திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்-தொடர்ச்சி)

கீற்று) நேர்காணல் (3)(இ

திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்: தியாகு

நேர்காணல்: மினர்வா & நந்தன்

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப் போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தோடு எங்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் முறையாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?

குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய சிக்கல் அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான சனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக் கொண்டு ஈழச் சிக்கலைப் பார்க்கக் கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.

ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்குப் பரிசூதியம் 12 விழுக்காடா, 13 விழுக்காடா என்று போராட்டம் நடத்தி விட்டுத் தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து ‘பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?

புலிகளுக்குச் சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ‘புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை’ என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் சோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து?

புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வருக்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள். சாதி குறித்துத் தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கியக் கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் வரன் தேடுவதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.

அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.

ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். செயசிக்குறு எதிர்ப்புப் போரை பெண்கள்தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூசாதான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதைச் சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கியுள்ளன.

போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேறிய உயர்சாதி மக்களின் வீடுகளைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காகப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

ஈழப் படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத் துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், ‘உங்கள் வீடுகளில் கீழ்ச் சாதியினரைக் கொண்டுவந்து குடியமர்த்தியுள்ளார்கள்’. எனவே விடுதலைப் புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறுதான்.

என்னைப் பொறுத்த வரை சோபா சக்தி போன்றவர்கள், புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் பைத்தியங்கள், அல்லது அரசின் கைக்கூலிகளாகக் கூட இருக்கலாம், அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?

அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். ஓர் இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அஃது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல், அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்தான். கடைசி வரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் சனநாயகத் தன்மையைக் கட்டமைக்காதது, ஒரு பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வீரமணி போன்றவர்கள் இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ இல்லாததால்தான், அவர் பெயரைச் சொல்லிச் செயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டா என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.

ஆனால் நாம் விரும்பக் கூடிய சமூகநீதித் தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்துதான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டு அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அருத்தத்தில்தான் அவரைத் தந்தை என்கிறோம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக் கூடாது என்பதற்காகத் திராவிட இயக்கம் கைக் கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்கிறேன், அப்பா சொல்கிறேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். சனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நாம் அந்தக் கோணத்தில் அவரைத் தந்தையாகப் பார்க்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் எந்த அளவுக்குச் சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?

சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வருக்கங்கள், அரசுகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரித்தானிய அரசும் செய்தது. ‘உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்தப் பிரித்தானியப் பேரரசு உங்களை ஆளும் பொறுப்பைச் சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்’ என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

இந்தியாதான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வருக்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தைப் புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமற்போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால்தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரத தேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வருக்கத்தின் வெற்றி.

தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதைச் சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்குப் போராடுவதுதான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்குத் தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.

தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருண்மிய ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.


(கீற்று நேர்காணல் முற்றும்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 301

திங்கள், 24 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : மக்கார்த்தியம்” தொடர்ச்சி)

திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை

அன்பர் சிபி கேட்கிறார்…

திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? 

தாழி விடை:

“திராவிடம் என்றால் என்ன?”

என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன்.

’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச்சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

`திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும். `தமிழ்` என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym) , அது குறித்த ஒரு திசைச் சொல்லே (Exonym) `திராவிடம்` என்பதுமாகும்.

இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்:

இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், பக்கம் 15].

திராவிடம் என்பதனை முழுமையாக அறிந்து கொள்ள நாம் அதற்கு எதிரான `ஆரியம்` என்ற சொல்லினையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிந்து வெளி நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெரு நிலப் பரப்பு / துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள்.

ஆரியர் என்ற சொல் சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய (arya) எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது [ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும்]. ஆரியர் (Arya) என்ற சொல் இரிக்கு வேதத்தில் 36 தடவைகள் இடம்பெற்றுள்ளது. இரிக்கு வேதத்தில் `மதக் கருத்துகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்போர் / உயர்ந்தோர்` என்ற பொருளில் `ஆரியர் ` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இரிக்கு வேதக் காலத்தில் சைவ-வைணவ மதங்களோ / இந்து என்ற சொல்லோ இல்லை. அப்போதிருந்தது எல்லாம் `பிராமணியம்` என்ற மதமே  [இதனைச் சங்கரச்சாரியான சரசுவதி சுவாமிகள் முதல் சோ வரை கூறியுள்ளார்கள். எனவே பிராமணியத்தினை உயர்வாகக் கடைப்பிடிப்பவர்களையே `ஆரியர்கள்` என இரிக்கு வேதம் கூறுகின்றது. நமது பழந்தமிழ் நூல்கள் `ஆரியர்` யார் என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.

ஆரியர் அலற தாக்கி பேர் இசை

தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து

வெம் சின வேந்தரை பிணித்தோன்

வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே

மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (396:16–19 ) ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, இமயமலையின் மீது வளைவான வில்லினைப் பொறித்த செய்தி கூறப்படுகின்றது. இப்பாடலின் படி இமய மலைச் சாரலில் அப்போது ஆண்டவர்கள் ஆரியர் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள்.

மாரி அம்பின் மழை தோல் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே.

மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்து கிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல் காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது. இன்னமும் பல சங்கக் காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப் படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன [நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398,…]. ஆரியர் மரபணுக்களினடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதனைப் பல்வேறு ஆய்வுகள் வேறு உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய `ஆரியர்` அல்லாதோரைக் குறிக்கவும் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலத்தில் `திராவிடம்` என்ற சொல்லினை ஒப்பியல் நோக்கில் முதன் முதலில் குறிப்பிட்டவர் காலுடுவெல் (Robert Caldwell) அடிகள் ஆவார். அவரது காலத்தில் சங்க இலக்கியங்களோ / தொல்காப்பியமோ கண்டு பிடிக்கப் பட்டிருக்காமையால், அவர் தவறாகத் `திராவிடம் என்ற சொல்லே தமிழாகத் திரிந்தது` எனக் கூறியிருந்தார். அதனைக் காலுடுவெல் அடிகளுக்குரிய மரியாதையுடன் மறுத்துத் தமிழிலிருந்தே `திராவிடம்` என்ற சொல் திரிந்தது என நிறுவியவர் பாவாணரே ஆவார். பாவாணர் `திரவிடத் தாய்` எனும் நூலில் எட்டாம் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருப்பார்.

தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்.

பவளம்” என்பது ப்ரவளம்” என்று வட மொழியில் திரிந்தது போலவே தமிழம் (தமிழ்) என்னுஞ்சொல் த்ரமிளம்த்ரமிடம்த்ரவிடம் என்றாகிபின் தமிழில் வந்து வழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் திரவிடம் >> திராவிடம் என்று தமிழில் வழங்கும் என்றும்ஆகையால் தமிழினின்றே திராவிடம்” எனுஞ் சொல் தோன்றிற்று“.  (சான்று- திராவிடத்தாய்பக்கம் 8).

பாவாணர் இவ்வாறு அழுத்தம் திருத்தமாகக் கூறிய முதல் அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அதற்கு முன்னரே சில கருத்துகள் தமிழும் திராவிடமும் ஒன்றே எனக் காட்டும்.

தமிழ் குறித்த திசைச் சொல்லே `திராவிடம்` என்றோம். தமிழ் குறித்த திரிபுச் சொல் முதன்முதலில் கிடைப்பது `அத்திக்கும்பா` கல்வெட்டில் (Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) ஆகும். அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் [BCE 2nd cent] பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டின் 13ஆவது வரியில்  1,300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது. இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்ரமிர தேக சங்காத்தம்’ [Dramira] பயன்படுத்தப்படுகின்றது. அதே போலக் கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica` எனக் குறிக்கப்படுகின்றது. இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும். `தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` [Dravida]  எனலாம்.

பவுத்த நூலான இலலிதாவசுத்திர ` Lalitavistara`  (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` (Dravidalipi) என அழைக்கின்றது. இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும். ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த சமயவங்கா (“Samavayanga Sutta”) என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை. அதில் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் (Kamil Zvelebil) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி`, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம்பெற்றிருந்தன. எனவே `திராவிடம்` என்பது சமற்கிருதச் சொல் அன்று என்பது தெளிவாகின்றது.

காலத்தால் திராவிடத்துக்கான அடுத்த சான்றாக, சமண முனிவரான வச்சிரநந்தி அவர்களால் பொது ஆண்டு 470 இல் [CE470] ஏற்படுத்தப்பட்ட `திராவிட சங்கம்` என்பதனைக் கூறலாம். வச்சிர நந்தி நிறுவிய சங்கத்திலும் தமிழ் சார்ந்த நூல்கள் இயற்றப்பட்டிருந்தன (இவை சங்க கால நூல்களன்று, அவற்றுக்குப் பின்னரானவை), இதனால் இந்த திராவிட சங்கத்தினை `தமிழ்ச் சங்கம்` என்றும் அழைப்பர் [சங்ககாலச் சங்கம் வேறு, இது வேறு]. எனவே வச்சிரநந்தி நிறுவிய சங்கமும் `தமிழ்ச்சங்கம்`, `திராவிட சங்கம்` என இரு பெயர்களிலும் அழைக்கப்பட்டமையிலிருந்து; தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகின்றது.

இதற்குப் பின்னரான காலத்துக்கு வருவோம். குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa} என்பவர் 7ஆம் நூற்றாண்டில் எழுதிய `மீமாம்சா சுலோக வார்த்திகம்` என்ற நூலில் திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு பாவாணர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. தெலுங்கு ஒழித்த ஏனைய மொழிகளையே (கன்னடம், துளு, தமிழ் ஆகியவற்றினையே – மலையாளம் குமாரிலபட்டர் காலத்தில் பிரிந்து போகவில்லை) குமாரிலபட்டர் `திராவிடம்` எனக் குறிப்பிடுகின்றார் எனப் பாவாணர் கூறுகின்றார். இங்கு தெலுங்கு தமிழிலிருந்து பிரிந்து அதிக தூரம் சென்றமையாலேயே பாவாணர் தெலுங்கினைத் திராவிடத்துக்குள் உள்ளடக்கவில்லை. எனவேதான் திராவிடம் என்பது தெலுங்கினைக் குறிப்பது என்ற பொய்ப் பரப்புரை இங்கு அடிபட்டுப் போகின்றது. “தெலுங்கினையும் சேர்த்துக் குறிக்க ` ஆந்திர திரவிட பாசை’ என்னும் இணைமொழிப் பெயரால் அழைத்தனர் வடநூலார்” எனவும் பாவாணர் திராவிடத்தாய் எனும் நூலின் 15ஆவது பக்கத்தில் குறிப்பிடுகின்றார் {ஆந்திர= தெலுங்கு, திராவிட= தமிழ்+கன்னடம்+துளு}.

அடுத்ததாகத் திருஞான சம்பந்தரினைத் `திராவிட சிசு` என ஆதிசங்கரர் அழைத்த நிகழ்வினைக் குறிப்பிடலாம். இதனைக் கொண்டே, திராவிடர் என்பது தென்னிந்திய பிராமணரைக் குறிக்கும் எனச் சிலர் சொல்லுகின்றார்கள்; அது உண்மையில் தவறு. சம்பந்தர் தமிழில் பாடி இறைவனை வழிபட்டிருந்தமையாலும், உருவ வழிபாடு செய்தமையாலும்தான் ஆதிசங்கரர் அவரினைத் `திராவிட சிசு` என அழைத்திருந்தார். எனவே இங்கும் `திராவிட` என்ற சொல் தமிழ் குறித்தே பயன்படுத்தப்படுகின்றது. தாயுமானவர் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.

வடமொழியிலே

வல்லா னொருத்தன் வரவுந் திராவிடத்திலே

வந்ததா விவகரிப்பேன்;

வல்ல தமிழறிஞர் வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன்

மேலுள்ள பாடலிலும் தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்ற பொருளினைக் காணலாம். சிங்களத்தில் `திராவிட பாசா` எனத் தமிழ் மொழியினை அழைப்பார்கள். எனவே `திராவிடர்` என்பது தமிழரையே ஆதி காலத்தில் முற்று முழுதாகக் குறித்தது. இன்று தமிழர் உட்பட மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் போன்ற பிற திராவிட மொழியினர் எல்லாரையும் குறிப்பிட்டாலும்; இன்றும் சிறப்பாகத் தமிழரையும் குறிக்கும் { காலப்போக்கில் பிற மொழிகளும் தமிழிலிருந்து பிரிந்துவிட்டமையால் இன்று தெலுங்கும் திராவிடம் என்ற வகைக்குள் வந்துவிட்டது}.

பின்னரான ஆங்கிலேயர் ஆட்சிக் காலப்பகுதியில் பார்ப்பனர்கள் பிறரினைச் `சூத்திரர்` என இழிவு செய்தமையால், அவர்களது ஆதிக்கத்தினை எதிர்க்க `பார்ப்பனரல்லாதோர்` என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் `பார்ப்பனரல்லாதோர்` என்ற எதிர்மறைச் சொல்லுக்குப் பதிலாகத் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாற்றத்தினை அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் போன்றோர் தொடக்கி வைத்திருந்தார்கள்.

இப்போது `திராவிடர்`என்பது தமிழர் உட்பட்டத் தென்னிந்தியர் எனப் புவியியல் வகையிலும், மொழிக் குடும்பம் என்ற வகையிலும், சமூக நீதிச் சொல் என்றும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டாலும்; அதன் அடிவேர் தமிழேயாகும். மேலும் அச்சொல் மேலே குறிப்பிட்டவாறு வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு திசைச் சொல்லேயாகும். முடிவாக, `திராவிடம்` என்பது `தமிழ்` என்பதன் ஒரு திசைச் சொல்லாகும். எனவே குறுகிய வாக்குப் பொறுக்கும் அரசியலுக்காகத் தமிழரை `டம்ளர்` எனக் கொச்சைப்படுத்துவதும், திராவிடம் என்பதனை `திருட்டுத் திராவிடம்` என்பதும் நமது கண்ணை நாமே குத்துகின்ற செயலினை ஒத்த செயலாகும்.          (நன்றி – இனியொரு, 07.04.2021).

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 175

புதன், 10 ஏப்ரல், 2013

உகாதித் திருநாள் வாழ்த்தில் கலைஞரின் தெலுங்குப் பாசம்

தெலுங்கின் மீது பற்றுக் கொண்டவர் கலைஞர் என்று தெரியும். அதற்காகத் தமிழ்க்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ்ச்சேய்மொழிகளான தெலுங்கு,  கன்னடம் எனக் குறிப்பிடாமல், < திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள்  > என்று வரலாற்றைத் திரித்துக் கூறலாமா? <தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் > அவர்கள் மாநிலங்களில் தமிழ் மக்களை அவ்வாறு நடத்துகிறார்களா என்பதையும் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் எதிராகவே நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தாய்க்குரிய மரியாதையைத் தமிழுக்குத்  தராமல் ஆரியப்புதல்வர்களாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இப்புத்தாண்டு முதலாவது தமிழர்களின் உரிமைகளைப் பறிக்காமல் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கலாம். இவ்வேண்டுதலுடன் நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உகாதித் திருநாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி: கருணாநிதி

உகாதி திருநாள் நாளை எங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்படுவது அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெலுங்கு, கன்னட புத்தாண்டு - உகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,.
திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் புத்தாண்டு திருநாளாகக் கொண்டாடும் உகாதி திருநாள் வியாழக்கிழமை (11.4.2013) அன்று எழுச்சியோடு எங்கும் கொண்டாடப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் எதனையும் கருதாமல், எல்லோரிடமும் அன்பு பாராட்டும் மனிதநேயம் மிகுந்த மாநிலம்; எப்பொழுதும், எவர் மீதும் பகை கொள்ளாது, பரிவுகாட்டிடும் சிறந்த நாகரிகத்தைப் பழங்காலம் தொட்டுக் கடைப்பிடித்து வரும் மண் இது. இதனை, உலகப் பேரறிஞர்கள் பெரிதும் போற்றிப் பாராட்டும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் புறநானூற்றுத் தொடர்
புலப்படுத்தும். இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களின் கவசமாகத் திகழும் திமுக தனது அரசு அமையும் காலங்களில் மட்டுமல்லாமல், எக்காலத்திலும் அண்டை மாநிலங்களுடன் நேசக்கரம் நீட்டி நல்லுறவு பேணுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. கழகத்தின் இந்த அணுகுமுறையை அனைவரும் நன்கு அறிவர்.
2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு ரத்து செய்த உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை, 2006இல் அமைந்த கழக அரசு தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் நடைமுறைப்படுத்தியமை; உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் படைத்தளித்த திருவள்ளுவரின் திருவுருவச் சிலை பெங்களூருவில் நிறுவப்பட்டு, பதினெட்டு ஆண்டு காலம் மூடிக் கிடந்த நிலையில் கழக அரசின் சார்பில் கருநாடக மாநில அரசோடு நெருங்கிப் பேசி நல்லிணக்கம் பேணி, அங்கு நடைபெற்ற விழாவில் எனது கரத்தினால் அச்சிலையைத் திறந்து வைத்ததுடன், கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில், கருநாடக மாநில முதல்வரைக் கொண்டு திறந்து வைத்தமை; தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்தமை போன்ற நிழ்வுகளோடு; தமிழகத்தில் உள்ள பிறமொழிகள் பேசும் அனைத்து மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் திமுக.,வின் உயரிய கொள்கையையும் இவ்வேளையில் நினைவுபடுத்தி, தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.


உகாதி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
 
உகாதி திருநாள்: கவர்னர்-தலைவர்கள் வாழ்த்து
சென்னை, ஏப்.10-

நாளை உகாதி திருநாளையொட்டி கவர்னர்-தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழக கவர்னர் கே.ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உகாதி திருநாளை யொட்டி தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லெண்ணம், ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலம் நமது தேசத்தை வலுப்படுத்துவோம். உகாதி என்றால் வெற்றியை குறிக்கிறது. நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் வெற்றியை அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்து செய்தி வருமாறு:-

திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் புத்தாண்டு திருநாளைக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (வியாழக்கிழமை) எழுச்சியோடு எங்கும் கொண்டாப்படுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் எதனையும் கருதாமல், எல்லோரிடமும் அன்பு பாராட்டும் மனிதநேயம் மிகுந்த மாநிலம், எப்பொழுதும் எவர் மீதும் பகை கொள்ளாது, பரிவு காட்டிடும் சிறந்த நாகரீகத்தைப் பழங்காலம் தொட்டுக் கடைபிடித்து வரும் மண் இது.

இதனை, உலகப் பேரறிஞர்கள் பெரிதும் போற்றிப் பாராட்டும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் புறநானூற்றுத் தொடர் புலப்படுத்தும். இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களின் கவசமாகத் திகழும் தி.மு.க எக்காலத்திலும் அண்டை மாநிலங்களுடன் நேசக்கரம் நீட்டி நல்லுறவு பேணுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிற மொழிகள் பேசும் அனைத்து மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் தி.மு.க வின் உயரிய கொள்கையையும் இவ்வேளையில் நினைவுபடுத்தி, தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருமே தமிழர்களின் மொழி வழி சகோதர, சகோதரிகள்தான். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைத்து வசதிகளுடனும், சுதந்திரமாகவும் வாழ தமிழகம் வகை செய்துள்ள அதேநேரத்தில், தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்திருக்கிறார்கள்.

தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல் போல் தழைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். உகாதி என்பதில் ‘ஆதி’ என்பதன் பொருள் புதிய தொடக்கம் என்பதாகும். அதற்கேற்ற வகையில் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைப் பதற்கான தொடக்கமாக இந்த ஆண்டு உகாதி திருநாள் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு என்பது ஒவ்வொரு இன மக்களின் வாழ்கையிலும் புதிய ஆரம்பத்தை தருவதாகும். அந்த நன்னாளை ஏழை, பணக்காரர்கள் என்ற வேறுபாடின்றி அவரவர் சக்திக்கு ஏற்ப எல்லோரும் கொண்டாடுவது வழக்கம்.

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு உகாதி என்ற புத்தாண்டு மலர்கிறது. அந்த நன்னாளில் அவர்கள் புதிய நம்பிக்கையுடனும், புதிய எழுச்சியுடனும் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வரவேற்பது இயல்பு. இத்தகைய நன்னாளில் அவர்கள் எல்லா நலனும், முன்னேற்றமும் பெற்று இனிதே வாழ தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
 
Wednesday, April 10,2013 01:23 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
தெலுங்கின் மீது பற்றுக் கொண்டவர் கலைஞர் என்று தெரியும். அதற்காகத் தமிழ்க்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ்ச்சேய்மொழிகளான தெலுங்கு, கன்னடம் எனக் குறிப்பிடாமல், < திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய முக்கிய மொழிகளான தெலுங்கு, கன்னட மொழிகள் > என்று வரலாற்றைத் திரித்துக் கூறலாமா? <தமிழகத்தில் தமிழ்ச்சமுதாய மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் > அவர்கள் மாநிலங்களில் தமிழ் மக்களை அவ்வாறு நடத்துகிறார்களா என்பதையும் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் எதிராகவே நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தாய்க்குரிய மரியாதையைத் தமிழுக்குத் தராமல் ஆரியப்புதல்வர்களாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இப்புத்தாண்டு முதலாவது தமிழர்களின் உரிமைகளைப் பறிக்காமல் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கலாம். இவ்வேண்டுதலுடன் நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 

சனி, 25 செப்டம்பர், 2010

திராவிட கட்டடக் கலையின் சிகரம் பெரிய கோயில்: மு.க. ஸ்டாலின் புகழாரம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வரங்கைத் தொடக்கிவைத்து, சோழர் கால ஓவியங்கள் நூலை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, அதைப்
தஞ்சாவூர், செப். 24: திராவிடக் கட்டடக் கலைக்குச் சிகரமாக தஞ்சாவூர் பெரிய கோயில் விளங்குகிறது என்றார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.  தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.  ஆய்வரங்கைத் தொடக்கி வைத்து மு.க. ஸ்டாலின் மேலும் பேசியது: பிற்காலச் சோழர்களில் மிகச் சிறந்த மன்னராகவும், உலக வரலாற்றில் பேரரசன் என்னும் அடைமொழியைப் பெற்றவராகவும் விளங்கிய தமிழ் மன்னர் முதலாம் ராஜராஜன். இவரது ஆட்சியில் தமிழகம் பல புதுமைகளைக் கண்டது.  அரசு நிர்வாகம், வேளாண்மை, கலைகள் சிறக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ராஜராஜன் மேற்கொண்டார். இவரது ஆட்சியில் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமன்றி, அனைத்து சமயங்களுக்கும் முக்கியவத்துவம் அளிக்கப்பட்டது.   ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் அவருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க புகழைத் தேடித் தந்தது. கி.பி. 1003-ம் ஆண்டில் தொடங்கி, கி.பி. 1010-ம் ஆண்டில் இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இக்கோயில் கருவறை, இடைசுழி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. இத்தகைய அமைப்புடன் 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலைத்து நின்று, தமிழனின் கட்டடக் கலை மாண்பை பறைசாற்றும் இந்த பெரிய கோயிலுக்கு இணையான ஒரு முழுமையான கட்டமைப்பை இந்தியாவில், ஏன், உலகிலேயே வேறெங்கும் காண முடியாது என்பது தஞ்சை பெரிய கோயிலுக்குரிய தனிச் சிறப்பாகும்.  சோழ மன்னர்கள் ஆட்சியின் சிற்பக் கலை வல்லமையைக் காட்டும் அரிய பல சிற்பங்களும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. முழுவதும் கற்றளியாக விளங்கும் இக் கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்று மாளிகையில் சோழர்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. முதல் தளச் சுற்றிலும் 81 நாட்டியச் சிற்பங்களுடன் ஓவியங்கள் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இப்படி கட்டடக்கலை, நாட்டியக் கலை, சிற்பக் கலை, இசைக் கலை, ஓவியக்கலை உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் நிலைக்களனாக அமைந்த ஒரு பல்கலைக்கூடமாக ராஜராஜன் இத் திருக்கோயிலைக் கட்டியுள்ளார்.  பெரிய கோயிலைக் கட்டி, அதில் நாள்தோறும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென கருதி, தமிழ் வழிபாட்டுக்காக திருமுறைகளை இசையோடு பாட ஓதுவார்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் செய்தவர் ராஜராஜன். காலப்போக்கில் தமிழ் வழிபாடு முறை மறைந்து, வடமொழியில் வழிபாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டு, நிரந்தரமாகி, ராஜராஜன் விரும்பிய தமிழ் வழிபாட்டு முறை தடைபட்டு விட்டது.  அதன் பின்னர், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் எழுந்த மொழி இனமான உணர்வுகள் காரணமாகத்தான், திருக்கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என ஓர் அட்டையை மட்டும் தொங்கவிட்டனர்.  அந்த நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக அரசு தமிழிலும் என்பதில் உள்ள "உம்' என்பதை நீக்கி, தமிழில் வழிபாடு நடத்தப்படும் என ஆணை பிறப்பித்து, தமிழில் போற்றி நூல்களை வெளியிட்டது. இது தேவாரத் திருமுறைகளுடன் இந்தப் பெரிய கோயிலிலும், தமிழகத்தில் உள்ள ஏனைய திருக்கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடைபெற வழிவகுத்தது. எனவே, இதுபோன்ற ஆய்வரங்களில் பங்கேற்கும் அறிஞர்கள், ராஜராஜ சோழன் ஊட்டிய தமிழ்மொழி உணர்வை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் ஸ்டாலின். ஆய்வரங்கத்துக்கு மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமை வகித்தார்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில், சோழர் கால ஓவியங்கள் என்னும் நூலை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை இரா. ஜம்பகலட்சுமி பெற்றுக் கொண்டார்.  நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,  மத்திய இணையமைச்சர்கள் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், காந்திசெல்வன், மாநில அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, தங்கம் தென்னரசு, மைதீன்கான், செல்வராஜ், ரவிக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் ச.பி. சரவணன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

தமிழனின் கட்டடக்கலை மாண்பைப் பறைசாற்றும் எனத் தாலின் பேசியுள்ளார். அவ்வாறே தலைப்பு அளித்திருக்கலாமே! தமிழ் என்பது தவறுதலாகத் திராவிடம் என உச்சரிக்கப்பட்டது. அந்த அளவில் முன்பு திராவிடம் எனக் குறிக்கப்பட்டதை நாம் தமிழ் என்றே குறிப்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கும். தமிழ்ப்பணி ஆற்றும் தினமணி தமிழுணர்வுடன் தலைப்பு வெளியிட வேண்டும். அதே நேரம் தமிழ் வழிபாட்டுக்கு வழி வகுத்துள்ளதாகக் கூறியுள்ளதெல்லாம் நடைமுறைக்கு மாறானவையே. தமிழ் வழிபாடு கேட்டாலும் ஆரிய மொழியில் பல சொல்லியபின்பே சில தமிழில் சொல்லப்படுகிறது. தமிழில் மட்டுமே வழிபாடு என்னும் நிலை வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் எண்ணம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஓயாமல் இதனைப் பெருமையாகப் பேச வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:11:00 AM
திராவிட கட்டடக் கலையின் சிகரம் தஞ்சை பெரிய கோவில் என நினைந்து தஞ்சையும் திராவிட இனமும் பெருமை கொள்ளும் வேளையில் ...உலகமகா ஊழலின் சிகரம் உன் அப்பன் என நினைந்து தஞ்சையும் திராவிட இனமும் வெட்கப் படுகிறது ! @ rajasji
By rajasji
9/25/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *