சனி, 28 நவம்பர், 2009

இடைத்தேர்தல்: பாமகவினர் 49 (ஓ) போடுவர்: ராமதாஸ்



திருச்சி, நவ. 27: திருச்செந்தூர், வந்தவாசி, சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாமகவினர் 49 (ஓ) பயன்படுத்துவார்கள் என்றார் அக்கட்சியின் நிறுவனர் -தலைவர் ச. ராமதாஸ். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். பயம் காரணமாக இந்த முடிவை மேற்கொள்ளவில்லை. எம்பி, எம்எல்ஏ தொகுதிகளில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இடைத்தேர்தல் வந்தால் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். உறுப்பினர் கட்சி மாறுதல், மரணம் போன்றவற்றால் காலியிடம் ஏற்படுமானால், ஏற்கெனவே வென்ற கட்சிக்கே அந்த இடத்தை வழங்க வேண்டும் என்பது பாமகவின் கொள்கை. இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அடுத்து, அண்மைக் காலமாக தேர்தல் என்றாலே பணபலம் மட்டுமே முடிவுகளை நிர்ணயம் செய்கிறது. அதுவும் இடைத்தேர்தல் என்றால் பணம் இன்னும் அதிகமாக ஆதிக்கம் செய்கிறது. இதை முன்னாள், இந்நாள் தேர்தல் ஆணையர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர். இது ஆணையத்தின் கையாலாகாதத்தனம். இந்த முறை அதிகார பலம் இல்லாவிட்டாலும், அதிமுகவும் பணத்தைச் செலவிடும். அதிகமாகவும் செலவு செய்யலாம். மூன்றாவது காரணம், தேர்தல் சீர்திருத்தங்கள். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் குறிப்பிட முடியும். ஆனால், அவை கணக்கிடப்படுவதில்லை. அதாவது, 49 ஓ பிரிவைப் பயன்படுத்தும் வாக்காளர்களைக் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். வெற்றி பெற்றவரைவிடவும் கூடுதலாக இந்தப் பிரிவை அதிக வாக்காளர்கள் பயன்படுத்தியிருந்தால், அந்தத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இதனால், பணபலம் கட்டுப்படுத்தப்படும். இறுதியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து நாடு தழுவிய சந்தேகம், சர்ச்சை எழுந்துள்ளது. இதை இல்லையென்று நிரூபிக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால், தேர்தல் என்பதே அர்த்தமற்றதாகி வருகிறது. எனவே, பாமக வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் 49 (ஓ) பிரிவைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில்லை என்று ஒப்பந்தம் செய்து முதலில் கையெழுத்திட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே இது வழிகாட்டியாக அமையும். வாக்களிக்க பணம் வாங்குவது தவறு என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் சினிமாக்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மழுங்கச் செய்துவிட்டிருக்கின்றன. மக்கள் போதையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.முல்லைப் பெரியாறு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு தமிழக அரசின் வழக்குரைஞர் ஒப்புக் கொண்டிருக்கவே கூடாது. எதிர்த்து முறியடித்திருக்க வேண்டும். பிரச்னையின் ஆரம்பத்திலேயே இந்த பெஞ்ச் விசாரணையைப் பெற்றிருந்தாலும் பரவாயில்லை. தற்போது கிடைத்துள்ள இந்த விசாரணையால் இன்னும் பல ஆண்டுகள் காலதாமதமாகும். இதற்கிடையில், பெஞ்ச் விசாரணையின் போது பாமக அல்லது பசுமைத் தாயகம் அமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்யப்படும்'' என்றார் ராமதாஸ்.திருப்பம் ஏற்படுத்துவாரா? திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கான காரணங்களை விளக்கினார். தொடர்ந்து, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல் திருப்பங்களைக் குறிப்பிட்டார். ""1954 குடியாத்தம் இடைத்தேர்தலின்போது, அதுவரை தொடர்ந்து காமராஜரையும், காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்துப் பேசி வந்த பெரியார் அந்தத் தேர்தலில் ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அடுத்து, 1981 திருப்பத்தூர் இடைத்தேர்தலின் போது, அப்போது கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருந்த எம்ஜிஆர், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசினார். ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யவில்லை. இவையிரண்டும் கடந்த காலத் தேர்தல்களில் ஏற்பட்ட, குறிப்பிடத்தக்க திருப்பங்கள்'' என்றார் ராமதாஸ். இதைத் தொடர்ந்து, வேறெந்த தகவலையும் கூறாமல் முல்லைப் பெரியாறு விவகாரத்துக்குச் சென்றார் ராமதாஸ். இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்த பிறகும், கடந்த காலத் திருப்பங்கள் என்று இவற்றைக் குறிப்பிடக் காரணம் என்ன? இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? என நிருபர்கள் கேட்டனர். ""கடந்த கால சம்பவங்களை உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றுதான் கூறினேன். வேறொன்றும் இல்லை'' என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு பேட்டியைத் தொடர்ந்தார்.
கருத்துக்கள்

இடைத் தேர்தலில் வென்றவர் இறந்தால் அவரது கட்சியனருக்கே அத்தொகுதியைத் தரவேண்டும் என்பதைச் சிறந்த சீர்திருத்த கருத்தாகச் சிலர் அறியாமையில் எணணுவது போல் இராமதாசும் கூறி வருகிறார். நம் நாட்டில் இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் வெற்றி வாய்ப்பு உள்ள அப்பாவி ஒருவரை நிற்க வைத்து அவர் வெற்றி பெற்றதும் அவருக்கு இறப்புலகப் பதவியை அளித்து விட்டுத் தமக்கு வேண்டிய - தேர்தலில் நின்றிருநதால் வெற்றிவாய்ப்பு இல்லாதவரை - அடுத்த உறுப்பினராகக் கட்சி அறிவிக்கும். எனவே, இது கொலையாட்சி முறையாகுமே தவிர மக்களாட்சி முறையாகாது. நம் நாட்டுச் சூழலுக்குத் தேர்தல் உள்ளபடியே நடைபெறுவதுதான் சிறந்தது. ஆளும் கட்சியின் குறை நிறைகளை உணர்த்தவும் தொகுதியின் தேவைகளை வலியுறுத்தவும் தேர்தலில் வெற்றி பெற்றவரின் உயிரைக் காப்பாற்றவும் இடைத் தேர்தல் தேவை என்பதை உணர வேண்டும். எனவே, பைத்தியக்காரத்தனமான கருத்துகளை யெல்லாம் சிறந்த சீர்திருத்தக் கருத்தாக நம்பிக் கொண்டு தாங்களும் குழம்பி மக்க‌ளையும் குழப்பக்கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/28/2009 2:51:00 AM

இடைத் தேர்தல்களில் பணப்புழக்கம் தாராளமாக இருப்பதால் வாக்காளர்கள் வோட்டுப் போடாமல் இருக்க மாட்டார்கள். அரசிடமிருந்தும், ஆளும் கட்சியிடமிருந்தும் மாற்றாந்தாய் போக்கு தொகுதிக்கு கிடைக்கக்கூடாது என்பதால் ஆளும்கட்சிக்குத்தான் வோட்டுப் போடுவார்கள். எனவே நம்ம சிரிப்பு டாக்டர், ஆளும் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துவிட்டு, அவர்கள் ஜெயித்தவுடன், தன ஆதரவால்தான் இந்த அமோக வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். அதை விட்டு 49 (O) என்றெல்லாம் சொல்லி சறுக்கிவிழாமல் இருப்பது நல்லது.தமிழகத்தின் பால் தாக்கரே ராமதாஸின் சீப்பான அரசியலுக்கு ஒரு ஓ போடுங்கப்பா."49 O" வை எண்ணினால் ப ம க வின் பலம் தெரிந்துவிடும்.ஐயா ராமதாசு! என்ன உன் நிலைமை இப்படி ஆயிடிச்சே, திமுகவும் அதிமுகவும் உன்னை கண்டுக்கவே இல்லை. திருமாவளவனுக்கு கிடைக்கும் மரியாதை கூட உனக்கு கிடைக்காமல் போய் விட்டதே. ஐயோ பாவம்.

By Kumar
11/28/2009 2:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக