TNGovt. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNGovt. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கதிரொளி மின்னாற்றல் திட்டத்திற்குத் தமிழக அரசின் விலை ஈடுகள்?

தினமலர் பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2012,23:29 IST
சென்னை: கடுமையாக மின்வெட்டு நிலவும் தமிழகத்தில், அதன் கடுமையைப் போக்கும் வகையில், ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் மின்சார உற்பத் தியை மேற்கொள்ள புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூரியசக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டசபையில் எரிசக்தித் துறைக்கான மானியத்தின் மீது, நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

வீடுகளில்...: சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில், தமிழக அரசின் சூரியசக்தி கொள்கையை முதல்வர் வெளியிடுவார். மேலும், அரசு துறைகளை இதற்கு எந்தளவு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான அறிக்கையையும் முதல்வர் விரைவில் வெளியிடுவார். 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்படும். வீட்டு உபயோக, மேற்கூரை சூரியசக்திக்கு, 2012-13ம் ஆண்டில், அதிகபட்சமாக மொத்தம் 50 மெகாவாட் மின் உற்பத்திக்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆண்டின் மொத்த மின் பயனீட்டுச் சதவீதப்படி, மேற்கூரை மூலம் அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல்வகை மின் பயனீட்டாளர்களுக்கு சூரிய மேற்கூரை மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.
விவசாயம்: விவசாய மின் இணைப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, மானியத்துடன் கூடிய சூரிய ஒளி பம்புகள் வழங்கப்படும். இதன்படி. விவசாய அமைச்சகத்திடம் இருந்து 56 சதவீதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் இருந்து 30 சதவீதம் என 86 சதவீத மானியம் வழங்கப்படும். மீதம் 14 சதவீத விலையை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் பட்டியலிடப்பட்ட தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்களிடம் செலுத்தி, சூரிய ஒளி பம்புகளை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் 5.25 லட்சம் செலவில், பத்து கிலோவாட் திறன் உள்ள எட்டு காற்று சூரிய கலப்பின அமைப்புகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் மற்றும் தகுந்த இடங்களில், தெரு விளக்குகள் அமைக்கும் வகையில் 42 லட்சம் ரூபாய் செலவில், எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிறுவப்படும்.

காற்றாலை: காற்றாலை மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்கொண்டு வர, தப்பக்குண்டு, ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலையங்களும், அதோடு சேர்ந்த 336 மின் சுற்று கிலோ மீட்டர் நீளத்துக்கு 400 கிலோ வோல்ட் உயர் மின்னழுத்தப் பாதையும் அமைக்கப்படும். இந்தத் துணை மின் நிலையங்கள், சேலத்தில் இந்திய மின் தொடரமைப்புக் கழகம் மூலம் அமைக்கப்படவுள்ள, 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும். செயல்விளக்க காற்றாலைப் பண்ணைகளை மீண்டும் திறன் உயர்த்தி, 160 மெகாவாட் மின்சாரம்
(காற்று சக்தி 80 மெகாவாட் மற்றும் சூரியசக்தி 80 மெகாவாட்) உற்பத்தி செய்ய, எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மின்சார வாரியத்துக்கும் இடையே, தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா என்ற பெயரில் ஏற்படுத்தப்படும். நேப்பியர் கம்பு கலப்பினப்புல் மற்றும் பீமா மூங்கில் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிவகைகள் பரிசீலிக்கப்பட்டு, 10 மெகாவாட் திறன் கொண்ட தாவரப் பொருட்கள் மூலம் மின் உற்பத்தி மின் நிலையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல் வகை மின் பயனீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.

திங்கள், 31 அக்டோபர், 2011

மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்


மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 30/10/2011



தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் நீதித்தேவதையின் கருணையை எதிர்நோக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் மீதும் கருணை காட்டிய மாண்புமிகு முதல்வர் அவர்கள், அம்மூவரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி 30.8.2011 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் தானே தீர்மானம் கொணர்ந்து நிறைவேற்றி உள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அரசின் உள்துறைச் செயலர் அளித்துள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் எனும் எதிர்வாதம் மாண்புமிகு முதல்வரின் தாய் உள்ளத்திற்கு முரணாக உள்ளது. ஒருவேளை, நீதி மன்றமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால்கூட, மாறு பட்ட தீர்ப்பு வந்தது எனில் அது மாண்புமிகு முதல்வரின் எண்ணத்திற்கு மாறானதாக அமையும். இவ்வாறு தள்ளுபடி செய்யுமாறு சொல்லுவது மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் பொருளாகிறது. எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு, சட்ட மன்றத்தீர்மானத்தின் படியை இணைத்து, நாட்டு மக்களின் மொத்த எண்ணத்திற்கு ஏற்ப தம்மால் கொண்டு வந்த தீர்மானத்தின்படி மூவரின் தூக்குத் தண்டனையையும் நீக்குமாறு வேறு எதிர்வாதுரை அளிக்கச் செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர்களின் மீது கொடுமைகளை இழைத்தவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியதிலும் மூவர் விடுதலை மன்றாடலிலும் உலகமக்கள் உள்ளங்களில் உயர்ந்து உள்ள மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாநிலங்களின் உரிமைகளை ஒடுக்கும் மத்திய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத புரட்சித்தலைவி அவர்கள், தமிழக அரசின் உரிமையைக் காக்கும் வகையில் தம்மால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். மூவர் உயிரையும் காத்து உலகத்தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு திரு இலக்குவனார் திருவள்ளுவன் மூவர் விடுதலையை வலியுறுத்தி உள்ளார்.



or

மூவர் விடுதலைக்கு மாற்று வழக்குரை அளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்