வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஞாயிறு, 12 மே, 2019

பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு

அகரமுதல

பள்ளிக் கல்வித் துறை
தவணை முறையில் தமிழை அழிக்கிறது
தமிழ் அறிஞர்கள் கண்டனம்
சென்னை, மே 11
பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில் – இதுவரை தமிழுக்கு இருந்த இரு தாள் தேர்வு முறையை நீக்கி ஒற்றைத் தாளாக்கியது. இந்த ஆண்டு இதே முறையை 9, 10 ஆம் வகுப்பு மாணகா்கர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறதாம்.
அதுமட்டுமல்ல! தமிழில் ஒரு தாளாவது இருந்ததையும் தந்திரமாக நீக்கக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இனி, பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் ஏதேனும் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் படித்துத் தேர்வு எழுதினால் போதுமாம். இதனால் ஆங்கில மோகம் உள்ள மக்களும் பிற மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்ட மக்களும் தங்கள் பிள்ளைகள் தமிழை விலக்கி விட்டு ஆங்கிலம் அல்லது தத்தம் தாய் மொழியைப்படிக்கவே விரும்புவர். பெயரளவிற்குத் தமிழும் பாடமுறையில் இருந்தாலும் விருப்பத் தெரிவு என்ற முறையில் அதனை நீக்கப் பள்ளிக் கல்வித்துறையினர் சதி செய்கின்றனர்.
தமிழன்பர்கள்
முதல் பிரிவில் ஆங்கிலத்தைத் தெரிவு செய்து விட்டு நான்காம் பிரிவில் பிற மொழியினர் தங்கள் தாய்மொழிப்பாடத்தைத் தெரிவு செய்யலாம். எனவே, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழைத் தவிரப் பிற மொழிகளைப் படிக்கலாம் எனக் கல்வித்துறை வழி வகுக்கிறது.
இவ்வாறு ஒரு மொழிப்பாடத்தை அகற்றுவதன் மூலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் உட்பட தேர்வுத்தாள் குறைவதால் தேர்வு வினாத்தாள் அச்சடிப்புச் செலவு, விடைத்தாள் செலவு, தேர்வுத்தாள் திருத்துவதற்கான ஊதியம் முதலான பல நூறாயிரம் உரூபாய் மிச்சம் ஆவதாகவும் கல்வித்துறை தெரிவிக்கிறது. அப்படியானால் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு முறையை எடுத்து விட்டால் இன்னும் செலவு குறையுமே. பள்ளிகளையே இழுத்து மூடிவிட்டால், சிறுவர் சிறுமியருக்கு மன அழுத்தம் என்பதே இல்லாமல் போகுமே.  மன அழுத்தம் ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறித் தமிழ்த்தாளுக்கு வேட்டு வைக்கும் கல்வித்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி முறையை மாற்ற வேண்டும் என இல.கணேசன் பேசியுள்ளார். இந்தியா முழுவதும் இத்தகைய ஒரே கல்விமுறையை வலியுறுத்தி முன்னரே பாசக அறிவித்துள்ளது. அப்படியானால் தமிழ் ஒழிப்புப் பின்னணியில் பா.ச.க. இருக்கிறதோ என்ற ஐயப்பாடு வருகிறது. அதற்குத் தமிழக அரசும் இணங்கி இவ்வாறு செயல்படத் திட்டம் தீட்டுகிறதோ என்று எண்ண வேண்டி உள்ளது.
தேர்தல் காலத்தில் பெரும்பான்மை வலியமையுடைய அரசும் இடைக்கால அரசுதான். ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புபவர்களும் அண்மைத் தேர்தல் முடிவிற்குப் பின்னர் ஆட்சி, கலையலாம் என எண்ணுகின்றனர்.
இத்தகைய நிலையற்ற அரசு முடிவெடுக்கும் வகையில் கல்வித்துறைபரிந்துரைகளை அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. முதல்வரும் கல்வி யமைச்சரும் தலையிட்டு உடனடியாக இத்தகைய முயற்சிகளுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.
 தமிழைத் தவணை முறையில் ஒழிக்கும் கல்வித்துறைக்கு எதிராகக் கல்வியாளர்களும் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டு தமிழைக் காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டு கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் எழுச்சிப் பேரவைத் தலைவர் இறையரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ் நாட்டின் கல்வியிலே தமிழே இல்லை என்று அழிவு செய்து வருகிறார்கள்.
மழலைக் கல்வியில் தமிழக அரசே அங்கன்வாடி முதலே ஆங்கிலத்தைக் கொண்டு வருகிறது.
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பிற்கு மொழிப்பாடமே ஒன்று மட்டும்தான்.ஆங்கலம் அ்லது தமிழ் தேர்வு செய்தால் போதும். பள்ளிச்சான்றிதழ்களில் முதல் மொழி தமிழ் என்றில்லாமல் வெறுமையாக மொழி – ஆங்கிலத்தில் லாங்குவேசு – என்று மட்டுமே குறிப்பிட்டுப் பள்ளிச்சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் வழங்கியுள்ளார்கள்.
ஆகவே, ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்கப்படும். அது கட்டாயம் என்பதான நிலையில் உள்ளது. முதலில் குறிப்பிடப்பட்ட மொழி என்பது கட்டாயமில்லை. அதனைத் தாய்மொழி என்று சொல்லி வந்தார்கள். ஆனால், பிறகு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று என்பதாகச் சொல்லி விட்டார்கள். ஏறத்தாழ ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதிலிருந்து இதே நிலைமைதான் உள்ளது.
பள்ளிப் படிப்பிலிருந்து பல்கலைக்கழகப் படிப்பு வரை இரண்டாம் மொழி ஆங்கிலம் கட்டாயம். ஆனால், முதல் மொழி முதலில் குறிப்பிடப்படுகிற  மொழி; அது இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று. தமிழ் கட்டாயம் இல்லை என்ற நிலையைத் தமிழக அவைத்தலைவராக இருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யிடம் 1972இல் நான் கூறினேன். “அப்படியா எனக்குத் தெரியாதே பல்கலைக்கழக ஆளவையில் நான் சொல்கிறேன்” என்றார் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.  அந்நிலை இன்று வரை மாறவில்லை.
பல்கலைக்கழகங்களில்கூடச் சான்றிதழில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்படுகின்றன. ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் இப்பொழுது மதிப்பெண் சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வருகின்றன.
விரைவில் தமிழ்ப்பாடங்கள் அறவே தேவையில்லை என்பர்.
ஆங்கிலத்தை எதரிப்பவர்களில் பலர் தமிழ் ஆதரவாளர்கள் இல்லை. இந்தி, சமற்கிருத ஆதரவாளர்கள். திராவிட எதிர்ப்பாளர்களில் பலர் தமிழின ஆதரவாளர்கள் இல்லை.ஆரிய ஆதரவாளர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைரமுத்து அறிக்கை
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திரவீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தெரிவு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.
தொழிற் கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கலவியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டா இந்த நச்சுச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்து விடுங்கள்
தமிழ் அறிஞர்
தமிழில் இரண்டாம் தாள் வேண்டா என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித் திறனும் இரண்டாம்தாளில்தான் வினைப்படுகின்றன.
 கண்களில் ஒன்று போதும் என்று ஒன்றைக்களைந்து விடுவீர்களா? பள்ளிக்கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பற்கு மாற்றாக அதன்அடிவேரில்  அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.
தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும் ஆர்வலர்களையும் அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன் முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமுரசு, அனைத்துப்பதிப்புகள், 11.05.2019

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்

அனலும் புனலும் :


தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்

தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.ராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை!
ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும்.
தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள்.
தாசன் என்பது வேலைக்காரனைக்குறித்தாலும் அடியேன் தாசன் என்னும் பொழுது பணிவைக் குறிக்கிறது; அன்பைக் குறிக்கிறது.
அதே நேரம், தாசி என்பது சில பல வழக்கங்களால் அல்லது நடைமுறைகளால் பரத்தையைக் குறிப்பதுபோல் தாசன் என்பது பரத்தனைக் குறிக்கவில்லை. ஒரு வேளை ஆண்களின் கூடா ஒழுக்கம் ஆணாதிக்க மன்பதையில் ஏற்கப்பட்டதால் இருக்கலாம்.
ஆனால், ஒரு பெண்ணை இன்னாருடைய தாசி எனக் குறிப்பிட்டு “அவரின் வேலையாள்” என்றுதான் கூறினேன் என்றால் ஏற்க முடியுமா?
ஆனால் தணிக்கையாளர் குருமூர்த்தி ‘ஆண்மையற்றவர்’ என்னும் பொருள்பட ‘impotent’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டுக் கண்டனங்கள் வந்ததும் மழுப்புகிறார்.
நாட்டின் உயரிய முதன்மைப்பொறுப்பிலும் அதற்கடுத்த துணைப்பொறுப்பிலும் உள்ள முதல்வரையும் துணை முதல்வரையும் ஆண்மையற்றவர் என்று சொன்னதற்கு நடவடிக்கை எடுக்காததன் காரணம்இவரைப் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக்க் கருதுவதுதான்.
அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டினால் வழக்கு போடும் அரசு, இழிவு படுத்தும் வகையில் பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால்மாற்றுக்கட்சியினரும் பொதுமக்களும்தான் கண்டிக்கின்றனர்.
ஆனால் குருமூர்த்தி இதற்குச் சிறிதும் வருத்தம் தெவிக்காமல் “அவர்கள் எப்படி என்பதுபற்றி எனக்கு அவசியம் இல்லை” என்றும் “அவர்கள் மனத்தில் வேறு பொருள் வந்தால் தான் பொறுப்பல்ல” என்றும் திமிராகக் கூறுவதன் மூலம் உட்பொருளாக மேலும் இழிவு படுத்துகிறார். பாசகவின் சார்பில் ஆட்சியை இயக்குபவர் இவர் என்றுதான் பேசப்படுகின்றது. அரசியல் தரகர் என்று கூறப்படுவது குறித்துப் பெருமைப்படுபவர்கள் உள்ளனர். எனவே, தன்னைப் பற்றிய இச்செய்திகளுக்கு மகிழும் இவர், பெயரளவிற்குக்கூட வருத்தம் தெரிவிக்க முன்வரவில்லை. ஆணவத்தின் உச்சியில் இருப்பவர்கள் ஒருநாள் கீழிறங்கித்தான் ஆக வேண்டும் என்பதை உணரவில்லை.
அதே நேரம் தான் சொன்னது தவறாகப் புரிந்து கொண்டதாக்க் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ள வைரமுத்துவிற்கு எதிராகப் போராடுவதன் மூலம் தத்தம் உண்மை முகங்களைப் போலிப் போராட்டத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதியும் பேசியும் இறையன்பர்கள் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் கூறிய செய்திகளில் பல பிழைகள் உள்ளன. அவர் குறிப்பிட்டுள்ள சுபாசு சந்திர மாலிக்கு தொகுத்த நூலில் 3 இடங்களில் ஆண்டாள் பற்றிய குறிப்பு இருந்தாலும் அவர் குறிப்பிட்ட வகையில் இல்லை. இறைப்பணியாற்றும் மகளிரைத் தேவரடிமை என்றும் தேவதாசி என்றும் கூறியது ஒரு காலம். பின்செயல்பாட்டு மாற்றங்களால் பொதுமகளிரைக் குறிக்கத் தொடங்கிவிட்டது இச் சொல்.
“வைரமுத்துவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று நினைப்பவர்கள்கூட, அவருக்கு எதிரான கண்டனக் கணைகளை வரவேற்கவில்லை. ஏனெனில், பாசக இதனைப் பயன்படுத்தி மத வெறியைத் தூண்டி நாட்டை நாசப்படுத்துவதையோ ஆதாயம் அடையப் பார்ப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.
‘தமிழை ஆண்டாள்’ என்னும் தலைப்பும் ஆண்டாளுக்காக விழா எடுத்ததும், இவர்களின் நோக்கம் ஆண்டாளைச் சிறப்பிப்பதே என்று புரிகிறது. எனினும் தவறான மேற்கோளுக்குவைரமுத்துவும் கட்டுரை வெளியிட்ட தினமணியும் வருத்தம் தெரிவித்த பின்னரும் எதிர்ப்பவர்கள்வருத்தமே தெரிவிக்காமல் இருப்பவர்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால், இக்காலத்தில் ஒரு தாயை – வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.ராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை!
விளம்பி நாகனார் என்னும் புலவர் நான்மணிக்கடிகை என்னும் நூலில் (பாடல்71) அறிவில்லாதவர்கள் பிறரை நிந்தித்தே காலத்தைக் கழித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறுகின்றார். அத்தகைய மகிழ்ச்சியில் திளைக்கும் அற்ப மனம் கொண்டோர் உள்ளனர். அவர்களின் உரைகளில் மயங்கிய இறையன்பர்களும் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ்நாட்டில்கால் ஊன்றவே வழியில்லையே எனக் கவலைப்பட்ட பாசக இதனை வாய்ப்பாகக் கொண்டு வெற்றிப்பாதையில் உலவப் போவதாகக் கனவு காண்கின்றது.
 வைரமுத்துவிற்கு எதிரான கருத்தாக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும், இதன் தொடர்ச்சியாக நடுநிலைதவறியோர் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்போரும் பாசகவை ஆதரிப்பதாக எண்ணுவது அறியாமையிலும் அறியாமை!
ஏறத்தாழ ஒரே நேரத்தில் தெரிவிக்கப்பட்ட இரு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்போரை மிரட்டுவதும் வருத்தம் தெரிவிக்காமல் ஆணவத்தில் இருப்பவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
வைரமுத்துவை எதிர்ப்போர் எச்சு.ராசாவின் இழி சொற்களுக்கு அவரை மன்னிப்பு கேட்கச்சொல்ல வேண்டும்!
குருமூர்த்தியின் பண்பற்ற சொற்களுக்கு அவரையும் மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும்!
இல்லையேல் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கச்செய்ய வேண்டும்!
ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது முறையில்லையல்லவா? எனவே, பண்பற்ற முறையில் சொல்வோர் அனைவருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுங்கள்! வருந்துவோரைத் திருந்த விடுங்கள்!
குவியாடி
..தமிழ் : நாள் 18.01.2018

செவ்வாய், 23 ஜூன், 2009

குறள் நெறிகளைப் பரப்ப படைப்பாளிகள் முன்வர வேண்டும்:
அப்துல் கலாம் வலியுறுத்தல்
தினமணி


சென்னை, ஜூன் 22: திருக்குறள் நெறிகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான காண்டீபன் என்ற பி.வி.ஜகன்மோகன் எழுதிய, "கங்கை கொண்ட செம்மொழி' நூல் வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அப்துல் கலாம் பேசியதாவது: உலகின் பல்வேறு பெரும் புலவர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை நாம் படித்துள்ளோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களில் இல்லாத கருத்துகள் எதுவும் இல்லை. திருவள்ளுவரின் இலக்கியப் பணி மகத்தானது. இணையற்றது.
இத்தகைய மாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.
சமுதாயத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்வு நெறிகளையும், திருவள்ளுவரின் வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவச் செய்வதில் தாங்களும் பங்கேற்க தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
வைரமுத்து: இந்தியாவுக்கு வெளியேயும் நாட்டின் மனித அடையாளமாகத் திகழ்பவர் கலாம். அரசியலையும் கடந்து தேசிய குடியரசுத் தலைவராக அவர் விளங்கினார்.
அவரால் நமது மாணவர்கள் உள்பட இளைய சமுதாயம் புத்துணர்வு பெற்றது. கலாம் வாழும் வரை நம்பிக்கையும் வாழும்.
"கங்கை கொண்ட செம்மொழி' நூலில், இந்தி மொழியில் வேரூன்றியுள்ள தமிழ்ச் சொற்களை திறனாய்வு செய்து நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
வணிகம், கலை, படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு மொழி மற்றொரு மொழியுடன் கலந்து உறவாட நேரிடுகிறது.
உலக மயமாக்கலால் சமூகங்களிடையேயும், நாடுகளிடையேயும் வணிகத்திலும் நெருக்கம் ஏற்படுகிறது. இது குறித்து சமூக விஞ்ஞானக் கருத்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
உலகமயமாக்கலின் விளைவுகளால் நமது மாறுபாடுகள் தூக்கி வீசப்படும். பண்பாடுகள் சிதையும். சின்னச் சின்ன மொழிகளும் அழிந்து போகும்.
ஆனால், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம், அரபி, ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கும். இம் மொழிகளில் மட்டுமே, அழிக்க முடியாத வேர்ச்சொற்கள் நிறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
ஒரு மொழியை மற்றொரு மொழி மற்றும் தேசிய இனங்கள் அங்கீகரிக்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக மொழியைக் காக்க, ஆசிரியர்கள், படைப்பாளிகள், இதழியலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் எந்த ஒரு தேசிய மொழியும் நிலைக்க முடியாது என்றார் வைரமுத்து.
முன்னதாக இந்நூலை வைரமுத்து வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர்கள் எஸ்.ரகு, ஆர்.ராமன் உள்ளிட்ட பலர் பேசினர். நூலாசிரியர் காண்டீபன் ஏற்புரை வழங்கினார்.

கருத்துக்கள்

எளிமையின் திலகம் கலாம் அவர்கள், நம் நாட்டின் முதல் குடிமகனாக வீற்றிருந்த பொழுது கூட அண்டை மாநிலமான கருநாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் மூடப்பட்டே கிடந்தது. இன்றும் அதே நிலைதான். எனவே, குறள்நெறிகளையும் அதன் சிறப்பையும் முதலில் நம் நாட்டில் பரப்ப வேண்டும். இவ்விழாவில் போகிற போக்கில் அள்ளித் தெளித்த அலங்கோலமாக வைரமுத்து அழிக்க முடியாத வேர்ச் சொற்கள் நிறைந்த மொழியாக இந்தியைக் குறிப்பிட்டுள்ளார். இதுவே தவறாக படிப்பவரால் தவறாக மேற்கொள்ளப் பட்டு அறிவுக்கும் மொழி அறிவியலுக்கும் பொருந்தாத உண்மைக்கு மாறான செய்தி நிலைத்து விடும். இவ்வாறு இடம் பெற்றது செய்தியாளரின் தவறு எனில் திருத்தம் வெளியிடுக! இல்லையேல் வைரமுத்துதான் கூறினார் எனில் மத்திய ஆளும் கட்சியைக் குளிர்விப்பதாகக் கருதிக் கொண்டு இது போன்ற அபத்தச் செய்திகளைப் பேசாதிருக்கட்டும்! தான் அறிந்த கவிதைச் சிறப்புகளைப் பற்றி மட்டும் பேசினால் போதுமானது. தான் அறியா மொழியியல் துறைபற்றி அமைதி காப்பது நல்லது! தமிழால் வாழும் அவர் தமிழுக்குத் தன் பாடல்களால் அணி செய்துள்ள அவர் தன்னுடைய உரையால் களங்கம் ஏற்படுத்த வேண்டா!

By Ilakkuvanar Thiruvalluvan
6/23/2009 4:08:00 AM