தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 டிசம்பர், 2023

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

 

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3

திலீபன் நினைவுப் பேருரை 3/3 :

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உயர்ஆணையர்கள் அறிக்கையிட்டுள்ளார்கள். அதைச் செய்ய வேண்டும். செய்வதற்கு ஆதரவு தர வேண்டும். இலங்கைக்கு ஆதரவு தரக் கூடாது, நடுநிலைவகிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களின் போராட்டத்தை முறியடிக்கக் கூடாது. இனியாவது இதைச் செய்வார்களா? இந்த அறிவிப்பு உண்மை என்றால், இதைச் செய்ய வேண்டும். செய்யுமாறு நாம் வலியுறுத்த வேண்டும். அது தமிழீழ மக்களுடைய நீதிக்கான போராட்டத்திற்குச் செய்யக் கூடிய ஓர் உதவியாக அமையும் என்று தமிழ்நாட்டிலே தமிழீழ ஆதரவு அமைப்புகள் நம்புகின்றன.

எத்தனையோ அரசியல் வேறுபாடுகளுக்கு இடையில் இந்திய அரசு தன்னை இனவழிப்புக்கு எதிராக மாற்றிக் கொள்ளுமானால், அதை வரவேற்க நாம் அணியமாக இருக்கிறோம். அந்த மாற்றத்தின் அடையாளமாகும் ஐ. நா. மனிதஉரிமைப் பேரவையில் அடுத்தடுத்து வரக் கூடிய விவாதங்களிலும், தீர்மானங்களிலும் தமிழீழ மக்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இதில் நமக்குப் பெரிய மயக்கம் ஏதும் இல்லை. நடந்தால் நன்று! நடக்கா விட்டாலும் நம்முடைய போராட்டம் தொடரும். நான் அடிக்கடி சொல்வதுண்டு. தந்தை செல்வா அவர்களும், தலைவர் பிரபாகரன் அவர்களும் இந்தியாவை நம்பியோ ஐநாவை நம்பியோ, வேறு உலக நாடுகளை நம்பியோ இந்தப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் தமிழீழ மக்களை நம்பித்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். அவர்கள் பக்கம் இருக்கின்ற வரலாற்று நியாயத்தை நம்பியே இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். இந்த வரலாற்று ஏரணம் இன்றைக்கும மறைந்து விடவில்லை.

தீலீபனின் பெயரால் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திலீபன் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வைத்தார். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று முழங்கித்தான் தன்னுடைய இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார். இன்றைக்கும் அந்த மக்கள் புரட்சியிலே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நீங்களும் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வையுங்கள்! தாயகத்திலே, தமிழீழ மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும். அதற்கு ஆதரவாக நாமும் போராட வேண்டும். இன்று இதுதான் இன்றியமையாத் தேவை.

ஒன்றுக்கும் உதவாத வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட பதின்மூன்றாம் திருத்தம் என்ற பம்மாத்து வேலையை இந்திய அரசும சிங்களஅரசும் செய்கின்றன. இதற்கு ஒருபோதும் தமிழீழ மக்கள் மயங்கி விடக் கூடாது.

அன்றைக்கு 1987-88இல் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றை இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? இந்திய அரசுக்கு நேர்மை இருக்குமானால், அஃது இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்னாயிற்று? என்று கேள்வி எழுப்ப வேண்டும். அதுதான் பன்னாட்டு உடன்படிக்கை. நமக்கு அதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அதன் வழியாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மாட்டார்கள். இந்திய இலங்கைஒப்பந்தத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள். தமிழீழத் தாயத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். பதின்மூன்று, பதின்மூன்று என்று கிளிப்பிள்ளை போலப் பேசிக் கொண்டேஇருப்பார்கள்.

தமிழீழ மக்கள் இந்த நாசகாரத் திட்டத்தை முறியடிக்க வேண்டும். பதின்மூன்றாம் திருத்தம் என்ற ஒரு திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில் இது ஒரு கேலிக்கூத்து என்று என்று இராசீவு காந்திக்குக் கடிதம் எழுதிய மூன்றுபேரில் ஒருவர்தான் ஐயா சம்பந்தன் அவர்கள். சிவசிதம்பரமும், அமிர்தலிங்கமும் மற்ற இருவர். இராசீவு காந்தி இல்லாமல் போய் விட்டார். ஆனால் அந்தக் கடிதம் இருக்கிறது. கேலிக் கூத்து மாறி விட்டதா? அப்படி நிலைமையில் என்ன மாற்றம் வந்து விட்டது? இந்தியா சொல்வதை நாம் ஏன் கேட்டு நடக்க வேண்டும்?

எனவே நாம் நம்முடைய மக்களை நம்பி நம்முடைய நிலத்தில் போராட வேண்டும். அதற்காகத் தமிழகத்திலே போராட வேண்டும். உலகெங்கும் போராட வேண்டும். நம்முடைய கோரிக்கைகளில் மாற்றம் இல்லை. ஏனென்றால் தமிழர்கள் இன்றைக்கு நாதியற்றவர்கள் ஆகி விட்டார்கள், வலிமை இழந்து விட்டார்கள் என்ற கருத்து தாயகத்திலும் வெளியிலும் நிலவுகிறது. நமக்கென்று என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒரு வகையில் நியாயமாகத் தோன்றக் கூடிய கேள்விதான்.

விடுதலைப் போராட்டத்தினுடைய தலைமைப் படை நசுக்கப்பட்டு விட்டது. கட்டளைத் தலைமை அழிக்கப்பட்டு விட்டது. நாம் நம் படைகளை இழந்தோம். படை வீரர்களை இழந்தோம். போராடி மீட்ட நிலத்தை இழந்தோம். இறைமை இழந்தோம். ஆனால் இத்தனையும் இழந்தாலும் நாம் புதிதாக ஒரு வலிமையை ஈட்டி இருக்கிறோம். அதுதான் நம்முடைய அற வலிமை. Moral Strength. இந்த அறவலிமை முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் ஈகத்தினால், இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஈகத்தினால் நமக்குக் கிடைத்திருப்பதாகும்.

இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட போதும் தங்களுக்கு ஒரு நாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு, அவர்களுக்கு இந்த அறவலிமை உதவியது. இந்த நாடு எங்கே பெறப்பட்டது என்பது வேறு செய்தி. ஆனால் இங்கே தமிழீழ மக்கள் தம்முடைய மரபுவழித் தாயகத்தில் தங்கள் இறைமையை மீட்டுக் கொள்வதற்கு இந்த அறவலிமை அவர்களுக்குத் துணைநிற்கும். யுகொசுலாவியாவில் செருபியாவுக்கு அடங்கிக் கிடந்த பல்வேறு தேசங்கள் – கொசோவோ வரைக்கும் – இந்த அற வலிமையைக் கொண்டுதான் தங்கள் இறைமையை மீட்டுக் கொண்டன. கிழக்குத் தைமோரில் இதுதான் நடந்தது. பாலத்தீனத்தில், குருதிசு மண்ணில் இந்த அற வலிமைதான் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

நாமும் அற வலிமையோடு இருக்கிறோம். இந்த அற வலிமையை அரசியல் வலிமையாக மாற்றுவதன் மூலமாக நம்முடைய கோரிக்கைகளில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையோடு நம் போராட்டத்தைத் தொடர்வோம். திலீபன் நினைவைச் சொல்லுகிற போது. இதைத்தான் ஒரு செய்தியாக நான் கொடுக்க நினைக்கிறேன்.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான சதுரங்கப் பலகையாக இலங்கை மாற்றப்படுவது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், இதற்கான தீர்வு இந்தியாவிற்கு எதிராகச் சீனத்தையோ சீனத்திற்கு எதிராக இந்தியத்தையோ ஆதரிப்பது அல்ல. இரண்டு வல்லரசுகளுக்கு இடையே நடைபெறுகின்ற அரசியல் சூதாட்டத்திற்கு நடுவில் நாம் நீதியின் பக்கம், நம் மக்களின் தேவையின் பக்கம் நின்று நம்முடைய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம். நம்மைப் பொறுத்த வரைக்கும் எதிர்கால இந்தியா மட்டும் இல்லை, இன்றைக்கு இருக்கிற இந்தியாவே எதைப் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறதோ, அந்தப் பாதுகாப்புக்கு ஈழத்தினால் ஒருபோதும் எந்தத் ஊறும் ஏற்பட்டது இல்லை. எதிர்காலத்தில் ஏற்படப் போவதுமில்லை. ஆனால் ஈழத்தின் பாதுகாப்புக்குத்தான் இந்தியா மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்கவில்லை.

எனவே எச்சரிக்கையோடு நாம் விழிப்போடு இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்மால் இந்தியாவிற்கு ஆபத்து என்ற ஒரு பொய்ப் பரப்புரையைச் செய்வார்களானால், வரலாறு அதை மறுத்து நிற்கிறது. இன்றைய உண்மைகள் அதை மறுத்து நிற்கின்றன. இந்தியப் படைகளால் தமிழ்மண்ணில் கொலையுண்ட தமிழ்மக்கள் என்ற ஒரு ஒரு கணக்கு உண்டு. தமிழ்ப் படைகளால் இந்திய மக்கள் யாரும் எங்கும் கொல்லப்படவில்லை.

தமிழ் மக்கள் என்றென்றைக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்கள் மண்ணில் போராடி இருக்கிறார்கள். இந்தியப் படை செய்தது போல் வேறு மண்ணிலே போய் ஆக்கிரமித்தது இல்லை. எனவே நமக்கு நாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க வேண்டா. நம் நியாயமான கோரிக்கைகளை எதிர்த்து நம் தமிழ் மக்களையே திரட்டுகின்ற முயற்சிகளை மறுதலிக்க வேண்டும். நாம் எச்சரிக்கையோடு நம்முடைய கோரிக்கைகளை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தால் மகிழ்ந்து வரவேற்போம். ஆனால் இதன் பொருள் இந்தியா அரசியல் சதுரங்கத்தில் நம்மைப் பகடைகளாக உருட்ட முடியும் என்பது இல்லை. நாம் அதை அனுமதியோம்.

திலீபன் நமக்கு ஒரு வரலாற்று உண்மையை உணர்த்துவதற்காகப் பன்னிரண்டு நாள் பட்டினிப் போர் புரிந்தார். அவர் உணவுண்ணாமல் பட்டினியை உண்டார். அவர் பசி இன்னும் தீரவில்லை. ஈகத்தின் மறுபெயராக விளங்கினார். உலகம் உள்ள வரை தமிழ் கூறும் மக்கள் உள்ள வரை தீலீபனின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். தீலீபனின் பெயரால் நாம் அவரது அந்த உரையை நினைவுபடுத்திக் கொள்வோம்.

“ஒரு காலத்திலே இந்தக் கோட்டையிலே ஒல்லாந்தர் கொடி பறந்தது, பிறகு பிரித்தானியர் கொடி பறந்தது. இன்று சிங்களர் கொடி பறக்கிறது. தமிழீழக் கொடி பறக்கும் நாளே உண்மையான விடுதலை நாள்.”

திலீபனின் ஈகத்திலிருந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கூட ஊக்கமும் உரமும் பெற்றிருக்கிறோம்.

தமிழ் மண்ணில் புதையுண்ட வீர விதைகளுக்கு… அறிவை நீராக்கி, உணர்வை உரமாக்கி, அமைப்பை வயலாக்கித் தமிழ்த் தேசங்களில் புதிய விளைச்சல் காண்போம். நன்றி! வணக்கம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324

செவ்வாய், 12 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி)

திலீபன் நினைவுப் பேருரை 2/3 :

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு


எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா?

பாதுகாப்பு என்பது சரியாகச் சொன்னால் செக்யூரிட்டி என்னும் இடர்காப்பு அமைதியான, நீதியான சமூகம் அமைவதைப் பொறுத்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம போற்றும் சமூகத்தில்தான் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க முடியும்.

அத்தகைய ஒரு பாதுகாப்பு இந்தியாவில் அடங்கியிருக்கின்ற பல்வேறு மக்களினங்களுக்கும் தேவை. என்ற படிப்பினையை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஈழம், என்ன தீங்கு செய்தது? இந்திய வல்லரசு எதற்காக ஈழத்தை அழிக்க முற்பட்டது? தங்களுக்குப் பகை நாடு பாக்கித்தான் என்கிறார்கள். பகை நாடு சீனம் என்கிறார்கள். ஆனால் சீனா, பாக்கித்தான் ஆகியவற்றோடு கூட்டாகச் சேர்ந்து இனவழிப்புச் செய்தது இந்தியா. அவர்களுக்கான போரை நாங்கள் நடத்தினோம் என்றார் இராசபட்சர். அதனால்தான் நாம் இந்தியாவில் அடங்கியிருக்கின்ற. பல்வேறு தேசிய இனங்களோடும் தோழமை கொள்ள வேண்டும். அரசுகளற்ற தேசங்களோடும், போராடிக் கொண்டிருக்கிற மக்களோடும், இந்தியப் பாட்டாளிகள், உழவர்கள், பெண்கள், சிறு வணிகர்கள் … அனைத்து மக்களோடும் தோழமை கொள்ள வேண்டும். அவர்களுடைய எதிர்காலம் பற்றிய கவலை நமக்கு இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய நீதிக்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வெறும் அரச தந்திரவுத்திகள் வாயிலாக, அரசுதந்திர உரையாடல்கள் வாயிலாகப் பாதுகாப்பை நாம் ஏற்படுத்திவிட முடியாது. கடந்த காலத்தில் தமிழீழம் என்பது தமிழ் இனத்திற்கான அந்தப் போர் என்பது புறநிலையில் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழீழப் போரையும், தலைவர் பிரபாகரன் வழிநடத்திய வீரம் செறிந்த போராட்டத்தையும் பார்த்து காசுமீர் மக்கள் ஊக்கம் பெற்றார்கள். காசுமீர் பச்சைப் புலிகள் என்ற அமைப்பு கூட நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் அரசியலுக்குத் தொடர்பு இல்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்இனவழிப்புப் போரை நிறுத்த “போரை நிறுத்து(Stop the War)” என்ற ஒற்றை முழக்கத்தின் பின்னால் திரண்டு அமைப்புகளாகத் திரண்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால் ஏன் நம்மால் மிக அருகாமையில் சில காதத் தொலைவில் இருக்கிற ஈழத்தின் மக்கள் அழிக்கபடுவதைத் தடுக்க முடிய வில்லை? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்ததன் பயன் என்னவென்றால், இந்த உலகில் தமிழர்களுக்கு இறைமை இல்லை. தமிழ்நாட்டிற்கு இறைமை இல்லை, தமிழ்த் தேசம் இறைமையற்றுக் கிடக்கிறது! இந்தியச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கின்ற காரணத்தினால்தான் ஈழத்திற்கு ஆதரவாக உலக அரங்கத்தில் நம்மால் குரல் கொடுக்க முடியவில்லை என்ற உண்மை வலிக்க வலிக்க உணரப்பட்டது.

நாடுகடந்து பல்வேறு நாடுகளில், வெப்பத்திலும் குளிரிலும் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ்மக்கள் தம் பங்குக்குப் போராடினார்கள். இந்தியாவில் மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டது. தாங்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலேயே அந்தந்த அரசுகளிடம் போராடிப் பெற்ற அந்த நலன்களைக் கூடத் தமிழ்நாட்டிலே இந்தியாவிடமிருந்து பெற முடியவில்லை. அதனால்தான் தமிழ் இளைஞர்கள் தீக்குளிக்க நேரிட்டது. இந்தி எதிர்ப்புக்காகத் தீக்குளித்ததைக் காட்டிலும் ஈழத்துக்கான தீக்குளிப்புகளே அதிகம் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் எல்லாத் தரப்பட்ட மக்களும் போராடினார்கள். , வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளே வைத்துத் தாக்கப்பட்டார்கள், வணிகர்கள் போராடினார்கள், ஏழை எளிய மக்கள் போராடினார்கள். தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் போராடினார்கள். போராட்டத்தின் வாசமே தெரியாத இ.தொ.நு.(ஐ.ஐ.டி.) போன்ற நிறுவனங்களுக்கு உள்ளே போராட்டம் நடந்தது. இதன் ஒரு விளைவு என்னவென்றால், நம்மால் ஏன் இப்படி இனவழிப்புப் போரைத் தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி எழுந்தது. இந்த இனஅழிப்புக்குத் துணைபோன இந்தியாவின் முகத்திரை கிழிந்தது. நாம் தெரிந்து கொண்டோம், இந்த இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று! தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் என்ற ஒரு கருத்து ஈழமண்ணில் ஏற்பட்ட அழிவின் சாம்பலில் இருந்து எழுந்து வளர்ந்தது.

தமிழ்நாட்டிலே அதற்கு முன்பும் தமிழ்த் தேசியத்துக்காக உழைத்து இருந்தோம். இதற்கு முன் எப்போதும் இல்லாத எழுச்சி இப்போது ஏற்பட்டது.1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டம் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியாகவே நடந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 1967 தேர்தலில் திமுக பதவிக்கு வந்த பிறகு மங்கிப்போன தமிழ்த் தேசிய உணர்ச்சி 1983ஆம் ஆண்டு சூலைப் படுகொலையின் போது மீண்டும் கிளர்ந்தெழுந்தது. ஆனால் அதுவும் பின்னுக்குப் போன நிலையில் 2009 இனவழிப்பு. போரின் விளைவுகள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எழுச்சியைத் தோற்றுவித்தன. தமிழ்த தேசியம் என்பதே இன்றைக்கு ஆற்றல் பொருந்திய ஒரு சக்தியாக, கணக்கில் கொள்ள வேண்டிய சக்தியாக உருப் பெறுவதற்கு ஈழ மக்கள் செய்திருக்கின்ற அந்த ஈகத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

நமமுன் இருக்கின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான். இனவழிப்பின் மூலமாகப் பகைவன் என்ன சாதித்தான்? முற்றாக அழித்து விட்டோம், இனித் தமிழர்கள் போராடவே மாட்டார்கள் என்று இறுமாந்திருப்பான். ஆனால் போராட்டம் ஈழத் தாய்மண்ணிலே மட்டுமல்ல, உலகமெங்கும் பல தலைநகரங்களில் தமிழர்கள் போராடுகிறார்கள், இன்றும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் அந்த போராட்டத்திற்குத் துணைநிற்கிறது. உலகத் தமிழர்களோடு இணைந்து நிற்கிறோம். .ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் ஒருமாநாடு நடத்தித் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தோம்.

தமிழக அரசே! எங்களுக்குத் தெரியும், தமிழ்நாட்டிலே அயலுறவுத் துறை இல்லை. தமிழ்நாட்டுக்கு என்று சட்டப்படி இறைமை கிடையாது. எல்லாமே எமக்குத் தெரியும். ஆனால் அதே நேரத்தில் தலைவர் பிரபாகரன் அன்று சொன்னது போல, ஏழுகோடித் தமிழ்மக்களின் உணர்வுகளைச் சரியாக எதிரொலிக்கும் அறப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? வடக்கு மாகாணசபை ஒரு தீர்மானம் இயற்றினால் என்ன மதிப்பு உண்டு? தமிழர்கள் சட்டப்படித் தேர்ந்தெடுத்த அமைப்பு என்ற மதிப்பு உண்டல்லவா?

தமிழகச் சட்டப் பேரவையில் அடுக்கடுக்கான தீர்மானங்கள் இயற்றப்பட்டன. போர் நடந்த போது போர்நிறுத்தம் கோரித் தீர்மானம் இயற்றினோம். பிறகு அங்கு நடந்தது இனவழிப்பு என்றும் இலங்கையைப் பகைநாடாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கைக்கு எதிராகப் பொருளியல் தடைகள் விதிக்க வேண்டும் என்றும தீர்மானங்கள் இயற்றினோம். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி எல்லாக் கட்சிகளுக்கும் இடையே ஒரு பொதுவான கருத்தொற்றுமை எதிலே உண்டு என்றால், ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டத்தை ஆதரிப்பதிலே உண்டு. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரிப் போராடுவதிலே உண்டு. தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழீழத் தேசிய இன மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதிலே உண்டு.

83 சூலை இனப் படுகொலையின் போது, இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைக்குத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் “இலங்கையில் நடப்பது இனக்கொலை, நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று அறிவித்து, அயலுறவுத் துறை அமைச்சர் நரசிம்ம இராவை நேரிலே அனுப்பினார். ஆனால் இனக்கொலைக்கு ஆளாகிற மக்களுக்கு விடுதலைக்குப் போராடவும் இறைமை மீட்கவும் உரிமை உண்டு என்பதை இந்திய அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவே இல்லை. இதையும் ஓர் அரச தந்திர புவிசார் அரசியல் விளையாட்டாக மட்டுமே கருதிக் கையாண்டார்கள். அண்மையிலே இந்திய உள்துறை அமைச்சர் அமித்துசா அவர்கள் இராமநாதபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் “காங்கிரசும், திமுகவும் இனவழிப்புக்குத் துணை போனார்கள்” என்று அவர் இந்திமொழியில் பேசியிருந்தார். அவர் பேசியதை நான் வரவேற்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் சரி, அப்படிப் பேசியது நல்லது.

இனவழிப்பை அறிந்தேற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது நம் கோரிக்கை. இஃது உலகெங்கும் நம் முழக்கம். ஆனால் அதற்கு அடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனவழிப்பு என்று சொல்லி விட்டு இனஅழிப்புக்கு எதிராகப் போராடும் தமிழீழ மக்களுக்குத் துணைநிற்பீர்களா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே இனவழிப்பு ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்மானங்களை ஆதரிப்பீர்களா? நேற்றைய வரலாறு நம்பிக்கை தருவதாக இல்லை. அது மாறுமா? அவர்களைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்காக இந்த அறிவிப்பைச் செய்திருக்கலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324

திங்கள், 11 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி)

திலீபன் நினைவுப் பேருரை:


தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு


கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன்.

என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் எண்ணித், தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவுப் போராட்டத்தில் தீக்குளித்து மாண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் தொடங்கி இந்தப் போராட்டத்தில் ஈகம் செய்து கொண்ட அத்தனைப் பேரையும் எண்ணி, இன்றைக்கு இருக்கின்ற உலகச் சூழலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டம், நீதிக்கான போராட்டம், இதற்கும் இந்தியப் பாதுகாப்புக்குமான தொடர்பு, இவற்றில் தமிழகம், தமிழக அரசு வகிக்க வேண்டிய பங்கு ஆகியவைபற்றிச் சுருக்கமாக என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக, திலீபனின் உயிரீகம் எந்த வகையில் மகத்தானது? தமிழீழ மக்கள் தங்களுக்கு நண்பன் என்று கருதி வரவேற்க அணியமாக இருந்த இந்தியப் படைகள், உண்மையில் அவர்கள் செய்த கொடுமைகளால் தமிழீழ மக்களுக்குப் பகை என்று தெரிந்த போது அந்தப் பகையைத் தோலுரித்துக் காட்டுவதற்கு தீலீபனின் ஈகம் பயன்பட்டது. இந்தப் போரில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இன்றைக்கு அவருடைய பெயரால் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், தமிழகத்தினுடைய வகிபாகம் குறித்தும் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம். திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்துதான் நாங்கள் தமிழ்நாட்டிலே திலீபன் மன்றம் தொடங்கி ஈழத்தமிழர் துயர் துடைப்பதற்காக இயக்கம் நடத்தினோம்.

இன்றைக்கு இருக்கின்ற சூழல் என்பது விடுதலைப் போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டமாக உருக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனவழிப்பினால் தமிழீழத்திற்கான தேவையோ, தமிழகத்திற்கான போராட்டத்திற்குரிய தேவையோ மறைந்து விடவில்லை. அவை பன்மடங்கு பெருகித்தான் உள்ளன என்று 2010ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் – முன்னும் பின்னும் என்ற ஒரு குறுநூலில் நான் எழுதினேன். இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் இந்தியாவுடன் நமக்கு இருக்கின்ற உறவு குறித்தும தமிழீழ மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

எனக்கு நீங்கள் அளித்திருக்கின்ற தலைப்பில், இந்தியாவின் – அதுவும் எதிர்கால இந்தியாவின் – பாதுகாப்பு என்று குறிக்கபப்ட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தியா என்றுதான் இதைச் சொல்கிறேன். இதில் நமக்கு ஒருதெளிவு இருக்க வேண்டும். இலங்கை அல்லது சிறிலங்கா என்று சொல்வது ஈழத் தமிழர்கள், சிங்களவர்கள் என்று இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு தீவுநாடு என்று நாம் வரையறுத்துப் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த இரண்டு தேசங்களின் சுயநிர்ணய உரிமை எனப்படும் தன்தீர்வுரிமை, அவற்றிற்கிடையிலான நிகர்மை, தமிழீழத் தேசத்தினுடைய இறைமை ஆகியவற்றை எல்லாம் தந்தை செல்வா அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் பட்டுக்கோட்டை தீர்மானம் இயற்றுவதற்குக் காரணமாக இருந்தார்கள்,

தமிழீழப் போராட்டத்திற்கான வரலாற்று நியாயத்தை அந்தப் பார்வை வழங்கியது. இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இடம் குறித்து அறிந்திருக்கிற நாம் இந்தியாவில் தமிழ்நாட்டிற்குரிய இடம் குறித்து அறிந்திருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்று சொல்கிறோமே, அது ஒரு தேசமா? என்ன மொழி பேசுகிற தேசம்? என்ன பண்பாடு கொண்ட தேசம்? என்ன வரலாறு கொண்ட தேசம்? என்ற கேள்விகளை எல்லாம் இந்தியாவிலே இன்றைக்கு எல்லாத் தரப்பினரும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்றொரு தேசம் உண்டா?

இந்தியா என்கிற பாரதம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதில் இந்தியா என்ற பெயரையே நீக்கி பாரதம் என்று மட்டும் மாற்றி விடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஆளுகிற தரப்பு எழுப்பிக் கொண்டிருக்க, அதற்குக் கடும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியா என்ற பெயரில் ஒரு எதிர்கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, அதற்காகத்தான் இந்த பாரதச் சிக்கல் எழுப்பப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. சம்பு தீபம், ஆரிய வருத்தம், பாரத வருசம் என்பதெல்லாம் புராணக் கதைகளில் வரும் பெயர்கள். ஒரு மொழியின் பெயரோ ஒரு நிலப்பரப்பின் பெயரோ அல்ல. அப்படிப்பட்ட ஒரு பெயரை ஏற்றுக் கொள்வது வரலாற்றைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் என்று நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

சரி, அப்படியானால் இந்தியா என்பது என்ன? இந்தியா என்ற பெயர் எல்லாருக்கும் ஒரு நடுநிலையான பெயராகக் கருதப்பட்டாலும் அதற்குரிய பொருள் வரலாற்றில் புவியியல் பாடத்தில் என்ன? இந்தியா என்பது துணைக் கண்டம் என்று படிக்கிறோம். துணைக்கண்டம் என்றால் விரிந்த நிலப்பரப்பு என்பதைக் குறிக்கும். அதற்குமேல் வேறு பொருள் இல்லை. உண்மையில் அது என்னவென்றால் பிரித்தானியர் தம்முடைய சுரண்டலின் தேவைக்காகவும், குடியேற்ற(காலனிய) ஆட்சியின் தேவைக்காகவும் தனித்தனியாக இருந்த பல்வேறு தேசங்களையும் அரசுகளையும் ஒன்று படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். அந்தக் கட்டமைப்புதான் இந்தியா எனப்படுகிறது. இந்தியா என்கிற இந்த அரசுக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது இந்தியக் கட்டமைப்புக்குள் ஒடுக்குண்டு கிடக்கின்ற பல்வேறு தேசியஇனங்கள், பல்வேறு பழங்குடிகள் காப்பாற்றப்பட வேண்டுமா? இவற்றில் எது இந்தியப் பாதுகாப்பு என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதிலும் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பு என்று சொல்லும் போது இந்தியா என்கிற இந்தக் கட்டமைப்பு இப்படியே நீடிக்கப் போகிறது, இதனுடைய எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தில் அடங்கி இருக்கிற பல்வேறு தேசிய இனங்களுக்கும், பழங்குடிகளுக்கும் எதிர்காலம் இல்லை என்பதைக் குறிப்பதாகும். இந்தப் பொருளில் இந்தியப் பாதுகாப்பு என்பது தமிழீழத்தின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு எதிர்காலம் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் இன்றைய கட்டமைப்புக்கு எதிர்காலம் இருக்குமானால், இது பற்பல தேசங்களுக்கும் கட்டமைப்பியல் இனவழிப்பை ஏற்படுத்துவதாகும். இந்தக் கட்டமைப்பியல் தேசிய ஒடுக்குமுறை என்பது தமிழகத்தின் வருங்காலத்திற்குத் தீங்கு செய்யும். இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கைக்கும் ஊறு செய்யும்.

அண்மையில் நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இனவழிப்பு என்ற சொல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் பல கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு குசராத்தில் இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். பிபிசி வெளியிட்ட மோதி வினா ஆவணப் படம் இதைத்தான் சித்திரிக்கிறது.

அடுத்து, மிக அண்மையில் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளை நீங்கள் கவனித்து வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். நடுநிலையாளர்கள் கூட, சமூகவியலர்கள் கூட சுட்டிக்காட்டுகின்றார்கள். மணிப்பூரில் நடப்பது இனக்கொலைதான் என்று. குக்கி இன மக்கள் இனக்கொலை செய்யப்படுகிறார்கள். யாரால் இனக்கொலை செய்வது யார்? இந்துத்துவ இந்திய அரசும், அதற்கடங்கிய மணிப்பூர் மாநில அரசும சேர்ந்து இந்த இனவழிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன. இப்படி நிறைய உதாரணங்களை நாம் எடுத்துக்காட்டலாம். இசுலாமியர் இனவழிப்பு, மணிப்பூரில் குக்கிகள் இனவழிப்பு, நாகர் இனவழிப்பு, தண்டகாரண்யப் பகுதியில் பல்வேறு பழங்குடிகள் இனவழிப்பு என்று இந்தியா பரவலாகப் பல இனவழிப்புகளின் களமாகிக் கொண்டிருக்கிறது. காசுமீரம், பசுதார், சட்டிசுகார் என்று பல்வேறு பகுதிகளிலும் இந்தியப் படை மண்ணின் மக்கள் மீது நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

ஆகவே நாம் இந்தியா என்பதை இந்திய மக்கள் என்று கூட சொல்ல இயலாது. ஏனென்றால் இந்தியா என்பது ஒரே மக்களைக் கொண்ட தேசமன்று. அது பல்வேறு மக்களினங்களைக் கொண்ட நாடு. இலங்கை எப்படி இரண்டு மக்கள் சமூகங்களைக் கொண்டதோ. அதுபோல் இந்தியா என்பது குறைந்தது இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சமூகங்களைக் கொண்டது. இந்தியாவின் மக்கள் (Peoples of India) உண்டே தவிர இந்திய மக்கள்(Indian people) கிடையாது. இந்தியத் தேசம் என்பது சமூக அறிவியலுக்கு மாறானது. இந்தியா ஒரு சிறைக் கூடம், தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று எமதியக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு என்பது சிறைச் சட்டம். இது தேசிய ஒடுக்குமுறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்குமான ஆவணம்.

இது குடியேற்ற(காலனிய)க் காலத்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடர்ச்சி. இதை நான் இங்கு ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நீங்கள் இந்தியப் பாதுகாப்பு என்று மேலெழுந்த வாரியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாக்கித்தானிடம் இருந்து பாதுகாப்பு, சீனாவிடமிருந்து பாதுகாப்பு, எல்லையிலே பாதுகாப்பு என்று புரிந்துகொண்டிருப்பீர்களானால் அது ஆழமான புரிதல் ஆகாது. ஏதோ ஒருகுறுகிய நிலப்பரப்பைப் பாதுகாப்பது அவ்வளவுதான் நாட்டுப் பாதுகாப்பா? சில காணிகள் எதற்கும் உதவாத நிலங்கள், பனி மலைகள். இதற்காக நடக்கிற சண்டையைத்தான் நாடு காக்கும் போர் என்று வண்ணித்து தேச பக்த வெறி ஊட்டுகின்றார்த்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324

செவ்வாய், 28 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்-தொடர்ச்சி)

கீற்று) நேர்காணல் (3)(இ

திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்: தியாகு

நேர்காணல்: மினர்வா & நந்தன்

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப் போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தோடு எங்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் முறையாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?

குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய சிக்கல் அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான சனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக் கொண்டு ஈழச் சிக்கலைப் பார்க்கக் கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.

ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்குப் பரிசூதியம் 12 விழுக்காடா, 13 விழுக்காடா என்று போராட்டம் நடத்தி விட்டுத் தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து ‘பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?

புலிகளுக்குச் சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ‘புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை’ என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் சோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து?

புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வருக்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள். சாதி குறித்துத் தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கியக் கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் வரன் தேடுவதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.

அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.

ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். செயசிக்குறு எதிர்ப்புப் போரை பெண்கள்தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூசாதான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதைச் சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கியுள்ளன.

போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேறிய உயர்சாதி மக்களின் வீடுகளைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காகப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

ஈழப் படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத் துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், ‘உங்கள் வீடுகளில் கீழ்ச் சாதியினரைக் கொண்டுவந்து குடியமர்த்தியுள்ளார்கள்’. எனவே விடுதலைப் புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறுதான்.

என்னைப் பொறுத்த வரை சோபா சக்தி போன்றவர்கள், புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் பைத்தியங்கள், அல்லது அரசின் கைக்கூலிகளாகக் கூட இருக்கலாம், அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?

அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். ஓர் இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அஃது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல், அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்தான். கடைசி வரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் சனநாயகத் தன்மையைக் கட்டமைக்காதது, ஒரு பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வீரமணி போன்றவர்கள் இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ இல்லாததால்தான், அவர் பெயரைச் சொல்லிச் செயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டா என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.

ஆனால் நாம் விரும்பக் கூடிய சமூகநீதித் தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்துதான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டு அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அருத்தத்தில்தான் அவரைத் தந்தை என்கிறோம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக் கூடாது என்பதற்காகத் திராவிட இயக்கம் கைக் கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்கிறேன், அப்பா சொல்கிறேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். சனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நாம் அந்தக் கோணத்தில் அவரைத் தந்தையாகப் பார்க்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் எந்த அளவுக்குச் சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?

சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வருக்கங்கள், அரசுகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரித்தானிய அரசும் செய்தது. ‘உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்தப் பிரித்தானியப் பேரரசு உங்களை ஆளும் பொறுப்பைச் சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்’ என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

இந்தியாதான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வருக்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தைப் புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமற்போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால்தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரத தேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வருக்கத்தின் வெற்றி.

தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதைச் சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்குப் போராடுவதுதான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்குத் தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.

தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருண்மிய ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.


(கீற்று நேர்காணல் முற்றும்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 301

வியாழன், 19 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி)

தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே காந்தளகம் சச்சிதானந்தன் போன்றவர்களும் இசுலாமிய வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளையும் சேர்த்து அகண்ட பாரதம் அமைப்பது ஆர்எசுஎசு-பாசக திட்டம். இந்தியாவில் போலவே இலங்கை, மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலும் அது இசுலாமியரை நசுக்கத் திட்டமிடுகிறது. அதற்குக் காசி ஆனந்தன் போன்றவர்களுக்கு ஈழ’ஆசை காட்டி இந்துத் தமிழர்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறது. பாசக ஆதரவோடு தமிழீழம் அமையும் எனக் கொண்டாலும் அது காவித் தமிழீழமாகவே இருக்கும். இந்தப் பின்னணியில்தான் நான் சொன்னேன்: தமிழீழம் மலரும். அது காவித் தமிழீழமாக இருக்காது, சிவப்புத் தமிழீழமாகவே இருக்கும்.

முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை என்ன பேசினார் தெரியுமா? 2009இல் நரேந்திர மோதி பிரதமராக இருந்திருந்தால் இது (முள்ளிவாய்க்கால் கொடுமை) நிகழ்ந்திருக்காது.

மோதி அப்போது இந்தியத் தலைமையமைச்சராக இல்லை. ஆனால் குசாராத் முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சராக அவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டாரா?

அவர் சார்ந்த பாரதிய சனதா கட்சி முள்ளிவாய்க்கால் இனக்கொலையைக் கண்டித்ததா? அப்போதைய காங்கிரசு அரசு சிறிலங்காவின் சிங்கள அரசுக்கு ஆய்தங்களும் ஆதரவும் வழங்கியதை எதிர்க்கட்சியான பாசக கண்டித்ததா?

2009 தொடங்கி இன்று வரை ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் ஏமாற்று அணுகுமுறையில் தமிழ் மக்களின் ஈடுசெய் நீதிக் கோரிக்கையை மறுக்கும் அணுகுமுறையில் மன்மோகன் சிங்குக்கும் நரேந்திர மோதிக்கும் என்ன வேறுபாடு?

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொதுவாக்கெடுப்பு ஆகிய பொதுவான தமிழர் கோரிக்கைகளை மறுப்பதில் காங்கிரசுக்கும் பாசக-வுக்கும் என்ன வேறுபாடு? 13ஆம் திருத்தச் சட்டம் என்னும் கவைக்குதவாத திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிக்க முற்படுவதில் முந்தைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வேறுபாடு?

2013ஆம் ஆண்டு அட்டோபரில் கொழும்பில் நடைபெறவிருந்த பொதுநலவாய (காமன்வெல்த்) உச்சி மாநாட்டுக்கு இந்தியத் தலைமையமைச்சர் செல்லக்கூடாது எனக் கோரி காலவரையற்ற பட்டினிப் போர் தொடுத்தேன். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எமது போராட்டத்தை ஆதரித்த போது கொழும்பு மாநாட்டை மன்மோகன் சிங்கு புறக்கணிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவர் பாசக அனைத்திந்தியத் தலைவர் இராசுநாத்துசிங்கு.

ஒரு கேள்விக்கு அண்ணாமலை விடை சொல்லட்டும்: 2009 முள்ளிவாய்க்காலில் நடந்ததை மோதியால் தடுத்திருக்க முடியுமா? என்ற இறந்த காலம் தொடர்பான வினா கிடக்கட்டும். அன்று நடந்தது இனக்கொலைதான் என்பதை இப்போதாவது மோதியும் அண்ணாமலையும் அறிந்தேற்பார்களா? இன்றைய பன்னாட்டரங்கில் ஓர் அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை ஆதரிப்பதாக இருந்தால் அதற்கான முதல் படியே தமிழினவழிப்பை அறிந்தேற்பதுதான், அங்கீகரிப்பதுதான்.

ஆனால் அண்ணாமலை அந்தக் கூட்டத்திலேயே சொல்கிறார்: என்னால் சில சொற்களை உச்சரிக்க முடியாது என்று. இனவழிப்பு என்று தன் வாயால் சொல்ல முடியாதவரை ஏன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைக்க வேண்டும்? அவர் ஏன் அங்கு வந்து சுடர் ஏற்ற வேண்டும்? தமிழ்த் தலைவர்கள் அவரையும் அவரின் தலைவரையும் ஏன் பாராட்ட வேண்டும்?

தமிழீழ மக்கள் இனவழிப்புக்கு ஆளானவர்கள், இன்றளவும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் இன்றைய போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டம். இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்கள அரசியல் தலைவர்களும், படைத் தலைவர்களும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது. இறுதி நோக்கில் இனவழிப்பு என்பது சிறிலங்கா எனப்படும் சிங்களப் பேரினவாத அரசின் குற்றம். சிறிலங்கா கலைக்கப்படுவதே முறையான அரசியல் நீதியாக நிறைவுபெறும்.

தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் இயல்பிலேயே இறைமைக்கு உரிமை படைத்தவர்கள். இனவழிப்புக்கு ஆளான மக்கள் என்ற வகையில் இறைமைக்கான சிறப்புரிமையும் அவர்களைச் சாரும். (இ)யூதர்கள் ஒரு தேசமாக மாட்டார்கள் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் போர்க் காலத்திலும் பாரிய இனவழிப்பு ஆளானவர்கள் என்பதால் அவர்கள் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்று இசுரேல் அமைத்துத் தரப்பட்டது. இசுரேல் அந்த இறைமையைப் பாலத்தீனர்களுக்கும் பிற அராபியர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி வருகிறது.

தமிழீழத்தை இசுரேலுடன் ஒப்பிட்டு, அமெரிக்க வல்லரசுக்கு இசுரேல் போல் இந்திய வல்லரசுக்கு ஈழம் பயன்படும் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அப்படித்தான் ஈழம் பயன்படும் என்றால் இந்தியாவில் ஓர் ஒடுக்குண்ட தேசம் என்ற வகையில் தமிழர்களாகிய நாம் அதை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

விடுதலை பெறும் தமிழீழம் ஒருபோதும் இந்தியாவுக்கோ வேறு வல்லரசுக்கோ அடியாளாக இருக்காது, அது முற்போக்கான கொள்கைகளைக் கடைப்பிடித்துக் குறிப்பாகத் தெற்காசியாவில் பிற தேசங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமையும் என்பதற்கு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமும், சோசலிசத் தமிழீழம் நோக்கி’’ என்ற விடுதலைப் புலிகளின் வேலைத் திட்டமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க முன்முயற்சியில் பறைசாற்றப்பட்டுள்ள விடுமைப் பட்டயமும் சான்று பகர்கின்றன. இப்படியொரு தேசம் மலர்வதை அமெரிக்க, இந்திய, சீன வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வல்லரசுகளின் விருப்பமே வரலாற்றைத் தீர்மானித்து விடுவதில்லை.

ஈழம் இந்தியாவின் எந்த நியாயமான நலனுக்கும் எதிரானதல்ல. இந்தியா ஈழத்தை எதிர்க்கவும், நீதிக்கான ஈழத் தமிழர் போராட்டத்தை மறுக்கவும் நியாயமான காரணம் ஏதுமில்லை. நீதிக்கான போராட்டத்தில் இந்தியா தமிழ்மக்களுக்கு உதவ விரும்பினால் அவர்களின் மூன்று முதன்மைக் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

1) ஈழத் தமிழருக்கு எதிராக இனவழிப்புப் போர் நடந்துள்ளது என்பதை அறிந்தேற்று, இனவழிப்பு, போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய பன்னாட்டுக் குற்றம் இழைத்தவர்களை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற ஆதரவளிக்க வேண்டும்.

2) இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான பொறுப்புக்கூறல் என்ற வகையில் வந்துள்ள ஐநா அறிக்கைகளின் தொடர்ச்சியாகத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றப்புலனாய்வு செய்ய ஆதரவளிக்க வேண்டும்.

3) தமிழீழத்தின் வருங்காலம் குறித்துத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் ஈழத் தமிழர்களிடையே ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பொதுவான கோரிக்கைகளை ஆதரிக்காமல் 13ஆம் திருத்தச் சட்டம் என்ற பாட்டையே இந்தியா திரும்பத் திரும்பப் பாடி வருகிறது. இது தவிர வேறு எதுவும் தமிழர்களின் கோரிக்கைகளாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம் அல்லது இந்தியப் படையெடுப்புக் காலம் என்ற வரலாற்றையே மறந்து விடும்படிச் சிலர் அறிவுரை கூறக் கிளம்பி வருவது பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களும் கூட அக்காலத்தின் எச்சமான ஒன்றை மட்டும் இன்றளவும் பற்றிக் கொண்டு தொங்குகிறார்கள். அதுதான் 13ஆம் திருத்தச் சட்டம். ஏன்? என்று அடுத்த மடலில் பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 271