மாரிமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாரிமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்து
புதைகுழியில் உறங்குகிறார்!

சென்ற 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்ததிலிருந்து தொடங்கியதுதான் மாரிமுத்து-மகாலட்சுமி ஆணவக் கொலைக்கு நீதி கோரும் போராட்டம்.

இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தாழி அன்பர்களாகிய உங்களுக்குத் தெரியும். இந்தப் போராட்டத்தில் நானும் தொடர்ந்து அறிக்கைகள் வாயிலாகவும் நேரில் சென்றும் பங்கேற்று வந்துள்ளேன்.

ஆகட்டு 19ஆம் நாள் இந்தப் போராட்டம் ஒரு நெருக்கடியான கட்டத்தை
அடைந்தது.

பிணவறையில் உள்ள மாரிமுத்துவின் உடல் அழுகிச் சுகாதாரக் கேடு விளைவிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவமனை அதிகாரிகளும் ஊழியர்களும் புகார் தெரிவித்ததை அடுத்து, பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வருவாய்த் துறைக்குக் கடிதம் கொடுத்துள்ளதாகவும். இந்தியத் தண்டனைச் சட்டம் 133இன் படி உங்கள் மீது (மாரிமுத்துவின் பெற்றோர் மீது) ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று 21ஆம் நாள் காலை 11 மணிக்குள் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று 19ஆம் நாள் அறிவிப்பாணை கொடுத்து விட்டார்கள். விளக்கம் கொடுக்கத் தவறும் பட்சத்தில் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு நாங்களே அடக்கம் செய்து விடுவோம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் மாரித்துவின் பெற்றோருக்கு எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்கள்.

நாமே அடக்கம் செய்ய வேண்டும் எனபதுதான் அவர்களின் கருத்தும் போராட்டக் குழுத் தோழர்களின் கருத்துமாக இருந்தது. மக்களைத் திரட்டி நல்லடக்கத்தையே நீதிக்கான போராட்டமாக நடத்துவதுதான் நோக்கம். தயாரிப்புகளுக்காக ஒருநாள் மட்டும் அவகாசம் கேட்பது என்று முடிவாயிற்று.

22/08இல் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று தோழர் மதியவன் விரும்பினார். மீண்டுமொரு தேனி பயணம், திரும்பும் வழியில் திருச்சிராப்பள்ளியில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் நடைபெறும் மணிப்பூர் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்து அணியமாகிக் கொண்டிருந்தேன்.

21ஆம் நாள் மாரிமுத்துவின் பெற்றோர், மாரிமுத்துவின் உடலைப் பெறாமல் இருப்பதற்கான காரணத்தையும் கோரிக்கையையும் விளக்கிக் கோட்டாட்சியரிடம் கடிதமாகக் கொடுத்தார்கள். ஆனால் மதியம் 2.30 மணிக்குக் கோட்டாட்சியர் ஓர் அறிவிப்பை மாரிமுத்துவின் பெற்றோருக்குக் கொடுக்கிறார். இன்று 4 மணிக்குள் மாரிமுத்துவின் உடலைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அரசு தானே அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது அந்த அறிவிப்பு.

பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து க.விலக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 28 கிமீ தொலைவு ஆகும். தேனி நகராட்சிப் பொது மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து ஐயமுற்ற தோழர்கள், பெற்றோருடன் சேர்ந்து சென்று க.விலக்கு மருத்துவமனையை அடைய மணி 4.05 ஆகியுள்ளது. நேரம் கடந்துவிட்டதால் தேனியில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தோழர்கள் அங்கும் போராட வேண்டியதாகத்தான் இருந்துள்ளது. மாரிமுத்துவின் உடலைத் தாங்களே வந்து பெரியகுளத்தில் கொடுப்போம் என்ற நிபந்தனையுடன் மாவட்ட நிருவாகம், மாரிமுத்துவின் உடலைப் பெற்றோர் அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

மாரிமுத்துவின் உடலைக் கொண்டுவந்த ஊர்திக்கு முன்னும் பின்னும் ஏராளமான காவல்துறை வண்டிகள் பாதுகாப்பிற்காக வந்துள்ளன. இடுகாட்டுப் பாதை முக்கில் மாரிமுத்துவின் உடலைக் கொண்டுவந்த வண்டியை நிறுத்திச் சடங்குகள் செய்ய காவல்துறை அனுமதிக்காமல் வண்டியை இடுகாட்டுக் குழி அருகில் கொண்டுசென்று விட்டதால், மாரிமுத்து உறவினர்களும் பெற்றோரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வண்டியைத் திருப்பக் கோரியுள்ளனர். ஊர் மக்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மதியவன், வினோத்ராசா, பிரேம்குமார் முதலான தோழர்களைத் தளைப்படுத்திக் காவல் நிலையத்தில் வைத்து விட்டனர்.

கடைசி வரை உறுதி காத்த மாரிமுத்துவின் தாய் தந்தையர் தோழர்கள் வந்தபிறகுதான் அடக்கம் செய்வோம் என்று சொல்லி விட்டதால், காவல்துறையினரே மாலையெல்லாம் வாங்கிக் கொடுத்துத் தோழர்களை வல்லுந்தில் அழைத்துச் சென்று மாரிமுத்துவுக்கு இறுதி வணக்கம் செலுத்த ‘உதவினர்’. தோழர்களும் மாரிமுத்துவின் உறவினர்களும் பொதுமக்களும், போராட்ட முழக்கங்களுடன் அடக்கம் செய்து முடித்தனர்.

உயிரற்ற உடலாகவும் போராடிக் களைத்த மாரிமுத்து மண்ணுக்குள் மண்ணாக ஓய்வுகொள்ளப் போய் விட்டார். நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிவடைய வில்லை என்பதிலும், ஒரு கட்டம் முடிந்து மறு கட்டம் தொடங்கியுள்ளது என்பதிலும் போராட்டக் குழுத் தோழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். நாமும்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 290

வெள்ளி, 20 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக!

2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண் மகாலட்சுமி. அவர்களைப் பற்றி விசாரித்ததில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்: பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்த பறையர் சாதி மாரிமுத்துவும், கள்ளர் சாதி மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள்.

மகாலட்சுமிக்கு 18 வயது நிறைவடையாத நிலையில் அவர்கள் உடனடியாக மணம் புரிந்து கொள்ளச் சட்டம் தடையாக இருந்துள்ளது. மகாலட்சுமி ‘மைனர்’ என்பதைச் சாக்கிட்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மாரிமுத்து-மகாலட்சுமி காதல் நிறைவேற விடாமல் தடுத்து வந்துள்ளனர். ஆனால் உண்மையான காரணம் அவர்களின் சாதிவெறிதானே தவிர அவரது வயதல்ல என்பதற்கு அதே மகாலட்சுமியை இப்போதே தங்கள் சாதிக்குள் கட்டிக்கொடுக்க அவர்கள் செய்துள்ள முயற்சியே சான்றாக உள்ளது.

கடந்த காலத்தில் மகாலட்சுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாடுகளின் பேரில் மாரிமுத்து இரண்டு முறை சிறைப்படுத்தப்பட்டுள்ளார். மகாலட்சுமியின் குறைவயதினால் ஏற்படும் சட்டச் சிக்கலைப் புரிந்து கொண்ட மாரிமுத்துவும் மகாலட்சுமியும் திருமணத்தைத் தள்ளிப் போட தங்களுக்குள் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. 18 வயது நிறைவடைந்தவுடன் மாரிமுத்துவைத்தான் மணம்புரிவேன் என்று மகாலட்சுமி உறுதியாக இருந்துள்ளார். இந்த முடிவை மகாலட்சுமி தன் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் காவல் துறையிடமும் நீதித் துறையிடமும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகலட்சுமியின் பெற்றோர் அவரை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், இதற்குப் பெரியகுளம் காவல்துறையும் உடந்தை எனத் தெரிகிறது. அண்மையில் அண்ணல் அம்பேத்துகர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தணிந்த(தலித்து) மக்களைத் தாக்கியும், முருகன் மார்பில் பச்சை குத்தபட்டிருந்த அம்பேத்துகரை உதைத்தும் தம் சாதிவெறியைக் காட்டிக் கொண்ட பெரியகுளம் காவல் துறையினர் அதே சாதி வெறியுடன் மகாலட்சுமியின் மனத்தைக் கரைக்கவும் மாரிமுத்துவை மிரட்டிப் பணிய வைக்கவுமே முயன்றுள்ளார்கள்.

மகாலட்சுமி மாரிமுத்து இருவரையுமே கழுத்தறுத்துப் போட்டு விடுவோம் என்று மகாலட்சுமியின் தந்தை சம்பத்தும், அக்காள் கணவர் பாண்டியும் வெளிப்படையாக மிரட்டியுள்ளார்கள்.

நேற்று முன்தினம் கூட மகாலட்சுமி தன்னைப் பெற்றோர் அடித்துத் துன்புறுத்துவதாகவும், தனக்கு இன்னும் சில மாதங்களில் 18 வயது நிறைவடைந்து விடும் என்றும், அதுவரை தன்னைக் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறும் பெரியகுளம் காவல் நிலையக் காவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாரிமுத்துவும் மகாலட்சுமியும் சடலமாகத் தொங்கியதன் பின்னணி இதுதான். ஏறி நிற்க எவ்வித ஏந்தும் இல்லாத காட்டுப் பகுதியில் உயரமான மாமரக் கிளையிலிருந்து இருவரின் சடலங்களும் தரைதட்டியபடி தொங்கிக்கொண்டு இருந்தன. செய்தியறிந்து ஓடிவந்து பார்த்த ஊர்மக்கள் எவரும் இதைத் தற்கொலை என்று நம்பவிலை. ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்து) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார். மாரிமுத்துவும் மகாலட்சுமியும் பிணமாகத் தொங்கிய காட்சியை மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து விடாமல் தடுத்து, மக்களை இழிசொற்களால் வசைபாடியும் மிரட்டியும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் காவல்துறையிடம் அளித்துள்ள முறைப்பாட்டில், பறையர் சாதியைச் சேர்ந்த தன் மகன் மாரிமுத்து கள்ளர் சாதியைச் சேர்ந்த மகாலட்சுமியைக் காதலித்ததால், மகாலட்சுமியின் குடும்பத்தார் பல முறை சண்டையிட்டு சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிபிட்டுள்ளார். மகாலட்சுமியின் தந்தை சம்பத்தையும் மகாலட்சுமியின் அக்காள் கணவர் பாண்டியையும் குறிப்பிட்டுப் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும் பெரியகுளம் காவல்துறையினர் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் ‘சந்தேக மரணம்’ என்றுதான் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சடலங்கள் காணப்பட்ட இடத்தில் சட்டப்படியான மரண விசாரணை (INQUEST) கூட செய்யாமல் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் எடுத்துச் சென்று க.விலக்கு மருத்துவமனையில் சடலக் கூறாய்வு செய்வித்துள்ளனர். அதற்குப் பின்னரும் கூட மகாலட்சுமியின் உடலைப் பெற அவர் குடும்பத்தினர் வரவில்லை எனத் தெரிகிறது. அந்நிலையிலும் காவல் துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை அவசர அவசரமாக அனுப்பி எரிக்கச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

மாரிமுத்துவின் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் மகாலட்சுமியின் பெற்றோர்தாம் மாரிமுத்துவையும் மகாலட்சுமியையும் கொலைசெய்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ப.சா.(எசுசி) ப.கு.(எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை, மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து, மாரிமுத்துவின் பெற்றோரும் முற்போக்கு இயக்கங்களும் போராடி வருகின்றன.

மாரிமுத்து-மகாலட்சுமி இருவரையும் மகாலட்சுமியின் தந்தை, தாய்மாமன் உள்ளிட்டவர்கள் சதி செய்து கூலிக் கொலையாட்களைக் கொண்டு கொலை செய்து விட்டதாகவும், கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சியும் தேனி மாவட்டக் காவல் துறையினரும் முயல்வதாகவும் மக்கள் நம்புவதில் நியாயம் இருப்பதாகக் கருதுகிறேன்.

இந்த வழக்கில் உண்மையைக் கண்டறியவும் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றவும் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கும் படியும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். பெரியகுளத்தில் நீதிக்கான போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் முற்போக்கு இயக்கங்களுடனும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தோழமை கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 273