ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

சென்னை நமது சென்னை
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்



சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை (1890).
அன்றுஇன்றைய சென்னையில் இருக்கும் மிகவும் பழமையான, ஐரோப்பியரின் வருகைக்கு முற்பட்ட இடங்களில் ஒன்று திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி சுவாமி ஆலயம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கே காணப்படும் கல்வெட்டு ஒன்று கி.பி. 808ல் நந்திவர்ம பல்லவர் இந்தக் கோயிலைச் செப்பனிட்டு விரிவுபடுத்திக் கட்டியதாகத் தெரிவிக்கிறது. திருவல்லிக்கேணியில் உள்ள இன்னொரு புராதன ஆலயம் 500 வருடத்துக்கும் மேற்பட்ட திருவட்டீஸ்வரர் கோவில்.பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு, ஆற்காடு நவாபுகளின் தலைமையிடமாக சேப்பாக்கம் மாறியது. இங்கே காணப்படும் முஸ்லிம் சமுதாயத்தினர் கோல்கொண்டாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. வாலாஜா நவாப் காலத்தில் 1795-ல் கட்டப்பட்டதுதான் திருவல்லிக்கேணி பெரிய மசூதி என்று அழைக்கப்படும் வாலாஜா மசூதி. இந்த மசூதியின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தக் கட்டடத்தில் மரமோ இரும்போ உபயோகப்படுத்தப்படவில்லை என்பதுதான்.மசூதிக்கு அருகில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி 1852-ல் திராவிடப் பாடசாலை என்று அழைக்கப்பட்டு வந்தது. 1897-ல்தான் இப்போதைய கட்டடம் கட்டப்பட்டது. இந்தப் பள்ளியில்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் படித்தார் என்பது திருவல்லிக்கேணியின் பெருமை!1750-ல் கிழக்கிந்தியக் கம்பெனி விலைக்கு வாங்கிய முதல் கிராமம் திருவல்லிக்கேணிதான். கோட்டைக்கு அருகில் இந்த கிராமம் இருந்ததாலும், மையப் பகுதிகளில் ஈஸ்வரன் கோவிலும், பெருமாள் கோவிலும் இருந்ததாலும், கீழ்நிலை அரசு அலுவலர்களின் குடியிருப்புப் பகுதியாக திருவல்லிக்கேணி திகழ்ந்தது. ஆற்காடு நவாபின் ஊழியர்களும் மசூதி மற்றும் நவாபின் அரண்மனையைச் சுற்றி பெருமளவில் குடியேறினார்கள். இப்போது கிருஷ்ணாம்பேட்டை இருக்கும் இடமும், திருவல்லிக்கேணியில் பெரும்பாலான இடங்களும் அப்போது வயல்வெளியாக இருந்தனவாம்.ஒரு காலத்தில் இன்றைய சேப்பாக்கம் முழுவதுமே ஆற்காடு நவாபுக்குச் சொந்தமானதாக இருந்தது. திப்பு சுல்தானுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டி 1801-ல் கர்னாடக நவாபின் ஆளுமைக்கு உள்பட்ட பகுதிகளை- சென்னையிலிருந்து நெல்லூர் வரை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்- பிரிட்டிஷார் கபளீகரம் செய்து கொண்டு விட்டனர். பெயருக்கு நவாபாக இருந்த குலாம் கெüஸ்கான் பகதூரும் 1855-ல் இறந்துவிட, சேப்பாக்கம் சொத்துகள் ஏலம் விடப்பட்டன. அத்தனையையும் அரசே வாங்கிக் கொண்டு விட்டது."ஆற்காடு நவாப்' என்கிற பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையுடன், அமீர் மகாலையும் நவாப் குடும்பத்துக்கு பிரிட்டிஷார் அளித்தனர். 1798-ல் கட்டப்பட்ட அமீர் மகால் 1876 வரை நவாப் குடும்பத்தினரால் பயன்படுத்தப்படவில்லை. அங்கே ராயப்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆற்காடு நவாப் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள ஷாதி மகாலில்தான் தங்கி வந்தார்.14 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்த அமீர் மகாலில் 600க்கும் அதிகமான ஆற்காடு நவாபின் உறவினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே இருக்கும் தர்பார் ஹால் மற்றும் பாங்க்வெட் ஹால் அந்த நாளைய நவாப் கலாசாரத்தின் எடுத்துக்காட்டாகவும், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடக் கலைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது.
ஆசிரியர்
இன்று

சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை (2009).அப்போது எனக்கு வயது பதினைந்து இருக்கும். திருவல்லிக்கேணியில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காகப் பெற்றோருடன் வந்திருந்தேன். எனது முதல் சென்னை அனுபவம் அதுதான். எல்லாமே மலைப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தன.தினமும் அதிகாலையில் மெüண்ட் ரோடு (அண்ணா சாலை) தொடங்கி எல்லா தெருக்களையும் கூட்டுவார்கள். சூப்ரவைசர் ஒருவர் மேற்பார்வை பார்ப்பார். எந்த இடத்திலாவது குப்பை கூளங்கள் இருக்க வேண்டுமே, ஊஹும்.கிராமத்திலிருந்து வந்திருந்த சிறுவனான எனக்கு, சாலைகளை எல்லாம் கூட்டி சுத்தமாக்குவது வேடிக்கையாக இருந்தது. போலீஸ் அதிகாரி, அரசு மேலதிகாரிகள் எல்லாம் குதிரையில் ரோந்து வருவார்கள். சாலைகள் துப்புரவாக இருக்கிறதா என்று மேல் நோட்டம் பார்ப்பார்கள்.அப்போதைய சென்னையில் ஆங்காங்கே குளிப்பறை மற்றும் கழிவறைகள் நகராட்சியால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. வெளியூரிலிருந்து வருபவர்கள், வீட்டுத் திண்ணைகளில் படுத்துக் கொண்டு இந்தக் குளியலறைகளில் குளித்துக் கொள்வார்கள். ஈசன் எஞ்ஜினியரிங் நிறுவன முதலாளி ஈஸ்வர அய்யர் இதுபோலத் திண்ணைகளில் படுத்துப் பொதுக் கழிப்பறைகளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தனது சென்னை வாழ்க்கையைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.சென்னையில் மின்சார ரயில் விடப்பட்டது வேடிக்கையான விஷயம். மும்பையில் ஜிஏபி (எஅட) ரயில் கம்பெனி தாணா வரை மின்சார ரயில் இயக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, போட்டிக்காகத் தென்னிந்திய ரயில்வே என்கிற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டதுதான் பீச்சுக்கும் தாம்பரத்துக்கும் இடையேயான மின்சார ரயில்.ஆரம்பத்தில் எல்லாம் இந்த ரயிலில் கூட்டமே இருக்காது. நான் சிறுவனாக வந்தபோதும் சரி, பிறகு மத்திய தபால் நிலையத்தில் வேலைக்கு வந்த போதும் சரி, இந்த மின்சார ரயிலில் பயணம் செய்வது ஒரு சுகானுபவம். முதலில், இந்த மின்சார ரயில்களில் தானாக மூடிக் கொள்ளும் கதவுகள் இருந்தன. அதனால் விபத்துகள் நேருகிறது என்பதாலும், அந்தக் கதவுகள் சரியாக மூடித் திறப்பதில்லை என்பதாலும் பிறகு கதவுகள் இல்லாத ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில் இரண்டு புறமும் வயல்வெளியாக இருக்கும். இப்போது தஞ்சாவூர்- திருச்சி பாதையில் ரயிலில் பயணிப்பதுபோல இருக்கும். பிற்காலத்தில் புறநகர் பகுதிகள் உருவானதற்கும் வளர்ச்சி பெற்றதற்கும் இந்த மின்சார ரயில்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.நான் மத்திய தபால் நிலையத்தில் வேலை பார்க்கும்போது, எங்கள் அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியர் புத்தகப் பிரசுரகர்த்தராகவும் இருந்தார். கிரைம் நாவல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார். அந்தக் காலத்தில் ஆர்.எஸ். மணி என்று ஒரு எழுத்தாளர். கிரைம் நாவல்கள் எழுதுவார். மேற்கு மாம்பலத்தில் அப்போது ஜானகிராமன் தியேட்டர் என்கிற திரையரங்கு இருந்தது. அதற்குப் பின்னால்தான் அவரது வீடு.அந்த கிரைம் நாவல் எழுத்தாளர் எனது நண்பரானார். அடிக்கடி நான் அவரை சந்திக்கச் செல்வேன். அப்போது மேற்கு மாம்பலத்தில் மணியின் வீட்டுக்குப் பின்னால் அவருக்கு சொந்தமான வயல் இருந்தது. அவரே ஆள்களை வைத்து உழுது பயிரிட்டு வந்தார். இதுபோல நிறைய பேர். எனது உறவினர் திருவல்லிக்கேணியில் தோட்டத்துடன் கூடிய வீடு வைத்திருந்தார். இப்போது அதெல்லாம் நடக்குமா?மயிலாப்பூர் மாதா கோயிலுக்குப் பின்னால் உள்ள கடற்கரைக்கு சாந்தோம் பீச் என்று பெயர். அங்கே வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் போகலாம். கறுப்பர்கள் போகக் கூடாது. மாதா கோயிலை ஒட்டிய சந்து வழியாகத் தவறிப்போய் யாராவது நுழைந்து விட்டால், மீனவர்களை விட்டு அவர்கள் நையப் புடைக்கப்படுவார்கள்.அந்தக் கடற்கரை மணலில் வெள்ளைக்கார துரைகளும், துரைச்சாணிகளும் முத்தம் கொடுப்பார்கள் என்று ஏதோ நடக்கக் கூடாது நடப்பது போல நம்மவர்கள் ரகசியமாகக் கிசுகிசுப்பார்கள். அதையெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.1946-ல் சென்னைக்கு காந்திஜி வந்தபோது நானும் ஓடி ஓடிப் போய் காந்திஜியைப் பார்த்தேன். அந்த மகானிடம் இருந்த வசீகரம் அதற்கு முன்னும் பின்னும் வேறு எந்தத் தலைவரிடமும் இருந்ததில்லை என்பதை நான் அடித்துச் சொல்வேன். அவரது பஜனைக்கும் நான் ஒரு நாள் போனேன். காந்திஜி பற்றிய நினைவும் ஞாபகங்களும் இன்னும் பசுமரத்தாணியாக எனது நினைவில் இருக்கிறது. என்ன கூட்டம்... என்ன கூட்டம்...ஒரு சில பழைய கட்டடங்களைத் தவிர அன்றைய மெட்றாசுக்கும் இன்றைய சென்னைக்கும் எந்தவித சம்பந்தா சம்பந்தமும் கிடையாது. கை ரிக்ஷா, ஜட்கா வண்டி, மாட்டு வண்டி எல்லாம் பழங்கதைகள்!
கருத்துக்கள்

கடந்த நூற்றாண்டு வரை கூட நம் தமிழ் மக்களின் அடிப்படைப் பண்பான விருந்தோம்பலுக்கு எடுத்துக் காட்டான திண்ணைகள் இருந்தமை போன்ற புதிய தகவல்கள் அடங்கிய அருமையான செய்திக் கட்டுரை. இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளி வரவேண்டும். தலைப்பைச் 'சென்னை நமது சென்னை' எனத் தமிழில் மாற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2009 2:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக