(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார்.

“என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!”

இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார்

நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத் தம் கொட்டடிகளின் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த கைதிகளுக்குத் தாங்க முடியா அதிர்ச்சி! அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதி! கம்பிக் கதவுகளை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் பயந்து பின்வாங்கி உள்ளே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்.

பொன் நாடாரின் பிணம் சிறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சவக் கிடங்கில் வைக்கப்பட்டது.

சிறையில் அன்றிரவு யாரும் தூங்கவில்லை. ஏ.எம்.கேயும்தான்! கொலைகாரர்களைத் தப்ப விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காகச் சிறைக் கைதிகளைத் திரட்டுவதற்கான வழிவகைகள் பற்றி யோசித்துச் சில முடிவுகள் எடுத்து, நம்பிக்கைகுரிய சில காவலர்கள் வழியாக இரவோடிரவாய் முக்கியத் ’தோழர்’களுக்குச் சொல்லியனுப்பினார். விடிவதற்குள் ஒரு செயல்திட்டம் தயாராக இருந்தது.

காலை எட்டு மணிக்கெல்லாம் ஏ.எம். கே, சிறை மருத்துவ மனைக்குச் சென்று சிறை மருத்துவர்கள் இருவரிடமும் சொன்னார்:

“பொன் நாடார் சாவுக்கு நீங்க இரண்டு பேரும் காரணமில்லை. நீங்க அடிக்கவில்லை, சாகடிக்கவில்லை. ஆனால், முறையாக பிண ஆய்வு இல்லாமல் உடம்பு இங்கே இருந்து வெளியே போகக் கூடாது. போனதென்றால் உங்களைச் சும்மா விட மாட்டோம். கண்காணிப்பாளரைக்  காப்பாற்றலாம் என்று நினைக்காதீர்கள். உங்களால் அவரைக் காப்பாற்ற முடியாது. அவராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.”

உண்மையில் அந்தச் சிறை மருத்துவர்களுக்குக் கண்காணிப்பாளரைக் காப்பாற்றும் எண்ணமில்லை. அவர்களோடு அவருக்கு அப்படி ஒரு முரண்பாடு. அவர்களோடு மட்டுமல்ல, அநேகமாய் ஒவ்வொருவருடனும் அவருக்கு முரண்பாடு இருந்தது. இந்த முரண்பாடுகளையெல்லாம் முழுக்கப் பயன்படுத்திக் கொள்வது ஏ.எம்.கே.யின் திட்டம்.

காலையிலேயே சிறைக் கைதிகள் அனைவரும் தட்டைக் கவிழ்த்து விட்டனர். உண்ணாவிரதம் மட்டும் போதாதென்று எல்லாக் கைதிகளும் நடு மைதானத்தில் வந்து உட்கார்ந்தார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் பிணத்தை வெளியே விட்டு விடக் கூடாது என்பது ஏ.எம். கே.யின் உறுதியான கட்டளை.

கண்காணிப்பாளர் தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. மற்ற அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவர்களின் திண்டாட்டம் கைதிகளுக்கு ஊக்கம் தந்த்து. ஏ.எம்.கே. வழிகாட்டியபடி அவர்கள் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள் :

“நாங்கள் வெளியில் குற்றம் செய்தோம் என்று தண்டனை கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இங்கு எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லா விட்டால் என்னாவது? இங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. நாங்கள் கொலை செய்தால் தண்டனை, எங்களைக் கொலை செய்தால் தண்டனை கிடையாதா? கொலை செய்ய வேண்டி ஏன் வந்தது என்று கோர்ட்டில் போய்ச் சமாதானம் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் கொலை நடந்துள்ளது என்ற உண்மையை மறைக்க விட மாட்டோம். உங்களோடு எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் எங்களோடு சேர்ந்து போராடா விட்டாலும் பரவாயில்லை. எங்கள் போராட்டத்தில் குறுக்கிடாமல் இருங்கள். அது போதும்.”

காவலர்களிடையே இருந்த நண்பர்கள் சிலரும் இதே வழியில் மற்றக் காவலர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சாரம் பலித்தது. சிறை நிருவாகம் இந்தக் காவலர்களைப் பயன்படுத்திக் கைதிகள் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமானால் வெளியிலிருந்து காவல்துறைப் படையை வரவழைத்தால்தான் முடியும். அதில் பல சிக்கல்கள் இருந்தன.

நடந்திருப்பது ஒரு கொலை என்பதை மறைக்க வழியில்லாமற் போனது முதல் காரணம். இது தொடர்பாகப் பொய் சொல்லிக் கைதிகளை ஏமாற்ற வழியில்லை. இரண்டிலொன்று பார்த்து விடும் மன நிலையில் திரண்டிருந்த கைதிகளை அச்சுறுத்தவும் வாய்ப்பில்லை. சிறை நிருவாகம் காவலர்களிடமிருந்தும் அந்நியப் பட்டிருந்தது. அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டவராகச் சிறைக் கண்காணிப்பாளர் இருந்தார்.

மதியம் வரை புதிய அசைவுகள் ஒன்றுமில்லை . பிற்பகல் கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு ஏ.எம்.கே. தன் கொட்டடியிலிருந்து நெடுமாடத் தி டலுக்குச் சென்று கைதிகளுக்கு நடுவில் உட்கார்ந்து விட்டார். அவரது வருகை அவர்களுக்குத் துணிவும் ஊக்கமும் தந்தது.

கண்காணிப்பாளர் வந்து தொலைவில் நின்று கொண்டு ஏ.எம்.கே.யைக் கூப்பிட்டார். ஏ.எம். கே. மறுத்து விட்டார்.

“எது வேண்டுமென்றாலும் இங்கே வந்து பேசுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம். ஆனால் என்னை இங்கே இருந்து கொண்டு போய்விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அது மட்டும் நடக்காது.”

கண்காணிப்பாளர் தன்னோடு வந்திருந்த சிறு படையை ஏவி, “அவரைப் பிடித்து வாருங்கள்” என்றதுதான் தாமதம்… கைதிகள் தரப்பிலிருந்து சரமாரியாகக் கற்கள் பறந்தன. கண்காணிப்பாளரும் மற்றவர்களும் சிறை வாயில் நோக்கி ஓடச், சிறைக்குள் அதிகாரிகளும் காவலர்களும் கூடப் பின்னாலேயே ஓடலானார். கைதிகள் சிறைவாயில் வரை துரத்திச் சென்று அத்துடன் நின்று கொண்டார்கள்.

சிறைக்குள் மருந்துக்கும் காக்கிச் சட்டை இல்லை. சிறை முழுக்கக் கைதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிகாரிகளும் காவலர்களும் மதிலுக்குத்தான் நிருவாகம் என்ற நிலை.

கூட்டத்துக்கு நடுவிலேயே கலந்தாலோசனைகள் நடைபெற்றன. வெளியிலிருந்து ஆயுதப் படைக் காவல்துறை வந்து தாக்குதல் தொடுக்குமானால் என்ன செய்வது என்று ஒரு கேள்வி எழுந்தது.

(தொடரும்)

தரவு: தாழி மடல்