சனி, 5 செப்டம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-97:
ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு!



விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஈடுபடுத்தியும், அவர் விடுதலைப்புலிகள் பக்கம் சார்ந்து கருத்து தெரிவித்ததும், பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாக முயற்சி செய்வது என்று முடிவெடுத்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முந்தின நாள், அதாவது ஜூலை 28-ஆம் தேதி, நள்ளிரவு அசோகா ஹோட்டலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் இந்தியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் எழுப்பினர்.

அவர்களிடம், "பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே புறப்படுங்கள்' என்று கூறினர்.


இதன் நோக்கம் அறிய பல கேள்விகளை எழுப்பியும், "பிரதமர் உங்களிடம் ஒப்பந்தம் குறித்தக் கருத்துகளை விவாதிக்க விரும்புகிறார்' என்பதைத்தவிர வேறு எந்த விவரத்தையும் அவர்கள் சொல்ல விரும்பவில்லை.


கருப்புப்பூனை அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் பிரபாகரனும் பாலசிங்கமும் பிரதமர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இல்லத்தின் வாயிலருகே நின்று, பிரதமரும் புலனாய்வுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணனும் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பிரபாகரனைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாகவும், நேரில் சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறி, அவரது கைகளைப் பற்றி குலுக்கிய ராஜீவ் காந்தி, ஒப்பந்தம் குறித்து அவர்களுக்கு இருந்த மாற்றுக்கருத்துகளை விவரிக்கும்படி கேட்டார்.
பிரபாகரன், பாலசிங்கத்திடம் அவருக்கு ஆங்கிலத்தில் எடுத்துக்கூறும்படி சொன்னதும் அவர் சுருக்கமாகவும் கூறவேண்டியவற்றை விட்டுவிடாமலும் விவரித்தார்.

""வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் ஆதிபத்திய உரிமை கொண்ட பூமி. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்.
இந்தப் பகுதியின் ஒருமைப்பாட்டை வாக்கெடுப்பு மூலம் அறிவது ஏற்கத்தக்கதல்ல.

மாகாணசபைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இறுதி அதிகாரம் ஜெயவர்த்தனாவிடமே இருக்கும். அவரை நம்பமுடியாது. காரணம் அவர் சிங்கள வெறியர். தமிழர் நலன் பெறும் எந்தத் திட்டத்துக்கும் அவர் உடன்பட மாட்டார்.

ஆயுதக் கையளிப்பு என்பது 72 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்கமுடியாது. இந்த ஆயுதங்கள் பல ஆண்டுகள் ரத்தம் சிந்தி பெற்ற ஆயுதங்கள். தமிழர்களின் பிரச்னைக்குரிய இறுதித்தீர்வு எட்டப்படாத நிலையில் ஆயுதங்களை ஒப்படைக்க வற்புறுத்துவது நியாயமாகாது'' என்று ஒவ்வொரு பிரச்னையாக ராஜீவிடம் விளக்கியதாகவும், ராஜீவ் அனைத்து அம்சங்கள் குறித்தும், தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டதாக, பாலசிங்கம் "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றைக் குறித்துக்கொண்ட ராஜீவ் காந்தி, அவர்களிடம் தொடர்ந்து பேசும்போது, ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும், ஒரு நீதியான தீர்வு காணவேண்டும் என்பதிலும், குறைபாடுகளைப் பின்னர் ஜெயவர்த்தனாவிடம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்திவைத்து விடலாமென்றும் தெரிவித்ததுடன், இதனை ஜெயவர்த்தனாவிடம் சொல்லுவேன் என்றும் இந்திய அரசை நம்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர்களின் பாதுகாப்பை ஒப்பந்தம் உறுதிப்படுத்தும் என்றும் எடுத்துச் சொன்னார்.

ராஜீவ் காந்தி சொன்னதை பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழில் விளக்கினார். ஆனாலும் பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ராஜீவ் காந்தி, அவர்களிடம் மேலும் பேசுகையில், விடுதலைப் புலிகளின் எந்த முடிவுகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை என்றும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உடனிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், "பிரதமரே உங்களது வழிக்கு வந்துவிட்டார். இந்தச் சிறிய ஒத்துழைப்பையாவது இந்திய அரசுக்குச் செய்யக்கூடாதா?' என்று வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்.

இது குறித்து "விடுதலை' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
"ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை நாம் எதிர்ப்பதாகத்தானே அர்த்தம்' என்று எனது காதோடு கிசுகிசுத்தார் பிரபாகரன்'

தொடர்ந்து ராஜீவ், "உங்களது இயக்கத்துக்கும் பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவின் பேரில் நம்பிக்கையில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட அவர்மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர்மீது கடும் அழுத்தம் கொடுத்து, இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறோம். மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. அதற்குக் காலம் பிடிக்கும். அதற்கு முன்னதாக, வடகிழக்கில் ஓர் இடைக்கால அரசை நிறுவி, அதில் உங்களது அமைப்புக்குப் பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்' என்றார்.

"தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு ரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்கவேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாம். அதற்கு முன்னதாக ராஜீவ்-பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. ரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்' என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல எனக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வமும் காட்டவில்லை. ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் மிகவும் ஆர்வத்துடன், ராஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்'.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள பாலசிங்கம், சந்திப்பு விடியற்காலை மூணரை மணியளவில் முடிவுற்றதாகவும் நூலில் தெரிவித்திருக்கிறார்.

நாளை: ஒப்பந்தம் கையெழுத்தானது!

கருத்துக்கள்

அப்பொழுதிருந்தே ஈழத் தமிழர் நலனைக் கெடுத்திருக்கின்றான் நாராயணன். அன்றைக்கு இராசீவைத் தவறாக வழிநடத்தியது போல் இன்றைக்குச் சோனியாவை வழிநடத்திக் கொண்டிருக்கின்றான். தமிழரின் தலையெழுத்து! அவர்கள் நலன் தொடர்பாக முடிவெடுப்பது அவர்களது எதிரிகளே! மத்திய அரசு என்றைக்குத திருந்துமோ!

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக