தாழிமடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாழிமடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 88 : காந்தி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் தோழர்கள் வாலாசா வல்லவனும் முகிலனும் மற்றவர்களும் தொடர்ந்து உழைக்கின்றார்கள். ‘சிந்தனையாளன்’ தொடர்ந்து வருகிறது. இவ்வாண்டு பொங்கல் மலரில் எனக்குச் “சாதியத்தை எதிர்ப்பதில் காந்தி-அம்பேத்கர் முரண்” என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். இன்று காலைதான் எழுதி முடித்து அனுப்பி வைத்தேன். பட்டி அடைக்குமுன் கடைசி மாடாக இருக்கக் கூடும். பொறுமையாகக் காத்திருந்தார்கள் வல்லவனும் முகிலனும். அந்தக் கட்டுரையின் முகன்மைப் பகுதிகள் இரண்டை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்:

1.  காந்தியின் வன்முறை

1932 ஆகட்டு 16ஆம் நாள் பிரித்தானியத் தலைமையமைச்சர் இராம்சே மக்குடொனால்டு அறிவித்த வகுப்புவாரித் தீர்வு (Communal Award):

முற்பட்டசாதிகள், முசுலிம்கள், சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தீண்டப்படாதார் என்று ஒவ்வொரு குழுவுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கொதித்தெழுந்தார் மகாத்துமா! மற்ற எந்தக் குழுவுக்கும் ஒதுக்கீடு வழங்குவதுபற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்குவதை மட்டும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். வெறும் அறிவிப்போடு நிற்க வில்லை. சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி விட்டார்.

அம்பேத்துகருக்கு மிகப்பெரும் நெருக்கடி! காந்தி உயிரிழந்தால் பழி அம்பேத்கரைச் சாரும். அதை விடவும் மோசம், இந்துக்களின் சினம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திரும்பும். பெரும் படுகொலைகள் நிகழலாம். நெருக்கடி அம்பேத்துகருக்குத்தானே தவிர, பிரித்தானிய அரசுக்கல்ல, விட்டுக் கொடுங்கள் என்று தேசியத் தலைவர்களும் தலித்து தலைவர்களும் கூட அம்பேத்துகரை வலியுறுத்தலானார்கள். என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்று அம்பேத்துகருக்கு அறிவுரை சொன்ன ஒரே ஒருவர் பெரியார் மட்டுமே. கடைசியாக அம்பேத்துகர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதி என்ற அம்பேத்துகர் கனவைப் பலியிட்டு காந்தி பிழைத்துக் கொண்டார்..   

காந்தியின் அகிம்சைக் கொள்கை பொய்மையானது என்பதற்குச் சான்றாகச் சில நிகழ்வுகளை அவரின் குற்றாய்வர்கள் எடுத்துக் காட்டுவதுண்டு. ஆனால் என் பார்வையில் அவரது பூனா உண்ணாநோன்புதான் மிகப்பெரும் சான்று. அது ஒரு வன்முறை அச்சுறுத்தல், அம்பேத்துகரை வீழ்த்துவதற்காகப் பாமர தலித்துகளுக்கு காந்தி விடுத்த வன்முறை மிரட்டல். உளத்தியல் வன்முறை.

2.  காந்திக் கொலையின் உட்பொருள்

காந்தியைக் கொன்றவர்கள் மதவெறியர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்து மத வெறிக்குள் மறைந்திருப்பது சாதி வெறியே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்து மதவாதிகள் இசுலாத்தையும் கிறித்துவத்தையும் வெறுப்பது ஏன்? அவர்கள் வெறுப்பது அல்லாவையோ இயேசுவையோ அல்ல. அந்த மதங்களில் சேர்ந்த கீழ்சாதியினர், இழிகுலத்தவர் மீதான வெறுப்புதான் அந்த மதங்களின் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது.

இப்படிப் பார்க்கும் போது காந்தி மீதான வன்மத்தின் வேர்மூலம் சிறுபான்மை மதங்களில் சேர்ந்த மக்கள் மீதான வெறுப்பின் வெளிப்பாடுதான். முசுலிம்களிடம் காந்தியாரின் பரிவு என்பதும் முசுலிமாக மாறிய எளிய ஒடுக்குண்ட மக்கள் மீதான பரிவாகவே புரிந்து கொள்ளப்படும். இது காந்திக்குப் புரிந்ததோ இல்லையோ சவர்க்கருக்கும் கோட்சேக்கும் புரிந்திருந்தது. தெளிந்த சாதியொழிப்புப் பார்வையே இல்லாவிட்டாலும் காந்தியாரின் உயிரீகம் இந்துமத வெறிக்கு எதிரானது மட்டுமல்ல; பார்ப்பன வர்ண-சாதி வெறிக்கும் எதிரான ஒன்று.

(தொடரும்)

தோழர்  தியாகு
தரவு : தாழி மடல் 55

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 86: வாலாசா வல்லவன் பகிரும் திருக்குறளைப் போற்றும் பெரியார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 85 தொடர்ச்சி)

பெரியாரும் திருக்குறளும் 1/2

அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார்

இன்று காலை பெ.ம.வின் அடிப்பொடி கதிர்நிலவன் “பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார், இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாகப்  பதிவிடும்படி கேட்டேன். அவர் பதியவில்லை. ஆனைமுத்து ஐயா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து முழுமையாகப் பதிவிட்டுள்ளேன்.

“குறளும் – நானும்”

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். 

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல்!’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் “அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?” என்று பதில் கூறுவேன். 

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு – அறிவாளி என்றால் பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு – நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகிய போது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான், ‘இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே!’ என்று கேட்டேன். ‘அது பரிமேலழகரின் உரை; அது குறளாசிரியர் கருத்தல்ல’ என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதி விட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள். 

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக் கொண்டல்ல; ‘நான் சொல்லுகிற கருத்து- அதிலும் இருக்கிறது பார்!’ என்று கூறி வந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன். 

புராணக் கருத்துகளிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்த பின், மூடக் கருத்துகள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரசாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு-பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன். 

‘குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்?’ என்று கேட்காதீர்கள். நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் – நான் குறளை ஆதரிக்கிறேன்; அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ள மாட்டேன். 

உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்;  கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. 

குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன். 

ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்களை மாத்திரந்தான் வாங்கிவருவோம். அது போலவே, குறளில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன். 

குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம் ; இருக்க முடியும். ஏனென்றால், அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாதிரி அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவ ரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் மின் விளக்கு, ஒலிபெருக்கி, இயக்கி முதலியவற்றைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால், ‘எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்’ என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருசரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம். 

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும். 

அந்தப்படியிருக்க, 2000 ஆண்களுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி; என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள் – நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா? 

காலத்திற்கு ஏற்ற முறையில்தான் எண்ணங்களின் விரிவும், கொள்கை, திட்டங்களும் இருக்க முடியும். போர் முறை பற்றித் திருவள்ளுவர் வில்,  வாள்,  வேல்,  கேடயம் என்ற ஆயுதங்களை வைத்துத்தானே எழுதியிருக்கிறார்? இன்று எழுதப்பட்டால் அணு குண்டைப் பற்றி எழுதுவார்கள் ; நாளைக்கு வேறொன்று. இந்தப் படியாகத்தானே மாறிக் கொண்டே போகும்! அப்படியிருக்க, எதையும் மாற்றக் கூடாது என்பது என்ன நியாயம்? ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக – குறளே நம்முடைய மதமாக இருந்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே – பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கி விட்டார்கள். 

இந்து மதத்தில் எந்தக் காரியங்களைச் செய்தவராக இருந்தாலும், அதிசயமான அற்புதமான-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர்களின் பிறவியில் – வரலாற்றில் புகுத்துவார்கள். இவன் குதிரைக்குப் பிறந்தான்; இவன் குரங்குக்குப் பிறந்தான்; இவன் யானைக்குப் பிறந்தான்; இவன் செத்துப் போனவனை உயிர் மீட்டு எழச்செய்தான்; இவன் மண்ணைச் சர்க்கரையாக்கினான்; குருடனுக்குக் கண் கொடுத்தான் – என்பது போன்ற அதிசயங்களைப் புகுத்தி விடுவார்கள். ஏனென்றால், அப்போதுதான் அதிலிருக்கும் குற்றங் குறைகள் பற்றி – ஆபாசங்கள் பற்றி யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோடு! 

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (9)

தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

இனிய அன்பர்களே!

நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும்.

கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க முடியாது, சேர்த்தால் அது இயல்பான தமிழாக இருக்காது. முன்பெல்லாம் self-expansion என்பதை சுயபெருக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இரா. கிருட்ஷ்ணையா அவர்கள்தான் “சுயமும் பெருக்கமும் ஒட்டாது” என்று சொல்லி அதனைத் “தற்பெருக்கம்” என்று மாற்றச் செய்தார்.

தன் + பெருக்கம் = தற்பெருக்கம். ஆனால் முன்னொட்டாக ‘தற்’ சேர்ப்பது எல்லா இடத்திலும் ஒத்து வராது. தற்காலம் என்ற சொல் தொடர்ந்து தவறாகவே ஆளப்படுகிறது. என் எதிரில் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இருக்கிறது. இந்தத் தற்காலம் தன்+காலம் அன்று, தத்+காலம்  தான். ‘தத்’ என்றால் வட மொழியில் அந்த என்று பொருள். தற்காலம் என்றால் அந்தக் காலம் என்றாகிறது. இந்தக் காலத்தை மனத்திற்கொண்டு அந்தக் காலம் என்பதைக் குறிக்கும் தற்காலம் என்று எழுதுவது முரண் அல்லவா? Modern என்பதைத்தான் தற்காலம் என்று தவறாக எழுதுகின்றனர். இதற்கு நல்ல தமிழ்ச் சமன் புதுமக் காலம் என்பதே. புதுமக் காலத்துக்கு ஏற்ற புதுத் தமிழ்ச் சொல்லாக்கம் தேவை. தனித் தமிழ் அல்லது தூய தமிழ் என்பது பழந்தமிழ் என்றும் புதுத் தமிழ் என்றால் ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் கலந்த தமிழ் என்றும் கருதிக் கொள்வது வெறும் மயக்கமே. பழங்கவிதை என்றால் தூய செந்தமிழ் என்றும் புதுக் கவிதை என்றால் கலப்படத் தமிழ் என்றும் கருதிக் கொள்வதும் அப்படித்தான்.

சொல்லாக்கத்தில் வேற்றுமொழிச் சொல்லை அல்லது சொற்றொடரை அப்படியே ஒலிபெயர்த்துத் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் போது அப்படிச் செய்யலாம். ஆக்சிஜன், ஐட்ரஜன், மீத்தேன்  என்றெல்லாம் எழுதலாம், அறிவியல் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளும், பாதி தமிழ், பாதி வேற்றுமொழி என்று எழுதுவதுதான் மோசம். அறிவியலுக்கு மொழி பெரிதில்லை என்பது பிதற்றலே. சரியான மொழியில்தான் சரியான அறிவியல் பழகும்.

சரி, தாராளவியமா? தாராளியமா? என்ற வினாவிற்குத் திரும்புவோம். இரண்டு விதமாகவும் ஆளலாம் என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லியிருந்தார். புணர்ச்சி இலக்கணப்படி தாராளவியம்தான் சரி என்று சிபி சுட்டிக் காட்டினார். சிபி சொல்லும் இலக்கணம் சரியானதே என்று இலக்குவனார் திருவள்ளுவனார் ஏற்றுக் கொண்டார். ஆனால் தாராளியம் என்று பழகியிருந்தால் அதிலும் தவறில்லை என்றார். ஆக, தாராளவாதத்துக்கு விடை கொடுத்தனுப்பிய பிறகும், தாராளியமா? தாராளவியமா? என்ற கேள்வி எஞ்சியிருந்தது. எந்நேரமும் என் அருகில் அருங்கலைச்சொல் அகரமுதலியாக அமர்ந்திருக்கும் சொல்லாய்வறிஞர்  அருளியாரைக் கேட்டேன். தாராளிகம் என்றார். இது என்னய்யா புதிய சிக்கல்? தொலைப்பேசியில் சிக்கலைச் சொல்லி வைத்தேன். உடனே அவர் ஒன்றும் சொல்லவில்லை. காத்திருந்தேன். அவரிடமே கேட்க வேண்டும், அவர் சென்னை வந்தால் கேட்டு விடலாம்  எனக் காத்திருந்தேன். வரவில்லை. புதுவைக்கே சென்று கேட்டு வரலாமா? என்று கூட எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று தொலைப் பேசியில் அழைத்து அவரே விளக்கமாகப் பேசினார்:

தாராளம் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்? என்று பாவாணர் ஆராய்ந்தார். தார் என்றால் படை. ஆள் என்றால் படைத் தலைவன். (அல்லது படையாளாக கூட இருக்கலாம்) இந்தத் ‘தாராள்’ என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களாம். அவனது போக்கு தாராளம் எனப்பட்டது. தாராளம் என்பதன் வேர்ச்சொல் தாராள் ஆகையால் தாராள் + இயம் எனக் கொண்டால் தாராளியம் பெறப்படும். தாராளியம் என்பதில் தவறில்லை. தாராளம் + இயம் என்று பிரித்தால் தாராளவியம் என்றும் சொல்லலாம். நீங்கள் தாராளியம் என்று சொல்லிப் பழகியிருந்தால் அவ்வாறே தொடருங்கள்! தாராளமாகத் தொடருங்கள் என்றார்.

அப்படியானால், தாராளிகம் என்று அகரமுதலியில் கூறியுள்ளீர்களே? அப்படிச் சொல்வது தமிழ் மரபுக்கு உகந்ததே! வாணியத்தை வாணிகம் என்று சொல்வதில்லையா?

நாகரிகம் போல் தாராளிகம் எனக் கொள்ளலாம். நான் தாராளியம் என்றே எழுதியும் பேசியும் வருகிறேன். புதுத் தாராளியம் எதிர்ப்போம்! பழந்தாராளியத்தின் வரலாறு படிப்போம்! ஊழியர் கொள்கையில் மாவோ சொல்லும் தாராளியப் போக்குகளைக் களைவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 52

புதன், 5 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 61 - சமந்தா எழுதுகிறார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்

பொருளியல்:

1.   தொழிலாளர் உரிமைக் குரல்

Ø   இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை  (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு.

இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான  10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான  சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி, தேசிய மாநாடு நடத்தி, நரேந்திர மோதி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்க்கத் திட்டமிட்டுள்ளன. தொழிலாளர்களை மேலும் அணிதிரட்டுவது, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று இந்து மசுதூர் அவையின்பொதுச் செயலாளர் அர்பசன் சிங்கு சித்து கூறியுள்ளார்.

 தாங்கள் முன்வைத்த எந்தவொரு சிக்கலுக்கும் அரசு சரியாக விடையிறுக்கவில்லை. என்றும், நான்கு தொழிலாளர் சட்டங்களின் பெரும்பாலான விதிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவானவை அல்ல என்றும், அவை முதலாளிகளுக்கு நன்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். பல வருடங்களாக இந்தியத் தொழிலாளர் மாநாடு கூட்டப்படாமல் உள்ளது. மற்றொரு சிக்கல் என்னவென்றால், தே.தொ.அ.(இரா.சே.ச. )ஆதரவு பாரதிய மசுதூர் சங்கம்  கு.20(G 20) இன் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் த(எல்)-20 இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இச்சிக்கலை அனைத்துத் தொழிற்சங்கங்களும் கிளப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.அ.(HMS) முதலான   தொழிற்சங்கங்கள், தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் குறித்தும், இந்தியத் தொழிலாளர் மாநாடு போன்ற முத்தரப்புக் கூட்டங்கள் நடத்தப்படாதது குறித்தும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கம் குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.

2.    எண்ம (DIGITAL) ஏற்றத் தாழ்வு

Ø  புதிய ஆஃசா குழு அறிக்கை – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022: எண்மப் பிரிவினை. பெண்கள், வேலையில்லாதோர், சிற்றூர்ப்புற ஏழைகள் எண்மப் பிரிவினையால் பின்னடைந்துள்ளனர் என்கிறது புதிய ஆஃசா குழு அறிக்கை. இந்தியாவில் சாதி, பாலினம், இருப்பிடம், வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக உள்ளன.  “இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை, 2022: ப் பிரிவினை” என்ற தலைப்பில் இந்தியா பற்றிய புதிய ஆஃசா குழு அறிக்கையின்படி, தற்போது எண்ம வெளியிலும் பிரிவினை பரந்த அளவில் காணப்படுகின்றது.

Ø  இந்த அறிக்கையின் படி 2021ஆம் ஆண்டில் ஆண்களில் 61 விழுக்காட்டினர் கைபேசி வைத்திருந்தனர், ஆனால் பெண்களில் வெறும் 31 விழுக்காட்டினர் மட்டுமே கைபேசி வைத்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள், நகர்ப்புறத்தில் வசிப்போர், ‘உயர்சாதியினர்’, உயர்வகுப்பினர்க்கே எண்மத் தொழில்நுட்பங்களை அணுகக்கூடிய வாய்ப்பு உள்ளது. சாதி அடிப்படையில் பார்த்தால் பொதுப் பிரிவில் 8 விழுக்காட்டினர் கணிணி அல்லது மடிக் கணிணி வசதியைப் பெற்றிருந்தாலும், பட்டியலினத்தவரில் பட்டியல் சாதிப் பிரிவினரில் 2 விழுக்காட்டினராலும் பட்டியல் பழங்குடியினரில் 1 விழுக்காட்டினராலும் மட்டுமே கணிணி அல்லது மடிக் கணிணி வாங்க முடிந்துள்ளது.

Ø  2021ஆம் ஆண்டில் ஊதியம் பெறும் நிரந்தரத் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினரிடம் கைபேசி இருந்ததாகவும், ஆனால் வேலையில்லாதவர்களில் 50 விழுக்காட்டினரிடம்  மட்டுமே அது இருந்தது என்றும் புதிய ஆஃசா குழு அறிக்கை கூறுவது வேலைவாய்ப்புக்கும் எண்மப் பிரிவினைக்குமான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.

Ø  பொதுவாக நம்பப்படுவது போலல்லாமல், சிற்றூர்ப்புறங்களில் கணினிச் சாதனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மகுடைக்(கோவிட்டு) கொள்ளை நோய்க்கு முன்னர் சிற்றூர்ப்புற மக்களில் 3 விழுக்காட்டினர் கணிணி வைத்திருந்தனர், மகுடை(கோவிட்டு)க்குப் பிறகு இது 1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

Ø  கல்வி, நலவாழ்வு போன்ற இன்றியமையாச் சேவைகளை வழங்குவதில் எண்மத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் நாட்டின் எண்மப் பிளவும், அதன் விளைவுகளும் எதிரொலிக்கிறது. 2020 செட்டம்பரில் பொதுமுடக்கத்தின் போது ஐந்து மாநிலங்களில் நடத்திய விரைவான கணக்கெடுப்பின்படி, 82% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எண்மக் கல்வி கிடைக்கச் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பலை(சிக்னல்), இணைய வேகம் தனியார் பள்ளிகளில் மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அரசுப் பள்ளிகளில், 80% பெற்றோர்கள் பொதுமுடக்கக் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 84% அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதனங்கள், இணைய வசதி இல்லாததால் இணைய ஊடகங்கள் மூலம் கல்வியளிப்பதில் சிரமப்பட்டுள்ளனர்.

Ø  “எண்மத் தொழில்நுட்பங்கள் பொது சேவைகள், திட்டங்களை மேலும் அணுகக் கூடியவையாக மாற்ற வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை பணக்காரர்களுக்கும் சலுகை பெற்றவர்களுக்குமே எண்மத் தொழில்நுட்பங்கள் அணுகக்கூடியவையாக உள்ளன என்பதையே அறிக்கை.  எடுத்துக்காட்டுகிறது. கல்வியறிவு இல்லாத ஒருவருடன் ஒப்பிடும் போது முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் தொலைபேசி வைத்திருப்பதற்கான வாய்ப்பு 60% அதிகம் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது” என்று ஆஃசா குழு(ஆக்குசுபாம்)-இந்தியா தலைமை நிருவாக அதிகாரி அமிதாப்பு பெஃகர் கூறியுள்ளார்.

Ø  “இந்தியாவில் உயர்ந்து வரும் சமத்துவமின்மை எண்மப் பிளவு காரணமாக மேலும் உயர்ந்துள்ளது. சாதனங்கள், இணையம் இல்லாதவர்கள் கல்வி, நலவாழ்வு மற்றும் பொதுச் சேவைகளை அணுகுவதில் உள்ள இடர்ப்பாடுகளால் மேலும் ஓரங்கட்டப்படுகிறார்கள். சமத்துவமின்மையின் இந்தத் தீய சகடம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்றும் அமிதாப்பு பெஃகர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் எண்ம  அகக்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆஃசா குழு வலியுறுத்தியுள்ளது, இணையத்தை அணுகக் கூடியதாக மாற்றுவதோடு, திறன்பேசிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இனிய அன்பர்களே!

பொ ந பி (EWS) இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஐவர் ஆயத்தின் பெரும்பான்மைக் கருத்துடன் மாறுபாட்டுக் கருத்துரைத்த இரு நீதியரில் ஒருவர் இரவீந்திர பட்டு.. அவரது தீர்ப்புரையில் முதல் பத்தியின் முகன்மை கருதி அதனை ஆங்கிலத்தில் அவர் எழுதியவாறே தருவதோடு, அதற்கான என் தமிழாக்கத்தையும் படைக்கிறேன்:   

I regret my inability to concur with the views expressed by the majority opinion on the validity of the 103rd Amendment on Question No. 3, since I feel – for reasons set out elaborately in the following opinion – that this court has for the first time, in the seven decades of the republic, sanctioned an avowedly exclusionary and discriminatory principle. Our Constitution does not speak the language of exclusion. In my considered opinion, the amendment, by the language of exclusion, undermines the fabric of social justice, and thereby, the basic structure.

தமிழில்:

அரசமைப்புச் சட்டத்துக்கான 103ஆம் திருத்தம் கேள்வி எண் 3இன் அடிப்படையில் செல்லுபடியாவது பற்றிய பெரும்பான்மை நீதியர் தீர்ப்பில் சொல்லியிருக்கும் கருத்துகளோடு உடன்பட இயலாமைக்கு வருந்துகிறேன். ஏனென்றால் இந்தியக் குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த நீதிமன்றம் வெளிப்படையாகவே ஒரு பகுதியினரை மட்டும் விலக்கி வைப்பதும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுமான ஒரு கொள்கைக்கு இடமளித்துள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த என் கருத்துக்குரிய காரணங்களைக் கீழ் வரும் என் தீர்ப்புரையில் விரிவாகத் தருகின்றேன். நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைத்தலின் மொழி பேசாது. இந்தச் சட்டத் திருத்தம் விலக்கி வைத்தலின் மொழி பேசுவதால் சமூக நீதியின் நெசவியலையும், எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது என்பது என் தீர்க்கமான கருத்து.

offends the basic structure…

ஆய்வுக்குரிய கேள்வி எண் மூன்று:

“அல்லாத பிற” என்ற விலக்கி வைக்கும் தன்மையிலான விதி         அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தாக்குகிறதா?

 [குறிப்பு: பொநபி இட ஒதுக்கீடு குறித்து நாம் நடத்திய இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய மேனாள் நீதியர் அன்பர் அரி பரந்தாமன் அவர்கள் நீதியர் இரவீந்திர பட்டின் இந்தக் குற்றாய்வைச் சிறப்பாக எடுத்துக் காட்டினார். பட்டுக்கே தெரிகிறது, இந்தியவாத இடதுசாரிகளுக்குத் தெரியவில்லையே!]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 37

செவ்வாய், 14 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 36 : சொல்லடிப்போம், வாங்க!

 


ஃஃஃ       14 March 2023      அகரமுதல



 (தோழர் தியாகு எழுதுகிறார் 35 தொடர்ச்சி)

சொல்லடிப்போம், வாங்க!

கலைச் சொல்லாக்கம் என்பது அறிவியல் கல்விக்கு இன்றிய மையாதது. இயற்கை அறிவியல் ஆனாலும் குமுக அறிவியல் ஆனாலும் கலைச் சொற்களைத் தவிர்த்துப் பயிலவோ பாடம் சொல்லவோ முடியாது. ஒவ்வொரு மொழியும் அடிப்படையான ஒரு சொற்களஞ்சியத்தைக் கொண்டு இயங்குகிறது. சொற்களஞ்சியத்தின் செழுமை மொழிவளத்தைப் புலப்படுத்தும்.

ஆனால் எவ்வளவுதான் வளம்பொருந்திய மொழி என்றாலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கப் புதிய சொற்கள் வார்க்க வேண்டிய தேவை எழுந்தே தீரும். அப்படிச் செய்யும் போது அந்தந்த மொழிக்கும் உரிய சொல்லமைதிக்கு இணங்க புதிய சொற்களை அமைக்க வேண்டும். காலந்தோறும் வளர்ந்து செல்லும் அறிவியலின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சொல்லாட்சியில் மாற்றங்கள் செய்யத் தயங்கக் கூடாது.

கலைச் சொல்லாக்கம் குறித்து பிரெடெரிக்கு எங்கெல்சு மூலமுதல் முன்னுரையில் சொல்லியிருப்பதைப் பிறகு எடுத்துக்காட்டுவேன். மூலமுதல் தமிழாக்கத்தின் போக்கில் எனக்கு ஏற்பட்ட பட்டறிவும் சுட்டத் தகும். தேவையைப் பொறுத்து இந்த உரையாடலின் போக்கில் தக்க எடுத்துக் காட்டுகளோடு இவை குறித்தெல்லாம் பேசலாம்.

புதிய கலைச் சொற்களை வார்த்தல் அல்லது வடித்தல் என்பதை ஆங்கிலத்தில் COINING என்பர். தமிழில் நான் “சொல்லடித்தல்” என்கிறேன். வேறு சொல்லடிப்பதானலும் அடியுங்கள், காய்ச்சி அடியுங்கள்.

தாழி மடலில் சொல்லடிக்க ஓரிடம் ஒதுக்கி வைப்போம். நாள் தவறாமல் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்து சொல்லடிப்போம்!

மொழியாக்கம் என்பது வெறும் மொழிபெயர்ப்பு அன்று, அது சிக்கல்களைத் தீர்த்துச் செல்லும் செயல்வழி (It is a process of problem-solving) என்று மூலமுதல் தமிழாக்கப் பதிப்பாசிரியர் இரா. கிருட்டிணையா  சொல்வார். ஒவ்வொரு சிக்கலாகத் தீர்க்கப் பார்ப்போம்.

  • 1.நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா?
  •  2. அண்மையில் நவம்பர் 25ஆம் நாள் தோழர் ஏ.எம்.கே நினைவு நாளில் சென்னையில் பாட்டாளி வர்க்க சமரன் அணியின் சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினேன். வெளியிடப்பெற்ற நூலின் தலைப்பு: நவ-தாராளவாத ஏகாதிபத்தியம்: முதலாளித்துவப் பேரழிவின் உச்சக்கட்டம். இரு பாகங்களாக வெளியிடப் பெற்ற இந்நூலின் பேசுபொருள் குறித்து ஈண்டு நான் அலசப் போவதில்லை. இந்நூலின் சொல்லாட்சி, குறிப்பாக அதன் தலைப்புதான் சொல்லடிக்கும் முனைப்பில் நம் கவனம் கோரி நிற்கிறது.   
நவ-தாராளவாதம் என்பதில் நவம், தாராளம், வாதம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றில் முதலும் கடைசியும் தமிழல்ல. நவம் என்பதற்கு இரு பொருள் உண்டு. நவசக்தியில் புதியது. நவராத்திரியில் ஒன்பது. தாராளம் தமிழ்தான். நவம் என்பதற்கு புது என்ற தமிழ்ச் சொல் இருக்க நவம் என்ற பிறமொழிச் சொல் எதற்கு? புதுத் தாராளவாதம் என்று சொல்லலாம்தானே? ஆங்கிலத்தில் வரும் …ism வாதம் ஆகிறது. இதுவும் தேவையற்றதே! “…இயம்” என்ற பின்னொட்டு போதுமானது. நவ-தாராளவாதம் என்றும் புதுத் தாராளியம் என்றும் மாறி மாறிச் சொல்லிப் பாருங்கள். எது வாய்க்கு வழங்குகிறது? தமிழ்ச் சொற்கள்தாம் தமிழ் நாவில் இயல்பாகத் தவழும். நாவில் தேன் தடவலாம். மருந்தையும் தேன் கலந்து தடவலாம். ஆனால் கல்லைப் போட்டு உருட்ட முடியாது.  

தாராளவாதம் என்பதில் பிற்பாதி தமிழன்று என்பது மட்டுன்று. அது ஒரு வாதமில்லை. Capitalism என்பது போல் அது ஓர் அமைப்பு அல்லது முறைமை. முதலாளித்துவம் அல்லது முதலாளியம் என்பதை முதலாளிவாதம் அல்லது மூலதன வாதம் அல்லது முதல்வாதம் என்று சொல்ல முடியாது அல்லவா? ‘(இ)லிபரலிசம்’ என்பது ஓர் அமைப்பு அல்லது முறைமை. அஃது ஒரு வாதமாகவும் இருக்கலாம், ஆனால் வெறும் வாதமன்று. அடிப்படையில் ஒரு கட்டமைப்பு, புறஞ்சார்ந்த கட்டமைப்பு (objective structure). அதற்கு ஆதரவான கொள்கை என்பது பிறகுதான்.

வாதம் வேண்டா, இயம்தான் என்றாலும் தாராளவியம் என்றுதானே சொல்ல வேண்டும், ஏன் தாராளியம் என வேண்டும்? தாராளம் + இயம் = தாராளவியம். சரிதான். மாற்றாக, தாராளியம் என்று சொல்லவும் புணர்ச்சி இலக்கணத்தில் இடமுண்டு. இரண்டில் எது என்பதை ஒலிநயம் சார்ந்து முடிவு செய்யலாம்.

புதுத் தாராளியம் என்கிறேன். புதுத் தாராளவியம் என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள். நவ-தாராளவாதம் வேண்டாவே!

தாராளியம் என்பதில் இலக்கணப் பிழையில்லை என்று அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்கிறார். அருங்கலைச் சொல் அகர முதலியில் அருளியர் liberalism என்பதற்குத் தாராளிகம் என்று பொருளுரைக்கிறார்.

சொற்கள் எழுத்துகளின் செயற்கையான வெறும் சேர்க்கையன்று. அவற்றுக்குள் வரலாறு உறைந்துள்ளது. Liberal என்ற சொல்லின் வரலாறு தெரிந்தால்தான் liberalism சரியாகத் தமிழுக்கு வரும். புதுத் தாராளவாதம் என்ற ஒன்று உண்டென்றால், பழைய தாராளவாதம் இருந்திருக்க வேண்டுமே? அந்த வரலாறு தெரியாமல் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாது. பார்ப்போம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்

திங்கள், 13 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 34 : படிப்பொலிகள்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 33 தொடர்ச்சி)

படிப்பொலிகள்

இனிய அன்பர்களே!

தாழி மடலில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும், எப்படியெல்லாம் இடம் பெற வேண்டும் என்பது குறித்து வேறுபட்ட சில முன்மொழிவுகள் வந்துள்ளன. எல்லாவற்றையும் நான் கருத்தில் கொள்கிறேன். சிலவற்றை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன்.

மதுரையிலிருந்து தோழர் இரவிச்சந்திரன் எழுதுகிறார்:

தோழர் தியாகுவுக்கு. தங்களின் ‘தாழி மடல்’ தொடர்ந்து வாசிக்கின்றேன்.

தோழர்களோடு நாள்தோறும் உரையாடுவதற்கான மிகச்சிறந்த வடிவம் மடல் வரைதல். கைபேசியில் வாசிப்பதற்கும் மிக வசதியாக சுருக்கமாகவும் நிறைவாகவும் இருக்கிறது.

தங்களின் தூய தமிழ்ப் பதங்களின் பயன்பாடு வாசிப்பின் ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, எழுத்தின் நடைக்கு ஒரு நிறைவைத் தருகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் அருணாச்சலம் ஐயா வெளியிட்ட ‘நந்தன்’ என்ற மாத இதழ் உங்களுக்கு நினைவிருக்கும். அரசியல் பயில ஆரம்பித்திருந்த இளம் தோழர்களுக்கு இடதுசாரி அரசியல், பகுத்தறிவு அரசியல், தேசிய இன அரசியல் எனப் பலவற்றை பல்வேறு படைப்பாளிகளைக் கொண்டு மிக எளிமையாக அறிமுகம் செய்தது நந்தன். அரசியல் அடிப்படை பயில உதவியாக இருந்தது மட்டுமல்ல, பல இளம் வாசகர்களைத் தன்னை நோக்கி ஈர்த்தது. அந்த நந்தனின் இடத்தை உங்களின் தாழிமடல் தற்போது நிரப்புகிறது.

தாழி மடல் பல இளம் வாசகர்களை ஈர்க்கவல்லது.

மேலும் தங்களிடமிருந்து நாங்கள் கேட்பதற்கும், எங்களுக்குக் கூறுவதற்கு உங்களிடமும் நிறையவே உள்ளன. தமிழக அரசியல் வரலாறு, இடதுசாரி இயக்கங்களின் மாற்றங்கள், மொழிப் போர், மார்க்கியம், மொழிபெயர்ப்பு, அரசியல் ஆளுமைகள் என பலவற்றைப் பற்றி நிறைய எழுதுங்கள்.

தோழர்கள் ஏ.எம்.கே, ஏ.சி.கே., ஏ.கே.பாலன், அப்பு, சாரு மசூம்தார்(Charu Majumdar) இவர்களைப் போன்ற இன்னோரன்ன இடதுசாரித் தோழர்களைப் பற்றி நீங்கள்தான் எங்களுக்கு கூற வேண்டும். நீங்களும் எழுதவில்லையென்றால் யார்தான் இவர்களைப்பற்றி எழுதுவது? இப்படியான மனிதர்கள் இருந்தார்கள் என்பதே இளம் தலைமுறை அறியாமல் போய் விடும். நிறைய எழுதுங்கள் தோழர்.

வாய்க்கு வந்ததெல்லாம் வரலாறு என்று பேசப்படும் இன்றைய சூழலில், காமராசர் அரசியல் தொடங்கி தமிழ்த் தேசிய அரசியல் வரையிலான தங்களது பயணத்தில், காய்தல் உவத்தலின்றி தமிழகத்தின் வரலாற்றினைக் கூற உங்களிடம் நிறையவே உள்ளது. 

பெரும்பான்மையினர் அறியாத ‘சிறை உலகம்’ பற்றி உங்களின் எழுத்துகள் மூலமாகவே அறிந்தோம். தமிழில் சிறை இலக்கியம் மிக மிக குறைவு. தாழி மடலில் சிறை பற்றி எழுதுங்கள் தோழர் அது மிகச்சிறந்த ஆவணமாக இருக்கும்.

தங்களின் விருப்பப்படி தூய தமிழில் மார்க்குசின் மூலமுதல், பொதுமைக் கட்சி அறிக்கை, செவ்வகராதி போன்றவற்றை வெளியிட வாழ்த்துகள். உங்களின் முயற்சிக்கு என்றும் துணை நிற்பேன்.

*****

செவ்வகராதி தொகுக்கப்படுவதின் தொடக்கமாகத் தாழிமடலில் தினமும் ஒரு சொல்லையும், அதற்கான பொருளினையும் எழுதத் தொடங்கலாம் என்பது எனது கருத்து. சிறுகச் சிறுக எழுதித், தோழர்களின் கருத்துகளையும் அறிந்து செழுமைப்படுத்தி கொண்டே சென்றால், பின்னாளில் அகராதி தொகுப்பது சற்று எளிமையாக இருக்கும் தோழர்.

+++

நலங்கிள்ளி எழுதுகிறார்:

முதலில் செய்திகளைச் சுருக்கமாகத் தருவதாகக் கூறினீர்கள். இப்போது மிகவும் நீண்டு செல்கிறதே. அதுவும் ஒரே நேரத்தில் இரு செய்திகள் தருகிறீர்கள். கிட்டத்தட்ட ஒரு கட்டுரை போல் நீள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்புடன் நகர்த்திச் செல்லலாம் எனக் கருதுகிறேன்.

++

இதோ, ததேவிஇ அமைப்புச் செயலாளர் தோழர் மகிழன் எழுதுகின்றார்:   

நலங்கிள்ளியின் வினாவில் எனக்கு உடன்பாடு உண்டு. நீங்கள் தாழி தொடங்கும் போது ஒரு பக்கம் அல்லது ஓரிரு பக்கத்துக்கு மிகாமல் இருக்கும் என்று கூறியது நினைவிருக்கலாம். நான் கூட அண்ணாவின் தம்பிக்குக் கடிதம் போல என்று கருதினேன், பலருக்குச் சொல்லவும் செய்தேன். ஆனால் தற்போது நீண்டு கொண்டே செல்கிறது. பலவற்றை அதிலே கொண்டுவரலாமா என்று சிந்திக்கிறீர்கள், பலரும் எழுதுவதாக அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். சுருங்கச் சொன்னால் தாழி ஒரு நாளேடு போல் நாள்தோறும்  பல செய்திகளைத் தாங்கி வர வேண்டும் என்பது உங்கள் அவா.

இவை அனைத்தும் நான் அறிவேன். அனைத்தையும் கற்கவும் ஆர்வமாக உள்ளேன். ஆயினும் இன்றைய தலைமுறையினர், குறிப்பாக இளைஞர்கள் இதனைப் படிக்க முடியாமல் போய்விடும் என்று அஞ்சுகிறேன். பரந்துபட்ட அளவில் தாழி மடல் போய்ச் சேர வேண்டும் என்ற அவாவிற்கு இந்த நீல அகலம் தடையாகும் எனக் கருதுகிறேன். துளி தேன் போல தாழி மடல் செறிவான அரசியலைக் கொண்டதாக இருக்கிறது. அதனை அளவோடு  பருகும் திறன்  இன்றைய வாசகர்களுக்கு உண்டு என்பது என் எண்ணம். சிறுது சிறிதாகவாவது விரிவுபடுத்தலாம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 24