text books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
text books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 அக்டோபர், 2013

திருக்குறள் விளக்கம் - பாடப்புத்தகத்தில் மாணவனுக்குச்சிறப்பு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_826086.jpg

திருக்குறள் விளக்க உண்மை நிகழ்வு மேற்கோள்!அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்'

கோவை :தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்' கிடைத்துள்ளது.

அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, "கார்ட்டூன்' படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது.இந்தாண்டு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழ் பாடப்புத்தகத்தில், திருக்குறள் ஐந்து அதிகாரங்களில் இருந்து, ஐந்து திருக்குறளுக்கு தெளிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.அன்புடைமை, அறிவுடைமை, மக்கட்பேறு, இனியவை கூறல், இன்னா செய்யாமை என்ற அதிகாரங்களில் இருந்து, தலா, ஒரு திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

மக்கட்பேறு என்ற அதிகாரத்தில்,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற குறளுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே, அரையம்பாக்கம் கிராமத்திலுள்ள, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதைப் பார்த்த, அக் கிராமத்தைச் சேர்ந்த, சந்தோசு என்ற, 11வயது சிறுவன், உடனடியாக, ஊர் மக்களிடம் அந்த செய்தியை தெரிவித்தான். அந்த வழியாக வந்த, "விழுப்புரம் பயணிகள் ரயிலை' ஊர் மக்கள் நிறுத்தினர். ரயிலில் பயணம் செய்த பலரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷ், அரைம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சந்தோஷûக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்'.இதற்கு, "மகனை பெற்றபோது தாய் மகிழ்ச்சி அடைகிறார். அதைவிட, அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன், என, தன் மகனைப் பிறர் புகழக் கேட்கும் போது, மேலும் மகிழ்ச்சி அடைகிறார்' என, பொருள் கூறப்பட்டுள்ளது.

இந்த பாடத்தில், சந்தோஷ்க்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கிய போட்டோவும் இடம் பெற்றுள்ளது."வழக்கமாக, குட்டிக்கதை ஒன்றைக் கூறி, திருக்குறளுக்கு விளக்கும் கொடுத்த நிலை மாறி, உண்மை சம்பவத்தை போட்டோவுடன் பொருள்பட விளக்கும் போது, பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படும். திருக்குறள் பொருள் மாணவர்களுக்கு எளிதில் புரியும், மனதில் பதியும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சமச்சீர் பாடத்திட்டத்தில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஊருக்கே "கவுரவம்':

பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவனை தொடர்பு கொள்ள, அரையம்பாக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை தொடர்பு கொண்டபோது, தொடர் விடுமுறை காரணமாக யாரிடமும் பேச முடியவில்லை. இறுதியில், அரையம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் வெங்கடேசனை தொடர்பு கொண்ட போது, ""2008ல் அந்த சம்பவம் நடந்தது. சந்தோஷை ஊரே தூக்கி வைத்து கொண்டாடியது. சந்தோஷ் தற்போது, மதுராந்தகம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். அவனது புத்திசாலி தனத்தால், ஊருக்கே கவுரவம் கிடைத்துள்ளது. அவனது அப்பா வேலு, அம்மா சரசு இருவரும் கட்டட தொழிலாளர்கள். அவர்களிடம் மொபைல்போன் வசதியில்லை,'' என்றார்.

வெள்ளி, 8 ஜூன், 2012

மத்திய அரசு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கேலிச் சித்திரம் - வைகோ கண்டனம்

மத்திய அரசு பாட புத்தகத்தில் உள்ள இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேலி சித்திரம்: வைகோ கண்டனம்
மத்திய அரசு பாட புத்தகத்தில் உள்ள இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேலி சித்திரம்: வைகோ கண்டனம்
சென்னை, ஜூன் 8-
 
மத்திய மந்திரி கபில்சிபல் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் இயக்குனர் ஆகியோருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் அச்சிட்டு உள்ள பனிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தின் 153 -ம் பக்கத்தில் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலி சித்திரம் வெளியாகி இருக்கின்றது.
 
பிரதமர் நேருவால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு மாறாக, 1965-ம் ஆண்டு, இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்ற முயன்றார்கள்.
 
அதை எதிர்த்து, திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் அண்ணா போர்ப்பறை முழங்கினார். 1930-களில் சென்னை மாகாணத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற ராஜாஜி அவர்களே 1965-ம் ஆண்டு, இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். கட்டாய இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.
 
பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும், ராணுவ, போலீஸ் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் வைரவரிகளில் இடம் பெற்று இருக்கின்றது.
 
ஆனால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் வெளியிட்டு உள்ள கேலிச்சித்திரம், மாணவர்கள் மொழிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கொச்சைப்படுத்துகிறது. இது கண்டனத்திற்குரியது. வரலாற்று உண்மையை திருத்திக் கூறுவது ஆகும்.
 
இக்கேலிச்சித்திரம், தமிழக மக்களின் மனங்களைக் காயப்படுத்துகின்றன. புகழ்மிக்க திராவிட இயக்கத்தை இழிவு படுத்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது.
 
எனவே தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இந்த கேலிச்சித்திரத்தை உடனடியாக பாடப்புத் தகங்களில் இருந்து அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

சனி, 29 ஜனவரி, 2011

articles about C.M. in text books: பாடப் புத்தகங்களில் முதல்வர் படம், கட்டுரை இடம்பெற தடை

எல்லா மாநிலப்   பாடப் புத்தகங்களிலும்  அந்தந்த மாநில அரசு, முதல்வர் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. இக்கால் வரலாற்று நோக்கில்தான் இதனைப் பார்க்க வேண்டும். கட்சி அரசியலாகப்  பார்க்கக்  கூடாது . 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் பள்ளி பாடப் புத்தகங்களில், முதல்வர் உள்ளிட்டவர்களின் படங்களோ, கட்டுரைகளோ இடம்பெறக் கூடாது' என, பாடநூல் கழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகியுள்ளது. மீதமுள்ள வகுப்புகளுக்கு, ஜூன் மாதம் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை புதிய பாடத் திட்டங்களை தயாரித்து, அதற்கான, "சிடி'க்களை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.மொத்தம் 197 தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. இதில், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் முக்கிய பாடங்கள் 62 தலைப்புகளிலும், மீதமுள்ள 135 தலைப்புகள், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு உள்ளிட்ட ஆறு சிறுபான்மை மொழிகளில் தயாராகின்றன. நேற்று நிலவரப்படி, சிறுபான்மை மொழி அல்லாத 62 தலைப்புகளில், 59 தலைப்புகளுக்கான, "சிடி'க்கள், பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று, "சிடி'க்கள், வரும் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளன.இதுவரை பெறப்பட்ட புதிய, "சிடி'க்களின் அடிப்படையில், 67 அச்சகங்களில் 5 கோடியே 35 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிட, பாடநூல் கழகம், "ஆர்டர்' வழங்கியுள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான, "சிடி'க்களை, ஜனவரி 15க்குள் ஒப்படைக்க வேண்டும் என, பாடநூல் கழகம் தெரிவித்தபோதும், இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

எனினும், இவற்றின் கீழ் அச்சிடப்படும் பாடப் புத்தகங்கள் மிகவும் குறைவு என்பதால், 35 நாட்களுக்குள் அனைத்து பாடப் புத்தகங்களையும் அச்சிட்டு முடித்து விடுவோம் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 8 கோடி பாடப் புத்தகங்களையும் ஏப்ரலுக்குள் அச்சிட்டு முடிப்பதற்கு ஏதுவாக, அச்சக அதிபர்களிடம் இருந்து தொடர்ந்து பாடநூல் கழகம் விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

இதற்கிடையே, "புதிய பாடப் புத்தகங்களில் முதல்வர் உள்ளிட்ட யாருடைய புகைப்படங்களோ, அவர்களைப் பற்றிய கட்டுரைகளோ இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டு, பாடநூல் கழகத்திற்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கடிதம் அனுப்பியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, பாடப் புத்தகங்களில் ஆளுங்கட்சியைப் பற்றி படங்களோ, கட்டுரைகளோ இடம்பெற்றால், அது தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-ஏ.சங்கரன்-