பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில் – இதுவரை தமிழுக்கு இருந்த இரு தாள் தேர்வு முறையை நீக்கி ஒற்றைத் தாளாக்கியது. இந்த ஆண்டு இதே முறையை 9, 10 ஆம் வகுப்பு மாணகா்கர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறதாம்.
அதுமட்டுமல்ல! தமிழில் ஒரு தாளாவது இருந்ததையும் தந்திரமாக நீக்கக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இனி, பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் ஏதேனும் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் படித்துத் தேர்வு எழுதினால் போதுமாம். இதனால் ஆங்கில மோகம் உள்ள மக்களும் பிற மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்ட மக்களும் தங்கள் பிள்ளைகள் தமிழை விலக்கி விட்டு ஆங்கிலம் அல்லது தத்தம் தாய் மொழியைப்படிக்கவே விரும்புவர். பெயரளவிற்குத் தமிழும் பாடமுறையில் இருந்தாலும் விருப்பத் தெரிவு என்ற முறையில் அதனை நீக்கப் பள்ளிக் கல்வித்துறையினர் சதி செய்கின்றனர்.
தமிழன்பர்கள்
முதல் பிரிவில் ஆங்கிலத்தைத் தெரிவு செய்து விட்டு நான்காம் பிரிவில் பிற மொழியினர் தங்கள் தாய்மொழிப்பாடத்தைத் தெரிவு செய்யலாம். எனவே, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழைத் தவிரப் பிற மொழிகளைப் படிக்கலாம் எனக் கல்வித்துறை வழி வகுக்கிறது.
இவ்வாறு ஒரு மொழிப்பாடத்தை அகற்றுவதன் மூலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் உட்பட தேர்வுத்தாள் குறைவதால் தேர்வு வினாத்தாள் அச்சடிப்புச் செலவு, விடைத்தாள் செலவு, தேர்வுத்தாள் திருத்துவதற்கான ஊதியம் முதலான பல நூறாயிரம் உரூபாய் மிச்சம் ஆவதாகவும் கல்வித்துறை தெரிவிக்கிறது. அப்படியானால் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு முறையை எடுத்து விட்டால் இன்னும் செலவு குறையுமே. பள்ளிகளையே இழுத்து மூடிவிட்டால், சிறுவர் சிறுமியருக்கு மன அழுத்தம் என்பதே இல்லாமல் போகுமே. மன அழுத்தம் ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறித் தமிழ்த்தாளுக்கு வேட்டு வைக்கும் கல்வித்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி முறையை மாற்ற வேண்டும் என இல.கணேசன் பேசியுள்ளார். இந்தியா முழுவதும் இத்தகைய ஒரே கல்விமுறையை வலியுறுத்தி முன்னரே பாசக அறிவித்துள்ளது. அப்படியானால் தமிழ் ஒழிப்புப் பின்னணியில் பா.ச.க. இருக்கிறதோ என்ற ஐயப்பாடு வருகிறது. அதற்குத் தமிழக அரசும் இணங்கி இவ்வாறு செயல்படத் திட்டம் தீட்டுகிறதோ என்று எண்ண வேண்டி உள்ளது.
தேர்தல் காலத்தில் பெரும்பான்மை வலியமையுடைய அரசும் இடைக்கால அரசுதான். ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புபவர்களும் அண்மைத் தேர்தல் முடிவிற்குப் பின்னர் ஆட்சி, கலையலாம் என எண்ணுகின்றனர்.
இத்தகைய நிலையற்ற அரசு முடிவெடுக்கும் வகையில் கல்வித்துறைபரிந்துரைகளை அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. முதல்வரும் கல்வி யமைச்சரும் தலையிட்டு உடனடியாக இத்தகைய முயற்சிகளுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழைத் தவணை முறையில் ஒழிக்கும் கல்வித்துறைக்கு எதிராகக் கல்வியாளர்களும் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டு தமிழைக் காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டு கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் எழுச்சிப் பேரவைத் தலைவர் இறையரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ் நாட்டின் கல்வியிலே தமிழே இல்லை என்று அழிவு செய்து வருகிறார்கள்.
மழலைக் கல்வியில் தமிழக அரசே அங்கன்வாடி முதலே ஆங்கிலத்தைக் கொண்டு வருகிறது.
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பிற்கு மொழிப்பாடமே ஒன்று மட்டும்தான்.ஆங்கலம் அ்லது தமிழ் தேர்வு செய்தால் போதும். பள்ளிச்சான்றிதழ்களில் முதல் மொழி தமிழ் என்றில்லாமல் வெறுமையாக மொழி – ஆங்கிலத்தில் லாங்குவேசு – என்று மட்டுமே குறிப்பிட்டுப் பள்ளிச்சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் வழங்கியுள்ளார்கள்.
ஆகவே, ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்கப்படும். அது கட்டாயம் என்பதான நிலையில் உள்ளது. முதலில் குறிப்பிடப்பட்ட மொழி என்பது கட்டாயமில்லை. அதனைத் தாய்மொழி என்று சொல்லி வந்தார்கள். ஆனால், பிறகு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று என்பதாகச் சொல்லி விட்டார்கள். ஏறத்தாழ ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதிலிருந்து இதே நிலைமைதான் உள்ளது.
பள்ளிப் படிப்பிலிருந்து பல்கலைக்கழகப் படிப்பு வரை இரண்டாம் மொழி ஆங்கிலம் கட்டாயம். ஆனால், முதல் மொழி முதலில் குறிப்பிடப்படுகிற மொழி; அது இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று. தமிழ் கட்டாயம் இல்லை என்ற நிலையைத் தமிழக அவைத்தலைவராக இருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யிடம் 1972இல் நான் கூறினேன். “அப்படியா எனக்குத் தெரியாதே பல்கலைக்கழக ஆளவையில் நான் சொல்கிறேன்” என்றார் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அந்நிலை இன்று வரை மாறவில்லை.
பல்கலைக்கழகங்களில்கூடச் சான்றிதழில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்படுகின்றன. ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் இப்பொழுது மதிப்பெண் சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வருகின்றன.
விரைவில் தமிழ்ப்பாடங்கள் அறவே தேவையில்லை என்பர்.
ஆங்கிலத்தை எதரிப்பவர்களில் பலர் தமிழ் ஆதரவாளர்கள் இல்லை. இந்தி, சமற்கிருத ஆதரவாளர்கள். திராவிட எதிர்ப்பாளர்களில் பலர் தமிழின ஆதரவாளர்கள் இல்லை.ஆரிய ஆதரவாளர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைரமுத்து அறிக்கை
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திரவீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தெரிவு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.
தொழிற் கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கலவியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டா இந்த நச்சுச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்து விடுங்கள்
தமிழ் அறிஞர்
தமிழில் இரண்டாம் தாள் வேண்டா என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித் திறனும் இரண்டாம்தாளில்தான் வினைப்படுகின்றன.
கண்களில் ஒன்று போதும் என்று ஒன்றைக்களைந்து விடுவீர்களா? பள்ளிக்கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பற்கு மாற்றாக அதன்அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.
தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும் ஆர்வலர்களையும் அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன் முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்
சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் அமைந்திருக்கும் எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தேறியது.
தமிழார்வலர்கள் கூடிய இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கெ.பக்தவத்சலம் அவர்கள் வரவேற்புரையில் பேசியதாவது, “தொல்காப்பியர் காலத்தில் இருந்தே பாலி மொழி இருந்தது. பின் சமஸ்கிருதமே இந்தியாவில் பெரும்பங்கு வகித்தது. அப்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக வந்ததே உருதுமொழி. சமஸ்கிருதத்திலிருந்து ஜ, ஹ, ஷ, க்ஷ, ஸ போன்ற எழுத்துக்கள் தமிழோடு கலந்து தமிழாகிப் போனது. தமிழ்மொழியை விட மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் (தமிழ் மொழி) பிறமொழிக் கலப்பு குறைவாகவே இருந்தது.
தமிழில் வடமொழி கலந்த சொற்றொடர்களை சமணர்கள் உருவாக்கினர். இதை இறுதியாக வைணவர்கள் வளர்த்தார்கள். இப்படி பல மொழிகளிலிருந்த சொற்கள் தமிழை ஆக்கிரமித்து வருகின்றன. எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிடும் நீங்கள் இராசாசி எனக் குறிப்பிடுவதேன் என முரசொலிக்கு ஒரு முறை மூதறிஞர் இராசாசி மடல் எழுதினார். எம்.சி.ஆர். என எழுதத் தொடங்காமல் இராஜாஜி என எழுதத் தொடங்கினர்.
மணிப்பிரளவம் என்ற சொல்லைப் பிரித்தால் மணி, முத்து என இரண்டு அர்த்தம் தரும். மணி என்றால் முத்து அல்லது மாணிக்கம் என்று பொருள். முத்தும், மாணிக்கமும் வெள்ளை நிறத்தில் இருக்கும். பவளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். வடமொழியாளர் தமிழை மாணிக்கமாகக் கருதினர். தமிழில் பவளம் என்பதை வடமொழியில் பிரளவம் என மாற்றினர். இது போலவே விளக்கவுரை என்பதை வியாக்கியானம் என்றும், பாயிரம் என்பதை பிரவேசம் என்றும், வேட்டியை வேஷ்டி எனவும் மாற்றினர். மீனாட்சி சுந்தரம் என்பவர் வடமொழிச் சொல்லான ஷாட்சியை, சாட்சி என தமிழாக்கம் செய்தார். இந்நிலையில் தமிழுக்குள் ஆங்கிலம் புகுந்துவிட்டது. இன்று தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தில் கூட அர்ஜூனனும், பீமனும் ஆங்கிலத்தில் பேசுவது தாங்க முடியாத ஒன்றாகும். எனவே தமிழர்களாகிய நாம் பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதவும், பேசுவதோடு தமிழ் அழிவைக் காப்பதும் நமது கடமையாகும்” என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் பா.இறையரசன் பேசியதாவது, “1930-களில் தமிழிசை வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதைக் கண்ட மற்ற மொழியினர் இவர்களுடைய தமிழ் அவ்வளவு நலிவடைந்துவிட்டதா? எனக் கேலி பேசியதுண்டு. தமிழார்வலர்களாகிய நம்மை தமிழ் உணர்ச்சி மட்டுமே வழி நடத்துகிறது. நாடெல்லாம் நடந்து தமிழைப் பரப்பிய ஆழ்வார், நாயன்மார்கள், பெரியார் போன்றவர்களால் தமிழ் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றோ தமிழின் நிலை தலைகீழாகிப் போனது. கி.பி.3-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதம் இருந்துள்ளது. நான் ஆத்திகன்தான், அதற்காக சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழி குறைந்தது இல்லை. தமிழ் தாத்தா என அழைக்கக்கூடிய உ.வே.சு. ஐயரிடம் ‘வணக்கம்’ என்று கூறினால் ‘நமஸ்காரம்’ என்றுதான் கூறுவார்.
கி.பி.3-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் எழுதப்பட்டது. நம்மை வேதம் படிக்கக் கூடாது என்றனர். வேதம் கி.பி.14-ல்தான் எழுதப்பட்டது. அப்பொழுதுதான் கிரந்த எழுத்துக்களும் வந்தது. இன்று படிக்கின்ற குழந்தைகள் “Thosaiyamma thosai” என ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படிக்கும் அவல நிலை உள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டாமா? வடமொழியை தேவ பாஷை என்றும் தமிழை நிஷ பாஷை என்றும் கூறி வந்தனர் சிலர். இவர்கள் தமிழில் மணிப்பிரளவச் சொற்களை கலந்தனர். சோற்றை சாதம் என மாற்றினர். 26 கிரந்த எழுத்துக்கள் 247 தமிழ் எழுத்துக்களை அழிக்கும் என்றால் அழியட்டுமே தமிழ் என்றான் வெள்ளையன். சமஸ்கிருதத்தினால் வீழ்ந்த மொழி தமிழ். தமிழை வளர்க்க வேண்டும் என்கிறீர்களே, வளர்ப்பதற்கு அது என்ன தாடியா எனக் கேலி பேசுகிறார் திரைக்கவிஞர் வாலி.
அன்று சமஸ்கிருதம் வந்து தமிழை அழித்தது போல் இன்று ஆங்கிலம் தமிழில் புகுந்து தமிங்கலம் ஆகிவிட்டது. ற, ர, ண, எ, ஒ என்ற இந்த ஐந்து எழுத்துக்களையும் கிரந்த எழுத்தில் சேர்க்க வேண்டும் என சமீபத்தில் போராட்டம் நடந்தது. என்ன கொடுமை? தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்றனர். தமிழனுக்கு இரண்டு குணம் தான் இருக்கிறது. ஒன்று ஒற்றுமையின்மை, மற்றொன்று காட்டிக் கொடுத்தல்.
ஆரிய இதழான அமுத சுரபியில் பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை “ஸெந்தமிழ் நாடெனும் போதினிலே” என எழுதி தமிழை இழிவுபடுத்துகின்றனர். மேலும் வைகோ, சீமான் போன்றோரை ஈழ மக்களின் துரோகி என எழுதி தமிழர்களுக்குள் கலகம் மூட்டுகின்றனர். மாவீரன் முத்துக்குமார், ஈழத்தமிழரைக் காக்க இறந்த்போது தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட வரவில்லை. எனது கனவெல்லாம் இனி தமிழை அறிவியல், கணினித் தமிழாக மாற்ற வேண்டும் என்பதே” எனப் பேசினார்.
இறுதியாக தமிழ்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் பேசியதாவது :
தமிழ் இன வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான நிகழ்விது. இணைய இதழான “நட்பூ” போன்ற இதழ்கள் தமிழுக்கு அரும்பணி ஆற்றி வருகின்றன. கிரந்தம் என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல்மொழி எழுத்துக்களை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால் நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தினால் எண்ணற்ற சமஸ்கிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்த தமிழைச் சிதைத்தன.
மணிப்பிரவாள நடைக்காக தமிழ் எழுத்துகளில் க1, க2, க3, க4 என்பது போல் 26 கிரந்த எழுத்துக்களைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துக்களையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காக கருத்துரு அளிக்கப்பட்டது. இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகவும் கதை கூறப்பட்டது. மேலும் தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துக்களைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்துவதுதான் இதன் உள்நோக்கம்.
இப்பொழுது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் பஸ், ஜாமின், மிக்ஸி, ஜாம், ஷவர் முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்துவிட்டன. ஜ சில இடங்களில் (ஜமுனா – யமுனா என்பது போல்) ய என மாறும். (ஹரி என்பது அரி எனப்படுவது போல்) ஹ என்பது அ என மாறும். இவ்வாறு உரிய முறைக்கேற்ப பெயர்ச் சொற்களை மட்டும் இவ்வாறு எழுதிவிட்டுப் பிற சொற்களை உரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி புஜம் – தோள், ஸர்ப்பம் – பாம்பு, ஸந்தோஷம் – மகிழ்ச்சி, லஷ்மி – திருமகள், ஹர்த்தால் – மறியல் கதவடைப்பு, ஸ்ரீநகர் – திருநகர் என எழுத வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் தமிழில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழ்ப் பெயர் சூட்டியவர்கள் பிள்ளைகள்கூட அவ்வாறுள்ளனர். இந்தச் சமுதாய அவலத்தின் எடுத்துக்காட்டுதான் கலைஞரின் குடும்பத்தினரும் சன் டி.வி., சன் பிக்சர்ஸ்,ரெட் ஜெயண்ட், க்ளவுடு நைன் எனப் பெயர் வைத்துள்ளமையும். பாரே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி நிறுவனங்கள், படத் தலைப்புகள். கதைப்பாத்திரங்களின் பெயர்கள் என அனைத்திலும் தமிழ்ப் பெயர்களையே குறிக்க வேண்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாடு உள்ளதால்தான் பிற மொழிப் பெயர்களைக் கையாளுகிறோம். எனவே பாட நூல்களில் தமிழ் என்ற பெயரில் கிரந்த எழுத்துகள் புகுந்துள்ளதை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தஒழிப்பு இயக்கம் நடத்தியாவது நாம் வெற்றி காண வேண்டும். இறுதியில் கேள்வி நேரம் வந்தது. வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு, மொழிச் சீர்திருத்தம் பற்றியும், மொழி வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் தமிழினை எவ்வித வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தினர். கூட்டத்திற்கு வந்திருந்த ஐம்பது பேரில் 48 பேர் முதியவர்கள் என்பதால் அடுத்த முறை இளைஞர்களை இணைக்க வேண்டும் என்றும், ஆட்சியாளர்கள், திணிப்பவர்கள், எதிர்க்காத பொதுமக்கள் இருக்கும் வரை தமிழ் முன்னேற முடியாது என்ற பேச்சுக்கள் அனல் வீசின. வந்த ஒரு தமிழார்வலர் ஆட்சி, அலுவல், நீதிமன்றம் போன்ற இடத்தில் ஆங்கிலமும், வடமொழியுமே ஆட்சி செய்கிறது. தமிழுக்கு மதிப்பில்லை என குறைபட்டுக் கொண்டார். மேலும் ஒருவர் 1967-லிலேயே தமிழ் ஆட்சிக்கு வந்துவிட்டது. 43 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதுதான் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. இரண்டு தெலுங்கன் சந்தித்தால் தெலுங்கில் பேசுகிறான், இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறான். இரண்டு தமிழன் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறான். தமிழன், தமிழில் பேசுவதை என்று கௌரவமாக நினைக்கிறார்களோ அன்று தமிழ் வாழும். இல்லையேல் பாரதி கூற்றுக்கிணங்க “மெல்ல தமிழ் இனி (தமிழனால்) சாகும்!!
Comments
(Nov 26, 2010) திருமால் said:
இதுபோன்ற கூட்டங்களை நடத்தித்தான் தமிழைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
‘ஒருங்குகுறியில் கிரந்தத்திணிப்பும்தமிழ்காப்பும்’–கருத்தரங்க செய்திகள்
மேற்கண்ட தலைப்பில் 4.12.2010 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை, சென்னை - எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திலுள்ள அண்ணா அரங்கில் இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இவ்விழாவிற்கு இன்னிசையேந்தல் கோ.ஆத்மநாதன், முனைவர் பா.இறையரசன், முனைவர் மு.பொன்வைக்கோ, முனைவர் மு.தெய்வநாயகம், முனைவர் ந. அருள், பொறிஞர் வேங்கடேசன், பொறிஞர் ஆண்டோ பீட்டர், கவிஞர் இளவரச அமிழ்தன், தமிழ்திரு த.தமிழ்த் தென்றல், முனைவர் இராமகி, பேரா.மா.தமிழ்ப்பரிதி, பொறிஞர் ப.செல்லப்பன், பேரா.இலக்குவனார் மறைமலை, பேரா. இலக்குவனார் திருவள்ளுவன், அறிஞர் ஔவை நடராசன் ஆகிய தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல தமிழ் ஆர்வலர்களும் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர். விழா தொடக்கமாகத் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருபுவனம் ஆத்மநாதன் குழுவினர் பாரதிதாசன் பாடல்களைப் பாடினர்.
தமிழில் 26 கிரந்த எழுத்துகள் சேர்க்கப்படவேண்டும் என்று இரமணசர்மா கூறுவதையும் எதிர்க்கிறோம். கிரந்தத்தில் 5 தமிழ் எழுத்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்று நா.கணேசன் கூறுவதையும் எதிர்க்கிறோம். இதைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவே இக்கருத்தரங்கம் கூடியிருக்கிறது என்று வரவேற்புரையில் முனைவர் பா.இறையரசன் கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.தெய்வசுந்தரம் “கணினிக்கு ஏற்ற அறிவியல் மொழி தமிழ் என்பதால் வடமொழியைப் பின்பற்றித் தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையில்லை” என்றார். தமிழ் எழுத்துகளை கிரந்த எழுத்தில் சேர்த்துவிட்டால் கிரந்தத்தில் இருந்துதான் தமிழ் வந்தது என்று கூறிவிடுவார்கள்; கிரந்த எழுத்துகள் தமிழில் நுழைந்தாலும் கேடுதான். ‘வரலாற்று ஆவணங்களுக்குக் கிரந்த எழுத்துகள் தேவை’ என்று சிலர் சொல்லுவதை தமிழறிஞர்கள் முடிவு செய்து கூறவேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்கள் தொடக்க உரை ஆற்றுகையில் கூறினார்.
தமிழர் சமயம் இதழின் ஆசிரியர் தெய்வநாயகம் பேசுகையில் சமற்கிருதமும் கிரந்தமும் இல்லாமல் தமிழால் இயங்க முடியும்; இந்து மதத்தின் பெயரால் அவற்றைத் திணிப்பது தவறு என்று கூறினார். தமிழக முதல்வர் கலைஞர் கிரந்த எழுத்துகளை தமிழில் நுழைய விடமாட்டார் என்று தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் வாழ்த்துரையில் கூறினார். பொறியாளர் வேங்கடேசன் நன்றியுரை கூறினார்.
கருத்தரங்க முதல் அமர்விற்கு கவிஞர் இளவரச அமிழ்தன் வரவேற்றார். கணினித்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஆண்டோபீட்டர் தலைமை ஏற்றுத் தமிழில் கணினிப் பயன்பாடு அதிகமாகி உள்ளது. ‘உத்தமம்’ அமைப்பின் மூலம் ஒருங்குகுறியில் தமிழ் இடம்பெற தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.
அறிமுக உரையாற்றிய தமிழ்த் தென்றல் கிரந்த எழுத்துகள் தமிழில் சேர்க்கப்படக் கூடாது என்பதுடன் இதுவரைத் திணிக்கப்பட்டுள்ள ஜ, ஸ, ஹ முதலிய எழுத்துகளையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் ஆவணப்படுத்த கிரந்த எழுத்துகள் தேவை. இவற்றை தனித்தளத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று முனைவர் இராமகி வலியுறுத்தினார். பொறியாளர் ப.செல்லப்பன் கணினியில் எழுத்துருவிற்கான குறியீடுகள் அமைந்த முறை குறித்து விளக்கினார்.
நண்பகல் உணவிற்குப் பின் இரண்டாம் அமர்வு தொடங்கியது. தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் இலக்குவனார் “மறைமலை பிறமொழிச் சொற்களைத் தமிழிலேயே ஒலிக்க முடியும். சிறு மாற்றங்கள் இருந்தாலும் ஒலிக்கலாம். கலிஃபோர்னியா என்பதைச் சீன மொழியில் சடிபூர்னியா என்று ஒலிக்கிறார்கள்; உருசிய மொழியில் காமராஜ் என்ற பெயரை காமராச்கி என்றும் பத்மினி என்ற பெயரை பத்மியா என்றும் ஒலித்தார்கள். எனவே கிரந்த எழுத்துகள் தேவையில்லை” என்றார். சேலம் கல்லூரி கணினிப் பேராசிரியர் மா. “தமிழ்ப்பரிதி தமிழ் வழிக் கல்வியால்தான் தமிழை மீட்டெடுக்க முடியும் தமிழால் அனைத்து அறிவியல் நுட்பங்களையும் கூறமுடியும்” என்று விளக்கினார்.
தென்மொழி இதழின் ஆசிரியர் மா.பூங்குன்றன் தமிழுக்கு வர்க்க எழுத்துகள் தேவையில்லை. எனவே கிரந்த எழுத்துகளும் தேவையில்லை, வரலாற்று ஆவணங்களைத் தமிழுக்குக் கொண்டுவரவும் ஒருங்குகுறியை அச்சுத்துறையில் முழுமையாகக் கொண்டுவருவதில் உள்ள தடைகளை நீக்கவும் ஆவன செய்யவேண்டும் என்றார்.
பாடலாசிரியர் தமிழ்ப் பிரபாகரன் “தமிழின் ஒலி அமைப்புகளைக் கெடுக்கக்கூடிய கிரந்த எழுத்துகளை தமிழில் நுழைய விடமாட்டோம்” என்று உணர்ச்சியுடன் கூறினார். தமிழ்க் காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் “கிரந்தம் வேண்டும் என்போர் சொல்லும் காரணங்கள் பொய்யானவை” என்று அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி நிறுவினார். கிரந்த நிலைப்பாடு குறித்து அவர் வாக்கெடுப்பு எடுத்தபொழுது மூவர் தவிர அனைவரும் கிரந்தம் எந்த வடிவிலும் வேண்டா என்று கையைத்தூக்கி வாக்களித்தனர்.
1. தமிழகமுதல்வர் அறிவித்தவாறு ஒருகுகுறி தொடர்பான வல்லுநர் குழுவை உடனே நியமிக்கவேண்டும்; அதில் தமிழறிஞர்களையும் சேர்க்க வேண்டும்.
2. தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதலான அரசு சார்நிறுவனங்களுக்கும் தமிழ்ச் சங்கங்களுக்கும் அரசே உறுப்பினர் கட்டணம்செலுத்திஒருங்குகுறி அவையத்தின் உறுப்பினர்களாக ஆக்கவேண்டும். 3. கிரந்த எழுத்துகளே அயற்சொற்கள் கலப்பிற்கும் தமிழ்மொழிச் சிதைவிற்கும்வழி வகுத்து வருவதால், கிரந்தஎழுத்துகளை அடியோடு பாட நூல்களில் இருந்துஎடுக்க வேண்டும். 4. இலங்கையிலும் ஈழத்திலும் கிரந்தம் கலக்காமல் கலைச்சொற்களின்அகராதிகள்வெளியிட்டுள்ளதைப் பின்பற்றித்தமிழ்க் கலைச்சொற்கள் அகராதிகளில் உள்ளகிரந்த எழுத்துகளை நீக்கிப் புதிய பதிப்பு வெளியிடவேண்டும். 5. இக்கருத்தரங்கத்தின் முடிவிற்கிணங்க கிரந்தஎழுத்துகளை ஒருங்குகுறியில் சேர்க்கவே கூடாது.
மாலையில் பேராசிரியர் தெய்வசுந்தரம் தாம் உருவாக்கிய தமிழ்ச் செயலியைத் திரைக்காட்சி மூலம் விளக்கினார். பேராசிரியர் பா.இறையரசன் கனடாவில் இருந்து ‘காப்பிடல்’ என்ற கணினி அறிஞர் அனுப்பிய “இந்திய அரசே சமற்கிருத – தேவ நாகரி அடிப்படையில் தமிழ் நெடுங்கணக்கை இடம் மாற்றித்தான் ஒருங்குகுறியில் இடஒதுக்கீடு செய்தது; தமிழர்கள் அப்போதே கண்டுபிடித்துச் சரிசெய்யவில்லை” என்பதை விளக்கும் திரைக்காட்சியை விளக்கினார்.
நிறைவு விழாவில் அன்றில் பா.இறை எழிலன் வரவேற்புரை நல்கினார். தமிழ்க் காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தீர்மான உரைகளைப் படித்து விளக்கினார். சிங்கப்பூரில் இருந்த வந்திருந்த தமிழாசிரியர் புலவர் தா.இளங்குமரன் கிரந்த எழுத்துகள் வரவேண்டும் என்று கூறியவர்களுடைய திட்டம் தீட்டிய அறிவு நுட்பத்தைப் பாராட்டுவது நம் வீட்டுக்கு தீ வைத்தவனுடைய அறிவுத் திறனைப் பாராட்டியதாகும்; இது நம்முடைய தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இடையூறு ஆகும் என்று கூறினார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் நக்கீரன் தமிழக அரசு கிரந்த எழுத்துகளை வரவிடாது என்றார். தலைமை உரை ஆற்றிய தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஜ, ஸ, ஹ முதலிய கிரந்த எழுத்துகளில் இருந்து தமிழ் படிப்படியாக விடுதலைப் பெற்றுள்ளது. காக்ஷி, சாக்ஷி என்பவை காட்சி, சாட்சி என்று வழங்கத் தொடங்கின. மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு இடம் தரக்கூடாது. வரலாற்று ஆவணங்களைத் தமிழிலே கொண்டுவர முடியும் முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள் என்று தமிழ் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
நிறைவுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ.இளங்கோவன், “ஸ்ரீ நீக்கப்பட்டு திரு கொண்டுவரப்பட்ட அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கிரந்த எழுத்துகள் நீக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்; மேலும் கிரந்த எழுத்துகள் வர விடமாட்டோம்” என்று உறுதிபடக் கூறினார். கருததாளர்களுக்கும் நோக்கர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கினார். நன்றி உரை கூறிய மரபுக் கட்டடக்கலை அறிஞர் பெருந்தச்சன் தென்னன், “மெய்ம்மன் கலைகளுக்கும் அறிவியல் நூல்களுக்கும் கிரந்த எழுத்துகள் தேவையே இல்லை” என்று கூறி நிறைவு செய்தார். தொகுப்பு:இ.தி.