தாராளியமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாராளியமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (9)

தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

இனிய அன்பர்களே!

நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும்.

கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க முடியாது, சேர்த்தால் அது இயல்பான தமிழாக இருக்காது. முன்பெல்லாம் self-expansion என்பதை சுயபெருக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இரா. கிருட்ஷ்ணையா அவர்கள்தான் “சுயமும் பெருக்கமும் ஒட்டாது” என்று சொல்லி அதனைத் “தற்பெருக்கம்” என்று மாற்றச் செய்தார்.

தன் + பெருக்கம் = தற்பெருக்கம். ஆனால் முன்னொட்டாக ‘தற்’ சேர்ப்பது எல்லா இடத்திலும் ஒத்து வராது. தற்காலம் என்ற சொல் தொடர்ந்து தவறாகவே ஆளப்படுகிறது. என் எதிரில் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இருக்கிறது. இந்தத் தற்காலம் தன்+காலம் அன்று, தத்+காலம்  தான். ‘தத்’ என்றால் வட மொழியில் அந்த என்று பொருள். தற்காலம் என்றால் அந்தக் காலம் என்றாகிறது. இந்தக் காலத்தை மனத்திற்கொண்டு அந்தக் காலம் என்பதைக் குறிக்கும் தற்காலம் என்று எழுதுவது முரண் அல்லவா? Modern என்பதைத்தான் தற்காலம் என்று தவறாக எழுதுகின்றனர். இதற்கு நல்ல தமிழ்ச் சமன் புதுமக் காலம் என்பதே. புதுமக் காலத்துக்கு ஏற்ற புதுத் தமிழ்ச் சொல்லாக்கம் தேவை. தனித் தமிழ் அல்லது தூய தமிழ் என்பது பழந்தமிழ் என்றும் புதுத் தமிழ் என்றால் ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் கலந்த தமிழ் என்றும் கருதிக் கொள்வது வெறும் மயக்கமே. பழங்கவிதை என்றால் தூய செந்தமிழ் என்றும் புதுக் கவிதை என்றால் கலப்படத் தமிழ் என்றும் கருதிக் கொள்வதும் அப்படித்தான்.

சொல்லாக்கத்தில் வேற்றுமொழிச் சொல்லை அல்லது சொற்றொடரை அப்படியே ஒலிபெயர்த்துத் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் போது அப்படிச் செய்யலாம். ஆக்சிஜன், ஐட்ரஜன், மீத்தேன்  என்றெல்லாம் எழுதலாம், அறிவியல் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளும், பாதி தமிழ், பாதி வேற்றுமொழி என்று எழுதுவதுதான் மோசம். அறிவியலுக்கு மொழி பெரிதில்லை என்பது பிதற்றலே. சரியான மொழியில்தான் சரியான அறிவியல் பழகும்.

சரி, தாராளவியமா? தாராளியமா? என்ற வினாவிற்குத் திரும்புவோம். இரண்டு விதமாகவும் ஆளலாம் என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லியிருந்தார். புணர்ச்சி இலக்கணப்படி தாராளவியம்தான் சரி என்று சிபி சுட்டிக் காட்டினார். சிபி சொல்லும் இலக்கணம் சரியானதே என்று இலக்குவனார் திருவள்ளுவனார் ஏற்றுக் கொண்டார். ஆனால் தாராளியம் என்று பழகியிருந்தால் அதிலும் தவறில்லை என்றார். ஆக, தாராளவாதத்துக்கு விடை கொடுத்தனுப்பிய பிறகும், தாராளியமா? தாராளவியமா? என்ற கேள்வி எஞ்சியிருந்தது. எந்நேரமும் என் அருகில் அருங்கலைச்சொல் அகரமுதலியாக அமர்ந்திருக்கும் சொல்லாய்வறிஞர்  அருளியாரைக் கேட்டேன். தாராளிகம் என்றார். இது என்னய்யா புதிய சிக்கல்? தொலைப்பேசியில் சிக்கலைச் சொல்லி வைத்தேன். உடனே அவர் ஒன்றும் சொல்லவில்லை. காத்திருந்தேன். அவரிடமே கேட்க வேண்டும், அவர் சென்னை வந்தால் கேட்டு விடலாம்  எனக் காத்திருந்தேன். வரவில்லை. புதுவைக்கே சென்று கேட்டு வரலாமா? என்று கூட எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று தொலைப் பேசியில் அழைத்து அவரே விளக்கமாகப் பேசினார்:

தாராளம் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்? என்று பாவாணர் ஆராய்ந்தார். தார் என்றால் படை. ஆள் என்றால் படைத் தலைவன். (அல்லது படையாளாக கூட இருக்கலாம்) இந்தத் ‘தாராள்’ என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களாம். அவனது போக்கு தாராளம் எனப்பட்டது. தாராளம் என்பதன் வேர்ச்சொல் தாராள் ஆகையால் தாராள் + இயம் எனக் கொண்டால் தாராளியம் பெறப்படும். தாராளியம் என்பதில் தவறில்லை. தாராளம் + இயம் என்று பிரித்தால் தாராளவியம் என்றும் சொல்லலாம். நீங்கள் தாராளியம் என்று சொல்லிப் பழகியிருந்தால் அவ்வாறே தொடருங்கள்! தாராளமாகத் தொடருங்கள் என்றார்.

அப்படியானால், தாராளிகம் என்று அகரமுதலியில் கூறியுள்ளீர்களே? அப்படிச் சொல்வது தமிழ் மரபுக்கு உகந்ததே! வாணியத்தை வாணிகம் என்று சொல்வதில்லையா?

நாகரிகம் போல் தாராளிகம் எனக் கொள்ளலாம். நான் தாராளியம் என்றே எழுதியும் பேசியும் வருகிறேன். புதுத் தாராளியம் எதிர்ப்போம்! பழந்தாராளியத்தின் வரலாறு படிப்போம்! ஊழியர் கொள்கையில் மாவோ சொல்லும் தாராளியப் போக்குகளைக் களைவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 52

வெள்ளி, 17 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 42: சொல்லடிப்போம் வாங்க! (3)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (3)     

தாராளியமா?

தாராளவியமா?

தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்:

தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமா? மேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது.

*************************

சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன். யாரும் “நவ-தாராளவாதமே இருந்து விட்டுப் போகட்டும்” என்று சொல்லவில்லை என்பது நல்ல செய்தி. நவம் வேண்டாம். புதுச் சிந்தனைதான் வேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகிறோம். எஞ்சி நிற்கும் கேள்வி: தாராளவியமா? தாராளியமா? இரண்டுமே சரிதான், நாம் தாராளியத்தையே வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. சிபி சொல்வது போல் அது இலக்கணப் பிழையாக இருப்பின் தாராளவியத்துக்கு மாறிக் கொள்ளலாம், தாராளமாக!

தாராளியம் பிழையன்று என்றுதான் இலக்குவனார் திருவள்ளுவன் கூறியிருந்ததாகப் புரிந்து கொள்கிறேன். சொல்லாய்வறிஞர் அருளியார் தாராளிகம் என்கிறார். இது குறித்து அவரது விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

இது ஒருபுறமிருக்க… அடுத்து ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம்.

இரோசிமா நாகசாகியை

மறப்போமா? மன்னிப்போமா?

சப்பான் நாட்டு நகரங்களாகிய இரோசிமா, நாகசாகி மீது நேசக் கூட்டணியில் ஒரு நாடாகிய அமெரிக்க வல்லரசு அணுக்குண்டு வீசித் தாக்குதல் நிகழ்த்தியது. இரு குண்டுவீச்சுகள்! உலக வரலாற்றில் இதுவே முதல் அணுகுண்டுத் தாக்குதல். இதுவே கடைசியாகவும் இருந்து விட்டால் மாந்தக் குலத்துக்கே நிம்மதி. ஆனால் இன்றும் அணுவாய்தங்களால் பேரழிவு ஏற்படும் அச்சம் நீடிக்கிறது. இந்தப் பேரழிவைத் தவிர்க்க உறுதியாகப் போராட வேண்டிய தேவை உள்ளது. தன்னை அணுவாய்த வல்லரசாகப் பெருமை பேசும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அணுவாய்த மோகம் கொண்டவர்களை அறிவியல் பேரறிஞர்களாக மதிக்கும் நாடு! வெட்கம்!

இந்தப் பின்னணியில் இரோசிமா நாகசாகியை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது என்று நமக்கு நாம் உறுதியேற்கவும், எதிர்காலத் தலைமுறைகளை உறுதியேற்கவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இரோசிமா நாகசாகியை ஞாயப்படுத்தும் முயற்சிகள் புதியவை அல்ல. குண்டுவீசிய காலத்திலேயே அமெரிக்க வல்லரசு அதனை ஞாயப்படுத்தி அறிக்கை விட்டது: இந்த அணுக்குண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாம்! சப்பான் மீது அணுக்குண்டு போட்டுப் பேரழிவை உண்டாக்காம லிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்குமாம். அதன்மூலம் இன்னுங் கூடுதலான  மக்கள் இறந்திருப்பார்களாம்!  பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டதாம் அமெரிக்கா!  இந்தப் பெரும்  படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை சரிதானா?

இரண்டாம் உலகப் போரில் செருமனி, இத்தாலி ஆகியவற்றுடன் சேர்ந்து சப்பான் உக்கிரமாகப் போரில் குதித்தது.  பசிபிக்கு கடல் வட்டாரத்தில் முத்துத் துறைமுகத்தில் (Pearl Harbour)  நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்து அமெரிக்காவையும் முழுமூச்சான போரில் இழுத்து விட்டது.  இது  நடந்தது 1941 திசம்பர் 7ஆம் நாள்.

அமெரிக்கா தான் புதிதாகக் கண்டு படைத்திருந்த அணுகுண்டுகளை வீசியது: இரோசிமா – 1945 ஆகட்டு 6ஆம் நாள்; நாகசாகி – ஆகட்டு 9ஆம் நாள். முத்துத் துறைமுகத்தில் சப்பானால் தாக்கப்பட்டது ஒரு போர்க்கப்பல்! இரோசிமா நாகசாகியில் அமெரிக்க அணுக்குண்டு வீச்சுகளால் பல்லாயிரக்கணக்கில் எரிந்து சாம்பலானவர்கள் –– சாம்பலும் கூட மிஞ்சாமல் ஆவியாகிப் போனவர்கள் பொதுமக்கள்! அதற்கு இது பழிதீர்ப்பு என்றால் நியாயம்தானா? கேட்போம்.

_____ “ எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த உள்ளமும் எண்ணிப் பார்க்காத, எந்தச் சொல்லும் சொல்ல முடியாத கொடுமை இது! இன்றைய தேவை ஆணைகளோ சொற்பொழிவுகளோ கட்டுரைகளோ அல்ல! இக்கணமே மாநகரக் காவல் ஆணையரும் காவல் துறைத் தலைமை இயக்குநரும் இடைநீக்கம் செய்யபட வேண்டும். இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் காப்பாற்ற உடனே பதவி துறக்க வேண்டும் “ ______

இது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியர் வி.ஆர். கிருட்டிணய்யர் கூறியது.

ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அப்படி என்ன நடந்தது? நினைவிருக்குமானால் எழுதுங்கள்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 27