pe.maniyarasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pe.maniyarasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கூடங்குளம் அணுஉலைமார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் பித்தலாட்டம்

கூடங்குளம் அணுஉலை:
தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பித்தலாட்டம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!


 
கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற பித்தலாட்ட நாடகம் தொழில்முறைப் பொய்யர்களைக் கூடப்பின்னுக்குத் தள்ளி விடும்.

அண்மையில், கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அனைத்திந்திய மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூடங்குளம் அணுஉலைத் திறப்பதை தாங்கள் ஆதரிப்பதற்கான 'விசித்திரமான' காரணத்தை  முன்வைத்தார்.

”செய்தாப்பூர் அணுஉலை என்பது தனியார் நிறுவனத்தின் அணுஉலை என்பதாலும், அமெரிக்க அணு ஆயுதத் திட்டத்தோடு இந்தியாவை இணைக்கும் என்பதாலும் செய்தாப்பூர் அணஉலையை சிபி.எம். எதிர்த்த்து. ஆனால் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் அப்படியானதல்ல. இது சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவேதான் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை நாம் ஆதரித்தோம்" என்று அவர் பேசியுள்ளார்.

அணுஉலையிலும் அதில் வெளியிடும் அணுக்கதிரியக்கத்திலும் தத்துவ வேறுபாடு எதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் அணுஉலை அணுக்கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது, முதலாளிய அணுஉலை தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமில்லை. யார் நிறுவினாலும் அணுஉலை அணுஉலை தான். தீமை விளைவிப்பவை தான்.

மேலும், பிரகாஷ் காரத் சொல்லுவது போல் இப்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுஉலை கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அல்ல. 1988இல் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்நாடு சிதறுண்டதுடன் காலாவதியானது. எனவே, பொதுவுடைமையைக் கைவிட்டு முதலாளியத்திற்குத் திரும்பிய இரசிய நாட்டுடன் 2001ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தமாகும்.

அதை செயல்படுத்தும் இப்போதைய இரசியக் குடியரசுத் தலைவர் புடின், இரசியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னடி குயனைவ் அவர்களை தோற்கடித்து பதவிக்கு வந்தவராவார். அவருடைய ஆட்சி தான் கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்தப் போகிறது. எனவே, பிரகாஷ் காரத் குறிப்பிடுவதைப் போல் கூடங்குளம் அணுஉலையோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை.

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பதற்கு அப்பட்டமான பொய்யையும், அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் துணைக் கொள்கிறார் பிரகாஷ் காரத்.

காரத்துக்கு முன்னால் சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். அக்கட்சியின் தமிழக மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்த போது, சிறப்புரையாற்றிய ஜி.இராமகிருஷ்ணன், "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசிய அணுஉலை செய்தாப்பூரில் நிறுவப்பட இருந்த பிரஞ்சு அணுஉலையை விட உயர்த் தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எனவே தான் செய்தாப்பூர் அணுஉலையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறது" என்று கூறினார்.

வி.வி.இ.ஆர். 1000 தொழில்நுட்பம், 13 உடனடியாக சரி செய்யவேண்டிய முக்கியமான பாதுகாப்புக் கோளாறுகளை உள்ளடக்கியது என இரசிய நாட்டு அணுஉலை அறிவியலாளர்களே அறிவித்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமரிடம் கடந்த 2011 சூன் மாதம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை அது இயங்கத் தொடங்கிய 2ஆவது ஆண்டிலிருந்தே பாதுகாப்புக் கோளாறுகளில் சிக்கிக் கொள்ளும். அதில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்பி(Control Rod) இயங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அணுஉலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் உயர்ந்து சிறுக் கீறல் முதல் பெரு வெடிப்பு வரை நிகழ் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையில் மையக்கலனில் உள்ள பற்றவைப்புகள் (Welding) பலவீனமானது என்றும் தொடர்ச்சியான அணுத்துகள்களின் மோதல்களின் விளைவாக அவை இற்றுப்போக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர்.

உண்மை இவ்வாறிருக்க, வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை பாதுகாப்பானது என்பதற்கு திரு. ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கிருந்து அறிவியல் சான்று கிடைத்த்தோ தெரியவில்லை. தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவை ஞயாயப்படுத்த எந்தப் பொய்யையும் சொல்வதற்கு இவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

கோழிக்கோடு மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சித்தாராம் யெச்சூரி, தங்கள் முடிவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். "கைகா அணுஉலையைப் போல கூடங்குளம் அணுஉலை ஏற்கெனவே இயக்கத்தில் இருப்பது. அதிலிருந்து ஏற்கெனவே மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. ஆனால்,  செய்தாப்பூர் அணுஉலை இனிமேல் தான் நிறுவப்பட வேண்டும். எனவே தான் கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

கூடங்குளம் அணுஉலையில் இனிமேல் தான் எரிபொருள் நிரப்ப வேண்டும். அதன் பிறகு தான் மின்சார உற்பத்தி நடக்கும் என நாள்தோறும் அரசு அறிவித்துக் கொண்டுள்ள நிலையில், எல்லா செய்தித்தாள்களிலும் அச்செய்தி வந்து கொண்டிருக்கும் போது, இந்த அடிப்படைத் தகவல் கூட தெரியாமல் சீத்தாராம் யெச்சூரி பேசுவதாக நம்பமுடியவில்லை. ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி தங்கள் முடிவை ஞாயப்படுத்த, மக்களைக் குழப்ப அக்கட்சியின் தலைவர்கள் முனைகிறார்கள். அதில் ஒன்று தான் யெச்சூரியின் கூற்று.

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய்விட்டார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடிந்தகரைக்கே வருவதாக அறிவித்தார். அக்கட்சித் தலைமை கட்டளையிட்டதன் அடிப்படையில் கடைசி நேரத்தில் அப்பயணத்தைத் தவிர்த்துக் கொண்டார்.

இவ்வாறு, கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் பித்தலாட்டம் அளவிட முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. 

தோழமையுடன்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சிதம்பரம்,
நாள்: 16.04.2012

koodn.pdfkoodn.pdf
246K   View   Download  

செவ்வாய், 20 மார்ச், 2012

”அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை” 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவிப்பு
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.
இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் 19.03.2012 அன்று உரையாற்றிய மன்மோகன்சிங் “அமெரிக்கா முன்வைத்துள்ள வரைவுத் தீர்மான அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறோம்” என்றார்.
நடந்துள்ளப் போர்குற்றங்கள் மீது விசாரணை நடத்த சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தோடு அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் அறிவித்திருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் என்ன கோருகிறது?
ஈழத்தமிழர்க்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து இராசபட்சே குழுவினர் மீது பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை எதையும் அமெரிக்கத்தீர்மானம் கோரவில்லை. இராசபட்சே நியமித்த ‘பெற்றப் படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்’ கொடுத்துள்ள அறிக்கை மீது இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. அதாவது ஈழத்தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போர்க்குற்றம் செய்த இலங்கை ஆட்சியாளர்களே தமக்கெதிராக விசாரணை நடத்தி, தங்களையே தண்டித்துக் கொள்ள வேண்டும். என்று கோருகிற தீர்மானம் அது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபட்சே குழுவினரை நிறுத்துவதற்கான எந்த வாய்ப்பும் அதில் இல்லை. தமிழர் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான தொடக்க நிலை முயற்சி எதையும் அத்தீர்மானம் கோடிட்டுக்காட்டக் கூட இல்லை.
ஆயினும், மனித உரிமை விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிவுரையையும், நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், அந்நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22 ஆவது அமர்வில் அளிக்க வேண்டுமென்று மனித உரிமை ஆணையரையும் கேட்டுக்கொள்ளும் பகுதி அவ்வரைவுத் தீர்மானத்தில் முதலில் இடம்பெற்றது.
ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அடுத்தக் கட்ட விசாரணைக்கு இது முதல் படியாக அமையும் என்று மிகையாக மதிப்பிட்ட சிலர் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரினர். ஐ.நா. மனித உரிமை ஆணையரின் மேற்பார்வையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்ற அந்த பலவீனமான நிபந்தனையும் கூட இப்போது அமெரிக்க வரைவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம்.
அதாவது ஏற்கெனவே அமெரிக்கா முன்வைத்த சொத்தையான தீர்மானத்தை இன்னும் பலவீனப் படுத்தியதற்குப் பிறகே அத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியா முடிவுவெடுத்துள்ளது. இதனால் தொகை தொகையாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு சிறு ஞாயமும் கிடைத்துவிடப் போவதில்லை. கொடும் போர்க் குற்றவாளியான, இனக்கொலையாளி இராசபட்சே சர்வதேச சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கே வழி கோலப்பட்டுள்ளது.
‘ஐ.நா. மனித உரிமை ஆணையர் மேற்பார்வை’ என்ற நிபந்தனை நீக்கப்பட்டு விட்டப் பிறகு முன்னர் இருந்ததாக நம்பப்பட்ட சிறிய சர்வதேச தலையீட்டு வாய்ப்பும் கைநழுவிவிட்டது.
இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய இராசபட்சே உள்ளிட்ட முதன்மைக் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் தீர்மானம் என்பதாலேயே இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க முன் வந்துள்ளது. இதன் வழியாக தனது தமிழினப் பகைத் திட்டத்தை திறமையான சூழ்ச்சியின் மூலம் இந்திய அரசு மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரவேற்பதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது. இந்திய அரசின் இந்த இனப்பகை சூழ்ச்சித் திட்டத்தை புரிந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் போராட முன் வருமாறு தமிழர்களைத் த.தே.பொ.க. அழைக்கிறது.
நாள் : 19.03.2012 . இடம்: சென்னை
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

கி.வெங்கட்ராமன் 
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

புதன், 19 ஜனவரி, 2011

Pe.Maniyarasan against renaming of G.H. : சென்னை அரசு மருத்துவமனைக்கு இராசீவ் காந்தி பெயரைச் சூட்ட தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்பு

நல்ல கருத்து. மேலும் தலைவர்கள் பெயர்களை எடுப்பதாக முன்னரே தம் முந்தைய ஆட்சியில் அறிவித்துத் தலைவர்கள் பெயர்களுடன்  சேர, சோழ,பாண்டிய,பல்லவர் பெயர்களையும் நீக்கியுள்ளார். எனவே, அரசியல் காரணங்களால் வட நாட்டார் பெயரைத் தமிழ்நாட்டு மருத்துவமனைக்குச் சூட்டத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
 
சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்ட தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்பு


தஞ்சாவூர், ஜன. 18: சென்னை அரசுப் பொது தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டுவதற்கு தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அந்தக் கட்சிப் பொதுச் செயலர் பெ. மணியரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டவுள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்துள்ளது கண்டனத்துக்குறியது.  இலங்கைக்கு ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையினர் பெண்கள், குழந்தைகள் என 6,000-க்கும் அதிகமான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. இவைகள் ஆதாரங்களுடன் பல நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.  இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப் படையினரை வரவேற்க மறுத்து, என் தமிழ்ச் சாதி மக்களை அழித்துவிட்டு வரும் ராணுவத்தை நான் வரவேற்கப் போகவில்லை என்று அப்போது சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.  ராஜீவ் காந்தியின் பாதையில் சோனியா காந்தியும் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி, நிதியுதவி, உலக அரங்கில் அரசியல் உதவி என அனைத்தும் அளித்து ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதற்கு துணை நின்றார். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும், அடித்துக் கொல்வதும் தொடர்கிறது.  இதற்கெல்லாம் பாராட்டுத் தெரிவிப்பது போல, ராஜீவ் காந்தி பெயரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு சூட்ட நினைப்பதை அரசு கைவிட வேண்டும்.  கூட்டணியில் நீடிப்பதாக காங்கிரஸ் உறுதி கொடுத்ததற்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால், திமுக தனது அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதிக்கோ அல்லது தனது கட்சி சார்பில் நடத்தப்படும் வேறொரு நிறுவனத்துக்கோ ராஜீவ் பெயரை வைக்கலாம். அதைவிடுத்து, அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் பெயரை வைக்க நினைப்பது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் என்றார் மணியரசன்.