g.meenakshi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
g.meenakshi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 செப்டம்பர், 2011

poem about senkodi: செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அகிம்சையின் பெருநெருப்பு!!


செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அகிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில்
ஒருதுளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..
மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ’மையில் உன் விதியெழுதி – எம்
பொய்முகத்தை உடச்சியேடி..
விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..
செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி…
பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..
இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..
இனி கத்தியழ யாரிருக்கா
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?
உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;
நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் – மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!
————————————————————————————–
வித்யாசாகர்
Short URL: http://meenakam.com/?p=34568

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தமிழகச் சட்ட ஒழுங்கைக் கெடுக்கச் சிங்களம் முயற்சி

தமிழக சட்ட ஒழுங்கை கெடுக்க சிங்களம் முயற்சி

சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள். ” புலிகளை பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. “அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்” என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. “வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை” படுகொலை செய்தபோதும், உலகம் “பெரிதாக கண்டுகொள்ளவில்லை”. இப்போது என்ன வந்துவிட்டது? “தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்” சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.
உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து “ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்” பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் “மௌனத்தை” உடைக்க “முத்துக் குமார்” என்ற தம்பி “உயிராயுதமாக” தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் “தீப்பொறியை” கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க “ஜாபர் சேட்” போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது “பீனிக்ஸ் பறவை” போல மீண்டும் தமிழன்” எழுகிறான்.இந்த முறை “ஜெயலலிதா” முகம் “தமிழ் முகமாக” மாறி, “தமிழர் எழுச்சிக்கு” பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. “எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை” எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?”" என்று மத்திய உளவு நிறுவனமான “ரா’ வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.
அதன் விளைவே “திடீரென சிங்கள எம்.பி.களை ” நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு “எதிர்ப்பு” கொடுத்தால், அதற்காக ” வந்தவர்களிடம் “மன்னிப்பு” கேட்பதும் , அதன்மூலம் “இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்” வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் “திட்டமிட்டு” நடத்தப்பட்டதாக தெரிகிறது. “டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை” என்று “தீர்மானம்” போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், “ரசிக்கவில்லை”. அந்த “தீர்மானங்களை” வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் “நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்” டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டில் “ஈழப்ப் பிரச்சனையை”‘ ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது ” சட்ட-ஒழுங்கை ‘பாதுகாக்க ” தமிழின உணர்வாளர்கள்” மீது “நடவடிக்கை” எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது “பழைய” அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான “என்.ஐ.பி.” மூலம் “ஐம்பது சிங்கள இளைஞர்களை” இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை “பகிரங்க ஊர்வலமாக” வெளியே தெரியும்படி “பவனி வர” ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து “ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு” ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் “சிறிய சிங்களக் கொடிகளை” பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள “தமிழர்களுக்கே கூட” அனுமதி கொடுப்பதில்லை. அப்படி “காவலர் அனுமதி இல்லாமல்” அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.
அந்த சிங்கள ஊர்வலம் நேராக “புரசவாக்கத்தை: அடைந்து “ஏ.ஜே.விடுதி” என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட “சதி” நடைபெறாமல், அந்த “சிங்களப் பொடியன்களுக்கு” உள்ளேயே “ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்” என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை “புரசைவாக்கம் கடைவீதியை” அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட “தமிழ் இளைஞர்கள்” எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த “கொழும்பு” தலையிட்டு, “டில்லியை” உசுப்பி விட்டு, அதமூலம் “தமிழ் இளைஞர்களை” கைது செய்ய வைத்திருகிறார்கள். இது “அந்நிய சதியால்” தமிழக சட்ட’-ஒழுங்கை கெடுக்க” எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த “சிங்கள இளைஞர்கள்” ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என “காவல்துறை” புலனாய்வு செய்து, “தூண்டிவிட்ட” அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-TSS MANI

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

10 கோடி கேட்ட புலிகளை விரட்டிய அனுப்பிய கலைஞர் – பழ.நெடுமாறன்

10 கோடி கேட்ட புலிகளை விரட்டிய அனுப்பிய கலைஞர் – பழ.நெடுமாறன்


இலங்கைத் தமிழின அழித்தொழிப்பு என்பது… இன்னமும் தமிழ்நாட்டில் ஆறாத ரணமே! கடந்த வாரம் சென்னையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலானது’ என்ற குறுந்தகடு வெளி யீட்டு விழாவில்… ஈழத் தமிழ் அனல் வீசியது!
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதல் பிரதியை வெளியிட, ம.நடராசன் பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக அவரின் அண்ணன் ம.சாமி நாதன் குறுந்தகட்டைப்பெற்றுக் கொண்டார். கல்யாணவீடுகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ‘வாராய், நீ வாராய்’ பாடலைத் தந்த திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகராசன் இசைய மைத்து, மேடையிலேயே இரண்டு பாடல்களையும்பாடி, தமிழ் உணர்வாளர்களை உற்சாகப் படுத்தினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், ”யாழ்ப் பாணத்தில் தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொல்ல சிங்கள அரசு முயன்றது. இதைத் தடுத்து நிறுத்துவதுபற்றி தி.க. தலைவர் கி.வீரமணியும், நானும் அப்போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கலைஞரை சந்தித்தோம். அவருடன் வைகோவும், எஸ்.எஸ்.தென்னரசும் இருந்தனர். இரண்டு மணி நேரம் மன்றாடினோம். கருணாநிதியோ, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை’ என்றார். ‘அந்த மக்களுக்காகவாவது நீங்கள் பேசக் கூடாதா?’ என்று கேட்டோம். ‘எல்லாம்ஒன்றுதானே… அந்த மக்களும் அவரைத்தானே தலைவனாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்’ என்றார். உடனே, எங்களுடன் வந்திருந்த ‘விடுதலை’ பத்திரிகை மேலாளர் சம்பந்தம், ‘பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறீர்களே. அதன் தலைவர் யாசர் அராஃபத் உங்களை வந்து எப்போதாவது பார்த்திருக்கிறாரா?’ என்றதும், கலைஞர் கடுமையாகக் கோபம் அடைந்தார்.
இலங்கை – இந்திய உடன்பாட்டை ஆதரித்து அறிக்கை கொடுக்குமாறு மறைந்த ஈழத் தலைவர் அமிர்தலிங்கத்திடம் கலைஞர் சொன்னாரா, இல்லையா? ‘நீங்கள் எவ்வளவு தியாகம் செய்து வளர்த்திருப்பீர்கள்? உங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் (பிரபாகரன்) தன்னை தலைவன் எனப் பிரகடனம் செய்யப் பார்க்கிறார். இந்திய ராணுவம் அங்கு போய்விட்டது. இரண்டு நாள்களில் அவர் கொட்டத்தை ஒடுக்கி, அவரையும் பிடித்து உள்ளே போடுவார்கள். நீங்கள் தைரியமாக ஆதரித்து அறிக்கை கொடுங்கள்… நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று இந்தப் பெரிய மனிதர் சொன்னது உண்மையா, இல்லையா?
விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர். கோடிகளைக் கொட்டிக் கொடுத்தார். அதுபோல கலைஞரும் பணம் தருவார், வாங்கவேண்டும் என்று சில புலித் தம்பிகள் கூறியதும் அவர்களையே பிரபாகரன் அனுப்பிவைத்தார். அவர்கள் கலைஞரிடம் ரூ. 10 கோடி கேட்டார்கள். சீற்றமான கலைஞர், அவர்களை விரட்டி அனுப்பினார். எம்.ஜி.ஆர். கோடிகளைக் கொடுத்தபோது இவர் 50ஆயிரம் தந்து, விளம்பரம் தேட முயன்றார். அதற்கு புலிகள் இசையவில்லை என்பதால், அவர்கள் மீது என்னென்னவோ பழிகளை சுமத்தினார்.” என்று பகீர் தகவல்களாகத் தந்தார் நெடுமாறன்!
அடுத்து வந்த பழ.கருப்பையா, ”தமிழகக் கவிஞர்கள் பலரும் சோரம் போய் விட்டார்கள், முதுகு சொறிவதே அவர்கள் முழு நேரத் தொழில் ஆகிவிட்டது. மாறாக, உணர்ச்சிக் கவிஞர் எழுதிய பாடல்கள், உலகத் தமிழர்களிடம் செல்ல வேண்டிய தகுதி படைத்தவை. வைகோவும், நெடுமாறனும் தவிர, வேறு யாரும் வந்து பாராட்டி இருந்தால் இந்த விழா மாசுபட்டுப்போய் இருக்கும்!” என்றார். ஏற்புரை ஆற்றிய கவிஞர் காசிஆனந்தன், ”தமிழ் அழிந்துகொண்டு இருக்கிறது. தமிழ் ஈழம் பற்றிய எழுச்சி பரவிவரும் நேரத்தில், தமிழை அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான். இந்த நேரத்தில் இங்கு தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது கூடுதலாகி வருகிறது. தமிழ் மண்ணில் தூய தமிழ் பேசும் தொலைக்காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. ஓர் அறிவிப்பாளர் ஆங்கிலத்தில், ‘எனக்கு ஹேப்பி வேணும்’ என்கிறாள். ‘ஹேப் பினெஸ்’ வேணும்னுகூட சொல்லத் தெரியாதா? இன்னொருத்தி, ‘உங்க சில்ரன்ஸ் எப்படி இருக்காங்க?’ என்கிறாள். தமிழ்நாட்டில் மொழியை நித்தமும் கொலை செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும், ‘ஸோ’ போடுகிறான்… ‘பட்’ போடுகிறான். இந்த ஆங்கிலக் கலப்பு கலாசாரம் மிக ஆபத்தானது…” என்றவர்,
”இதுவரை 40 ஆயிரம் விடுதலைப் புலிகள் ஆண்களும் பெண்களும் உயிர்க் கொடை தந்திருக்கிறார்கள். அந்த தியாகம் வீண் போகாது, தமிழ் ஈழம் மலர்வது உறுதி. அந்த மண்ணில் விடுதலை நெருப்பு அணைந்து போகாது!” என்றார் ஆவேசமாக!
நிறைவாக மைக் பிடித்த வைகோ, ”காசி ஆனந்தன் எழுதிய களத்தில் கேட்கும் கானங்கள், புயல் கால ராகங்கள் ஆகிய ஒலிப் பேழை களில் உள்ளதைப்போன்ற தமிழ் ஈழ விடுதலை நெருப்புப் பாடல்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அவற்றைத் தமிழக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் நெடுமாறன் தலை மையில் நான் பங்காற்றுவேன். அண்மையில், என்னைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பேச வரும்படி அழைத்தனர். நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன். ‘நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்றதும், எழுந்த விசில் ஒலி அடங்கச் சில நிமிடங்கள் நீடித்தன. உடனே வைகோ, ”இந்த விசில் சத்தம் தமிழகம் முழுவதும் கேட்க வேண்டும்…” என்று கேட்டுக்கொண்டது மொத்த சத்தத்தையும் மீறி ஒலித்தது!
- இரா.தமிழ்க்கனல்
படங்கள்: வீ.நாகமணி
நன்றி: விகடன்

வியாழன், 17 செப்டம்பர், 2009

"தினமணி' முதுநிலை உதவி ஆசிரியருக்கு சரோஜினி நாயுடு பரிசு



கோவை, செப்.16: தில்லியைச் சேர்ந்த "தி ஹங்கர் புராஜக்ட்' அமைப்பு சார்பில் வழங்கப்படும் 2009-ம் ஆண்டுக்கான சரோஜினி நாயுடு பரிசு "தினமணி' நாளிதழின் கோவை பதிப்பில் பணிபுரியும் முதுநிலை உதவி ஆசிரியர் ஜி.மீனாட்சிக்கு கிடைத்துள்ளது. தினமணி ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் வெளியான "கல்விக் கண் திறக்கும் உள்ளாட்சிப் பெண்கள்!' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பிற இந்திய மொழிகளின் பிரிவில் வெளியான கட்டுரைகளில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக ரூ.2 லட்சமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். தில்லியில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

கருத்துக்கள்

பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்! இப் பரிசு அவருக்கு மட்டுமல்ல, தினமணிக்கும் தினமணி நேயர்களுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. திருமிகு மீனாட்சி மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்!

அன்பு வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *