வியாழன், 26 நவம்பர், 2009

செம்மொழிச் சிந்தனைகள்...



திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் நடத்திய அறப்போராட்டத்தின் பிறகு, பல்லவராட்சி மாறிச் சோழராட்சி மலர்ந்தது; தெற்கே பாண்டியராட்சியிலும் மாற்றம் விளைந்தது. தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியமும் திருக்குறளும் காப்பியங்களும் வெளிப்படுத்தப்பட்டு, படிக்கப்பட்டு, உரை எழுதப்பட்ட காலமும் இதுவேயாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டுவரை ஏற்பட்டவற்றை, தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எனலாம். சிவனியம் என்னும் சைவ சித்தாந்தமும் வைணவமும், பக்தி இலக்கியங்களும், பன்னிரு திருமுறையும், திவ்வியப் பிரபந்தங்களும் வெளிப்பட்டுப் பரவி வளர்ந்து, வரையறைகள் வரையப்பெற்றதும் இக்காலப் பகுதியினதேயாகும். இவ்வாட்சி மாற்றம் ஏற்பட்டிலதேல், தமிழ் இன்று "என்றுமுள தென்தமிழ்' ஆகியிராது. திராவிட இயக்கம் தோன்றியதால் தமிழுக்கு ஓர் எழுச்சி ஏற்பட்டதை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் செழியனும் பாண்டியனும் மலர்விழியும் கயற்கண்ணியும் என ஆயிரக்கணக்கானவர் வலம்வரத் தொடங்கினர். இம் மாற்றங்கள் பெயரளவிலல்ல, பேரளவில் நிகழ்ந்தன. திருவள்ளுவர் கழகம், இளங்கோ மன்றம், கம்பன் கழகம் எனப் பல ஆயிரம் தமிழமைப்புகள் தோன்றின. இன்று செம்மொழி நிறுவனம் மூலம் பல ஆயிரம் ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லோரும் தமிழ் இலக்கியக் கல்வி, சங்க இலக்கியப் பயிற்சியின் பக்கம் திரும்பியுள்ளனர். செம்மொழிச் செவ்விலக்கியம் பற்றி அறிய, ஆர்வம் பெருகியுள்ளது. இன்னும் சில நூற்றாண்டுக்குப் பிறகும் இம் மறுமலர்ச்சியை நினைவு கொள்ளுமாறும், இதன் தாக்கம் தமிழையும் தமிழனையும் நிலைநிறுத்துவதாகவும் இருக்க வேண்டும். தமிழர் வரலாற்றிலும் தமிழ்மொழி, இலக்கிய வரலாற்றிலும் இன்று நாம் மேற்கொள்ளும் செயல்கள் எழுதப்பட வேண்டும். தமிழ்மொழி செம்மொழி என அறிவிக்கப் பெற்றதை, இடைக்காலச் சோழர் காலத்திய மறுமலர்ச்சிபோல் ஆக்குதல் வேண்டும். "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நீ நாளும் நினை நெஞ்சே' என நம் அருளாளர்கள் பாடியதற்கு ஒப்ப, நிலையான சிந்தனைகள் சிலவற்றை எண்ணிப் பார்ப்போம். இவை நல்லெண்ணத்துடன் எழுதப்படுவனவே தவிர, ஆலோசனை கூற முந்துவன அல்ல. நடுவணரசு நம்மை நம்பியிருக்கும் காலத்தில், நம் நலன்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். காற்று மாறியடிப்பதென்பது, அரசியலில் ஒரு சுழற்சி. எனவே, இன்றே தொலைநோக்குப் பார்வையுடன் நாம் செயற்பட வேண்டும். முதலாவதாக செம்மொழி நிறுவனத்திற்கான கட்டடம் கட்டப்பட வேண்டும். நூலகம், வெளிநாட்டவரும் தங்கும்படியான விருந்தினர் விடுதி, அரங்கங்கள் என அனைத்துக்கும் உடனே கால்கோளிட்டுச் செயற்பட வேண்டும். இவற்றுக்கான நிதி ஆதாரத்தை நடுவணரசிடம் வலியுறுத்தி உடனே பெற வேண்டும். வடமொழிக்கு ஐந்து பல்கலைக்கழகங்கள் செயற்படுவதோடன்றி, ஓசையின்றி நிதிகள் வழங்கப்படுகின்றன. மாநாட்டில் மரபுவழி எழுதி முடிக்கப்பட்ட நூல்களையும் பிறசில அடிப்படை ஆய்வு நூல்களையும் வெளியிட இப்பொழுதே பணிகள் தொடங்க வேண்டும். இன்றைய கருத்தரங்குகள், பயிலரங்குகள் தொடர வேண்டும். ஆய்வு மாணவர்களுக்கு நிதியுதவும் அரிய திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஐம்பெருங்குழு, எண்பேராயம் தொடரும் அதே வேளையில், புலவர் பேரவை ஒன்றும் தொடங்க வேண்டும். கலந்துரையாடல், திட்டமிடல் போலப் பலவற்றைச் சிந்தித்து, தமிழ் உயராய்வு மையம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக, கல்லூரித் துறைகளுக்குப் பல்வேறு பணிகள் தரப்பட்டு, அவற்றைச் செயற்பட வைக்கவேண்டும். செம்மொழி நிறுவனத்திற்கு மதுரையில் ஒரு கிளை திறக்கப்பட வேண்டும். திருச்சி முதல் கன்னியாகுமரி வரையுள்ள தமிழறிஞர்கள், படைப்பாளிகள், திறனாளிகள் ஆகியோரும் இப்பணிகளில் ஈடுபட வாய்ப்பாகும். வெளிநாட்டவர் வரின், தெற்கே குமரிமுனை வரை அவர்கள் வருமாறு அமைத்தல் வேண்டும். சென்னையில் உள்ளதைப் போலவே இங்கும் கட்டடங்கள் அமைத்தல், தெற்கேயுள்ள துறைகளை, மையங்களை இணைத்தலுக்கு இது பயன்படும். தமிழக அரசு, நடுவணரசு தரும் நிதியுதவியுடன் தனியார் தரும் நிதியுதவிகளையும் பெறுதலில் தவறில்லை. திருக்கோயில்களுக்குப் பல லட்சம் தருபவர்கள், இத் தமிழ்த்தாய் கோயில்களுக்கும் கேட்டால் அள்ளித்தருவர் என்பது உறுதி. அதுவும் முதல்வர் அறிவித்தால் நன்கொடைகள், அறக்கட்டளைகள் குவியும். இறுதியாக ஒன்று. தமிழ் ஈழத்தில் "ஜனநாயக முறையில்' தமிழர்களுக்குச் சம உரிமை தர ஒவ்வொரு நாளும் வற்புறுத்த வேண்டும். நம் மீனவர்கள் உரிமை காப்பாற்றப்பட வேண்டும். கச்சத்தீவை மீட்டுப் பெற வேண்டும். அதற்கான அறப் போராட்டங்கள் தொடர வேண்டும். அங்கு தமிழர்கள் வாழ்வுரிமை பெறுமாறு செய்ய, இன்றைய தமிழகமும் தமிழக அரசும் தவிர வேறு பற்றுக்கோடு இல்லை. இந்திய அரசு இன்னமும் மீனவர்கள் படும் அவதி பற்றியோ, தமிழர்கள் இழிவுபடுத்தப்படுவது பற்றியோ, இலங்கை அரசைக் கண்டிக்கவே இல்லை. வெறும் வாய்ப்பேச்சு தடவிக் கொடுப்பது போன்றது. ஒருகாலத்தில் "உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்றோம். "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்றோம். இன்றும் அவை நினைவில் வைக்கத் தக்கன. கிள்ளிவளவன் சோழ நாட்டில் "பஞ்ச காலத்திலும்' அதிகாரிகளைக் கொண்டு "வரிவசூல்' செய்ய முயன்றான். வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர், மக்கள் சார்பாக வேந்தனிடம் எடுத்துச் சொன்னதும், "வரிவாங்குதல்' தவிர்க்கப்பட்டது. "பழஞ்செய்க்கடன்' வீடுகொண்டது என்ற குறிப்பால், வரி இரத்துச் செய்யப்பட்டது புலனாகிறது. இன்றைய இழிநிலைகள் நீங்கும்வரை, மாநாடுகள் பற்றிய வேலைகளையும் செய்துகொண்டு, செயல்முறையில் செம்மொழி நிலைபேற்றுக்கான செயல்களையும் முடுக்கிவிட்டுச் செயற்படுத்திக் கொண்டு, மக்களிடையே இவற்றை நன்கு விளம்பரப்படுத்திக் கொண்டு, மாநாடுகளைச் சிறிது காலம் கழித்து நடத்தினால், உலகத் தமிழர் அனைவரும் மகிழ்வர். ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடும், செம்மொழி முதல் மாநாடும் சேர்ந்தே நடப்பது நல்லது. ஒரு சாரார் துன்பத்தினின்றும் விடுபடாத நிலையில், முழு மகிழ்ச்சியுடன் நாம் தமிழ் மாநாடு நடத்த முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது!
கருத்துக்கள்

மிகச்சரியாகவே எல்லாக் கருத்துகளையும் தமிழண்ணல் தெரிவித்துள்ளார். அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பதை விட உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒன்றிற்கு மேற்பட்ட துயர நிகழ்வுகள் நடந்துள்ள சூழலில் கொண்டுள்ள எண்ணத்தையும் தமிழ் நல ஆட்சி வந்த பின்னும் தமிழ் நலப்பணிகள் முழுமையுறாததால் வருந்தும் தமிழன்பர்கள் ஏக்கத்தையும் செம்மொழி நிறுவனம் அமைக்கப்பட்டும் முறையாகச் செயல்பட இயலாமல் தடையாக உள்ள கட்டமைப்புக் குறைபாடுகளைப் போக்க விரும்பும் நிறுவனத்தின் குரலையும் எதிரொலித்திருக்கின்றார் எனலாம். சொல்லாததையும் செய்யும் முத்தமிழறிஞர் விரைவில் ஆவன செய்வாராக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/26/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக