நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

காலை மட்டுமே இழந்தார்! நம்பிக்கையை அல்ல!

காலை மட்டுமே இழந்தார் நம்பிக்கையை அல்ல




































இரண்டாண்டுகளுக்கு முன்பு, ரயில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ரயிலில் இருந்து வீசப்பட்ட வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா என்பது வெறும் செய்திதான்.
ஆனால், அதன்பிறகு அவரது உயிரைக் காப்பற்ற வேண்டும் என்பதால் ஒரு காலை வெட்டி எடுத்தனர் மருத்துவர்கள். உயிருக்குப் போராடிய அருணிமா சின்கா, பல்வேறு சிகிச்சைகளைத் தொடர்ந்து வீட்டுக்குத் திரும்பினார்.
சிகிச்சையில் ஒரு காலை இழந்துவிட்டாலும் மனோதைரியத்தை இழக்காத அருணிமா, கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங், தனக்கு வந்த புற்றுநோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதை முன்னுதாரணமாக கொண்டு, செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு உத்தரகாசியில் டாடா ஸ்டீல் அட்வென்சர் பவுண்டேஷன் நடத்தும் மலையேறும் பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெற்று உலகின் மிக உயரமான இமயமலை மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
அருணிமா சின்கா, இமயமலை மீது ஏறி சாதனை படைத்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி என்று செய்திகள் வெளியாகும் போது அது ஒரு சாதனையாக மாறியது. ஒரு செய்தியில் இருந்து சாதனை வரை சென்ற அருணிமா, பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
அவர் தனது காலை இழந்த ஒரு சில நாட்களிலேயே, இமயமலை ஏறுவது குறித்து கனவு கண்டிருக்கிறார். இது நம்மால் முடியுமா... எழுந்து நிற்க முடியாதே என்று அழ வேண்டியவர், இமயமலை ஏறும் கனவை கண்டதன் பலன்தான் இந்த சாதனை. இதனை நமது பெண்கள் செய்தாலே பல பிரச்னைகளை எளிதாகக் கடந்து வந்து விடலாம்.
இந்த சாதனையை இவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது? தன் அனுபவத்தை அருணிமாவே கூறுகிறார்:
""என்னுடைய கால்களில் ஒன்றை எடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் கூறியபோது என் மன உறுதியை நான் இழக்கவில்லை. என் குடும்பத்தினர் என்னுடைய நிலையைக் கண்டு கவலை அடைந்தனர். மருத்துவமனையில் இருந்தபோதே இமயமலை பற்றிய கட்டுரையொன்றைப் படிக்க நேர்ந்தது. என்றாவது ஒருநாள் இமயலை சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். இது தொடர்பாக ஏற்கெனவே இமயமலை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி பச்சேந்திரிபால் என்பவரை மருத்துவமனை படுக்கையிலிருந்தபோதே தொடர்பு கொண்டேன். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரை சந்திக்கும்படி கூறினார். அப்போதே என்னுடைய கனவு நனவாகுமென தீர்மானித்தேன்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பச்சேந்திரி பால் மூலம் பயிற்சி பெறத் தொடங்கினேன். துவக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் என்னுடன் பயிற்சி பெற்றவர்கள் விரைவாக மலையேறுவதைப் பார்த்தபோது அதுவே எனக்குள் பெரும் தூண்டுதலை அளித்தது. அதே வேளையில் எனக்கு பொருத்தப்பட்ட செயற்கை கால் பிரச்னை கொடுத்தது. அடிக்கடி ரத்தம் கசியத் தொடங்கியது. வலது காலும் வீங்கத் தொடங்கியது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. இந்நிலையில் பச்சேந்திரி பால் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.
இமயமலை அடிவாரத்தை அடைந்தவுடன் என் மனதில் நம்பிக்கை வளர்ந்தது. மார்ச் 31-ம் தேதி மலையேறத் தொடங்கினேன். 52 நாட்கள் கழித்து இமயமலை உச்சியை அடைந்தபோது என்னுடைய சாதனையை என்னாலேயே நம்ப முடியவில்லை. என்னுடைய பயணம் சிரமமாக இருந்தாலும் த்ரிலிங்காக இருந்தது.
"டெத் ஸோன்' பகுதியில் ஏறும்போதுதான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் மனதில் பயத்தை ஏற்படுத்தியது. ஒரு அடி தவறினாலும் மரணம்தான். ஒரு சில இடங்களில் பனியில் உறைந்து கிடந்த மனித உடல்களைப் பார்த்தேன். மனதில் கிலி ஏற்பட்டாலும் ஏறியே தீர்வது என்ற உறுதி ஏற்பட்டது. ஆனாலும் மலை ஏறுபவர்களுக்கு வரும் உடல்நலக் குறைவு எனக்கும் வந்தது. சிலிண்டரில் ஆக்சிஜன் சிறிதளவே இருந்தபோது திரும்ப செல்வதற்கு அவசர உதவி கேட்கும்படி சிலர் அறிவுறுத்தினர். ஆனால் பயணத்தைக் கைவிட எனக்கு மனமில்லை.
மே 21-ம் தேதி 10.55 மணியளவில் உலகின் மிக உயரமான இமயலை உச்சியில் எங்கு இருக்க வேண்டுமென்று நினைத்தேனோ அந்த இடத்தில் நின்றிருந்தேன். இந்திய தேசியக் கொடியை ஏற்றியபோது உண்மை என்னைத் திணறடித்தது.
நம்முடைய சமூகம் இன்னும் பெண்களுக்கு சுதந்திரமளிக்கத் தயாராக இல்லை. என்னுடைய சிறுவயதிலேயே இதை அனுபவித்துள்ளேன். ஹாக்கி பயிற்சிக்காக செல்லும்போதும் என்னுடைய ட்ராக் சூட்டைக் கண்டு கேலி செய்தவர்களும் உண்டு. சிறுவயதிலேயே எனக்கு நடந்த திருமணம் 20 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அந்த சூழ்நிலையிலும் இப்போதும் என்னுடைய குடும்பத்தினர்தான் எனக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாக உ.பி. போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எனக்கு உதவி செய்தவர்களை விசாரணை என்ற பெயரில் மிகவும் கொடுமை படுத்தினர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு உண்டு என்பதை நான் நம்புகிறேன். அந்த கனவை நனவாக்க முழு முயற்சி தேவை. ஏதாவது தவறு நடந்தால் பெண்கள் அதற்காக ஒரேடியாக உடைந்து போகாதீர்கள். எதுவாக இருந்தாலும் எதிர்த்துப் போராடும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்'' என்று அனைத்து பெண்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார் நமது அருணிமா சின்கா.

சனி, 12 அக்டோபர், 2013

பார்வை இழந்தும் ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்''

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_824830.jpg

இரு கண்ணிலும் பார்வை இழந்தும் ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்''

கூடலூர்: முதுமலை முகாமில், இரு கண்ணிலும் பார்வை இழந்த, கும்கி யானை ""தும்பிக்கை போல நம்பிக்கையுடன்'' உலா வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில், மூன்று யானைகள் சமீபத்தில் திருவண்ணாமலையில் பிடிக்கப்பட்டவை. இவைகளில், இரு கண்களிலும் தற்போது பார்வை இன்றி, "ஹாயாக' உலா வரும் கும்கி யானை இந்தர், 61, என்ற யானைக்கு பல தனித்துவமான சிறப்புகள் உண்டு. 1960 அக்டோபர் மாதம் சுமார் 8 வயது குட்டியாக பொள்ளாச்சியில் பிடிக்கப்பட்ட இந்தர், முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, கும்கி பயிற்சி வழங்கப்பட்டது. சிறந்த கும்கி யானை இந்தர், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊருக்குள் வரும் யானைகள் விரட்டுவதில் ஈடுபட்டுள்ளது. மற்ற யானைகளுக்கு கும்கி பயிற்சியும் அளித்துள்ளது. பல கோவில் திருவிழாக்களில் பங்கெடுத்துள்ள இந்தர், பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளது. சிறந்த கும்கியான இருந்த இந்த யானைக்கு, இரு கண்ணிலும் பார்வை போனது. இதனால் கும்கிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டது. கண்களில் பார்வை இழந்தாலும், உள்ளத்தில் நம்பிக்கை இழக்காத இந்தர், பகலில் உணவுக்காக பாகனுடன், வனப்பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட, தனக்கான அனைத்து பணிகளையும் தானே செய்து வருகிறது. அதேபோல, உணவு நேரங்களில் யாரின் துணையும் இன்றி, தனது உணவை எடுத்து உண்கிறது. எந்த சுற்றுலா பயணிகளையோ, ஆதிவாசிகளையோ தவறி கூட தாக்கியதில்லை. தனக்கே உரித்தான பாதையில் இன்றுவரை பயணிக்கிறது. இந்தரை கவனித்து வரும் பாகன்கள் கூறுகையில், "கண்ணிந்த இந்தருக்கு தெய்வம் தான் இதுவரை துணையாக நின்று வழி நடத்தி செல்கிறார்; இல்லையெனில், எல்லா பணிகளையும் சரியாக செய்ய முடியாது. அதேபோல, இந்தருக்கு முதுமலையின் அனைத்து பாதைகளும் அத்துப்படி' என, பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு, 26 மே, 2013

நம்பிக்கையோடு புதுப்பித்தேன்!

நம்பிக்கையோடு புதுப்பித்தேன்!

கடந்த, 38 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு பதிவை, நம்பிக்கையோடு, முறைப்படி புதுப்பித்து, அரசு வேலை பெற்ற, 57 வயதுள்ள கீதா: நான், சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், குடும்பத்தோடு வசிக்கிறேன். 1975ம் ஆண்டு, பி.யூ.சி., முடித்தேன். என்னுடன் படித்த நண்பர்களோடு இணைந்து, அரசு வேலை கிடைக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்தேன். திருமணமானதும், குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில், கணவர் செக்யூரிட்டியாகவும், நான் தட்டச்சராகவும் என, இருவரும் வேலைக்கு சென்றோம். இருந்தாலும், இரு பெண்களையும், பி.இ., மற்றும் பி.காம்., படிக்க வைக்க, கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தட்டச்சராக, தொடர்ந்து அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், ஒரு நாள், எனக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என, தொடர்ந்து, 38 ஆண்டுகளாக புதுப்பித்து வந்தேன்.அரசு வேலைக்காக, 40 வயதை தாண்டியும், தொடர்ந்து புதுப்பித்து வருவதை கவனித்து வந்த உறவினர் பலர், சலிப்பாகவும், சிரிப்பாகவும் பேச ஆரம்பித்தனர். "உனக்கு, எங்கே இனி, அர” வேலை கிடைக்கப் போகுது' என, அறிவுரையும் வழங்கினர். நான், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நம்பிக்கையோடு என் கடமையை சரிவர செய்தமையால், 57 வயதான எனக்கு, அரசு வேலை கிடைத்துள்ளது. தற்போது, நானும் ஒரு அரசு ஊழியர் என்ற மதிப்பு, மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள, நில உடமை பிரிவில், வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தற்போது கிடைத்துள்ள அரசு வேலை, காலாகாலத்தில் கிடைக்கவில்லையே என, மனதிற்குள் ஒரு வருத்தமும் உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, "40 வயதுக்கு மேல், இனி நமக்கு அரசு வேலை எங்கே கிடைக்க போகுது...' என எண்ணி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு அனைவருக்கும் முன்உதாரணமாக, நம்பிக்கையான, ஒரு அரசு ஊழியராக இருந்திருக்க முடியாது.

சம்பங்கி பூவைபயிரிடலாம்!

நீர் பற்றாக்குறையால், சம்பங்கி செடியை பயிரிட்டு, மாதம், 50 ஆயிரம் சம்பாதிக்கும், விவசாயி கென்னடி: நான், தஞ்சாவூரில் உள்ள, பர்மா காலனியை சேர்ந்தவன். டிப்ளமோவில், "ஏசி' மெக்கானிக் படிப்பு படித்து, நான்கு ஆண்டுகள், வெளிநாடுகளில் வேலை செய்து திரும்பினேன். விவசாயம் மீது ஆர்வம் இருந்தாலும், என்னிடம் சொந்த நிலம் இல்லாததால், லீசுக்கு நிலத்தை வாங்கி, சம்பங்கி செடி பயிரிட முயற்சித்தேன்.
சம்பங்கி செடியை, களிமண்ணாக இருக்கும் என் நிலத்தில் பயிரிட முடியாததால், செடி நன்றாக வளர, செம்மண் கலந்த வண்டல் மண்ணாக மாற்றினேன். நுண்ணூட்ட சத்தைப் பெற, நவதானியம், தக்கைப்பூண்டை விதைத்து, பூக்கும் நேரத்தில் அவற்றை அப்படியே மடக்கி, இரண்டு முறை நன்கு உழுது, நிலத்தை சீர்செய்தேன்.சம்பங்கி செடி விதைகள், தனியாகக் கிடைக்காது. வெங்காயம் போன்ற வடிவில் கிழங்காக கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கான கிழங்குகளை வாங்கி, இரண்டு மாதங்கள் நன்கு காய வைத்த பின், பாத்திகளாக பிரித்து, முக்கோண முறையில் நட வேண்டும். இம்முறையால், களைகள் வளர்வது அதிக அளவில் தவிர்க்கப்படும்.தெளிப்பு நீர் பாசன முறையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள், நீர் தெளித்தால் போதும். ஒரு செடியின் இலைகளில், "இலைப் பேன்' நோய் வந்தால், தொற்று நோய் போல், பயிரிடப்பட்ட அனைத்து செடிகளின் இலைகளிலும், பரவ வாய்ப்பு உள்ளது. இதனால், பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது முக்கியம். 80 சதவீத இயற்கை உரங்கள் மற்றும் 20 சதவீத செயற்கை உரங்கள் என, இரண்டையும் கலந்தே பயன்படுத்துகிறேன்.
நடவு செய்த, ஐந்தாம் மாதத்திலிருந்து, சம்பங்கி பூக்கள் பூக்க ஆரம்பித்தாலும், ஏழு மாதங்களுக்கு பிறகே, வணிக ரீதியிலான விற்பனைக்கு தயாராகும். அதிலிருந்து, மூன்று ஆண்டுகள் வரை, தினமும் பூக்கும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கர் பயிரிடப்பட்ட நிலத்தில், தினமும், 50 கிலோ பூக்கள் பறிக்கலாம். ஒரு கிலோ சம்பங்கி பூ, 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், ஏக்கர் ஒன்றுக்கு, மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். தொடர்புக்கு: 99764 05612

புதன், 21 நவம்பர், 2012

"கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை!

"கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை!































விபத்தில் வலது கையை இழந்தாலும் கார்த்திகை விளக்குகள் தயாரித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த நம்பிக்கை இளைஞர் வேல்முருகன்.
கார்த்திகை என்றாலே, அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒளிபரப்பும் தீபங்கள் தான். கார்த்திகை திருநாளுக்கு வீடுகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றி இருளை அகற்றுவது நமது பாரம்பரிய பழக்கவழக்கமாக இருந்து
வருகிறது.
இத்தகைய, ஒளி விளக்குகள் பெரும்பாலும் மண்ணால் இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அத்தகைய விளக்குகளை பரம்பரையாக மதுரையில் குறிப்பிட்ட சிலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கால மாற்றத்தில் இவ்விளக்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு குறைந்ததால், பலர் இத்தொழிலை கைவிட்டு  விட்டனர். ஆனாலும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சில குடும்பங்கள் மண் விளக்குகளை தயாரித்து விற்று வருவதைக் காண முடிகிறது.
மதுரை நகரில் பெத்தானியபுரம் பகுதியில் குறிப்பிட்ட சிலர் பாரம்பரியமாக கார்த்திகை அகல் விளக்குகளை கண்மாய் மண்ணால் செய்து விற்று வருகின்றனர். இவர்களில் ராஜேந்திரன் என்பவரது குடும்பத்தினர், கடந்த 3 தலைமுறையாக மண்ணால் ஆன கார்த்திகை அகல் விளக்குகளைச் செய்து விற்றுவருகிறார்கள்.
ராஜேந்திரனின் மகன் வேல்முருகன் (27). பி.காம் பட்டதாரி. இவர் கோச்சடை செல்லும் வழியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பணியின்போது கடந்த ஆண்டு, இவரது வலது கை எந்திரத்தில் சிக்கி மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், அவர் தளரவில்லை. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு  முன்  திருமணம் நடைபெற்றது. மனைவி புவனேஸ்வரி. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கிடைக்கும் வருவாய் தாய், தந்தை, தங்கை மற்றும் மனைவி என பெரிய குடும்பத்துக்கு போதவில்லை.
ஆகவே, வலது கையை இழந்த நிலையிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான கார்த்திகை அகல் விளக்கு தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
படிக்கும் காலத்திலேயே வேல்முருகன் பகுதி நேரமாக தந்தையுடன் அகல் விளக்கு  தயாரிப்புக்கு உதவியாக இருந்துள்ளார். தற்போது, அந்த அனுபவம் அவருக்கு நிறையவே கை கொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.
கோச்சடை கண்மாயில் மண் எடுத்து, அகல் விளக்கை தயாரித்து வந்த வேல்முருகன் தரப்பினர், கார்த்திகைக்கு மட்டும் சுமார் 50 ஆயிரம் விளக்குகள் வரை தயாரித்து விற்பதாகக் கூறுகின்றனர். கார்த்திகை தவிர, மற்ற காலங்களில் மண் உண்டியல்கள், குடிநீர் வைக்கும் மண்பானைகள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். மண் விளக்குகள், மண்பாண்டங்கள் மூலம், நாளொன்றுக்கு சுமார் ரூ.150 வருவாய் கிடைத்து வருவதாகக் கூறுகிறார் வேல்முருகன்.
தற்போது வண்ண மெழுகு விளக்குகள் ஏராளமாக வந்த நிலையில், பொதுமக்கள் குறைந்த அளவிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்கி வருவதாகவும், இதில் ஒரு விளக்கு 30 பைசா முதல் 50 பைசா வரை விற்கவே முடிகிறது என்றும் வேல்முருகன் வருத்தப்படுகிறார்.
காலமாற்றத்தில் மண் விளக்குகளுக்கு வரவேற்பு குறைந்த நிலையில், இதை நம்பி மட்டுமே வாழ்க்கையை நடத்துவது சிரமமாக உள்ளதாகவும், ஆகவே தனக்கு ஊனமுற்றோர் பிரிவில் ஏதாவது அரசுப் பணி கிடைத்தால் பாரம்பரியத் தொழிலையும் கைவிடாமல், குடும்பத்தையும் காப்பாற்றமுடியும் என்பதும் அவரது கோரிக்கை.
கார்த்திகை மாத இருளை விரட்டப் பயன்படும் அகல் விளக்கை தயாரிக்கும் வேல்முருகன் வாழ்க்கையில் இருள் விலக அவருக்கு அரசு உதவிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட துறையினர் மனது வைக்க வேண்டும். இதுபோன்ற இளைஞர்களை
ஊக்குவிப்பதன் மூலம் மனிதநேயம் காக்கப்படுவதுடன், அழியும் நிலையில் உள்ள நமது பாரம்பரியத் தொழில்களையும் காப்பாற்ற முடியும்.
படங்கள்: ப.குமாரபாண்டியன்