வந்தவாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வந்தவாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம்

 அகரமுதல

      



       அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு

      அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

    மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு சிற்றூரைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளருமான எழுத்தாளர் மு.முருகேசு எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலை மத்திய அரசு ‘பால சாகித்திய புரசுகார் விருது’க்கு தேர்வு செய்துள்ளது. அரசுப் பள்ளி குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும், ‘பால சாகித்திய புரசுகார் விருது’ பெற்ற நூலை அனைத்துப் பள்ளி குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையிலும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

        இந்த இயக்கத்தின் தொடக்க விழா கடந்த பிப்பிரவரி 7-ஆம் தேதியன்று வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி நூலக அரங்கில் தொடங்கப்பட்டது.

        குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்த வந்தவாசி இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலின் 100 படிகளை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

      பிப்பிரவரி-8-ஆம் தேதி அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தவாசி ஆசிய மருத்துவக் கழகத்தின் இயக்குநர் பீ.இரகமத்துல்லா, 100 நூல்களை இலவசமாக வழங்கினார்.

      பிப்பிரவரி-9-ஆம் தேதி வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்குக் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மருத்துவ இணை இயக்குநர் மரு.எசு.குமார், 100 நூல்களை இலவசமாக வழங்கினார். அதே நாளில், வந்தவாசி கிழக்குப் பாடசாலையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சுரேசு முருகன், 50 நூல்களை இலவ்சமாக வழங்கினார்.

      பிப்பிரவரி-11-ஆம் தேதி வந்தவாசி பொட்டிநாயுடு தெருவில் நடைபெறும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மாலை நேர வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு கிருட்டிணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மரு.செ.வெங்கடேசன், 100 நூல்களை இலவசமாக வழங்கினார்.

       ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை இலவசமாகப் பெற விரும்பும் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ள வந்தவாசி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 9444360421 எனும் பேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் தெரிவித்தால், குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் மூலமாக அவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்படும் என்றும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







புதன், 24 ஜூலை, 2019

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

அகரமுதல

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின்
சார்பில் நடைபெற்ற ’வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் விழிப்புணர்வுப் பேரணி ஆனி 30 / சூலை 15 அன்று வந்தவாசியில் நடைபெற்றது.
தமிழக அரசின் பொது நூலகத்துறையும் எம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவில் ‘வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வாசிப்பு விழிப்புணர்வு
பேரணி வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நல்நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். 
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி, கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வந்தவாசி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பி.தங்கராமன், வாசிப்பு இயக்க விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 
இப்பேரணிக்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “கல்விக்கண் திறந்த கருமவீரர் காமராசரின் 117-ஆவது பிறந்த நாளான இன்று, வாசிப்பு இயக்கத்திற்கான விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்குவது
மிகவும் பொருத்தமான நாளாகும். பாடப் புத்தகங்களைப் படிப்பதிலேயே இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகள் நன்றாகப் படித்து அதிக மதிப்பென் பெற வேண்டும் என்பதிலேயே
குறியாக இருக்கிறார்கள். பாடப் புத்தகங்களைக் கடந்து மற்ற நூல்களையும் குழந்தைகள் படிக்க வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் தூண்டுகோலாக இருக்க
வேண்டும். நூலகங்களுக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும். நாம் எவ்வளவு பொது அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கின்றோமோ, 
அந்த அளவிற்கு நன் வாழ்வின் உயரங்களை நம்மால் அடைய முடியும்” என்று குறிப்பிட்டார்.
பேரணியில் ஆசிரியைகள் எசு.கலைவாணி, பி.சுசாதா, எசு.சந்தானலட்சுமி, சமூக ஆர்வலர் அறிவொளி வெங்கடேசன் முதலானோர் கலந்து கொண்டனர். இதில்,
வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இப்பேரணி அரசுக் கிளை நூலகத்திலிருந்து புறப்பட்டுத், தேரடி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று காமராசர் சிலை, கடைவீதி 
வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன் நிறைவடைந்தது.
நிறைவாக ச.தமீம் நன்றி கூறினார்.

செவ்வாய், 11 ஜூன், 2019

வந்தவாசியில் முப்பெரு விழா

அகரமுதல

வந்தவாசியில் முப்பெரு விழா


வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நேற்று (வைகாசி 27, 2050/  சூன் 10, 2049) முப்பெரு விழா நடைபெற்றது.
        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.
கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
       இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள், உலக இரத்தத்தான நாள், போதைப் பொருள்- சட்டவிரோதக் கடத்தலுக்கான பன்னாட்டு எதிர்ப்பு நாள்ஆகிய முப்பெரு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கரூர் வைசியா வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் சி.சங்கர் பங்கேற்றார்.
        தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் குப்பன், கவிஞர் சாகீர் உசேன் முதலானோர் கலந்துகொண்டனர்.
        நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் சா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர்
பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
  –   வந்தை அன்பன்

வெள்ளி, 30 நவம்பர், 2018

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா

அகரமுதல

வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா

        வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.
        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசுதலைமையேற்றார்.
நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
        தமிழக அரசின் பொது நூலகத்துறை  வழங்கிய ‘நூலக ஆர்வலர் விருது-2018’ பெற்ற வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் முருகேசுக்கும் ‘நல்நூல்கர் விருது-2018’ பெற்ற வந்தவாசி கிளை நூலகர் பூ.சண்முகத்திற்கும்பாராட்டு வழங்கினர்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பரிசளித்துத், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி பேசினார். அவர்,  “தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் நூலகச் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நூலகச் செயல்பாடுகளை நடத்திவரும் நூலகருக்கும் நூலக வாசக வட்டத்திற்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
         2018-ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளுக்காகத் திருவண்ணாமலை மாவட்டம் 7 விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. அதிலும் வந்தவாசி அரசுக்கிளை நூலகம் சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருதினையும் நல்நூலகருக்கான விருதினையும் பெற்றுள்ளது. மாநில அளவில் ஒரே நூலகத்திற்கு இரு விருதுகளும் கிடைத்திருப்பது வந்தவாசிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.
         வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் வந்தவாசி கிளை நூலகம், சொந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான திட்டமிடல்களைச் செய்து வருகின்றோம். நூலகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. நூலகத்திலுள்ள நூல்களைப் பொதுமக்களும் மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
          விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மைய முதல்வர் எ.தேவா, இந்தியன் தொலைக்காட்சி இயக்குநர் முனைவர் வந்தை பிரேம்பீ.இரகுமத்துல்லா, அரிமா இரா.சரவணன், கவிஞர் முகம்மது அப்துல்லாஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          வெண்குன்றம் உலக விழா(jubilee global) பள்ளித் தாளாளர் சான் சேவியர் தங்கராசு உரூ.1000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தமைக்குப் பாராட்டினர்.
 விழாவில், வந்தாசி வட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகர்கள் கலந்துகொண்டனர்.
          நிறைவாக, நூலகர் சா.தமீம் நன்றி கூறினார்.

 வந்தையன்பன்