சனி, 27 ஜூன், 2009

இலங்கையில் நிரந்தர அமைதிக்கு
ராஜபட்ச அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
அமெரிக்கா வலியுறுத்தல்
தினமணி


வாஷிங்டன், ஜூன் 26: இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த ராஜபட்ச அரசு மேலும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியம்) ராபர்ட் பிளேக் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பேசியதாவது:


இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் அண்மையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். இது இலங்கை அரசுக்கு கிடைத்த முக்கியமான வெற்றியாகும். இதன்மூலம், இலங்கையின் எந்தப் பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.


இதைப் பயன்படுத்தி, இலங்கையில் நிரந்தர அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அதிபர் மகிந்த ராஜபட்ச மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதலாவதாக, இலங்கைக்கு உள்ளேயே புலம் பெயர்ந்து வவுனியாவிலும், அதைச் சுற்றியுள்ள முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஈழத் தமிழர் பிரச்னைக்கு முழு மனதுடன் அரசியல் தீர்வு காண இலங்கை அரசை நாம் வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். முதலில் உள்ளூர் அளவிலும், மாகாண அளவிலும் தேர்தல்களை நடத்த வேண்டும். இதன்மூலம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வாய்ப்பு ஏற்படும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஏற்படுத்த முடியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதன் மூலம் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள, வடக்குப் பகுதி உள்ளிட்ட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வகை செய்யும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தச் சட்டத்தை உண்மையிலேயே அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு விரைந்து எடுக்க வேண்டும்.


அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்குத் தேவையான மேலும் சில திருத்தங்களை அரசியல் சட்டத்தில் மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஆராய்ந்து வருகிறது. இந்தக் குழுவின் நடவடிக்கைகளை விரைவாக முடிக்க இலங்கை அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

மேலும், இலங்கையின் பல்வேறு மாகாணங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற மேலவையை உருவாக்கவும் அதிபர் ராஜபட்ச முயற்சி செய்து வருகிறார். இதன் மூலமும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முழுமை பெற்றால், இலங்கையில் உண்மையான அரசியல் சமரசத் தீர்வு ஏற்படும் என்றார் ராபர்ட் பிளேக். இதற்கு முன்னர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

சிங்களம் விரும்புவது சுடுகாட்டு அமைதி ஒன்றைத்தான். அதற்கு ஒத்துழைபபு நல்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. பிறகு ஏன் இந்த நாடகம்? அமெரிக்க அரசின் மனித நேயச் செயல்பாடுகளுக்கு எதிராக அமெரிக்க மக்களே கிளர்ந்து எழுங்கள்! தமிழ் ஈழம் விடுதலை பெறத் துணை புரியுங்கள்! உங்கள் முன்னோர் உங்கள் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த வரலாற்றை நினைவு கூருங்கள்! உங்கள் பின்னோர் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் மனித நேய ஆர்வலர்களும் ஒடுக்கு முறைக்கு எதிரான விடுதலை விரும்பிகளும் தமிழ் ஈழததிற்கு நீங்கள் விடுதலை வாங்கித் தந்ததைப் போற்றிப் பாராட்டுவார்கள். நன்றே செய்க! இன்றே செய்க! வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ- அமெரிக்க நட்புறவு! வளர்க ஈழ - உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/27/2009 2:03:00 AM

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும் மில்லியன் டாலர் கேள்வி. பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது, “இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள் காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

By ravi
6/26/2009 11:37:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக