ஏ. எம். கே. நினைவாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ. எம். கே. நினைவாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார்.

“என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!”

இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார்

நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத் தம் கொட்டடிகளின் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த கைதிகளுக்குத் தாங்க முடியா அதிர்ச்சி! அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதி! கம்பிக் கதவுகளை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் பயந்து பின்வாங்கி உள்ளே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்.

பொன் நாடாரின் பிணம் சிறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சவக் கிடங்கில் வைக்கப்பட்டது.

சிறையில் அன்றிரவு யாரும் தூங்கவில்லை. ஏ.எம்.கேயும்தான்! கொலைகாரர்களைத் தப்ப விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காகச் சிறைக் கைதிகளைத் திரட்டுவதற்கான வழிவகைகள் பற்றி யோசித்துச் சில முடிவுகள் எடுத்து, நம்பிக்கைகுரிய சில காவலர்கள் வழியாக இரவோடிரவாய் முக்கியத் ’தோழர்’களுக்குச் சொல்லியனுப்பினார். விடிவதற்குள் ஒரு செயல்திட்டம் தயாராக இருந்தது.

காலை எட்டு மணிக்கெல்லாம் ஏ.எம். கே, சிறை மருத்துவ மனைக்குச் சென்று சிறை மருத்துவர்கள் இருவரிடமும் சொன்னார்:

“பொன் நாடார் சாவுக்கு நீங்க இரண்டு பேரும் காரணமில்லை. நீங்க அடிக்கவில்லை, சாகடிக்கவில்லை. ஆனால், முறையாக பிண ஆய்வு இல்லாமல் உடம்பு இங்கே இருந்து வெளியே போகக் கூடாது. போனதென்றால் உங்களைச் சும்மா விட மாட்டோம். கண்காணிப்பாளரைக்  காப்பாற்றலாம் என்று நினைக்காதீர்கள். உங்களால் அவரைக் காப்பாற்ற முடியாது. அவராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.”

உண்மையில் அந்தச் சிறை மருத்துவர்களுக்குக் கண்காணிப்பாளரைக் காப்பாற்றும் எண்ணமில்லை. அவர்களோடு அவருக்கு அப்படி ஒரு முரண்பாடு. அவர்களோடு மட்டுமல்ல, அநேகமாய் ஒவ்வொருவருடனும் அவருக்கு முரண்பாடு இருந்தது. இந்த முரண்பாடுகளையெல்லாம் முழுக்கப் பயன்படுத்திக் கொள்வது ஏ.எம்.கே.யின் திட்டம்.

காலையிலேயே சிறைக் கைதிகள் அனைவரும் தட்டைக் கவிழ்த்து விட்டனர். உண்ணாவிரதம் மட்டும் போதாதென்று எல்லாக் கைதிகளும் நடு மைதானத்தில் வந்து உட்கார்ந்தார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் பிணத்தை வெளியே விட்டு விடக் கூடாது என்பது ஏ.எம். கே.யின் உறுதியான கட்டளை.

கண்காணிப்பாளர் தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. மற்ற அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவர்களின் திண்டாட்டம் கைதிகளுக்கு ஊக்கம் தந்த்து. ஏ.எம்.கே. வழிகாட்டியபடி அவர்கள் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள் :

“நாங்கள் வெளியில் குற்றம் செய்தோம் என்று தண்டனை கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இங்கு எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லா விட்டால் என்னாவது? இங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. நாங்கள் கொலை செய்தால் தண்டனை, எங்களைக் கொலை செய்தால் தண்டனை கிடையாதா? கொலை செய்ய வேண்டி ஏன் வந்தது என்று கோர்ட்டில் போய்ச் சமாதானம் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் கொலை நடந்துள்ளது என்ற உண்மையை மறைக்க விட மாட்டோம். உங்களோடு எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் எங்களோடு சேர்ந்து போராடா விட்டாலும் பரவாயில்லை. எங்கள் போராட்டத்தில் குறுக்கிடாமல் இருங்கள். அது போதும்.”

காவலர்களிடையே இருந்த நண்பர்கள் சிலரும் இதே வழியில் மற்றக் காவலர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சாரம் பலித்தது. சிறை நிருவாகம் இந்தக் காவலர்களைப் பயன்படுத்திக் கைதிகள் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமானால் வெளியிலிருந்து காவல்துறைப் படையை வரவழைத்தால்தான் முடியும். அதில் பல சிக்கல்கள் இருந்தன.

நடந்திருப்பது ஒரு கொலை என்பதை மறைக்க வழியில்லாமற் போனது முதல் காரணம். இது தொடர்பாகப் பொய் சொல்லிக் கைதிகளை ஏமாற்ற வழியில்லை. இரண்டிலொன்று பார்த்து விடும் மன நிலையில் திரண்டிருந்த கைதிகளை அச்சுறுத்தவும் வாய்ப்பில்லை. சிறை நிருவாகம் காவலர்களிடமிருந்தும் அந்நியப் பட்டிருந்தது. அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டவராகச் சிறைக் கண்காணிப்பாளர் இருந்தார்.

மதியம் வரை புதிய அசைவுகள் ஒன்றுமில்லை . பிற்பகல் கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு ஏ.எம்.கே. தன் கொட்டடியிலிருந்து நெடுமாடத் தி டலுக்குச் சென்று கைதிகளுக்கு நடுவில் உட்கார்ந்து விட்டார். அவரது வருகை அவர்களுக்குத் துணிவும் ஊக்கமும் தந்தது.

கண்காணிப்பாளர் வந்து தொலைவில் நின்று கொண்டு ஏ.எம்.கே.யைக் கூப்பிட்டார். ஏ.எம். கே. மறுத்து விட்டார்.

“எது வேண்டுமென்றாலும் இங்கே வந்து பேசுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம். ஆனால் என்னை இங்கே இருந்து கொண்டு போய்விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அது மட்டும் நடக்காது.”

கண்காணிப்பாளர் தன்னோடு வந்திருந்த சிறு படையை ஏவி, “அவரைப் பிடித்து வாருங்கள்” என்றதுதான் தாமதம்… கைதிகள் தரப்பிலிருந்து சரமாரியாகக் கற்கள் பறந்தன. கண்காணிப்பாளரும் மற்றவர்களும் சிறை வாயில் நோக்கி ஓடச், சிறைக்குள் அதிகாரிகளும் காவலர்களும் கூடப் பின்னாலேயே ஓடலானார். கைதிகள் சிறைவாயில் வரை துரத்திச் சென்று அத்துடன் நின்று கொண்டார்கள்.

சிறைக்குள் மருந்துக்கும் காக்கிச் சட்டை இல்லை. சிறை முழுக்கக் கைதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிகாரிகளும் காவலர்களும் மதிலுக்குத்தான் நிருவாகம் என்ற நிலை.

கூட்டத்துக்கு நடுவிலேயே கலந்தாலோசனைகள் நடைபெற்றன. வெளியிலிருந்து ஆயுதப் படைக் காவல்துறை வந்து தாக்குதல் தொடுக்குமானால் என்ன செய்வது என்று ஒரு கேள்வி எழுந்தது.

(தொடரும்)

தரவு: தாழி மடல் 

புதன், 18 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி

ஒரு நாள் ஏஎம்கே ஏதோ உடல்நலிவுக்காகச் சிறை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் உடம்பைக் காண்பித்து, மருந்து கேட்டார். மருத்துவர் சொன்னார்:

” இதோ பாருங்கள் ஐயா. இது கறுப்புக் குல்லா சிறை. இங்கே மருந்தெல்லாம் அவ்வளவாகக் கிடைக்காது. ஏதாவது வாணாளர்(லைஃபர்) சிறைக்குப் போய்விட்டீர்கள் என்றால்  நல்ல மருந்தாகக் கிடைக்கும்.”

ஆக, நோய்க்கு மருந்து கொடுப்பதில் கூட கறுப்புக் குல்லாய் என்றால் பாகுபாடு! உணவு தொடர்பாகவும் கூட இப்படித்தான்.

“இது கறுப்புக் குல்லா சிறை , இங்கு திட்ட உணவெல்லாம்(diet) எழுதினால் கேள்வி வரும்” என்பார் சிறை மருத்துவர்.

“இது கறுப்புக் குல்லா சிறை, இங்க உணவெல்லாம் சரியாகக் கேட்கக் கூடாது. எடை போட்டுக் கேட்கிறதெல்லாம் வாணாளர் சிறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என்பார் துணைச்சிறை அலுவலர்.

கறுப்புக் குல்லாய்களுக்கு எதிரான இந்தப் பாகுபாட்டை எதிர்த்து ஏ. எம். கே. பேசலானார். இந்தப் பரப்புரை பையப் பையச் சிறையெங்கும் பரவி கறுப்புக் குல்லாய்களில் சிலர் அவரைத் தேடி வரலாயினர்.

இரண்டாவதாகக், கறுப்புக் குல்லாய்களுக்கும் ‘வெள்ளைக் குல்லாய்களுக்குமான முரண்பாட்டுக்குத் தீர்வுகாண வேண்டியிருந்தது. தண்டனைக் காவலர்கள் (convict warders), மேற்பார்வையர், அனைவருமே வெள்ளைக் குல்லாய்கள். கறுப்புக் குல்லாய்கள் எப்படியும் தலைமை வேலையாள் பதவிக்கு மேல் போக முடியாது.

கைதிகளுக்கிடையிலான இந்த முரண்பாட்டைப் பாதுகாப்பதில் சிறை நிருவாகம் கவனமாய் இருக்கும். இந்தப் பிரித்தாளும் நடைமுறையை ஏ.எம். கே. அம்பலப்படுத்திப் பேசலானார்.

ஒருசில மாதங்கள் உருண்டோடின. ஏ.எம்.கே.க்கு ஒவ்வொரு தொகுதியிலும் ஓரிரு கைதிகளாவது கிடைத்து விட்டனர். அவர் களுக்கும் ஏ.எம்.கே.க்கும் அறுபடாத தொடர்பைக் காக்க சில காவலர்கள் பயன்பட்டார்கள். தண்டனைக் காவலர்களிலும் சிலர் வந்து சேர்ந்தனர். இவ்விதம் ஒரு குறைந்தபட்ச வலைப்பின்னலை ஏஎம்கே உருவாக்கிக் கொண்டார். இந்த வலைப்பின்னலைக் கொண்டு தன் கருத்துகளைப் பரப்பலானார்.

சிறையில் மஞ்சள் காமாலை நோய் பரவிய போது நோயாளிகளுக்கு உரிய மருந்து, பத்திய உணவு எதுவும் கிடைக்கவில்லை. ஒருசிலர் மட்டுமே வெளி மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். சிறை மருத்துவமனையும் நிறைந்து, எஞ்சியவர்கள் தொகுதிகளிலேயே அடைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் நோய் மென்மேலும் பரவிக் கொண்டிருந்தது.

காமாலை நோய்க்குத் தக்க சிகிச்சை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏஎம்கே தெரிவித்த யோசனையைப் பெரும்பாலான கைதிகள் ஏற்றுக் கொண்டார்கள். உண்ணாவிரதத்துக்குப் பிறகு ஓரளவுக்குக் காரியங்கள் நடந்தன. இந்த வெற்றி கைதிகளின் ஒற்றுமையையும் ஏஎம்கேயின் வழிகாட்டுதலையும் உறுதிப்படுத்தியது. சிறை அதிகாரிகளால் முன்போல் ஏஎம்கேயை அலட்சியம் செய்ய முடியவில்லை. .

“மற்றக் கைதிகளுக்காகப் பேசாதீர்கள், உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்ற வழக்கமான வசனமெல்லாம் ஏஎம்கேயிடம் எடுபடவில்லை. கைதிகளின் ஒருமித்த குரல் ஒலிப்பதற்கு  ‘வரிசைப் பார்வை’(file) எனப்படும் வாரப் பார்வையையும் ஏஎம்கே பயன்படுத்திக் கொண்டார்.

கண்காணிப்பாளரும் மாவட்ட மருத்துவ அதிகாரியும் ஏனைய அதிகாரிகளும் வரிசையாக நிற்கும் கைதிகளின் குறைகேட்க வரும் போது, ஏஎம்கே. ஒரு கோரிக்கையை முன்வைத்தால், ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மூன்று கைதிகளாவது அதே கோரிக்கையை முன்வைப்பார்கள்.

ஒருமுறை சிறைத்துறையில் உயரதிகாரி ஒருவர் சிறையைப் பார்வையிட வந்தார். அவர் ஏஎம்கேயிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்.

“நீங்கள் அழித்தொழிப்பு(Annihilation)க் கொள்கையராயிற்றே!  இப்போதும் அப்படித்தானா?”

“ஆமாம், ஆமாம், இப்போதும் அழித்தொழிப்புக் கொள்கைதான்.

“சிறையிலும் கூடவா?”

“ஆமாம், அதிலென்ன சந்தேகம்?”

“இங்கு யாரை அழித்தொழிப்பீர்கள்?”

“கைதிச் சொத்தைத் திருடுகிறவர்கள், கைதிகளை அடித்துத் துன்புறுத்துகிறவர்கள் இவர்களை எல்லாம் ஒழித்துக் கட்டினால்தான் சரிப்படும்.”

“யார் அவர்கள்?”

“எனக்கு எப்படித் தெரியும்? கைதிகள்தான் அதைச் சொல்ல முடியும்.”

“உங்கள் பட்டியலில் நான் உண்டா?”

“உண்மையிலேயே தெரியாது. எல்லாக் கைதிகளும் உங்களைச் சொன்னால் நீங்களும் உண்டு.”

அழித்தொழிப்புக் கொள்கை குறித்து ஏ.எம்.கே.க்கு மாறுபாடுகள் இருந்தபோதிலும், சிறையில் இந்த மிரட்டல் ஓரளவுக்குப் பலன் தரவே செய்தது. கைதிகளின் அச்சம் மறைந்து அவர்களிடம் போர்க்குணம் பரவிக் கொண்டிருந்தது.

சிறை நிருவாகத்துக்கு ஏஎம்கே பெரும் தலைவலி ஆகிவிட்டார். வழக்குகளுக்காக அவர் வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போதெல்லாம் கடலூர் சிறை அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விடலாயினர்.

சிறைக் கண்காணிப்பாளர் கைதிகளை மட்டு மல்லாமல், காவலர் களையும் முரட்டுத்தனமாக அடிப்பார். இழிவாக ஏசுவார். காவலர்களை மட்டுமல்ல, தன் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளையும் கூட அப்படித்தான் நடத்துவார்.

“அவர் சம்பளத்துக்கு அவர் வேலை செய்கிறார். உங்கள் சம்பளத்துக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள். உங்களை அடிக்கவும் திட்டவும் அவருக்கு ஏது அதிகாரம்?” என்று ஏஎம்கே செய்த பரப்புரை இளம் காவலர்களிடம் நன்கு எடுபட்டது.

ஆனால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

“நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. அந்த ஆளங கையை ஓங்கிக் கொண்டு வந்தால், இல்லை ஏதாவது திட்டினால் எதிர்க்கவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அந்த ஆளுக்கு எதிில் நிற்கும் போது பயம் வந்து விடுகிறது!”

ஒரு முறை சிறைவாயில் அருகே முதன்மைக் காவலரைக் கண்காணிப்பாளர் ஏதோ கடிந்து பேசிக் கொண்டிருந்தார். மற்ற அதிகாரிகள் விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேச்சுக் குரல் மட்டும் கேட்கவில்லை.

திடீரென்று கண்காணிப்பாளர் தன் குறுந்தடியை ஓங்கிக் கொண்டு முதன்மைக் காவலரை அடிக்கப் போக, ஏஎம்கே ஓங்கிக் குரல் கொடுத்தார்.

“அடிக்காதே, நிறுத்து. கண்காணிப்பாளர் என்றால் யாரை வேண்டுமென்றாலும அடிக்கலாம் என்று நினைப்பா?”

கண்காணிப்பாளர் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டார். மற்ற அதிகாரிகளும் முதன்மைக் காவலரும் காவலர்களும் கைதிகளும் குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்க்க, கண்காணிப்பாளர் சட்டென்று வாயில் வழியாக வெளியே போய் விட்டார்.

முதன்மைக் காவலர் பிற்பாடு ஏ.எம். கே.யிடம் வந்து “நன்றி” என்ற போது, ஏ.எம். கே. சொன்னார்:

“அதெல்லாம் வேண்டாம். உங்களையும் மற்றவர்கள் அடிக்கக் கூடாது. நீங்களும் மற்றவர்களை அடிக்கக்கூடாது. கைதிகளை அடிக்காமல் இருந்தீர்கள் என்றால் அதுவே போதும்.”

“ஆனால் ஒன்று ஐயா. அடித்தாலும் உதைத்தாலும் துரை மிகவும் நல்லவர். என்ன ஓர் அடி அடித் திருந்தாலும் சந்தோசமாக வாங்கியிருப்பேன். ஏனென்றால் அப்புறமாகக்  கூப்பிட்டு ஏதாவது  நல்லது செய்திருப்பார்.”

“இப்பொழுது உன்னையில்லை, என்னைத்தான் அடிக்க வேண்டும்; செருப்பால் அடிக்க வேண்டும்.  இருந்திருந்தும் உனக்காகப் போய்க் கேட்டேன் பார்.”

ஏஎம்கே அப்போதைக்கு வெறுப்புற்றுப் பேசினாலும், தன் கிளர்ச்சிப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் சிறை நிலைமைகள் பெரிதும் மாற்றமடைந்தன. கைதிகளை எதற்கெடுத் தாலும் அடிக்கும் நடைமுறை பெரும்பாலும் மறைந்து போயிற்று.

ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் நெடுமாடப் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது. ஒரு கைதியை மூர்க்கமாக அடிக்கிறார்கள் என்று புரிந்தது. ஏஎம்கே. கம்பிக் கதவோரம் நின்ற போதிலும் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் சத்தம் ஓய்ந்தது.

பதற்றத்துடன் வந்த பாராக் காவலரிடம் ஏஎம்கே கேட்டார்:

“என்ன?”

“போய்விட்டான்.”

தொடரும்

தரவு: தாழி மடல் 15

செவ்வாய், 17 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2)

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (2)

கறுப்பும் வெள்ளையும்

கடலூர் மத்தியச் சிறையானது பரப்பிலும் கொள்திறனிலும் சிறியதே என்றாலும், மிகப் பழமையான சிறைகளில் ஒன்று. அது கடலூர் நகரத்திலிருந்து சுமார் ஐந்து அயிரைப்பேரடி ( கிலோ மீட்டர்) தொலைவில், வண்டிப்பாளையம் கிராமத்தில், கேப்பர் குவாரி என்னும் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. ஆகவேதான் வண்டிப் பாளையம் சிறை, கேப்பர் குவாரி சிறை என்ற செல்லப் பெயர்களும் அதற்கு உண்டு.

சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில் மனநோயுற்ற சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் வசதி இல்லாமல் இருந்த வரை கடலூர் மத்தியச் சிறைதான் மனநோயுற்ற குற்றவாளிகளுக்கான சிறையாக இருந்தது. சென்னை மாகாணம் முழுவதிலிருந்தும் இந்த வகைக் கைதிகள் — ஆண் பெண் இருபாலரும் — கடலூர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். சிறையில் பெண் கைதிகளுக்கென்று ஒரு தனிப் பகுதி இருந்தது. இப்போது பெண் கைதிகள் கிடையாது என்றாலும் அந்தப் பகுதிக்கு பெண்கள் தொகுதி (female ward) என்ற பெயர் மட்டும் நீடிக்கிறது.

காச நோயுற்ற கைதிகளும் கடலூர் மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார்கள். சிறை அருகில் உள்ள காச நோய் மருத்துவ நிலையத்தில் (டி.பி.சானடோரியம்) அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போதெல்லாம் இந்திய மருத்துவப் பணி (ஐ.எம்.எசு.) அதிகாரிதான் சிறைக்குப் பொறுப்பு. அவருக்குக் கீழே மேற்பார்வையர் (Oversear) துணை மேற்பார்வையர் (Deputy Oversear) என்ற வகையில் சிறை அதிகாரிகள் பணியாற்றினார்கள்.

பிற்பாடு கடலூர் மத்தியச் சிறை தென் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கமான குற்றவாளிகளுக்கான சிறை – ‘கறுப்புக் குல்லா சிறை’ – ஆக்கப்பட்டது. சேலம் மத்தியச் சிறை வட மாவட்டங்களுக்கான ’கறுப்புக் குல்லா சிறை’, இப்போது சேலம் மட்டுமே ‘கறுப்புக் குல்லா சிறை’. கடலூர் 1985இல் வழக்கமான சிறைக் குற்றவாளிகளுக்கான சிறை ஆக்கப்பட்டு விட்டது. வழக்கமான குற்றவாளிகள் (habitual offenders) என்பது வேறு, வழக்கமான சிறைக் குற்றவாளிகள் (habitual prison offenders) என்பது வேறு.

கடலூர் மத்தியச் சிறை பெரும்பாலும் தனிக் கொட்டடிகளால் ஆனது. ஒரு வட்டத்தின் ஆரங்கள் போன்ற எட்டுத் தொகுதிகள் – ஒவ்வொன்றும் முப்பது தனிக் கொட்டடிகளைக் கொண்டது. நடுவில் ஒரு வட்ட மைதானம் உண்டே தவிர, திருச்சி சிறை போல் கோபுரம் ஏதும் கிடையாது. எட்டாம் தொகுதியின் முதல் நான்கைந்து கொட்டடிகள் முதன்மைத் தலைமைக் காவலரின் (chief head warder) அலுவலகமாகப் பயன்பட்டன. அந்தக் கொட்டடிகளுக்கு வெளியே தாழ்வாரத்தில் அவர் நாற்காலி போட்டு உட்காரும் இடத்துக்கு நெடுமாடம் ‘(tower) என்ற பெயர் மட்டும் உண்டு.

தோழர் ஏ.எம். கோதண்டராமன் 1973இல் விசாரணைக் கைதியாக கடலூர் சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது இதே எட்டாம் தொகுதியின் முப்பதாம் கொட்டடியில்தான் வைக்கப்பட்டார். அது சிறை வாயிலுக்கு அருகில் இருந்ததே காரணம். வாயிற்பகுதியில் கீழே சிறை அலுவலருக்கும்(Jailor) மேலே கண்காணிப்பாளருக்கும் அலுவலகம் என்பதால் அவர்களால் எந்த நேரமும் எளிதில் கண்காணிக்க முடிந்தது.

கண்காணிப்பு எதற்காக? ஏஎம்கே சிறையிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அவர் காவலர்களுடனும் ஏனைய கைதிகளுடனும் பேசுவதையும் பழகுவதையும் தடுக்க வேண்டும் என்பதே முதன்மை நோக்கம்

இந்த நோக்கத்துக்காகவே, ஏஎம்கே. வைக்கப்பட்டிருக்க கொட்டடியிலிருந்து பதினைந்து கொட்டடிகள் காலியாகவே வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பிறகும் இளவர் (minor) கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் கடலூர் சிறையில் தொகுதிகளைப் பிரிக்கும் அடைப்பு வேலிகளோ சுவர்களோ கிடையாது. மற்றும் ஒரு சிக்கல்: ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனிக் குளியல் தொட்டி கிடையாது. குளிப்பதற்காக ஏஎம்கேயைச் சிறை மருத்துவமனைக்கோ, தண்டனைக் காவலர் தொகுதியாக இருந்த பெண்கள் தொகுதிக்கோ அழைத்துச் செல்வார்கள். குளிக்கும் இடத்தில் கூட அவர் மற்ற கைதிகளிடம் பேசிவிடக் கூடாது என்பதற்காகக் காலை எட்டு மணிக்குப் பிறகுதான் அழைத்துச் செல்வார்கள், அந்த நேரத்தில் மற்றவர்கள் எல்லாம் குளித்து முடித்துக் கஞ்சி குடித்து வேலைக்குப் போயிருப்பார்கள். தச்சு, நெசவு, தையல் ஆகியவை சிறையில் நடைபெற்ற முதன்மைத் தொழில்கள். ஒரு மாட்டுப் பண்ணையும் இருந்தது.

சிறையில் கைதிகளின் தொகை அறுநூறுக்கு மேல் இருக்கும். பெரும்பாலானவர்கள் ’வழக்கமான குற்றவாளிகள்’ – கறுப்புக் குல்லாய்கள். சிறைக்குள் குற்றம் புரிந்து அதற்கான தண்டனை என்ற முறையில் சிறை மாற்றம் செய்யப்பட்டு வந்திருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலரும் இருந்தார்கள். அவர்களில் சிலர் – எட்டு ஒன்பது ஆண்டுக்கு மேல் தண்டனை கழித்தவர்கள் – தண்டனைக் காவலர்களாகி, தலையில் தொப்பியும் கையில் தடியுமாய் பாரா கொடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர சிறு எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகளும் இருந்தார்கள்
‘நக்சலைட்டு’ கைதி என்ற வகையில் ஒரத்தூர் கருணாகரனும் விசாரணையை எதிர்நோக்கி அதே சிறையில் இருந்த போதிலும் அவரை ஏஎம்கேயுடன் வைக்கவில்லை.

[கருணாகரன் பற்றிச் சொல்ல வேண்டிய சில செய்திகள் உண்டு. பிறகு சொல்கிறேன். அவர் இப்போது சிதம்பரத்துக்கும் சேத்தியாத்தோப்புக்கும் இடையே ஒரத்தூரில் ஊராட்சித் தலைவராக இருந்து வருகிறார். பிற பின்…]

இப்படி அறவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்தான் ஏஎம்கே. காவலர்களிடையிலும் கைதிகளிடையிலும் கிளர்ச்சிப் பணி தொடங்கினார். அவர் சிறை அதிகாரிகளைத் தட்டிக் கேட்டு எதிர்த்துப் பேசிய போதெல்லாம் “ஆனானப்பட்ட வங்காளத்து நக்சலைட்டு களையே அடக்கி விட்டோம், நீர் எம்மாத்திரம்?” என்கிற தோரணையில்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். மற்றக் கைதிகளையும் திரட்டிப் போராடுவதுதான் இந்தச் சிறை அதிகாரி களுக்கு ஏற்ற விடையாக இருக்கும் என்று ஏ.எம்.கே. கருதினார்.

[கடலூர் சிறையில் வங்கத்து அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தடியடித் தாக்குதல் பற்றியும் பிறகு சொல்கிறேன்.]

பொதுவாகச் சொன்னால், ‘கறுப்புக் குல்லாய்‘ கைதிகளை அணி திரட்டிப் போராடுவது மிகக் கடினம். பெரும்பாலானவர்கள் கைதேர்ந்த திருட்டுக் குற்றவாளிகள் என்பதால், தன்னலமே குறியாய் இருப்பார்கள். எப்பேர்ப்பட்டவர்களையும் இனிக்கப் பேசி ஏமாற்றும் கலையில் வல்லவர்களாய் இருப்பார்கள். அவர்களை நம்பி இரகசியம் பேசுவது ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதாகும். ஆனால் சிறையில் அவர்கள்தாமே மக்கள்! அதிலும் கடலூர் சிறை போன்ற ஒரு ‘கறுப்புக் குல்லா‘ சிறையில் அவர்களை விடுத்து என்ன செய்ய முடியும்?

யாரும் கறுப்புக் குல்லாயாகப் பிறப்பதில்லை கருப்புக் குல்லாய்கள் ஆகாயத்திலிருந்து வந்து குதித்தவர்களோ பூமி வெடித்துக் கிளம்பியவர்களோ அல்ல. எளிய மனிதர்களைக் குற்றவாளிகளாக்குவதிலும் கறுப்புக் குல்லாய்களாக இறுகச் செய்வதிலும் சமூகத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. குற்றவாளிகளின் நாற்றங்கால்களாகக் காவல் நிலையங்களும் விளைநிலங்களாகச் சிறைச்சாலைகளும் உள்ள வரை, மனிதனைக் கறுப்புக் குல்லாய் ஆக்குவதற்கான முதற்பழி அரசையே சாரும்.

சிறையில் கறுப்புக் குல்லாய்களுக்கு எதிரான பாகுபாடு நடைமுறையில் இருப்பதை ஏஎம்கே கவனித்தார். சிறை அதிகாரிகளும் காவலர்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளும் பேசும் போதே கறுப்புக் குல்லாய்களை வேறாகப் பிரித்துப் பேசக் கேட்டார்,

தொடரும்
தரவு: தாழி மடல் 15

திங்கள், 16 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1)

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 15 : வறுமையும் அடிமைமுறையும்-தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (1)

20.11.2022: ஏஎம்கே என்று நாமறிந்த தோழர் ஏ.எம். கோதண்ட ராமன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள். தோழர் ஏஎம்கே மறைந்த சில நாளில் அவர் குறித்து முகநூலில் எழுதிய இடுகைத் தொடரைத் தாழி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நான் ஏற்கெனவே அவரது சிறை வாழ்க்கை குறித்து கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியதை (தேவையான சில திருத்தங்களோடு) ஒரு தொடராகப் பதிவிடுகிறேன்.]

கைதி செத்தால்…

கறுப்புத் திரைகள்

திருவோணம் அழித்தொழிப்பை ஒட்டிய கொலைவழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் தோழர் ஏ.எம். கோதண்டராமன் — சுருக்கமாக ஏ.எம்.கே. எங்களை வழிநடத்திய ‘பெரியவர்’ அவர்தான்.
எங்கள் மீதான வழக்கு நடந்து முடியும் வரை ஏ.எம்.கே பிடிபடவில்லை. 1973 ஏப்பிரல் கடைசியில் நானும் இலெனினும் குருவும் எங்களோடு புலவர் கலியபெருமாளும் மரணத் தண்டனைக் கைதிகளாக திருச்சி மத்தியச் சிறையின் பழைய கண்டத்தில் அடைபட்டிருந்த நேரத்தில், ஏஎம்கே கைது செய்யப்பட்ட செய்தி வந்தது. ஆனால், உண்மையில் அதற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள் முன்னதாகவே திருவில்லிபுத்தூரில் காவல்துறை அவரைப் பிடித்து விட்டது.
சாதாரண வழக்கில் சாமானியர் ஒருவரைப் பிடித்தாலே ஓரிரு நாட்களாவது கணக்கில் காட்டாமல் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்து, பிறகு முறைப்படி ‘கைது’ செய்வதுதான் காவல்துறை வழக்கம். இப்படியிருக்க, ஒரு ‘பயங்கரமான தீவிரவாதி’யைப் பிடித்தவுடனே ‘கைது’ செய்து நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்த காவல்துறைக்கு எப்படி மனம் வரும்?

சந்தேகத்துக்குரிய ஒருவரைப் பிடித்துச் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சட்டவிரோதமாய்த் துன்புறுத்துவது சாதாரண காவல்துறையினருக்கு நொறுக்குத் தீனி என்றால், ‘கியூ’ பிரிவு போன்ற சிறப்புக் காவல்துறையினருக்கு அடிப்படை உணவே அதுதான்.

ஏஎம்கே-யைப் பொறுத்த வரை மற்றொரு ‘பெரிய’ காரணமும் இருந்தது. 1970 அட்டோபரில் தோழர் அப்பு பிடிபட்டு… காவல்துறையால் மருமமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பின், தமிழகத்தில் ஏஎம்கேதான் இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்திக் கொண்டிருந்தார். அப்புவைப் போலவே ஏ.எம்.கே.யையும் ‘முடிப்பதா’ இல்லையா என்று காவல்துறையார் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

ஏஎம்கே பிடிபட்டவுடனே அவரிடம் ஒரு ‘கியூ’ பிரிவு அதிகாரி சொன்னார்:

“எங்களுக்குச் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் தெளிவாகப் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
ஏஎம்கே கோபமாகப் பதில் சொன்னார்:

“இதோ பார், உனக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அதுவெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் ஒன்று கூடச் சொல்ல மாட்டேன். உன்னால் என்ன முடியுமோ, பண்ணிக்கொள்.”

அதன் பிறகு அவரிடம் யாரும் எதுவும் பேசவில்லை . காவல்துறை மூடுந்து ஒன்றில் அவரை ஏற்றி, எங்கோ கொண்டு போனார்கள். மூடுந்தின் சல்லடைச் சாளரங்கள் கறுப்புத் துணியால் மூடப்பட்டிருந்தன. உள்ளிருந்து வெளியே அல்லது வெளியிலிருந்து உள்ளே எதையும் பார்க்க முடியாது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். செவிப்புலன் கொண்டு வழியை அனுமானம் செய்ய ஏஎம்கே முயன்று கொண்டிருந்தார். இடையிடையே சில நகரங்களைக் கடந்து செல்வது புரிந்தாலும் என்ன ஊர் என்று ஊகிக்க முடியவில்லை .

என்ன இது பேரிரைச்சல்? ஒலிபெருக்கிச் சத்தம் வேறு? வண்டி ஒரு பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சமாளித்து நகர்ந்து கொண்டிருப்பது புரிந்தது.

ஆ! தெரிந்து விட்டது. சித்திரை மாதம்! திருவிழாக் காலம்! மதுரையேதான்! வைகையாற்றுப் பாலத்தில்தான் இவ்வளவு நெரிசலாய் இருக்க வேண்டும். கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளாய் இருக்கலாம்!

தன்னை எங்கே எதற்காகக் கொண்டுபோய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏஎம்கேக்குத் தெரியாது.

“அப்புவைப் போலவே நம்மையும்..?” இருக்கட்டுமே, அதனால் என்ன?’
எதற்கும் அஞ்சக் கூடியவரல்ல அவர். இப்போது முகத்தில் சற்றே அலட்சியம் கலந்தாற்போல் ஒரு புன்முறுவல்! ‘’கறுப்புத் திரைகளையும் கட்டுக்காவலையும் மீறி எனக்குத் தெரிந்து விட்டது பார்த்தாயா..?”

சுற்றியிருந்த காவலர்களையும் அந்தப் புன்னகை தொற்றிக் கொண்டது. தோல்வியை ஒப்புக்கொள்வதன் அறிகுறியோ? தங்கள் மேலதிகாரிகளின் முயற்சி முழுமையாகப் பலிக்காமற்போனதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் அறிகுறியோ?

இந்தப் புன்னகை தவிர, வண்டிக்குள் கப்பியிருந்த மௌனம் கலையவே இல்லை, அடுத்த சில நிமிடங்களில் அந்தக் காவல்துறைமூடுந்து மேலூர் காவல் நிலையம் போய்ச் சேர்ந்தது. அங்குதான் ஏஎம்கேயை ஒரு வாரத்துக்கு மேல் திருட்டுக் காவலில் வைத்திருந்தார்கள்.

திருவில்லிப்புத்தூரில் பிடிபட்ட நேரத்திலேயே ஏஎம்கே. முழக்கங்கள் எழுப்பியிருந்தார். அவர் பிடிபட்டது அப்போதே சில நண்பர்களுக்குத் தெரிந்து, அவர்கள் சென்னைக்குத் தகவல் அனுப்பி விட்டார்கள். சென்னையில் குடிமை உரிமை ஆர்வலர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். ஒரு காலத்தில் ஏஎம்கே தலைமையில் இயங்கி வந்த தொழிற்சங்கங்களின் ஊழியர்களும் தொழிலாளர்களும் “ஏஎம்கேயை விடுதலை செய்” என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்பு பிடிபட்ட செய்தியை மறைத்தது போல் ஏ.எம்.கே, பிடிபட்ட செய்தியைக்காவல்துறையால் மறைக்க முடியவில்லை.

[தோழர் குசேலர் தரும் கூடுதல் தகவல்: தோழர் ஏஎம்கே பிடிபட்ட செய்தியை ‘அலை ஓசை ‘ஏடு பெரிய தலைப்புச் செய்தியாக்கி விட்டது. இதற்காக அந்த ஏட்டின் ஆசிரியர் வேலூர் நாராயணன் மீது அன்றைய ஆட்சியாளர்கள் சினமுற்றார்களாம்!]

ஏஎம்கே மீது எங்கள் வழக்கு உட்படப் பல்வேறு வழக்குகள் இருந்தன. ஏப்பிரல் கடைசியில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி, காவலில் வைத்து (remand) கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கடலூர் சிறைக்குள் நுழைந்தவுடனே பழைய கைதிகளிடமிருந்தும் காவலர்களிடமிருந்தும் ஏஎம்கே கேட்டறிந்த தகவல் — 1971-72இல் இதே கடலூர் சிறையில் மேற்கு வங்கத் தோழர்கள் கொடுந்தாக்குதலுக்கு ஆளானது பற்றித்தான்.

அப்போது கடலூர் சிறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் ஏஎம்கேயை முன்பே நன்கறிந்தவர். மோகன் குமாரமங்கலம், கே.வி.சங்கரன் ஆகியோரிடம் இளவராக ஏ.எம்.கே. சிறிது காலம் சட்டப் பணி ஆற்றிய போது அங்கு அடிக்கடி போய் வந்து அவரோடு இந்தக் கண்காணிப்பாளருக்கு அறிமுகமும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது.

ஏ.எம்.கே.-யைச் சிறைக் கண்காணிப்பாளர் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். படித்தவர், அரசியலுக்காகச் சிறைப்பட்டவர் என்பதைக் காட்டிலும் நண்பர் என்பதே முதன்மைக் காரணமாயிற்று.

ஏ.எம்.கே.க்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. சிறையில் புகையிலைக்கு அனுமதி உண்டே தவிர, வெற்றிலை சீவலுக்கு அனுமதி இல்லை. வெற்றிலைக்கு நெருக்கமான சுவை வேறு எந்த இலைக்காவது உண்டா என்று ஏஎம்கே ஓர் ஆராய்ச்சியே செய்து கொண்டிருந்தார். இதையறிந்த கண்காணிப்பாளர் வெற்றிலை சீவல் வாங்கித் தர முன்வந்த போது ஏஎம்கே. மறுத்து விட்டார்.

நீதிமன்றத்துக்குப் போய்வரும் போதும் நேர்காணலிலும் வெற்றிலை சீவல் வாங்கிக் கொள்ள அனுமதித்த போது அதை ஏற்றுக் கொண்டார்.
கண்காணிப்பாளர் அலுவலகப் பணி இல்லாத நேரமெல்லாம் ஏஎம்கேயின் கொட்டடிக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார். ஏஎம்கேக்கே இது பெரும் சங்கடமாயிற்று.

காவலர்களிலும் கைதிகளிலும் சிலர் ஏஎம்கே குறித்து இப்படிக் கேட்கலாயினர்: “இவர் பெரிய தொழிற்சங்கத் தலைவர், நக்சலைட்டு, தீவிரப் பொதுவுடைமையாளர் என்றெல்லாம் சொன்னார்கள்! இவரோ கண்காணிப்பாளருக்கு இவ்வளவு நெருக்கமாய் இருக்கிறாரே?”

வெகுவிரைவில் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது – செயல் வடிவில்! அப்போது அந்தக் காவலர்களும் கைதிகளும் மட்டுமல்ல, நட்பு பாராட்டிய அந்தக் கண்காணிப்பாளரும் கூடத் தெரிந்து கொண்டார் – ஏஎம்கே யார் என்று.
(தொடரும்)

தரவு: தாழி மடல் (14)