பெரியகுளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியகுளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்!

2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை உண்மைகள் எரிந்து சாம்பலாயினவோ, யாருக்கும் தெரியாது.

மாரிமுத்துவின் உடலை அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவருடைய பெற்றோர், அண்ணன், ஊர் மக்கள் மருத்துவ மனையில் திரண்டு விட்டனர். நம் தோழர் மதியவன் இரும்பொறையும், அம்பேத்துகர் பிறந்த நாள் போராட்டக் குழுவைச் சேர்ந்த மற்றத் தோழர்களும், அரசியல் சார்புகளுக்கப்பாலும் சாதி கருதாமலும் நியாயத்துக்காக நிற்கக் கூடிய நண்பர்களும் கூடி விட்டனர். அவர்கள் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிலையெடுத்து நின்றனர்.

மாரிமுத்துவின் உடலை எடுத்துச் சென்று எரித்து விடுமாறு காவல்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்குதல் கொஞ்ச நஞ்சமில்லை. வழக்கம் போல் காவல்துறைக்கு முட்டுக் கொடுக்கிற ஆட்களும் அயரவே இல்லை.

கொலை என்றாலும், தற்கொலைக்குத் தூண்டுதல் என்றாலும், சட்டப்படி சடலக் கூறாய்வுக்கு முன் நடக்கக் வேண்டிய மரண விசாரணை நடக்கவே இல்லை. இதனைப் பல முறைக் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டிய பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பட்டியல் சாதிகள் பட்டியல் பழங்குடிகள் வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் வழிவகைகளின் படி இந்த வழக்கைப் பதிவு செய்யக் கூட காவல் துறை மறுத்து அழிச்சாட்டியம் செய்து வருவது வலுத்த ஐயங்களைத் தோற்றுவிக்கிறது.

ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார்.

நடந்தது கொலையாக இருக்கலாம் என்று மக்கள் ஐயுறுவதில் நியாயம் உண்டு. ஒருவேளை அது தற்கொலையாகவே இருந்தாலும் அந்தத் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் தூண்டுதல்? என்பதைப் புலனாய்வு வழியாகத்தான் முடிவு செய்ய முடியும். உயிரிழந்த இருவரில் ஒருவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும், கொடுநிகழ்வுக்கு முன் நடந்த பூசல்கள், வழக்குகள் போன்றவற்றையும் கணக்கில் கொண்டாலே போதும், மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த முறைப்பாட்டை ப.சா.(எசு.சி) ப.இ.( எசு.டி) வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்வதுதான் முதல் கட்ட நீதியாகும்.

இந்த முதல் கட்ட நீதிக்கான போராட்டத்தை வஞ்சகமாய் முறியடிக்க, காவல் துறையும் வருவாய்த் துறையும் மட்டுமல்ல, வெளிப்படையாகத் தெரியாத சில ஆற்றல்களும் வேலை செய்வதாக ஐயுறக் காரணம் உள்ளது. ஆனால் எல்லாத் தடைகளையும் மீறி பெரியகுளத்தில் தோழர் மதியவன் இரும்பொறையும், போராட்டக் குழுத் தோழர்களும் உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மாரிமுத்துவின் தாய்தந்தையும் தமையனும் ஊர்மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்குப் பின்னால் மருத்துவமனையின் பிணவறையில் கிடந்த படி போராடிக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. இந்தப் போராட்டத்தின் ஆகப்பெரிய வலுவே மாரிமுத்துவின் உயிரற்ற உடல்தான். இந்த உடலை மாரிமுத்துவின் குடும்பத்தார் அகற்றிக் கொண்டு போய் எரித்து விட்டால் உண்மையை அழித்து விட முடியும் என்று கொடியவர்கள் மனப்பால் குடிக்கின்றார்கள்.

உயிரற்ற உடலும் உண்மைக்கு உயிர்கொடுக்கப் போராடும் களம்தான் பெரியகுளம்! செத்தாலும், உடல் சிதைந்தாலும், மண்ணோடு மண்ணாகி மறைந்தாலும் நம் நினைவுகளில் என்றும் வாழ்வார் மாரிமுத்து!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 277

வெள்ளி, 20 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக!

2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண் மகாலட்சுமி. அவர்களைப் பற்றி விசாரித்ததில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்: பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்த பறையர் சாதி மாரிமுத்துவும், கள்ளர் சாதி மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள்.

மகாலட்சுமிக்கு 18 வயது நிறைவடையாத நிலையில் அவர்கள் உடனடியாக மணம் புரிந்து கொள்ளச் சட்டம் தடையாக இருந்துள்ளது. மகாலட்சுமி ‘மைனர்’ என்பதைச் சாக்கிட்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மாரிமுத்து-மகாலட்சுமி காதல் நிறைவேற விடாமல் தடுத்து வந்துள்ளனர். ஆனால் உண்மையான காரணம் அவர்களின் சாதிவெறிதானே தவிர அவரது வயதல்ல என்பதற்கு அதே மகாலட்சுமியை இப்போதே தங்கள் சாதிக்குள் கட்டிக்கொடுக்க அவர்கள் செய்துள்ள முயற்சியே சான்றாக உள்ளது.

கடந்த காலத்தில் மகாலட்சுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாடுகளின் பேரில் மாரிமுத்து இரண்டு முறை சிறைப்படுத்தப்பட்டுள்ளார். மகாலட்சுமியின் குறைவயதினால் ஏற்படும் சட்டச் சிக்கலைப் புரிந்து கொண்ட மாரிமுத்துவும் மகாலட்சுமியும் திருமணத்தைத் தள்ளிப் போட தங்களுக்குள் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. 18 வயது நிறைவடைந்தவுடன் மாரிமுத்துவைத்தான் மணம்புரிவேன் என்று மகாலட்சுமி உறுதியாக இருந்துள்ளார். இந்த முடிவை மகாலட்சுமி தன் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் காவல் துறையிடமும் நீதித் துறையிடமும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகலட்சுமியின் பெற்றோர் அவரை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், இதற்குப் பெரியகுளம் காவல்துறையும் உடந்தை எனத் தெரிகிறது. அண்மையில் அண்ணல் அம்பேத்துகர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தணிந்த(தலித்து) மக்களைத் தாக்கியும், முருகன் மார்பில் பச்சை குத்தபட்டிருந்த அம்பேத்துகரை உதைத்தும் தம் சாதிவெறியைக் காட்டிக் கொண்ட பெரியகுளம் காவல் துறையினர் அதே சாதி வெறியுடன் மகாலட்சுமியின் மனத்தைக் கரைக்கவும் மாரிமுத்துவை மிரட்டிப் பணிய வைக்கவுமே முயன்றுள்ளார்கள்.

மகாலட்சுமி மாரிமுத்து இருவரையுமே கழுத்தறுத்துப் போட்டு விடுவோம் என்று மகாலட்சுமியின் தந்தை சம்பத்தும், அக்காள் கணவர் பாண்டியும் வெளிப்படையாக மிரட்டியுள்ளார்கள்.

நேற்று முன்தினம் கூட மகாலட்சுமி தன்னைப் பெற்றோர் அடித்துத் துன்புறுத்துவதாகவும், தனக்கு இன்னும் சில மாதங்களில் 18 வயது நிறைவடைந்து விடும் என்றும், அதுவரை தன்னைக் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறும் பெரியகுளம் காவல் நிலையக் காவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாரிமுத்துவும் மகாலட்சுமியும் சடலமாகத் தொங்கியதன் பின்னணி இதுதான். ஏறி நிற்க எவ்வித ஏந்தும் இல்லாத காட்டுப் பகுதியில் உயரமான மாமரக் கிளையிலிருந்து இருவரின் சடலங்களும் தரைதட்டியபடி தொங்கிக்கொண்டு இருந்தன. செய்தியறிந்து ஓடிவந்து பார்த்த ஊர்மக்கள் எவரும் இதைத் தற்கொலை என்று நம்பவிலை. ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்து) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார். மாரிமுத்துவும் மகாலட்சுமியும் பிணமாகத் தொங்கிய காட்சியை மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து விடாமல் தடுத்து, மக்களை இழிசொற்களால் வசைபாடியும் மிரட்டியும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் காவல்துறையிடம் அளித்துள்ள முறைப்பாட்டில், பறையர் சாதியைச் சேர்ந்த தன் மகன் மாரிமுத்து கள்ளர் சாதியைச் சேர்ந்த மகாலட்சுமியைக் காதலித்ததால், மகாலட்சுமியின் குடும்பத்தார் பல முறை சண்டையிட்டு சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிபிட்டுள்ளார். மகாலட்சுமியின் தந்தை சம்பத்தையும் மகாலட்சுமியின் அக்காள் கணவர் பாண்டியையும் குறிப்பிட்டுப் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும் பெரியகுளம் காவல்துறையினர் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் ‘சந்தேக மரணம்’ என்றுதான் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சடலங்கள் காணப்பட்ட இடத்தில் சட்டப்படியான மரண விசாரணை (INQUEST) கூட செய்யாமல் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் எடுத்துச் சென்று க.விலக்கு மருத்துவமனையில் சடலக் கூறாய்வு செய்வித்துள்ளனர். அதற்குப் பின்னரும் கூட மகாலட்சுமியின் உடலைப் பெற அவர் குடும்பத்தினர் வரவில்லை எனத் தெரிகிறது. அந்நிலையிலும் காவல் துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை அவசர அவசரமாக அனுப்பி எரிக்கச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

மாரிமுத்துவின் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் மகாலட்சுமியின் பெற்றோர்தாம் மாரிமுத்துவையும் மகாலட்சுமியையும் கொலைசெய்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ப.சா.(எசுசி) ப.கு.(எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை, மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து, மாரிமுத்துவின் பெற்றோரும் முற்போக்கு இயக்கங்களும் போராடி வருகின்றன.

மாரிமுத்து-மகாலட்சுமி இருவரையும் மகாலட்சுமியின் தந்தை, தாய்மாமன் உள்ளிட்டவர்கள் சதி செய்து கூலிக் கொலையாட்களைக் கொண்டு கொலை செய்து விட்டதாகவும், கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சியும் தேனி மாவட்டக் காவல் துறையினரும் முயல்வதாகவும் மக்கள் நம்புவதில் நியாயம் இருப்பதாகக் கருதுகிறேன்.

இந்த வழக்கில் உண்மையைக் கண்டறியவும் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றவும் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கும் படியும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். பெரியகுளத்தில் நீதிக்கான போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் முற்போக்கு இயக்கங்களுடனும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தோழமை கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 273

திங்கள், 10 ஜூன், 2013

ஓயாத மக்கள் அலை



ஓயாத மக்கள் அலை
கோவை, உக்கடம், பெரியகுளத்தை த் தூர்வாரும் மகத்தான பணியில், நேற்று மட்டும் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர். பெரியகுளத்தை தூர்வாரும் பணி, கடந்த மாதம் 2ம் தேதி துவங்கியது. இப்பணியை "ராக்' அமைப்பிடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதில், "சிறுதுளி' அமைப்பும் இணைந்துள்ளது. பருவமழை துவங்கும் முன், பணியை முடிக்க, நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஞாயிறு தோறும் "ஊர்கூடி தூர்வாரும்' நிகழ்வும் நடந்தது. பல ஆயிரம் மக்கள், உணர்வுப்பூர்வமாக பங்கேற்று, தங்களின் வியர்வையை குளத்துக்கு காணிக்கையாக்கினர்.

குளம் தூர்வாரும் பணியில் மக்கள் பங்கேற்பது, நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மட்டும், ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுப்பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என, பல அமைப்புகள் களம் இறங்கி தூர்வாரியதாக, "ராக்' அமைப்பினர் தெரிவித்தனர். மக்கள் வெள்ளம், கரைபுரண்டதால், உக்கடம் குளம் எங்கும் மனித தலைகளால் நிரம்பியது. இயற்கையை நேசிப்போர் சிந்திய வியர்வை துளிகளால், குளத்து மண்ணில் ஈரம் கசிந்தது. உக்கடம் குளத்தின் மொத்த பரப்பு 326 ஏக்கர். இதில், 80 ஏக்கர் அளவுக்கு தற்போது தண்ணீர் உள்ளது. இதுவரை, 197 ஏக்கரில் தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் 25 ஏக்கர் மட்டுமே, பணிகள் நடக்க வேண்டியுள்ளது.பறவைகள் ஓய்வெடுக்கவும், கூடுகட்டி வாழவும் வசதியாக, 175 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரத்தில் 4 தீவுகள் குளம் நடுவே அமைக்கப்பட்டுள்ளன. குளக்கரையில், 6 கி.மீ., சுற்றளவுக்கு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், "ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கூறியதாவது:தூர்வாரும் நிகழ்வில், இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது, கோவை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி முடிந்துள்ளது. குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் வேலைகளை துவங்க வேண்டும். குளத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தீவுகளில் கனி மரங்களை நட்டு, பறவைகள் தங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இக்குளத்தில் நான்கு இடங்களில், சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. நான்கு குழாய்களையும் ஒன்றாக இணைத்து சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து, அதன்பிறகு தண்ணீரை குளத்தில் விடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியை கேட்டுள்ளோம். உக்கடம் குளம் சீரமைப்பு பணிக்காக, கோவை எம்.பி., நடராஜன் 50 லட்சம் ரூபாய், தொகுதி நிதியில் இருந்து வழங்க முன்வந்துள்ளார், என்றனர்.
கரசேவைக்கு கைகொடுத்தோர்!



*மாநகர போலீசார் 1000 பேர்
*மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்
*கோவை மெரைன் கல்லூரி மாணவர்கள்
*தேசிய மாணவர் படையினர்
*"தினமலர்" நாளிதழ் ஊழியர்கள்
*ஆம் ஆத்மி கட்சி
*கண்ணம்பாளையம் பசுமை திட்டம் அமைப்பினர்
*விமானப்படை வீரர்கள்
*எல்.ஐ.சி., ஊழியர்கள்
*ஈஷா யோக மையம்
*சூரியா சேவா சங்கம்
*இயற்கை பாதுகாப்பு சங்கம்
*பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
*கார்மேக்கர் கார்டன் அமைப்பு
*சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி
*மனிதநேய மக்கள் கட்சி
*முஸ்லிம் முன்னேற்ற கழகம்
*லோக் சக்தா
*கோவை தகவல் தொழில் நுட்ப அமைப்பு (சி.ஐ.டி.ஏ.,)
*ஒய்ல்டு விங் சொசைட்டி
*நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி
*இயற்கை பாதுகாப்பு குழு
*சி.எம்.எஸ். கல்லூரி, கோவை
*அக்வா குரூப்.
*ரெய்ன்போ வாக்கர்ஸ்
*ரேடியோ சிட்டி
*கொடிசியா வீ எஸ். அலாய்ஸ்
*ஹீமோபீலியா சொசைட்டி
*மதுக்கரை "ஏசிசி' நிறுவனத்தினர்
*காளம்பாளையம் மக்கள்
*நிக் டியூசன் சென்டர்
*பூமார்க்கெட் அரேபியா ஹாஸ்டல்
*புல் மெசின்ஸ் நிறுவனம்
*இந்தியன் டென்டல் அசோசியேஷன்
*லயன்ஸ் ஓரியன் கிளப்
*ஏர்கண்டிஷன் ஓனர்ஸ் அசோசியேஷன்
*பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனம்
*கோவை நுகர்வோர் மற்றும் வினியோகஸ்தர்கள் அசோசியேஷன்
*பேப்பர் வியாபாரிகள் சங்கம்
*ஏ.பி.டி., நிறுவனம்
*ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம்மற்றும் பல அமைப்புகள், மக்கள் குழுக்கள்.

குளம் தூர்வாரிய மக்களுக்குஉணவு, உபகரணம் அளித்தோர்:
*உணவு: அன்னபூர்ணா ஓட்டல் மற்றும் ஓட்டல் ஓனர்ஸ் அசோசியேஷன்
*குடிநீர்: சபோல் மினரல் வாட்டர், பாரதிராஜா வாட்டர் சர்வீஸ்
*இனிப்பு: பி.எஸ்.ஜி., குழுமம்
*போட்டோ: போட்டோ சென்டர் கோவை
*வீடியோ: ஐ.ஏ.பி., கோவை
*மண் அள்ளும் உபகரணங்கள்: பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் ஹார்டுவேர் அசோசியேஷன், கோவை