ietamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ietamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்? – குவியாடி

பிற கருவூலம்

அனலும் புனலும் :

காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக்

கனிமொழி மீது பாய்வது ஏன்?

 

உலகில் தோன்றிய மக்களுக்குத் துன்பமும் அச்சமும் வந்தபொழுது இறைநம்பிக்கையும் வந்துள்ளது. துன்பம் தீராதபொழுதும் அச்சம் தேவையற்றது என உணர்ந்த பொழுதும் இறைமறுப்பும் வந்துள்ளது. உலகெங்கும் இறைநம்பிக்கையும் இறை மறுப்பும் காலந்தோறும் இருக்கத்தான் செய்கின்றன.
உலகளாவிய தற்சார்பு வலைமத்தின் (Worldwide Independent Network) 2014 ஆம் ஆண்டிற்கான ‘சமயமும் நாடுகளும்’ என்னும் புள்ளிவிவரப்படி உலகில் மக்கள்தொகை அடிப்படையில் கிறித்துவம், இசுலாமிற்குஅடுத்து 3-ஆவது இடத்தில் இருப்பது இறை மறுப்பாளர் எண்ணிக்கைதான். எனவே, பகுத்தறிவும் இறைமறுப்பும் பெரியாரால் வந்ததாகவும் திராவிட இயக்கங்களால் பரவியதாகவும் நம் நாட்டில் மட்டும் இருப்பதாகவும் பலரும் கருதுவது தவறே!
தமிழ்நாடு இறைநெறியில் ஊறிய நாடு. ஆனால், பகுத்தறிவுடன் இறைநெறி பேணிய நாட்டில் அயலவர் சமயங்களால் மூடநம்பிக்கைகள் புகுந்து மக்களைச் சிதைத்து வருகின்றன.
இக்காலப் பகுத்தறிவு வளர்ச்சிக்குப் பெரியார் ஈ.வெ.இராமசாமிதான் காரணம். ஆனால், அவர் வழியில் நடப்பவர்களிலும் நடப்பதாகக் கூறுபவர்களிலும் அனைவருமே இறை மறுப்பாளர்கள் அல்லர். இறைமறுப்பாளர்களும் உள்ளனர். போலி இறைமறுப்பாளர்களும் உள்ளனர். தன்மான உணர்வால் பகுத்தறிவு எண்ணமும் அதே நேரம் இறைநம்பிக்கை கொண்டும் உள்ளவர்களும் உள்ளனர்.
நடிகர் திலகம் சிவாசி கணேசன் திருப்பதிக்குச் சென்றதால் திமுக கொந்தளித்தது ஒரு காலம். அதே கட்சியிலும் அக்கட்சியைவிட மிகுதியாகவும் அதிலிருந்து பிறந்த அதிமுகவிலும் இறைநம்பிக்கை மூட நம்பிக்கையுடன் கோலோச்சுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரே இறைநம்பிக்கையில் ஊறிப்போய்விட்டனர். தம் குடும்பத்தினரின் இறை நம்பிக்கையை ஏற்கும் தலைவர் கருணாநிதி, திமுகவில் உள்ள பிறர் பொட்டுவைத்திருந்தால்கூட இறைமறுப்புப் பழமாக மாறிக் கண்டிப்பார்.
திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற உலக இறைமறுப்பாளர்(நாத்திகர்) மாநாட்டில் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேச்சினிடையே குறிப்பிட்ட நிகழ்விற்காக மதவெறியர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதுபோல் நடந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு திருப்பதி சென்றதுபற்றிப் பேசும்போது, “நாங்கள் நாடாளுமன்றஉறுப்பினர்கள் என்பதால் சிறப்பு வழிபாட்டிற்காக அழைத்துச் செல்லப்பட்டோம். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்கிறார்களே அது பொய். அதிகக் காசு கொடுத்துச் சீட்டு வாங்கினால் சிறப்புப் பார்வை. இல்லையென்றால் பத்து மணி நேரம் நிற்க வேண்டும். நாங்கள் உள்ளே நிற்கும்போது இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர், ‘இத்தனை ஆயிரம் பேர் கடவுளைப் பார்க்க காத்திருந்து வருகிறார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்கிறார். ஆனால், நீ எப்படிக் கடவுளை நம்பாமல் இருக்க முடியும்?’ என்று என்னிடம் கேட்டார்.
நான் திரும்பிக் கேட்டேன். ‘கடவுளின் கண்ணில்படும் அளவுக்கு இதோ ஓர் உண்டியல் இருக்கிறதே! அதற்குத் துப்பாக்கி ஏந்திய ஆள் பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுள் இந்த உண்டியலைப் பாதுகாப்பார் என்று கடவுள் நம்பிக்கையுள்ள உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், நான் எப்படி நம்புவது?’ என்று கேட்டேன்”
இதுதான் அவரின் பேச்சு.
அவலங்களையும் துன்பங்களையும் கடவுள் துடைத்தாரா எனக் கேட்பதும் கோயில்களில் திருடும் கொள்ளையும் நடக்கும் பொழுதும் கடவுள் பார்த்துக் கொண்டிருந்தாரா? தடுக்கவில்லையா எனக் கேட்பதும் புதியதல்ல! கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்கூட இதுபோல் திரைப்படங்களில் கேட்டுள்ளனர். ஆனால் இப்பொழுது மதவெறியர்கள் ஆர்ப்பரிப்பதன் காரணம், இப்பொழுது ஆர்.எசு.எசு.ஆட்சி நடப்பதுதான்!
கனிமொழியின் கருத்திற்காகக் கண்டிப்பதும் வெறிபிடித்துப் பேசுவதும் வழக்கு தொடுப்பதும் சரியல்ல! கனிமொழி பொதுவெளியில் இறை மறுப்பாளராகப் பேசிவிட்டுத் தன்வீட்டில் இறை ஏற்பாளராக இருந்தால் அதுகுறித்து எள்ளி நகையாடலாம்!
அனைத்து வல்லமை மிக்க கடவுள் எனப் பேசுபவர்களும் அதில் முழுநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எனவேதான், தீயதேவதை, சாத்தான், பிசாசு, பேய் என்றெல்லாம் போட்டியாளரையும் உலகெங்கும் உள்ள மதவாதிகள் படைத்துள்ளனர். அன்றைய புராணங்கள் முதல் இன்றைய திரைக்காட்சிகள் வரை அவ்வாறுதானே கதைகள் எழுதுகின்றன. ஒரு வகையில் பார்த்தால் இறைவனுக்கு எதிரான ஆற்றல் இருப்பதாகக் கூறுவதும் தவறுதானே!
“ஈழத்தில் இனப்படுகொலைகள் நடந்த பொழுது – கொத்துக்குண்டுகள் எரிகுண்டுகள் வீசப்பட்டபொழுது எத்தனைக்கடவுள்களை அழைத்திருப்பர்? தாங்கள் சார்ந்த மத்த்தின் கடவுள்களை வேண்டியிருப்பர்! எந்தக் கடவுள் யாரைக் காப்பாற்றியது? உலகெங்கும் இனப்படுகொலைகளும் கொலைகளும் கோவில்களுக்குச் செல்லும்பொழுதும் சென்று திரும்பும் பொழுதும் விபத்தில் இறப்புகளும் நிகழ்கின்றனவே! தன்னை நம்பியிருக்கும் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போவது ஏன்?” இது போன்ற வினாக்கள் எழுந்து கொண்டுதான் வருகின்றன. அதே நேரம், துன்பங்களிலிருந்து காப்பாற்றி வருபவர் கடவுள்தான் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இறை ஏற்பும் இறை மறுப்பும் வெவ்வேறு கொள்கைகளாக உலகத்தில் உள்ளன. ஆதலின் தத்தம் கொள்கையைப் பரப்புவதை விட்டு விட்டு மாற்றுக் கொள்கையினருடன் மோதுவதோ மல்லுக்கட்டுவதோ தேவையில்லை.
மத்திய ஆட்சியின் ஆதரவால் “நாக்கை வெட்டுவேன், தலையைச் சீவுவேன், உயிரை எடுத்தால் கோடிப்பணம்கொடுப்பேன்” என்று பேசிப் பயனில்லை. உண்மையான இறைப்பற்று உள்ளவர்கள் அன்பாலும் அருளாலும்தான் மக்களை மாற்ற வேண்டும்!
உண்மையில் கடவுளை நம்பாதவர்கள் கடவுள் பெயரால் வணிகம் நடத்தும் மடாதிபதிகளே! மடங்களில் ஒழுக்கக்கேடும் கொலையும் நடக்கின்றன என்றால் காரணம் என்ன? கருவறையிலேயே தேவநாதன் போன்றோர் பெண்களைச் சிதைக்கின்றனர் என்றால் காரணம் என்ன? தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிக்க மாட்டார் அல்லது தண்டிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் கடவுள் என ஒருவர் இல்லை என்ற நம்பிக்கைதானே! எனவே, கடவுள் பெயரைச்சொல்லுபவர்கள் ஒழுக்கமாக இருந்தாலே கடவுள் நம்பிக்கை பரவும்! தங்களின் முறையற்ற செயல்பாடுகள் மூலம் கடவுள் இல்லை எனக் காட்டுபவர்களைவிடக் கடவுள் எங்கே காக்கிறார் எனக் கேட்பவர்கள் நல்லவர்கள்தாமே!
எனவே மத வெறியர்களுக்கு வேண்டுகோள்!
மதத்தைத் திணிக்காதீர்கள்!
தமிழ் வழிபாடுமட்டும் இருக்க வகை செய்யுங்கள்!
இறை சார்ந்த மூடநம்பிக்கைளை அகற்றுங்கள்!
உலகில் அன்பும்அறமும் நிலைக்கச் செய்து இறைநம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!
– குவியாடி
இ.எ.தமிழ்

புதன், 31 ஜனவரி, 2018

அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி

பிற கருவூலம்

அனலும் புனலும் :

வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்

காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.
சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.
சட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம்.
அரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.
கடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா?
பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம்என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். புதுச்சேரியில் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினார். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]
இனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.
நாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. ஸமத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)]. குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
 கருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
ஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தானே அவர் கவலைப்படுவார்! எனவே, இதன் மூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.
தமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்திலும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.
காலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறைவன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.
சுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.
குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில் கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.
சுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.
திருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சங்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.
சங்கர மடத்தினரே! இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சிறப்பை உணருங்கள்! தமிழுக்குத் தொண்டாற்றுங்கள்! இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.
குவியாடி
இ.எ.தமிழ் / ietamil நாள் சனவரி 27, 2018

அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? – குவியாடி

பிற கருவூலம்

அனலும் புனலும் :

இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே

பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? 

அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை!
சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற வேண்டும். இந்துச்சமயத்தில் இருந்த உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் சட்டத்தின் மூலம்தானே நிறுத்தப்பட்டன. அதே வழியில் இசுலாமியப் பெண்களின் முறையற்ற மண முறிவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் என்ன தவறு?
பாசகவின் காவி முகம் இதனைக் கண்மூடித்தனமாகப் பலரையும் எதிர்க்கத் தூண்டுகிறது.
சமயப் பண்டிகைகளின் பொழுது துறைசார் கூட்டம் நடத்துதல், இசுலாமியர் தொடர்பான திட்டங்களுக்கான நல்கைகளை நிறுத்துதல் போன்ற பாசக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மும்முறைச் சொல்லி மணவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சட்டம் குறித்தும் ஐயத்தை எழுப்புகின்றது. ஆனால், இதற்காக இசுலாமியப் பெண்களுக்குத் தேவைப்படும் உரிமை வாழ்வைத் தடுக்கக்கூடாதல்லவா?
முதலில், ‘முத்தலாக்கு’(triple talaq) என்றால் என்ன என்று பார்ப்போம்.
‘தலாக்கு’ என்பது அரபிச்சொல். விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் எனப் பொருள்கள் உள்ளன. மனைவியைக் கைவிடுவதற்கு வாழ்க்கைத் துணையை விலக்கி வைப்பதான பொருளில், இச்சொல்லை மூன்று முறை – மும்முறை – சொல்வதன் மூலம் திருமண உறவு முறிவிற்கு வந்துவிட்டதாகப்பொருள். எனவே ‘முத்தலாக்கு’ என்கின்றனர். தமிழும் அரபியும் கலந்த இச்சொல்லை – மும்முறை விலக்கி வைப்பதாகக் கூறுவதால் – ‘முவ்விலக்கு’ என்று குறிப்பிடலாம்.
இசுலாமில் ஒருவர் பலரைத் திருமணம் செய்துகொள்ளலாம். இவ்வாறு இசைவளிக்கும் பலதார முறையைத் தடைசெய்தாலே திருமண முறிவு குறையும். பார்க்கின்ற பெண்கள்மீது ஆசை வைத்துத் திருமணம் புரிவதால் இருக்கின்ற மனைவியை விலக்கி வைக்கின்றனர். எனவேதான், தேசிய முசுலிம் மகளிர் அமைப்பினர் மத்திய அரசிடம் பல தாரத்திருமணத்தைத் தடைசெய்யச்சட்டம் இயற்ற வேண்டுகின்றனர். தேசிய முசுலிம் அமைப்பு( ஆரளடiஅ சுயளாவசலைய ஆயnஉh-ஆசுஆ) என்பது ஆர்.எசு.எசு. என அழைக்கப்பெறும் தேசியத் தொண்டர் அமைப்பின் சார் அமைப்பாகத் திசம்பர் 24, 2002 இல் உருவானது. எனவே இதன் வேண்டுகோள் நெருடலாக இருந்தாலும் அதிலுள்ள உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.
 வழக்கறிஞர் இந்திரா(செய்சிங்கு) முவ்விலக்கு சொல்லித் திருமண உறவை முறித்துக் கொள்பவர்க்குச் சிறைத்தண்டனை என்றால் திருமண உறவே நிலைக்காது என்று கூறியுள்ளார். இம்முறையே தவறு என்னும் பொழுது அவ்வாறு சொல்லி மனைவியையும் அவர்வழித் தன் பிள்ளைகளையும் கைவிடுவோரையும் சிறைக்கு அனுப்புவதில் என்ன தவறு? இப்பொழுதும் கட்டாய மணக்கொடை – வரதட்சணை – கேட்போருக்குச் சிறைத்தண்டனை உள்ளதே! இதன் நோக்கம் அச்சுறுத்தியாவது இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பதுதான். எனவே, தவறல்ல. தவறு என எண்ணினால் மாற்றுக் கருத்து கூற வேண்டுமே, தவிர இச்சட்ட முறையையே எதிர்க்க வேண்டிய தேவையே இல்லை.
 முவ்விலக்கு என்பது உடனே சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு மாத இடைவெளியில், 3 மாதவிலக்குகளுக்குப் பின்னர் சொல்லப்பட வேண்டியது எனச் சிலர் குரானை எடுத்துக்காட்டாகக்கூறி முவ்விலக்கை எதிர்க்க வேண்டாம் என்கின்றனர். ஆனால் நடைமுறையில் ஒரே நேரத்தில் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக மும்முறை தெரிவித்து மண விலக்கை நடைமுறைப்படுத்தி வருவதைக் காண்கிறோம். எனவே, ஏட்டில் என்ன இருந்தாலும் நடைமுறையில் உள்ள தவறான வழக்கத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றுவதில் தவறில்லை.
 முவ்விலக்கிற்குப் பின்னர், கணவனும் மனைவியுமாக இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேரலாமாம். அதற்கு அப்பெண் மற்றொரு ஆடவருடன் உடலுறவு கொண்டு அவரை விலக்கு செய்து முன்னவரை மணக்கலாமாம். மீள்இணைவு(ஃஅலாலா) என்று சொல்லப்பெறும் இம்முறை பெண்களை இழிவு படுத்துவதாகும்.
 இந்த முறை இசுலாமில் இல்லை என்று சிலர் எழுதி வருகின்றனர். ஆனால், குரான் 2.230.இல் இது முதற்கணவனை மறுமணம் செய்து கொள்ளும் வழியாகக் குறிக்கப்பெற்றுள்ளது.
 முவ்விலக்கிற்குத் தடை கோரியவர்களின் முதன்மையானவர்கள இசுலாமியப் பெண்களே! சயரா பானு, அஃபுரீன் இரகுமான், இசுரத்து சஃகான், அதியா சபுரீ, குல்சன் பர்வீன் ஆகிய ஐந்து பெண்களே முவ்விலக்குக் கொடுமைக்காக நீதிமன்றப் படிகளை எதிர்த்து இப்பொழுது வெற்றி காண்கிறார்கள்.
  இலங்கை, பாக்கித்தான், வங்காளத் தேசம், துனிசியா, துருக்கி, சைப்பிரசு, அல்சீரியா, மலேசியா, ஈரான், சோர்டான், சூடான், கத்தார், மொராக்கோ, ஈராக்கு, புரூனே, ஐக்கிய அரபு நாடுகள் என இசுலாமிய நாடுகள், பிற சமய நாடுகள் எனப் பலவும் முவ்விலக்கைத் தடைசெய்துள்ளன. இசுலாமிய நாட்டிலேயே தடை செய்யப்பட்டதைச் சமயச் சார்பற்ற நாடு என அறிவிக்கப்பெற்ற இந்தியாவில் தடை செய்வதில் என்ன தவறு?
  சட்டத்தில் குறைகள் இருந்தால், இசுலாமியப்பெண்களுக்கு நலம் பயக்கும் வகையில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமேயன்றி, அவர்களுக்கு எதிரான திருத்தங்கள் மேற்கொள்ளக்கூடாது.
  பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா? உற்றார் உறவினர் முன்னிலையில் ஊரறிய நடத்தப்பட்ட திருமணம் யாருமறியாமல் ஒற்றைச் சொல்லை மும்முறை தெரிவிப்பதால் முறிக்கப்பட வேண்டுமா?
இந்தியாவில் பொதுக்குடிமைச்சட்டமே எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான சட்டமாக இருக்க வேண்டும். இதனைச் சிறுபான்மையரை ஆதரிப்பதாக எண்ணி எதிர்க்கும் போக்கு கைவிடப்பட வேண்டும்.
  • குவியாடி
இ.எ.தமிழ் / ietamil நாள்  சன 23, 2018