செவ்வாய், 7 டிசம்பர், 2010

கிரந்தத் திணிப்பிலிருந்து தமிழைக் காக்க வேண்டும்

>>சென்னை நிகழ்வுகள்

natpu சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் அமைந்திருக்கும் எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தேறியது.
தமிழார்வலர்கள் கூடிய இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கெ.பக்தவத்சலம் அவர்கள் வரவேற்புரையில் பேசியதாவது, “தொல்காப்பியர் காலத்தில் இருந்தே பாலி மொழி இருந்தது. பின் சமஸ்கிருதமே இந்தியாவில் பெரும்பங்கு வகித்தது. அப்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக வந்ததே உருதுமொழி. சமஸ்கிருதத்திலிருந்து ஜ, ஹ, ஷ, க்ஷ, ஸ போன்ற எழுத்துக்கள் தமிழோடு கலந்து தமிழாகிப் போனது. தமிழ்மொழியை விட மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் (தமிழ் மொழி) பிறமொழிக் கலப்பு குறைவாகவே இருந்தது.
தமிழில் வடமொழி கலந்த சொற்றொடர்களை சமணர்கள் உருவாக்கினர். இதை இறுதியாக வைணவர்கள் வளர்த்தார்கள். இப்படி பல மொழிகளிலிருந்த சொற்கள் தமிழை ஆக்கிரமித்து வருகின்றன. எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிடும் நீங்கள் இராசாசி எனக் குறிப்பிடுவதேன் என முரசொலிக்கு ஒரு முறை மூதறிஞர் இராசாசி மடல் எழுதினார். எம்.சி.ஆர். என எழுதத் தொடங்காமல் இராஜாஜி என எழுதத் தொடங்கினர்.
மணிப்பிரளவம் என்ற சொல்லைப் பிரித்தால் மணி, முத்து என இரண்டு அர்த்தம் தரும். மணி என்றால் முத்து அல்லது மாணிக்கம் என்று பொருள். முத்தும், மாணிக்கமும் வெள்ளை நிறத்தில் இருக்கும். பவளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். வடமொழியாளர் தமிழை மாணிக்கமாகக் கருதினர். தமிழில் பவளம் என்பதை வடமொழியில் பிரளவம் என மாற்றினர். இது போலவே விளக்கவுரை என்பதை வியாக்கியானம் என்றும், பாயிரம் என்பதை பிரவேசம் என்றும், வேட்டியை வேஷ்டி எனவும் மாற்றினர். மீனாட்சி சுந்தரம் என்பவர் வடமொழிச் சொல்லான ஷாட்சியை, சாட்சி என தமிழாக்கம் செய்தார். இந்நிலையில் தமிழுக்குள் ஆங்கிலம் புகுந்துவிட்டது. இன்று தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தில் கூட அர்ஜூனனும், பீமனும் ஆங்கிலத்தில் பேசுவது தாங்க முடியாத ஒன்றாகும். எனவே தமிழர்களாகிய நாம் பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதவும், பேசுவதோடு தமிழ் அழிவைக் காப்பதும் நமது கடமையாகும்” என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் பா.இறையரசன் பேசியதாவது,     “1930-களில் தமிழிசை வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள்  போராட்டம் நடத்தியதைக் கண்ட மற்ற மொழியினர் இவர்களுடைய தமிழ் அவ்வளவு நலிவடைந்துவிட்டதா? எனக் கேலி பேசியதுண்டு. தமிழார்வலர்களாகிய நம்மை தமிழ் உணர்ச்சி மட்டுமே வழி நடத்துகிறது. நாடெல்லாம் நடந்து தமிழைப் பரப்பிய ஆழ்வார், நாயன்மார்கள், பெரியார் போன்றவர்களால் தமிழ் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றோ தமிழின் நிலை தலைகீழாகிப் போனது. கி.பி.3-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதம் இருந்துள்ளது. நான் ஆத்திகன்தான், அதற்காக சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழி குறைந்தது இல்லை. தமிழ் தாத்தா என அழைக்கக்கூடிய உ.வே.சு. ஐயரிடம் ‘வணக்கம்’ என்று கூறினால் ‘நமஸ்காரம்’ என்றுதான் கூறுவார்.
கி.பி.3-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் எழுதப்பட்டது. natpuநம்மை வேதம் படிக்கக் கூடாது என்றனர். வேதம் கி.பி.14-ல்தான் எழுதப்பட்டது. அப்பொழுதுதான் கிரந்த எழுத்துக்களும் வந்தது. இன்று படிக்கின்ற குழந்தைகள் “Thosaiyamma thosai” என ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படிக்கும் அவல நிலை உள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டாமா? வடமொழியை தேவ பாஷை என்றும் தமிழை நிஷ பாஷை என்றும் கூறி வந்தனர் சிலர். இவர்கள் தமிழில் மணிப்பிரளவச் சொற்களை கலந்தனர். சோற்றை சாதம் என மாற்றினர். 26 கிரந்த எழுத்துக்கள் 247 தமிழ் எழுத்துக்களை அழிக்கும் என்றால் அழியட்டுமே தமிழ் என்றான் வெள்ளையன். சமஸ்கிருதத்தினால் வீழ்ந்த மொழி தமிழ். தமிழை வளர்க்க வேண்டும் என்கிறீர்களே, வளர்ப்பதற்கு அது என்ன தாடியா எனக் கேலி பேசுகிறார் திரைக்கவிஞர் வாலி.
அன்று சமஸ்கிருதம் வந்து தமிழை அழித்தது போல் இன்று ஆங்கிலம் தமிழில் புகுந்து தமிங்கலம் ஆகிவிட்டது. ற, ர, ண, எ, ஒ என்ற இந்த ஐந்து எழுத்துக்களையும் கிரந்த எழுத்தில் சேர்க்க வேண்டும் என சமீபத்தில் போராட்டம் நடந்தது. என்ன கொடுமை? தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்றனர். தமிழனுக்கு இரண்டு குணம் தான் இருக்கிறது. ஒன்று ஒற்றுமையின்மை, மற்றொன்று காட்டிக் கொடுத்தல்.
ஆரிய இதழான அமுத சுரபியில் பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை “ஸெந்தமிழ் நாடெனும் போதினிலே” என எழுதி தமிழை இழிவுபடுத்துகின்றனர். மேலும் வைகோ, சீமான் போன்றோரை ஈழ மக்களின் துரோகி என எழுதி தமிழர்களுக்குள் கலகம் மூட்டுகின்றனர். மாவீரன் முத்துக்குமார், ஈழத்தமிழரைக் காக்க இறந்த்போது தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட வரவில்லை. எனது கனவெல்லாம் இனி தமிழை அறிவியல், கணினித் தமிழாக மாற்ற வேண்டும் என்பதே” எனப் பேசினார்.
இறுதியாக தமிழ்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் பேசியதாவது :
தமிழ் இன வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான நிகழ்விது. இணைய இதழான “நட்பூ” போன்ற இதழ்கள் தமிழுக்கு அரும்பணி ஆற்றி வருகின்றன. கிரந்தம் என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல்மொழி எழுத்துக்களை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால் நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தினால் எண்ணற்ற சமஸ்கிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்த தமிழைச் சிதைத்தன.
மணிப்பிரவாள நடைக்காக தமிழ் எழுத்துகளில் க1, க2, க3, க4 என்பது போல் 26 கிரந்த எழுத்துக்களைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ் எழுத்துக்களையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காக  கருத்துரு அளிக்கப்பட்டது.  இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகவும் கதை கூறப்பட்டது. மேலும் தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துக்களைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்துவதுதான் இதன் உள்நோக்கம்.
இப்பொழுது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் பஸ், ஜாமின், மிக்ஸி, ஜாம், ஷவர் முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்துவிட்டன.natpu ஜ சில இடங்களில் (ஜமுனா – யமுனா என்பது போல்) ய என மாறும். (ஹரி என்பது அரி எனப்படுவது போல்) ஹ என்பது அ என மாறும்.  இவ்வாறு உரிய முறைக்கேற்ப பெயர்ச் சொற்களை மட்டும் இவ்வாறு எழுதிவிட்டுப் பிற சொற்களை உரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி புஜம் – தோள், ஸர்ப்பம் – பாம்பு, ஸந்தோஷம் – மகிழ்ச்சி, லஷ்மி – திருமகள், ஹர்த்தால் – மறியல் கதவடைப்பு, ஸ்ரீநகர் – திருநகர் என எழுத வேண்டும்.  
இன்றைய தலைமுறையினர் தமிழில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழ்ப் பெயர் சூட்டியவர்கள் பிள்ளைகள்கூட அவ்வாறுள்ளனர். இந்தச் சமுதாய அவலத்தின் எடுத்துக்காட்டுதான் கலைஞரின் குடும்பத்தினரும் சன் டி.வி., சன் பிக்சர்ஸ்,ரெட் ஜெயண்ட், க்ளவுடு நைன் எனப் பெயர் வைத்துள்ளமையும். பாரே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி நிறுவனங்கள், படத் தலைப்புகள். கதைப்பாத்திரங்களின் பெயர்கள் என அனைத்திலும் தமிழ்ப் பெயர்களையே குறிக்க வேண்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாடு உள்ளதால்தான் பிற மொழிப் பெயர்களைக் கையாளுகிறோம். எனவே பாட நூல்களில் தமிழ் என்ற பெயரில் கிரந்த எழுத்துகள் புகுந்துள்ளதை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தஒழிப்பு இயக்கம் நடத்தியாவது நாம் வெற்றி காண வேண்டும். இறுதியில் கேள்வி நேரம் வந்தது. வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு, மொழிச் சீர்திருத்தம் பற்றியும், மொழி வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் தமிழினை எவ்வித வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தினர். கூட்டத்திற்கு வந்திருந்த ஐம்பது பேரில் 48 பேர் முதியவர்கள் என்பதால் அடுத்த முறை இளைஞர்களை இணைக்க வேண்டும் என்றும், ஆட்சியாளர்கள், திணிப்பவர்கள், எதிர்க்காத பொதுமக்கள் இருக்கும் வரை தமிழ் முன்னேற முடியாது என்ற பேச்சுக்கள் அனல் வீசின. வந்த ஒரு தமிழார்வலர் ஆட்சி, அலுவல், நீதிமன்றம் போன்ற இடத்தில் ஆங்கிலமும், வடமொழியுமே ஆட்சி செய்கிறது. தமிழுக்கு மதிப்பில்லை என குறைபட்டுக் கொண்டார். மேலும் ஒருவர் 1967-லிலேயே தமிழ் ஆட்சிக்கு வந்துவிட்டது. 43 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதுதான் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
இரண்டு தெலுங்கன் சந்தித்தால் தெலுங்கில் பேசுகிறான், இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறான். இரண்டு தமிழன் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறான். தமிழன், தமிழில் பேசுவதை என்று கௌரவமாக நினைக்கிறார்களோ அன்று தமிழ் வாழும். இல்லையேல் பாரதி கூற்றுக்கிணங்க “மெல்ல தமிழ் இனி (தமிழனால்) சாகும்!!



Comments

(Nov 26, 2010) திருமால் said:
இதுபோன்ற கூட்டங்களை நடத்தித்தான் தமிழைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
rss


செய்திகள்

v

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக