முதலிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2013

க.ப.(சி.ஏ.) படிப்பில் முதலிடம் : பிரேமாவுக்கு உரூ.10 இலட்சம்: முதல்வர்

.ப.(சி.ஏ.) படிப்பில் முதலிடம் பெற்ற பிரேமாவுக்கு உரூ.10 இலட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் செயலலிதா அறிவிப்பு



சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த, மும்பை வாழ் தமிழ் மாணவி பிரேமாவின் சாதனையைப் பாராட்டி ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில்:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வருகிறார். அவரது மகள் பிரேமா. அவர் அண்மையில் நடைபெற்ற சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்து எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்துக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித்துறையில் மிக உயரிய கல்வியாகக் கருதப்படும் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்த பிரேமாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதன், 23 ஜனவரி, 2013

மும்பையில் தமிழ் மகள் பட்டயக்கணக்குத்தேர்வில் (சி.ஏ.) முதலிடம்

 

மும்பையில் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டும் தமிழரின் மகள் அகில இந்தியப் பட்டயக்கணக்குத்தேர்வில்

(சி.ஏ.) முதலிடம்

மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள், அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்சி (சி.ஏ.) தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயகுமார் பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அவரது மகள் பிரேமா ஜெயகுமாரும், 22 வயது மகனும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.ஏ. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதில் பிரேமா ஜெயகுமார் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800க்கு 607 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், ""இது எனது வாழ்நாள் சாதனை. என்னைப் பொறுத்தவரை, வெற்றிக்கான சாவி என்பது கடின உழைப்புதான். எனது இந்த வெற்றிக்கு என் பெற்றோர்தான் காரணம்.
அவர்களின் ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்காக இவ்வளவு தூரம் பாடுபட்ட அவர்களை இனி வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். என் தந்தையையும், இல்லத்தரசியான தாயையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
அவர்கள் எனது மற்றும் என் தம்பியின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கும் நிலையை எப்போதும் ஏற்படுத்தியதில்லை'' என்று தெரிவித்தார். பிரேமாவின் சகோதரரும் சி.ஏ.வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முன்னதாக, மும்பை பல்கலைக்கழகம் நடத்திய பி.காம் மூன்றாம் ஆண்டுத் தேர்வில் பிரேமா 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


மும்பை: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.

சனி, 29 அக்டோபர், 2011

தேநீர்க்கடைக்காரர் மகள் பல்கலை அளவில் முதலிடம்

 
 
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2011,23:53 IST
திருப்பூர்:திருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் அருகே செட்டிபாளையம் டி.பி.என்., கார்டனை சேர்ந்தவர் மனோகர்; மனைவி அமுதராஜேஸ்வரி. இவர்களுக்கு மனோபிரியா (19); பிரீத்தி (17) என இரு மகள்கள். மனோகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.

மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் 2008-11ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தார். மூன்று ஆண்டுகளிலும் படிப்பில் சிறந்து விளங்கிய மனோபிரியா, அனைத்து செமஸ்டர்களிலும் சிறந்த மதிப்பெண்களுடன், 87.34 சதவீதம் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.மாணவி மனோபிரியா கூறியதாவது:சிக்-குன்-குனியா போன்ற எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின்றன.

மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், குமரன் கல்லூரியில் சேர்ந்து மைக்ரோ பயாலஜி படித்தேன். படிப்பை தவிர மற்ற நேரங்களில்தான் பொழுதுபோக்கு என்று எனக்கு நானே கட்டுப்பாடு ஏற்படுத்தி படித்தேன். பொருளாதார சிக்கல் வந்தபோதிலும், பெற்றோர் எனது படிப்புக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பாடங்கள் குறித்த சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர்கள் தீர்த்து வைத்தனர்.

அனைத்து பாடங்களுக்கும் குறிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினர். கல்வி மட்டுமின்றி, அவ்வப்போது "கவுன்சிலிங்' நடத்தி, இதர பிரச்னைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ததால், படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது குமரன் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி., மைக்ரே பயாலஜி படித்து வருகிறேன். எம்.எஸ்.சி.,யிலும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று, மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளேன், என்றார்.மாணவியின் பெற்றோர் கூறியதாவது:திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் துணிக்கடை வைத்திருந்தோம்; நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, டீக்கடை வைத்துள்ளோம்.

இரு மகள்களும் சிறு வயது முதல் நன்றாக படித்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். படிப்பிலும் சரி; வீட்டிலும் சரி, முழு சுதந்திரம் கொடுப்பதோடு, வியாபார நஷ்டங்களை பொருட்படுத்தாமல், அவர்களை படிக்க வைக்கிறோம். மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தாள். எங்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.

திருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., பி.எல்., படிக்கும் இளைய மகள் பிரீத்தி, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் சிறப்பாக வாதாடி, பரிசு மற்றும் சான்று பெற்றுள்ளார். கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக படித்து, முதலிடம் பெறுவது எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது, என்றனர்.பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி மனோபிரியாவுக்கு, கோவை பாரதியார் பல்கலை தங்கப்பதக்கம் வழங்க உள்ளது.