வியாழன், 3 செப்டம்பர், 2009

வில்லிசை பெண்மணி!



ஏட்டில் எழுதி வைத்த கதையைப் பாட்டாகப் படித்து வில்லிசை நடத்தும் பல கலைஞர்கள் மத்தியில் ராஜாத்தி கணேசன் தனித்துவமாக ஜொலிக்கிறார். இன்னும் அச்சேறாத ஓலைச்சுவடி கதைகளை வில்லிசையாக்கி மக்கள் உள்ளங்களை கொள்ளை கொள்வதே இவரது தனித்துவம். குமரி மாவட்டம் ஈத்தாமொழி புதூர் இவரது பூர்வீகம். ஆனால் திருமணம் முடிந்ததும் கணபதியாபுரம் அருகே கல்லுக்கட்டி என்ற இடத்தில் குடியிருந்து வருகிறார் ராஜாத்தி. கிராமிய கலைமணி என்று அழைக்கப்படும் இவர் படித்தது 6-ம் வகுப்பு வரைதான். ஆனாலும் கற்றலும் கேட்டலும் அவருள் தொடர் கதையாகவே இருந்தது. அதுதான் அவரை சிறந்த வில்லிசை கலைஞராக உருவாக்கியது. எழுதி வைத்த கதைகளையும், புராண கதைகளையும் வில்லிசை நிகழ்ச்சியில் பாடி பரவசமூட்டும் கலைஞர்கள் மத்தியில் ஓலைச்சுவடி கதைகளை மக்கள் காதுகளிலும் மனங்களிலும் ரீங்காரமிட செய்யும் வகையில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ராஜாத்தி. தனது 12-ம் வயதிலிருந்தே வில்லிசையை தனது வாழ்வாக்கி கொண்டுள்ளார். சிறுவயதில் வில்லிசை குழுக்களுடன் நிகழ்ச்சிகளுக்குச் சென்று அதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார். ஈத்தாமொழி அருகே பெரியவிளையைச் சேர்ந்த மாடக்கண்ணு புலவர்தான் இவரது குரு. அவரிடம் வில்லிசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார். இப்போது முக்கிய கோயில் கொடை விழாக்களில் இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. புராண கதைகள் என்றாலும், புத்தக கதைகள் என்றாலும் மேடையில் வெளுத்து வாங்குகிறார். அந்தந்த ஊருக்கு சென்றதும், அங்குள்ள கோயிலின் சிறப்புகள், அப் பகுதியில் நிலவும் கதைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த நிமிடத்தில் திறம்பட இசையுடன் பாடி மக்களை அசத்துகிறார். நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் ஒரு குறிப்பைக் கொடுத்து பாடச்சொன்னாலும்கூட அதற்கும் சளைத்தவரல்ல. நாகர்கோவிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இவருக்கு சிறந்த வில்லிசை கலைஞர் விருதை குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வழங்கி கெüரவித்தார். கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதால் மகிழ்ச்சியில் இருந்த அவரை சந்தித்துப் பேசியபோது தனது தனித்திறன் குறித்து விவரித்தார். இனி அவரே கூறுகிறார்: ""ஆண்டாண்டு காலமாக புராண கதைகளையும் வழக்கத்திலுள்ள கதைகளையும் வில்லிசையாய் கேட்டுக் கேட்டு மக்களுக்கு சலிப்பு தட்டியிருக்கும். இதனால் இன்னும் அச்சு வடிவம் பெறாத ஓலைச்சுவடி கதைகளை மக்களுக்கு வில்லிசை மூலம் சொல்லிவருவதால் அதற்கு வரவேற்பு இருக்கிறது. குரல் வளம், ஞாபக சக்தி, சுயமாக கதைகட்டி பாடுவது உள்ளிட்டவை எனது தனிச்சிறப்புகள். கடந்த 35 ஆண்டுகளாக வில்லிசை கலைத்துறையில் இருப்பதால் அதன் நெளிவு சுளிவுகள் தெரியும். மக்களைக் கவரும் நுணுக்கத்தையும் அறிவேன். இசக்கியம்மன், பெரிய தம்பிரான், சிவனணைந்த பெருமாள், திருக்கழுத்து உடையார், பலவேசம் சேர்வைக்காரன் கதைகள் ஏடுகளில் இருந்து படித்து மனதில் இருத்தியுள்ளேன். மேடைகளில் அவை சரளமாக வந்துவிழும். ஓலைச்சுவடிகளைப் படிக்க எனது தந்தை ராமசுவாமி நாடார் காரண கர்த்தா. சிறு வயதில் ஓலைசுவடியில் எழுதியுள்ளவற்றைப் படிக்க அவர் சொல்லித் தந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்களில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளும் அளித்துள்ளேன். இதுவரை 10-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. போட்டி வில்லிசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளேன். மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதை மறுக்கவில்லை. ஆனால் கிராமங்களில் வில்லிசை நிகழ்ச்சி இல்லாமல் கோயில் விழாக்கள் நடத்தப்படுவதில்லை. வில்லிசை கலை அழியாதது. இளைஞர்கள் பலரும் இதை தற்போது கற்று வருவது நம்பிக்கை தருகிறது. நான்கூட 3 பிள்ளைகளுக்கு இக்கலையை கற்று தந்து கொண்டிருக்கிறேன். இதில் வருமானம் குறைவு என்றாலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தி கிடைக்கிறது. எனது குரலுக்கும், என்னிடமுள்ள கலைக்கும் தெய்வம்தான் காரணம்'' என்றார் ராஜாத்தி. இவரது கணவர் கணேசனும் வில்லிசை கலைஞர்தான். இவர் வில்லிசை குழுவில் குடம் அடிப்பார். ஆர். ராஜாத்தி கே. கணேசன் வில்லிசை குழு என்ற ஒரு குழுவை இத் தம்பதியர் நடத்தி வருகிறார்கள். கிராமியக் கலையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தம்பதியருக்கு வாழ்த்துகள்.அ. அருள்தாசன்படங்கள்: யு. நாகராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக