வெள்ளி, 26 ஜூன், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 26:
ஸ்ரீமாவோவின் ராஜதந்திரம்!



ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா
1956 ஜூன் மாதம் "சிங்களம் மட்டும்' சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் சுருக்கமாக ஒருசில வரிகளில் எழுதப்பட்டிருந்தது இந்தச் சட்டம். இடதுசாரிகளும், தமிழ் அங்கத்தவர்களும் சட்டத்தை எதிர்த்து வாதாடி வாக்களித்தனர். தமிழ் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்னே காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்தனர். அரசாங்க ஆதரவாளர்களான சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். அன்று சிறிய அளவில் நடந்த அந்தத் தாக்குதல் வரப்போகும் ரத்தக் களரியையும் சாம்பலையும் அறிவிப்பதுபோல் அமைந்துவிட்டது. மறுபுறம் "சிங்களம் மட்டும்' சட்டம் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தை அறிவித்தது.தேசியமயமாக்கல் மூலமும் வெளிநாட்டு உதவியுடனும் புதிய அரசுப் பொருளாதாரத் துறையொன்றினை விருத்தி செய்வதில் பண்டாரநாயக்கா அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதன்மூலம் இரண்டு உடனடி நோக்கங்களை மக்கள் ஐக்கிய முன்னணி அரசு நிறைவேற்ற விழைந்தது. ஒன்று -தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலத்தைக் கட்டுப்படுத்தல். மற்றது -வளரும் புதிய அரசு கூட்டுத்தாபனங்களில் முடிந்தவரை அரசாங்கத்துக்குச் சார்பான சிங்கள புத்த ஜீவிகளுக்கும் கீழ்மட்ட ஆதரவாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்குதல். அரசு கூட்டுத்தாபனங்களே புதிய சிங்கள புத்த உணர்வுள்ள முகாமையாளர்களை உருவாக்கும் கூடங்களாயின.இத்தகைய அரசு முதலாளித்துவம் தோன்ற சில புறநிலைக் காரணிகள் இருந்தன. சில முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு வேண்டிய மூலதனக் குவியலும் ஈடுபாடும் தனியார் துறையில் இருக்கவில்லை. அரசின் நேரடி உதவியுடன் தனியார் துறை இந்தத் துறைகளுக்குள் செல்லக்கூடிய கொள்கை ரீதியான சாத்தியப்பாடுகள் இருந்தன. ஆயினும் பண்டாரநாயக்கா அரசு அந்த வழியைப் பின்பற்றவில்லை. அரசு மூலதனம் மட்டுமே இருந்த முதலீட்டுச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியது.பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை சோஷலிச நாடுகளின் ஆதரவைப் பெற்றது. 1956-க்குப் பின்புதான் இலங்கை சோஷலிச நாடுகளுடன் ராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. இதன் விளைவாக சோஷலிச நாடுகளின் பொருளாதார உதவிகள் வரத்தொடங்கின.வறண்ட பிரதேசத்தில் காடுகள் வெட்டப்பட்டு, நிலம் அபிவிருத்தி செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளுடன் அரசு செலவில் நிலமற்ற விவசாயிகளைக் குடியேற்றும் கொள்கை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பித்திருந்தது. 1938-ஆம் ஆண்டில்தான் இந்தக் கொள்கை அப்போது விவசாய அமைச்சராயிருந்த டி.எஸ். சேனநாயக்காவினால் முழு உருப்பெற்றது. சுதந்திரத்திற்குப்பின் எல்லா அரசாங்கங்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றின.சிங்களப் பிரதேசங்களில் உள்ள பெருநிலச் சொந்தக்காரர்களின் உடைமை உறவுகளை மாற்றுவதைத் தவிர்க்கும் ஒரு வழியாகவும் இந்தக் கொள்கை அமைந்தது. நிலமற்ற சிங்கள விவசாயிகளை அரசு செலவில் அரசு காணிகளில் குடியேற்றும் திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே தமிழ்ப்பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டன''.*"புத்த பிக்குகளின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து போக பண்டாரநாயக்கா மறுக்கிறார். இதனால் 1959-இல் சோமராம தேரோ என்ற புத்தபிக்கு தனது மஞ்சள் அங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார்'.**பண்டாரநாயக்காவின் படுகொலையைத் தொடர்ந்து, 1960-இல் நடந்த தேர்தலுக்குப்பின் இலங்கையின் பிரதமராகிறார் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கா. 4 மாதங்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுப் பிரதமராகிறார் பண்டாரநாயக்காவின் மனைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. சொல்லப்போனால் 1956-இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு ஸ்ரீமாவோவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. 1960-இல் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஆரம்பம் முதலே தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத் தமிழர்களையும், மலையகப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களையும் பிரிப்பதற்கு இவர் கையாண்ட தந்திரத்தின் ஒரு பகுதிதான் ஸ்ரீமாவோ-சாஸ்திரி உடன்பாடு என்பது. இதன்படி, மலையகப் பகுதிகளில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.1990-இல் எப்படி இந்திய அமைதிப்படையைக் காரணம் காட்டி, ஈழத்தமிழர்களை அதிபர் பிரேமதாசா இந்தியாவுக்கு எதிராகத் திருப்பினாரோ, அதேபோல, மலையகத் தமிழர்களைக் காரணம் காட்டி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது ஸ்ரீமாவோவின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி!1965-இல் தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து யு.என்.பி. அரசு ஆட்சி அமைக்கிறது. டட்லி சேனநாயக்காவின் தலைமையில் அமைந்த ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அரசில் தமிழ் மற்றும் சிங்கள தேசியக் கட்சிகள் உள்பட ஆறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. "வடக்கு, கிழக்கில் ராணுவத்தைக் குவியுங்கள். சிங்களவரைக் குடியேற்றுங்கள், தமிழரை வெளியேற்றுங்கள்' எனக் கொழும்பு பம்பலபிட்டி புத்தவிகாரத்தின் தலைமைப் புத்த பிக்கு அறிக்கை விடுகிறார். டட்லி சேனநாயக்காவின் அரசும் அப்படியே செய்கிறது. இதனால் யு.என்.பி.யுடனான உறவை முறித்துக்கொள்ளத் தமிழரசுக் கட்சி முடிவெடுத்துத் திருகோணமலையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றினைக் கூட்டுகிறது. இதனைக்கண்ட சிங்களப் பிரதமர், தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு காண முயல்கிறார்.மாவட்டக் கவுன்சில்களை 1968-இல் அளிக்கும் ஒரு உடன்பாட்டிற்கான தன்மையில் அரசோடு ஒத்துழைத்த ஈழத் தமிழர்களின் தந்தை என்று ஒருமனதாக அனைத்துத் தமிழர்களாலும் மதிக்கப்பட்ட, செல்வா எனப்படும் செல்வநாயகம் ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்ந்த இனவாதக் கொள்கையாலும், துரோகத்தனத்தாலும் 1968-இல் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.1970-இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வருகிறது. இந்தப் பதவிக்கு வரும் நிகழ்ச்சிக்கு சிங்களப் பேரினவாத சக்திகளின் கூட்டும் வெகுஜன கவர்ச்சிகரமான இடதுசாரி முகமூடியுமே காரணமானது.எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியானது 1970-77-க்கு இடைப்பட்ட காலத்தில் கொடூரமும், படுகொலைகளும், தீவிரமான ஜனநாயக ஒடுக்குமுறையும், மனித உரிமைகள் பறிக்கப்படுவதுமாக மாறிய காலமாகும்.இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், மக்களுக்காக இயங்குவதாகக் கூறும் இடதுசாரிகள் இந்த மனிதப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு அரசுக்குத்துணை நின்றதாகும். இந்தக் காலத்தில் அரசு நிர்வாகம், குழப்பமும், பல வகையான கொள்கை மாறுதலும் நிகழ்ந்த காலமாகும்.இந்தக் காலத்தில் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமானது, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு சிங்கள இனவாத ஆளுமையை நிலைநாட்டிய காலமுமாகும்.தனியார் மூலதனத்தைத் தேசியமயம் என்ற கொள்கை அடிப்படையில் அரசு மூலதனமாக்கி அதைச் சிங்கள மயமாக்கிய சதித்திட்டம் நிறைந்த நிகழ்ச்சிப் போக்கு இக்கால கட்டத்தில்தான் நிலவியது. அரசு அமைப்பைத் தாராளப்படுத்தி அதே நேரத்தில் கட்டுப்பாடுகளும் புதிய விதிகளும் கொண்ட நிகழ்ச்சிப் போக்குகளையும் பார்க்க முடிந்தது.இதனால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், நாடு தழுவிய அதிருப்திகள், மக்களின் பல்வேறு வகையான எழுச்சிகளை உருவாக்கியது. தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள இளைஞர்கள், மற்றும் அடித்தட்டு மக்களும் கூட அரசின் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர ஆரம்பித்தன.*-சமுத்திரன் எழுதிய "இலங்கைத் தேசிய இனப்பிரச்னை' (ஈழ எழுத்தாளர் சமுத்திரன் மாணவப் பருவத்திலிருந்தே இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு, கட்சி சாராது இருந்தவர். பின்னாளில் தமிழ் மக்கள் விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டார்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக