ ​ ஓலைச் சுவடிகளை மின் படியாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.​ ​ இப்பணிகளை இங்கிலாந்து நாட்டில் உள்ள தமிழ் மரபு அறக்கட்டளை,​​ அயல் நாடுகளில் உள்ள இப்பணிகளில் அனுபவம் வாய்ந்த தமிழர்களைக் கொண்டு இந்த ஓலைச்சுவடிகளை மின்னாக்ககம் செய்யவும்,​​ வகைப்படுத்தவும் உதவ முன்வந்தது.​ ​ அதன்படி தமிழ் ஓலைச் சுவடிகளைத் திரட்டி அவற்றை ​ மின் படியாக்கம் செய்யும் பணிக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இங்கிலாந்து நாட்டு தமிழ் மரபு அறக்கட்டளை துணைத் தலைவர் சுபாசினி,​​ தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.​ ராசேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.பல்கலை. ​ பதிவாளர் ஆ.​ கார்த்திகேயன்,​​ சுவடிப் புலத் தலைவர் வே.இரா.​ மாதவன்,​​ பேராசிரியர்கள் ந.​ அதியமான்,​​ பா.​ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளையினர் இதுவரை சமய இலக்கியச் சுவடிகளில் மட்டுமே மிகுதியும் கருத்து செலுத்தி வந்துள்ளனர். தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த பின்னாவது தமிழ் நலம் சார்ந்தபணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் இன்றைய தாள்கள் அன்றைய ஓலைச் சுவடிகள். அனைத்து நூலகங்களிலும் உள்ள கடந்த நூற்றாண்டு மலர்கள் அனைத்தும் கருத்து மணம் வீசுவனவே. இப்போது வருவன போல் துதிபாடும் விளம்பர மலர்கள் அல்ல. ஆனால், நூலகங்களில் இடமில்லை என இவை யனைத்தும் பழைய தாள்கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றையும் மறு பதிப்புகளைப் பாரராமல் மறைந்தொழியும் நூல்களையும் இத்திட்டத்தின் கீழ் மின்னாக்கம் செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 4:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக