அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு
அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
மகுடை(கரோனா) பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு சிற்றூரைச் சேர்ந்த கவிஞரும் ஊடகவியலாளருமான எழுத்தாளர் மு.முருகேசு எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலை மத்திய அரசு ‘பால சாகித்திய புரசுகார் விருது’க்கு தேர்வு செய்துள்ளது. அரசுப் பள்ளி குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும், ‘பால சாகித்திய புரசுகார் விருது’ பெற்ற நூலை அனைத்துப் பள்ளி குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையிலும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் தொடக்க விழா கடந்த பிப்பிரவரி 7-ஆம் தேதியன்று வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி நூலக அரங்கில் தொடங்கப்பட்டது.
குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்த வந்தவாசி இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலின் 100 படிகளை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
பிப்பிரவரி-8-ஆம் தேதி அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தவாசி ஆசிய மருத்துவக் கழகத்தின் இயக்குநர் பீ.இரகமத்துல்லா, 100 நூல்களை இலவசமாக வழங்கினார்.
பிப்பிரவரி-9-ஆம் தேதி வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்குக் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மருத்துவ இணை இயக்குநர் மரு.எசு.குமார், 100 நூல்களை இலவசமாக வழங்கினார். அதே நாளில், வந்தவாசி கிழக்குப் பாடசாலையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சுரேசு முருகன், 50 நூல்களை இலவ்சமாக வழங்கினார்.
பிப்பிரவரி-11-ஆம் தேதி வந்தவாசி பொட்டிநாயுடு தெருவில் நடைபெறும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மாலை நேர வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு கிருட்டிணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மரு.செ.வெங்கடேசன், 100 நூல்களை இலவசமாக வழங்கினார்.
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலை இலவசமாகப் பெற விரும்பும் புத்தகம் படிப்பதில் ஆர்வமுள்ள வந்தவாசி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 9444360421 எனும் பேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் தெரிவித்தால், குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் மூலமாக அவர்களுக்கு நூல் இலவசமாக வழங்கப்படும் என்றும் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக