வியாழன், 26 நவம்பர், 2009

உயிர்நீத்த தமிழர்களுக்கு நினைவு கூட்டங்கள் நடத்த தடையா?: பழ. நெடுமாறன் கண்டனம்



சென்னை, நவ. 25: இலங்கையில் நடைபெற்ற போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு நினைவுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற போரில் ராணுவத்தினால் கொல்லப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் நவம்பர் 27-ம் தேதி கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பதாக செய்திகள் வருகின்றன. இந்நிகழ்ச்சி குறித்து சுவரொட்டிகள், துண்டறிக்கை அச்சிடக் கூடாது என்று அச்சகங்கள் போலீஸôரால் மிரட்டப்பட்டுள்ளன. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அரசின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதோடு தமிழ் விரோதப் போக்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது. நவம்பர் 27-ம் தேதி மண்டபங்கள் அல்லது வீடுகளில் நினைவுக் கூட்டங்களை நடத்த வேண்டும். வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று அனைத்துத் தமிழர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் அகதி முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்துவரும் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

நீத்தார் பெருமையைப் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்குக் குறளோவியம் வரைந்த முத்தமிழறிஞர் காங்கிரசிற்குஅடிபணியாமல் தலையிட்டு வீர வணக்க நாள் நிகழ்த்தத் தடைவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் தடைவாசம் என்னும் காங்கிரசின் போக்கைப் பின்பற்றாமல் தாமே அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் வீர வணக்க நிகழ்வுகளையும் நீத்தார் புகழ் போற்றி நிகழ்வுகளையும் நடத்த வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்த கரிசினைப் - பாவத்தைப் போக்க - இதுதானே வழி! தாய்மானம் காத்து வஞ்சகர்களால் போர்த்தளத்தில் உயிர் பறிக்கப்பட்ட களப் போராளிகளுக்கும் பிற நிலத்தில் உயிர் பறிக்கப்பட்ட மனைப் போராளிகளுக்கும் தினமணி வாசகர்கள் சார்பில் வீர வணக்கங்கள்! உங்களின் உயிர் ஈகம் வீண போகாது! தமிழ் ஈழம் மலரும் ! வளரும் ! தழைக்கும்! உங்கள் எண்ணங்கள் ஈடேறும்! உங்கள் புகழ்க் கொடிகள் விண் முட்ட பறக்கும்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க இந்திய-ஈழ நட்புறவு!

வீர வணக்கங்களுடனும் வாழ்த்துகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/26/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக