கையூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கையூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூலை, 2013

குறுந்தகவல் அனுப்பினால் கையூட்டு கேட்குநர் மீது நடவடிக்கை தமிழகத்தில் அறிமுகம்

எல்லாமே கண்துடைப்பு நாடகம்தான். ஊழலைக் கண்டுகொள்ளாமல் ஊக்கப்படுத்துவதே ஊழலில் பங்கு வகிக்கும் ஊழல் ஒழிப்புத் துறையின் முதன்மைப் பணியாகும். பலரறிந்த உண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு கூற விரும்புகின்றேன். ஒரு சமயம் அடையாற்றிலுள்ள ஊழல் ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில், ஒருவர் கையூட்டு கேட்கப்படுவது தொடர்பாக முறையிட்ட பொழுது, மாவட்ட அலுவலகத்தில் போய்ச் சொல்லுங்கள் என்றனர். அங்கே அவர் சென்று தெரிவித்த பொழுது, அங்குள்ள அதிகாரி, தான் இப்பொழுதுதான் வந்துள்ளதாகவும் விசாரிக்காகமல் முடிவு எடுக்க முடியாது என்றும் கூறி அவரை அனுப்பி விட்டார்.  பணம் கேட்டதில் ஒரு பகுதி முன்பணமாக உரூபாய் 10,000 எடுத்துக்  கொண்டு பணத்தை வரிசையாக அடுக்கிப் பல பக்கங்கள் ஒளியச்சுப் படி எடுத்து வைத்துக் கொண்டு , கையூட்டு கேட்டவரிடம் பணத்தை முன்பணம் எனக் கூறி அளித்து விட்டு வந்து விட்டார் நண்பர். ஒளியச்சுப் படிகளை எடுத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு அலுவலகம் சென்று காண்பித்து மீண்டும் முறையிட்டார். அதற்கு அங்குள்ள அதிகாரி, நீங்கள் வேறு எதற்காவது கொடுத்து இருப்பீர்கள்  கையூட்டு என்று எப்படிச் சொல்ல முடியும்?  வேண்டுமென்று பழி சுமத்துவதற்காக நீங்கள் போடும் நாடகமாகக்கூட இருக்கலாம். எனவே, நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.  மீண்டும் பரிந்துரையுடன் ஊழல் ஒழிப்பு அதிகாரியை அனுப்பிய பொழுது, சிறு ஒலிப்பதியனைக் கொடுத்து அனுப்பி அவர் பணம் கேட்கும் பொழுது அதனைப் பதிந்து வாருங்கள்; நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார் அந்த அதிகாரி. ஆனால், இந்தத்தகவல் பணம் கேட்டவரிடம் சொல்லப்பட்டு விட்டது. எனவே, அவர், இவர் போனதும் செயகைமூலமே கேட்டு பணம் வாங்கிக்கொண்டு, அடுத்துள்ள குளியலறைக்குச் சென்று எண்ணிப் பார்த்துவிட்டுத் தன் உள்பையில் வைத்துக்  கொண்டார்.  அன்று பேசா நோன்பு இருப்பதாகச் கைகை மூலம்  பொய்யாகத் தெரிவித்து, இவரை அனுப்பி விட்டார். இவர் மனம் தளராமல் ஊழல்துறை அதிகாரியிடம் விவரத்தைத் தெரிவிதததற்குப் பணம்கேட்டதற்கான சான்று .இல்லை. எனவே, நடவடிக்கை எடுக்க முடியாது என்று தட்டிக் கழித்து விட்டார். ஊழல்  ஒழிப்பு என்பது ஊழல் பற்றிய விவரம் தெரிவிததாலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், பணம் கொடுக்கும் பொழுது மட்டும்தான்  கையும் களவுமாகப் பிடிப்போம்!  அதற்குப் பின் வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்பது சரியில்லை. ஊழல் ஒழிப்புத் துறையினர் பொழுது போக்கிற்காகவும், ஆதாயத்திற்காகவும் சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கின்றார்களே தவிர,  உண்மையாகப் பணியாற்றுவதில்லை.  இயக்குநரகத்தில்  நேரில் சென்று முறையீடு அளிக்க முயன்றால் விரட்டி அடித்து விடுகிறார்கள். தங்களை நேர்மையானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக எடுக்கும் சில நடவடிக்கைகளால் ஊழல் ஒழியாது. அரசும் ஆட்சியாளர்களும் நேர்மையாக இருப்பின், இத்துறையும் ஒழுங்காகச் செயல்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/




குறுந்தகவல் அனுப்பினால் இலஞ்ச நபர் மீது நடவடிக்கை தமிழகத்தில் அறிமுகம்
 
சென்னை: இலஞ்சம், ஊழல் குறித்து, மொபைல் போன், கணினி மூலம், பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., புகைப்படம், வீடியோக்களை அனுப்பும், "விஜ்-ஐ' (விஜிலென்ஸ் ஐ) திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், கணினி மூலம், எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில், "விஜ் - ஐ' என்ற புதிய திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், ஊழலுக்கு எதிரான, ஐந்தாவது தூண், மெட், எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில், "விஜ்-ஐ' திட்டத்தை, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது.

சென்னை, தி.நகர், சர்.பி.டி.தியாகராயா அரங்கில், திட்டத்தை அறிமுகம் செய்து, மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசியதாவது: ஊழல் பற்றி, எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு, மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது. ஊழலை ஒழிக்க, "விஜ்-ஐ' பயன்படும். இதற்கு, 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், மொபைல் போனுக்கு, விஜ்-ஐ மென்பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால், யூசர் நேம், ஐ.டி., கிடைக்கும். மொபைல் போன், கணினி மூலம், லஞ்சம், ஊழல் குறித்த, எஸ்.எம்.எஸ்., புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது, ஆவணமாக்கப்பட்டு, உடனடி விசாரணை துவங்கும். நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் மட்டுமின்றி, எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது: நாட்டில், நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை இல்லை. பணம் சம்பாதிக்கும் அதிகாரிகளை தான், "நல்லவர்' என்று கருதும் போக்கு காணப்படுகிறது. மத்திய பிரதேசத்தில், அரசுப் பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., கணவனும், மனைவியும், 320 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தெரிந்து, ஐந்து மாதங்களாகியும், வழக்கு கூட பதியவில்லை. அரசுகள், ஊழலை ஒழிக்கும் என, நினைத்தால் முட்டாள்தனம். நாம் நினைத்தால் முடியும்; அதற்கு இளைஞர்கள் முன் வர வேண்டும். இதற்கு, ஆர்.டி.ஐ., சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

ஊழல் எதிர்ப்பு இயக்க துணைத் தலைவர் அரசு பேசுகையில், ""முன்னேற்றத் திட்டங்களை ஒதுக்கி வைத்து, ஊழல் ஒழிப்பை முக்கியப்படுத்த வேண்டும்."விஜ்-ஐ' என்ற ஆயுதம், இளைஞர்களிடம் தரப்பட்டுள்ளது. எல்லா நிலைகளிலும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். "யூத் விங்' தேர்தல் நேரத்தில், "யூத் இங்க்' ஆக மாறி, நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கினால், ஊழல் ஒழியும். மாநில விஜிலென்ஸ் பிரிவிலும் இந்த நடைமுறை வேண்டும்,'' என்றார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் பேசுகையில், ""ஊழல், லஞ்சம் மட்டும் தான் வெளிப்படையாக, திறமையாக நடக்கிறது. பல இடங்களில், இந்தப் பணிக்கு இவ்வளவு லஞ்சம் என, பட்டியல் போட்டு வசூலிக்கின்றனர். "விஜ்-ஐ 'யில் புகார் கொடுத்தாலும், ஊழல் குறையாது. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான, பெரிய அளவிலான ஊழல்களை ஒழிக்க வேண்டும்,'' என்றார். முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல், "ஐந்தாவது தூண்' தலைவர் விஜய் ஆனந்த், "யூத் விங்' ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராமநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
 

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கையூட்டாகும் நல்கைத்தொகை

உரத்த சிந்தனை : இலஞ்சமாகும் மானியம் எசு.ஆர்.சேகர்
மத்திய அரசின், 51 திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு வழங்கும் மானியங்களை, அந்தந்த பொருட்களை இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்காமல், வங்கி மூலம், பணமாக தர, மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு சிறந்த திட்டமாக தெரியும். அரசின் பல்வேறு திட்டத்தில் கொடுக்கப்படும் இலவசங்கள், மானியங்கள், மக்களை சென்றடைவதில்லை. இடையில் ஏற்படும் ஒழுகல், சிந்தல், சிதறல், உதிரல் போன்றவை, ராஜிவ் சொன்னது போல, ஒரு ரூபாய்க்கு, 17 பைசா தான் மக்களை சென்றடைகிறது என்றது உண்மையே.இக்குறையை சரி செய்யத்தான், மக்களுக்கு, மானியங்களை பணமாக, அதுவும் வங்கி மூலமாக, நேரடியாக அவர்கள் கணக்கிலேயே செலுத்தி விட, அரசு முடிவு செய்துள்ளது; இது தவறா?

குஜராத்துக்கு வரும், 13 மற்றும் 17ம் தேதி தேர்தல். இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல், 51 மாவட்டங்களில், நான்கு மாவட்டம் குஜராத்தில் இருக்கின்றன.வாக்காளர் என்றால், காங்கிரசின் ஓட்டு கொட்டும் ஒரு ஏ.டி.எம்., காசு என்னும் கார்டை, வாயில், "ஸ்வைப்' செய்தால், வயிற்றிலிருந்து, "ஓட்டை' கொட்டும் இந்த இயந்திரம். இதை உறுதி செய்யும் சம்பவங்கள், சரித்திரத்தில் நடந்தேறியுள்ளன.

கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், "கரீபி ஹகட்டாவோ' வறுமையே வெளியேறு என்ற, கோஷத்தை முன் வைத்து, இந்திரா வெற்றி கண்டார்.கடந்த, 1971ம் வருடம், சுதந்திரம் பெற்று அன்று, 24 ஆண்டு ஆகியும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. இன்றும் அப்படித்தான் என்பது, வேறு விஷயம்.தோற்றுப்போகும் சூழல் உருவாகும் போதெல்லாம், காங்கிரஸ் புத்தியில் புதிய புதிய ஏமாற்றுத் திட்டங்கள் வேர்க்கும். அதே மாதிரி ஒன்று தான், இந்த மானியங்களை பணமாக, வங்கி மூலம் வழங்கும் திட்டம்.ஓட்டுக்காக, கட்சி பணத்துக்கு பதில், அரசு பணத்தையே, அதாவது, மக்கள் பணத்தையே, மக்களுக்கு கொடுக்க அறிவித்ததுதான் இந்த திட்டம்.

வெளிநாட்டிலிருந்து, ஈமு கோழி என்ற ஒரு பறவையை, இங்கு கொண்டு வந்து, அது இந்தியாவின் தட்பவெட்ப சூழலுக்கு வளருமா என்பதை பற்றி கவலைப்படாமல், விவசாயிகளிடம் ஆசை வார்த்தை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டினர்.காலம் காலமாக வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டு, காவல் நிலைய வாசல்களில், அசலுக்காக தவங்கிடக்கும் காட்சி, தினசரி பத்திரிகைகள் படம் பிடித்து காட்டுகின்றன. சில தனிப்பட்ட நபர்களின் ஆசை வார்த்தைகள், கவர்ச்சி திட்டங்களில், மக்கள் ஏமாந்து போகின்றனர் என்பது, நிதர்சனமான உண்மை.

தனியார், மக்களை ஏமாற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசே, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டை பறித்து ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதும், ஒரு சாராரின் கேள்வி.வாஜ்பாய், "வேலைக்கு உணவு' திட்டத்தை கொண்டு வந்தார்; எதற்காக? அன்றைய தினம், உணவு கிடங்குகளில், கோதுமை நிரம்பி வழிந்தது. சேமிக்க இடமில்லை. தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அதை ஏழைகளுக்கு கொடுக்க விரும்பினார்.மக்கள், அரசிடம் கையேந்தக் கூடாது. எனவே, இலவசமாக கொடுக்க விரும்பாமல், அவர்களே அதை சம்பாதித்துக்கொள்ளும் வழியில், 8 மணி நேரம் வேலை கொடுத்து, சம்பளமாக கோதுமை கொடுத்தார்.வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு, அதே திட்டத்தை, மாற்றுப்பெயரில் காங்கிரஸ் தொடர்ந்தது. பெயர் மட்டுமல்ல, வழிமுறை, செயல்பாடுகளும் மாறின. "தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம்' என்பது தான், அந்த புதிய பெயர். இதில், தானியத்துக்கு பதிலாக, பணம் கொடுக்கப்பட்டது. கணக்குக்கு, 100 முதல், 110 ரூபாய் சம்பளம். கைக்கு வருவதோ, 60 அல்லது 70 ரூபாய் மட்டுமே. இடையில், 40 முதல், 50 ரூபாய் வரை, ஒழுகல் இருந்ததால், உருப்படியான வேலை ஏதும் நடைபெறவில்லை.

தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றும், ஆளும் கட்சிக்காரர்கள் பிரித்தாண்டு ஊழியர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்த வேலைக்கு, அவர்கள் கேட்ட விலை, தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் எனும் நிபந்தனை தான். இப்போது, "வங்கி மூலம் மானிய பணம்' திட்டம், நிஜமாகவே, ஒரு ஜாக்பாட் தான். இதே திட்டத்தை, இப்போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, "மாதிரி திட்டமாக' காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், "கோட்காசிம்' தாலுகாவில், நவம்பர், 2011ல் அறிமுகப்படுத்தினர்.முதலில் ஏழை குடும்ப கார்டுதாரருக்கு, வங்கி கணக்கு ஏற்படுத்தி கொடுத்து, மண்ணெண்ணெய்க்கு மானியத்தை, வங்கியில் செலுத்த முடிவு செய்தனர். அதாவது, ஒரு கார்டுதாரர், மாதம், 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 15 ரூபாய் என, மானிய விலையில் கொடுத்ததை, அதன் சந்தை விலையான, 49 ரூபாய்க்கு வாங்கி கொள்ள வேண்டும்.

திட்டத்தின் முதல் மாத மானியம், 340 ரூபாயை, முன்கூட்டியே வங்கி கணக்கில் கட்டி விடுவது என, முடிவு செய்தனர். இது முதல், மூன்று மாதங்களுக்கு தொடரும். இரண்டாவது, மூன்றாவது மாதத்திலிருந்து, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், வாங்கும் மண்ணெண்ணெய்யின் அளவை பொறுத்து, மானிய தொகை, வங்கியில் செலுத்துவது என்பது ஏற்பாடு. திட்டம் துவங்கிய கடந்த ஓராண்டில், ஒரு சிலரைத் தவிர, யாருக்கும் மானிய தொகை, வங்கியில் செலுத்தப்படவில்லை. சந்தை விலைக்கே, ரேஷனில் மண்ணெண்ணெய்யை விற்பதால், எண்ணெய் வாங்க ஆளில்லை. அதாவது, ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை, 70 சதவீதம் குறைந்ததுஇந்த விற்பனை குறைவை, அரசு, தற்போது கையில் எடுத்துள்ளது. ரேஷன் மண்ணெண்ணெய், கள்ள மார்க்கெட்டுக்கு போனதை, அரசு தடுத்து விட்டதாம். இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு இதை வைக்கிறது.
ஆனால், உண்மை நிலவரம் வேறு. அரசின் மானியம், வங்கி கணக்கில் ஏறாததால், சந்தை விலையான லிட்டர், 49 ரூபாய்க்கு மக்களால் மண்ணெண்ணெய்யை வாங்க முடியாததால், கிராமவாசிகள், காட்டில் கிடைக்கும் விறகுகளை பொறுக்கி, ஜீவனம் நடத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

இது தவிர, இந்த திட்டத்தில் வேறு என்ன பாதகங்கள் இருக்கின்றன என்று, கேட்பவர்களுக்கு, சில விவரங்கள்: வங்கிகள் இல்லாத கிராமங்கள் நாட்டில், 40 சதவீதத்துக்கும் அதிகம். பெரும்பாலான கிராம மக்கள், தபால் நிலையங்களில், கணக்கு வைத்துள்ளனர்.நாட்டின், 60 சதவீத தபால் நிலையங்கள், "இன்டர்நெட்'டினால் இணைக்கப்படவில்லை. இதை செய்து முடிக்க, அரசுக்கு, 2013 ஜூனில் ஆரம்பித்து, 15 மாத காலம் ஆகும் என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.ஆக, "மாதிரி திட்டமே' ஓராண்டு கால சாதனையாக, வேதனையே தந்துள்ளது. அதுவும், ஒரே ஒரு பொருளுக்கு, அதாவது, மண்ணெண்ணெய் மானியத்துக்கு மட்டும்.

மிக முக்கியமான வங்கி கணக்கு வசதியே முழுமை பெறவில்லை. அரசு அறிவித்துள்ள, 51 மாவட்டங்களில் கூட, 71 சதவீதம், வங்கிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் வசதி உள்ளதாக, மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால், இதை அவசர, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? "தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ், இத்திட்டத்தை அறிவித்துள்ளது' என்ற குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் வாக்குமூலம் வலு சேர்க்கிறதே.நலத்திட்டங்கள், மானியங்கள், ஏழை மக்களை சமூகத்தில் முன்னேறியவர்கள் நிலைக்கு உயர்த்தி விடுவதற்காக, அரசு செய்ய வேண்டிய கட்டாயங்கள். அதனால் தான், நம் நாட்டின் அரசை, அரசமைப்பு சட்டத்தில், "மக்கள் நல அரசாங்கம்' என்று
குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இன்றைய அரசு, குறிப்பாக, "காந்தி' பெயர் கொண்ட, நேரு குடும்ப தலைமையிலான அரசுகள், மானியங்களை பணமாக தருகிறோம் என்ற பெயரில், லஞ்சமாக மாற்ற முயல்வது, இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது.
EMAIL:srseghar@gmail.com

எஸ்.ஆர்.சேகர்,அரசியல் சிந்தனையாளர்