solar energy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
solar energy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 நவம்பர், 2012

ஆளுநர், முதல்வர்,அலுவலகங்கள் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாற்றம்


தமிழக அரசின் சூரிய ஒளி மின் சக்தி திட்டத்தில், முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியவற்றில், சோலார் மின் சக்தி திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக அரசு, கடந்த வாரம், மாநில சூரிய மின்சக்தி கொள்கையை அறிவித்தது. அதில், கடும் மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்துக்கு, மாற்று மின்சக்தியாக, சூரிய மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அலுவலகங்கள், படிப்படியாக சூரிய மின்சக்திக்கு மாற்றப்படும்.

வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க, அரசு ஊக்கத் தொகை வழங்கும் என, கூறப்பட்டுள்ளது.சூரிய மின் கொள்கையின் முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியவற்றில், இந்த மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, சர்வதேச டெண்டரை, தமிழக எரிசக்தி மேம்பாட்டு
முகமை கோரியுள்ளது. 35 கிலோவாட் மின்சாரத்தை பெரும் வகையில், இந்த டெண்டர்
விடப்பட்டுள்ளது.முதல்வர் அலுவலகத்தில், 10 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையத்தையும், கவர்னர் மாளிகையில், 10 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையம் இரண்டும், 5 கிலோ வாட் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றும் அமைக்கப்படுகின்றன.

சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நிறுவனம், ஐந்து ஆண்டுகள் தொடர் பராமரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிக்கு, திட்டத்தின் மொத்த மதிப்பில் ஆண்டுக்கு, 3 சதவீதம் என, 15 சதவீதத் தொகை அளிக்கப்படுகிறது. 25 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் உபகரணங்கள் பொருத்தப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை
Advertisement
அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகையில், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க கோரப்பட்டுள்ள டெண்டருக்கு, இம்மாதம், 15ம் தேதி கடைசி நாள். இதன்பின், ஓரிரு மாதங்களில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

அரசின்சூரிய மின்சக்தி கொள்கையில், அரசு அலுவலகங்களில், சூரிய மின்சக்தி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியன இவ்வகை மின்சக்திக்கு மாற்றப்படுகிறது.

படிப்படியாக, அரசு அலுவலகங்கள் இதுபோன்ற மின்சக்திக்கு மாற்றப்படும்.முதல் கட்டமாக, அரசு கட்டியுள்ள, 60 ஆயிரம் பசுமை வீடுகளில், சூரிய மின்சக்தி அமைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
-
தினமலர் சிறப்பு ச் செய்தியாளர் -

A

வியாழன், 17 மே, 2012

மலை மக்கள்பயன்பாட்டில் கதிர்வழி மின்திறன்!

சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தும் மலைவாழ் மக்கள்
தினமலர்

உடுமலை:மின்தட்டுப்பாட்டினால், நகரம் மற்றும் கிராமப்புற மக்கள் அவதிப்படும் நிலையில், மலைவாழ் மக்கள் மின்சாரத்தை நம்பாமல், சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டினால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் முழுமையாக கிடைக்காத நிலையில், தொழில்களும் பாதிக்கப்பட்டு வருவதாக தொழில் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.
மின்தட்டுப்பாட்டு காரணமாக தினசரி குறிப்பிட்ட நேரங்கள் மின்தடையும் நடைமுறையில் உள்ளது. மின்சாரம் தட்டுப்பாட்டினால், பொதுமக்கள் அவதிப்படுவதை தவிர்க்க தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள் பகுதியில், அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால், அதற்கு மாற்று ஏற்பாடாக யு.பி.எஸ்., இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என நாடிச் செல்லும் நிலை உள்ளது.
மின்தடையால் ஒரு பக்கம் மக்கள் அவதிப்படும் நிலையில், மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மக்களோ எவ்வித கவலையுமின்றி சோலார் சிஸ்டம் பயன்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தளிஞ்சி மலைவாழ் மக்கள் வனத்துறை மூலம் வழங்கப்பட்ட சோலார் சிஸ்டம் மூலம் தங்களது அன்றாட தேவைகளை மேற்கொள்கின்றனர். இப்பகுதி மக்கள் சோலார் சிஸ்டத்தினை முறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதி மக்களும் மின்தட்டுப்பாட்டை போக்க சோலார் சிஸ்டத்தை நாட துவங்கியுள்ளனர். இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே கடை வைத்துள்ள மலைவாழ் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவர் சோலார் சிஸ்டம் மூலம் ரேடியோ கேட்க பயன்படுத்தி வருகிறார். மற்ற பயன்பாட்டிற்கும் சோலார் சிஸ்டம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

"மின் இணைப்பு இல்லாத நிலையில், சோலார் சிஸ்டம் கைகொடுக்கிறது; சூரிய ஒளியில் இயங்குவதால் தடையின்றி மின் இணைப்பு கிடைக்கிறது. தற்போது கடையில், வேலை செய்யும் போதுபணிப்பளு தெரியாமல் இருக்க ரேடியோவை இயக்க பயன்படுத்தி வருகிறேன். இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படுவதால், சோலார் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,' என கண்ணப்பன் கூறினார்.

வெள்ளி, 4 மே, 2012

சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்

 

Dinamalar E paper
    எழுத்தின் அளவு:       
Bookmark and Share Share  






சென்னை: தமிழகத்தில், 1,000 மெகா வாட் உற்பத்தி செய்யும், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என, தொழில் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று, தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் தங்கமணி பேசியபோது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

வேலைவாய்ப்பு: * தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள வாயலூர் கிராமத்தில், 160 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிமர்ஸ் பொருட்கள் உற்பத்தி வளாகம் உருவாக்கப்படும். இவ்வளாகத்தில், மோட்டார் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும், 100 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வசதிகள் இருக்கும். இவ்வளாகம் முழுமையாகச் செயல்படும்போது, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

முதலில் எங்கு? * தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில், சூரிய சக்தி மூலம் 5,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், டிட்கோ நிறுவனம், வரும் ஐந்தாண்டுகளில், 1,000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த, சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், படிப்படியாக இவை செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, தென் மாவட்டங்களில், 500 ஏக்கர் பரப்பளவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 100 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும்.

ஊர்தி நிறுத்து மையம்: * சிப்காட் ஒரகடம் தொழில் வளர்ச்சி மையத்தில், பெரும் தொழில் நிறுவனங்களின் வாகனங்களால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பெரும் ஊர்திகளை நிறுத்த, 10 கோடி ரூபாயில், 10 ஏக்கர் பரப்பளவில், சிற்றுண்டி, தங்குமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய, "ஊர்தி நிறுத்து மையம்' ஏற்படுத்தப்படும். இம்மையத்தை, சிப்காட் நிறுவனம் அமைக்கும்.

* சிப்காட் நிறுவன தொழில் வளாகங்களில், மிகவும் பழமையான, ஓசூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, இருங்காட்டுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி, மானாமதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சிப்காட் தன் சொந்த நிதியிலிருந்து, ஆண்டுக்கு இரண்டு வளாகங்களுக்கு, தலா 10 கோடி வீதம், 20 கோடி ரூபாய் செலவிடும்.

கூழ் மரங்கள்: * தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் தொழில் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், பெரம்பலூரில் புதிய கள அலுவலகம் ஒன்று திறக்கப்படும்.

* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், நொய்யல் ஆற்றுப்பாசனப் பகுதிகளில், சாயக் கழிவு நீரால் மாசுபட்ட நிலங்களில், 1,000 ஏக்கரில், வனத் தோட்ட கூழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு, விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, நடப்பாண்டில், மேலும் 3,000 ஏக்கரில், வனத்தோட்ட மரக்கன்றுகள் அமைக்கப்படும். இதில் பங்குபெறும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 4,000 ரூபாய் குத்தகைத் தொகையை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், ஆறு ஆண்டுகளுக்கு வழங்கும். அதன் பின், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, விவசாயிகள் மறு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

உடல்நல உப்பு: "உடல்நல உப்பு' குறித்து அமைச்சர் தங்கமணி அளித்த தகவல்: தமிழ்நாடு உப்பு நிறுவனம், உடல் நலத்திற்கு உகந்த, குறைந்தளவு சோடியம் கொண்ட உப்பை தயார் செய்து, வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். உப்பின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு தயாரிக்கும் ஆலை, இரண்டு கோடி ரூபாயில், ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டுத் திட்டத்தில், இந்த ஆண்டு நிறுவப்படும்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கதிரொளி மின்னாற்றல் திட்டத்திற்குத் தமிழக அரசின் விலை ஈடுகள்?

தினமலர் பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2012,23:29 IST
சென்னை: கடுமையாக மின்வெட்டு நிலவும் தமிழகத்தில், அதன் கடுமையைப் போக்கும் வகையில், ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் மின்சார உற்பத் தியை மேற்கொள்ள புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூரியசக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டசபையில் எரிசக்தித் துறைக்கான மானியத்தின் மீது, நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

வீடுகளில்...: சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில், தமிழக அரசின் சூரியசக்தி கொள்கையை முதல்வர் வெளியிடுவார். மேலும், அரசு துறைகளை இதற்கு எந்தளவு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான அறிக்கையையும் முதல்வர் விரைவில் வெளியிடுவார். 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்படும். வீட்டு உபயோக, மேற்கூரை சூரியசக்திக்கு, 2012-13ம் ஆண்டில், அதிகபட்சமாக மொத்தம் 50 மெகாவாட் மின் உற்பத்திக்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆண்டின் மொத்த மின் பயனீட்டுச் சதவீதப்படி, மேற்கூரை மூலம் அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல்வகை மின் பயனீட்டாளர்களுக்கு சூரிய மேற்கூரை மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.
விவசாயம்: விவசாய மின் இணைப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, மானியத்துடன் கூடிய சூரிய ஒளி பம்புகள் வழங்கப்படும். இதன்படி. விவசாய அமைச்சகத்திடம் இருந்து 56 சதவீதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் இருந்து 30 சதவீதம் என 86 சதவீத மானியம் வழங்கப்படும். மீதம் 14 சதவீத விலையை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் பட்டியலிடப்பட்ட தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்களிடம் செலுத்தி, சூரிய ஒளி பம்புகளை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் 5.25 லட்சம் செலவில், பத்து கிலோவாட் திறன் உள்ள எட்டு காற்று சூரிய கலப்பின அமைப்புகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் மற்றும் தகுந்த இடங்களில், தெரு விளக்குகள் அமைக்கும் வகையில் 42 லட்சம் ரூபாய் செலவில், எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிறுவப்படும்.

காற்றாலை: காற்றாலை மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்கொண்டு வர, தப்பக்குண்டு, ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலையங்களும், அதோடு சேர்ந்த 336 மின் சுற்று கிலோ மீட்டர் நீளத்துக்கு 400 கிலோ வோல்ட் உயர் மின்னழுத்தப் பாதையும் அமைக்கப்படும். இந்தத் துணை மின் நிலையங்கள், சேலத்தில் இந்திய மின் தொடரமைப்புக் கழகம் மூலம் அமைக்கப்படவுள்ள, 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும். செயல்விளக்க காற்றாலைப் பண்ணைகளை மீண்டும் திறன் உயர்த்தி, 160 மெகாவாட் மின்சாரம்
(காற்று சக்தி 80 மெகாவாட் மற்றும் சூரியசக்தி 80 மெகாவாட்) உற்பத்தி செய்ய, எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மின்சார வாரியத்துக்கும் இடையே, தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா என்ற பெயரில் ஏற்படுத்தப்படும். நேப்பியர் கம்பு கலப்பினப்புல் மற்றும் பீமா மூங்கில் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிவகைகள் பரிசீலிக்கப்பட்டு, 10 மெகாவாட் திறன் கொண்ட தாவரப் பொருட்கள் மூலம் மின் உற்பத்தி மின் நிலையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல் வகை மின் பயனீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

No fear of power-cut

 எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் கடந்த ஆண்டு ஃபோம்ரா பொறியியல் கல்லூரியில் பட்டம் பயின்றவன்.  அவன் அங்கு மூன்றாம் ஆண்டு பயிலும் பொழுதே அப்போதைய முதல்வர் முனைவர் மகேசு அவனிடம்  கதிரொளி மின்வசதிக்கான பொறுப்பை ஒப்படைத்தார். அவன் தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சூரிய ஒளியைப்பயன்படுத்திக் கல்லூரி விடுதிக்கும் கல்லூரிச் சாலை விளக்குகளுக்கும்  சமையல்அறைக்கும் வேண்டிய மின்வசதியை உருவாக்கிக் கொடுத்தான். இதைப்போல் ஒவ்வொரு  கல்வி நிறுவனமும் தனியார் நிறுவனங்களும் தத்தமக்கு வேண்டிய மின் வசதியை ஏற்படுத்திக் கொள்ள அரசு  ஆணையிட்டு அவற்றுக்கு வேண்டிய பொருள்களை வரியின்றிக் குறைந்த விலையில் கிடைகக ஏற்பாடு செய்தால் மின்வெட்டே இருக்காது. அடுக்குமாடி கட்டுநர்கள் கட்டாயமாகச் சூரிய ஒளி மின்சாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயமாக ஆக்க வேண்டும். ஓராண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே சூரியனைப் பார்க்கும் செருமனியில் கதிரொளி மின்சாரம் எளிதாக நிறைவேற்றப்படும் பொழுது நம் நாட்டில் முயன்றால் கட்டடங்களுக்கு மட்டுமல்லாமல் ஊர்திகளுக்கும் குளு குளு வசதி செய்து தரலா‌மே.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /











இனி "பவர்கட்' பயமில்லை!


சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் சுரேஷ்: நான், சென்னை ஐ.ஐ.டி., யில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஆமதாபாத், ஐ.ஐ.எம்.,மில், எம்.பி.ஏ.,வும் படித்தவன். நான் படித்த படிப்புகள், நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணமே, சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற, என் முயற்சிக்குக் காரணம்.
ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே, சூரிய வெப்பம் உள்ள ஜெர்மனியில், சோலார் மின் உற்பத்தி சாத்தியம் எனில், ஆண்டில் எட்டு மாதங்கள் வெப்பம் உள்ள நம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், ஏன் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியாது?
எங்கள் வீட்டின் கீழ்தளத்திலும், மேல் தளத்திலும், ஏழு அறைகள் உள்ளன. இந்த அறைகளில், பல்புகளும், மின் விசிறிகளும் இயங்க, ஒரு கிலோவாட் மின்சாரம் தேவை. இந்தத் தேவைக்காக, பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். இந்தத் தகடுகள், சிலிக்கானால் ஆனவை. சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர்கள், இந்தத் தகட்டின் மீது படும்போது, இதிலுள்ள சிலிக்கான், இக்கதிர்களை மின் ஆற்றலாக மாற்றும். இந்த மின்சார ஆற்றல், ஒயர்களின் வழியாக, மெயின் போர்டில் சேரும்படி, இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டு சோலார் இன்வெர்ட்டர் பேட்டரிகளிலும், மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
சூரிய வெளிச்சம் உள்ள பகல் நேரத்தில் மட்டும் தான், இந்தத் தகடுகளில், மின்சாரம் பெற முடியும். சேமிக்கப்பட்ட இன்வெர்ட்டர்கள் மூலம், இரவு நேரங்களில் மின்சாரம் பெறுகிறோம். சோலார் தகடு, இன்வெர்ட்டர், பேட்டரிகள் அனைத்தையும் சேர்த்து, இரண்டரை லட்சம் ரூபாய் செலவானது. வீடு முழுவதும், சோலார் மின் இணைப்புக் கொடுத்திருப்பதால் தான், இத்தொகை. நடுத்தர சிறிய வீடுகளில் இத்தொகை பாதியாகக் குறையும். ஒரு வீட்டில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சோலார் இணைப்புக் கொடுத்தால் செலவு குறையும்.
சோலார் தகடுகளை ஒருமுறை பொருத்திவிட்டால், 25 ஆண்டுகளுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. எட்டு பேட்டரிகளுக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. இந்த பேட்டரிகளை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

solar cycle by students



விருதுநகர்: ஐந்து மணி நேரம் சூரிய ஒளியை பெற்று, அதன் மூலம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், சோலார் மின் சக்தி சைக்கிளை, விருதுநகர் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், மெக்கானிக் துறை இறுதியாண்டு மாணவர்கள் எம்.நாகராஜன், பி.கோட்டைராஜன், டி.நாகமூர்த்தி, எஸ்.கருப்பசாமி, டி. கருப்பசாமி, கே. கருப்பசாமி ஒன்றிணைந்து, சோலார் மின் சக்தி சைக்கிள் வடிவமைத்துள்ளனர். சூரிய வெப்பத்தை சோலார் பேனல் மூலம் சேகரித்து, அதை மின் சக்தியாக மாற்றி, பேட்டரியில் சேமித்து,மோட்டார் மூலம் இயங்கும் சைக்கிளை உருவாக்கி உள்ளனர் .

30 வாட்ஸ் பவர் சைக்கிளுடன் கூடிய சோலார் பேனலை, சூரிய ஒளியில் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், தினம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம். வெயிலில் ஓட்டி சென்றால், அது மேலும் மின்சக்தியை சேகரித்து கொள்ளும். மின்சக்தி குறைந்து விட்டால், பெடலாலும் சைக்கிளை ஓட்டி கொள்ளலாம்.

மாணவர் எம். நாகராஜன் கூறுகையில்,""புராஜக்ட் ஓர்க்கிற்காக அனைவரும் சேர்ந்து,இந்த சைக்கிளை தயார் செய்தோம்.பெட்ரோல் விலையேற்றத்தால், சிரமப்படுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை உருவாக்க ரூ.15 ஆயிரம் செலவு ஆகும்,'' என்றார். தகவலுக்கு, 87541 94958 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

Invention of Solar cycle : சூரிய ஆற்றலில் ஓடும் மிதி வண்டி': முன்னாள படைஞர் கண்டுபிடிப்பு


காரைக்குடி:சூரிய சக்தி மூலம் (சோலார் எனர்ஜி) இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் பூபதிராஜ், 49, கண்டுபிடித்துள்ளார்.
இன்ஜினியரிங் படித்துள்ள இவர், 20 ஆண்டுகளாக 125 க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் அலாரம் சூட்கேஸ், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது, திரவம் காலியானால் எச்சரிக்கும் ஐ.வி., மானிட்டர் கருவி போன்றவை முக்கியமானவை. தற்போது, சூரிய சக்தி,பேட்டரி மற்றும் "பெடல்' மூலம் இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், "" சூரிய ஒளி தகடை பயன்படுத்தி ( சோலார் பிளேட்) டி.சி., மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து சைக்கிள் ஓட்டலாம். பேட்டரி தேவை இல்லையென்றால், சூரிய ஒளியை நேரடியாக பயன்படுத்தியும் வாகனம் ஓட்டலாம். இரவு நேரங்களில் பேட்டரி மூலம் குறைந்தது 60 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இவை இரண்டுமே சாத்தியமில்லை என்றால், "பெடல்' மூலம் நேரடியாக சைக்கிளை இயக்கலாம். பகல் 11 முதல் மாலை 4 மணி வரை பேட்டரி இன்றி சூரிய ஒளி மூலம் வாகனத்தை நேரடியாகவே இயக்க முடியும். ஆனால், வேகம் குறைவாக இருக்கும். சாதாரண சைக்கிளில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். இதற்கு குறைந்தளவே செலவு செய்தால் போதுமானது, என்றார்.

சனி, 15 ஜனவரி, 2011

encouragement for solar system: மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

நல்ல முயற்சி ! பாராட்டுகள்! சூரிய ஆற்றலைக் கொண்டு நம் நாடு மின்னாற்றல் பயன்பாட்டைக்  குறைத்து அதே நேரம் மிகுதியான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.  ஆனால், தொடர்புடைய துறையினர் மாணாக்கர்களுக்கு ஊக்கம் தருவதில்லை. இதில் அரசு கருத்து செலுத்த வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஜன.14: தமிழகத்தில் வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய மின்சக்தி (சோலார்) மின் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசியது:  சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்கெனவே தமிழகத்தில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையில் சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களை வீட்டு மொட்டை மாடிகளில் வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறையை ஊக்கப்படுத்த உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே 30 சதவீதம் மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 43 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு ஆகும் என்றார்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் டேவிதார் பேசியது:  வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி கிடைத்த பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதைத்தொடர்ந்து கட்டண விகிதம் அறிவிக்கப்படும்.  வீடுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும்போது, நுகர்வோர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும். உபரி மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கலாம். இது தொடர்பாக பொது கொள்கை உருவாக்கப்படும் என்றார்.  இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.  புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கான கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் ரூ.2 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஜனவரி 16-ம் தேதி வரை நடைபெறும்.  அமெரிக்க துணை தூதர் ஆன்ட்ரூ டி.சிம்கின், பிரிட்டன் தூதரக அதிகாரி மைக் நிதாவ்ரியானகிஸ், சிங்கப்பூர் தூதர் அஜீத்சிங், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் குத்சியா காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.